அரசியல்

Wednesday, October 7, 2015

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!

காணக்கிடைக்காத மாமனிதர் காமராசர்!


 

 பெரியார் சொல்கிறார். அதைநான் செய்கிறேன்!
 

பெரியார் இல்லை என்றால் நமக்கெல்லாம் முன்னேற்றம் ஏது? - காமராசர்

தமிழன் வீடு என்றால் பெரியார் படமும், காமராசர் படமும் இருக்க வேண்டும் – நெ.து.சுந்தரவடிவேல் (முன்னாள் துணைவேந்தர் சென்னைப் பல்கலைக் கழகம்)

காமராசர்:

ஏழை கிராம மக்கள் ஏற்றம் பெறவேண்டும்! என்று உழைத்தவர்.

இன்றைக்குத் தமிழகத்திலிருக்கிற அணைக்கட்டுகள், தொழிற்சாலைகள், கல்விக் கூடங்கள் பலவற்றை அமைத்தவர்.

இராஜகோபாலாச்சாரி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்.

மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கப்பட, நேர்முகத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 150 ஆக இருந்ததை இராஜாஜி 50 மதிப்பெண்ணாகக் குறைக்க அதை மீண்டும் 150 ஆக உயர்த்தினார் காமராசர்.

எங்கிருந்தாலும், யாரைச் சந்தித்தாலும் ஏழைகளைப் பற்றியே பேசினார், சிந்தித்தார், செயல்பட்டார்!

எடுத்துக்காட்டாக,

சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராய் இருந்தார் நெ.து. சுந்தரவடிவேலு. பெரியாரிடமும், காமராசரிடமும் பேரன்பும், பெரும் மதிப்பும் கொண்டவர். புதுடில்லி விமான நிலையத்தில் அவர் நின்று கொண்டிருந்தபோது, காமராசரும் அங்குவர, அவருடன் ஏராளமானவர்கள் வந்து காமராசருக்கு மரியாதைத் தந்தனர்.

அந்தக் கூட்டத்திலும் தூரத்தில் நின்ற நெ.து.சுந்தரவடிவேலு அவர்களைப் பார்த்துவிட்டு, அவரை நோக்கி வந்து,

”டில்லிக்கு எப்பவந்தீங்க!” என்று விசாரித்தார் காமராசர்.

நே.து.சு. வணங்கிவிட்டு விவரம் சொன்னார். காமராசர் மீண்டும் கூட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டார்.
 

 விமானம் புறப்படத்தயாரானது. காமராசர் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். நெ.து.சு. விமானத்தின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார். விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் காமராசர் பின்பகுதியில் கண்ணைச் செலுத்தித்தேடிவிட்டு, இருக்கையிலிருந்து எழுந்து நெ.து.சு. அமந்திருக்கும் இடம் நோக்கிச் சென்றார்.

நெ.து.சு. எழுந்து நிற்க, அவரை அமரச்செய்து, அவர் அருகில் காமராசர் அமர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் கல்வித் துறைப்பற்றி அவரிடம் காமராசர் பேசத் தொடங்கினார்.

”கிராமமக்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமாக கிடைக்கணும். அதுதான் முக்கியம்.

நகரத்திலிருக்கிறவன் எவ்வளவு செலவானாலும் படிச்சிடுவான். கிராமவாசி எங்கே போவான்! சாதாரண பள்ளிப் படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விற்கவேண்டியிருக்கு....! கிராமபுற ஏழைப்புள்ளங்க மேல் படிப்பு படிக்க ஏற்பாடு செய்யணும்...!” என்று பேசினார்.

நெ.து.சு. அவர்கள், “உங்கள் முயற்சியால், இன்றைக்கு கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 60% மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள்” என்றார்.

அதற்குக் காமராசர், “அதைத் தானே நாம் விரும்பினோம்; அதுக்குத் தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஒரு தலைமுறை படித்து மேல வந்துட்டா அப்புறம் அந்தத் தலைமுறையே, அந்த கிராமமே மேல வந்துடும்! என்றார்.

”அய்யா பெரியார் கிட்ட இந்தவிவரத்தைச் சொன்னேன். அவருமிகுந்த மகிழ்ச்சியோடு, “இவ்வளவுக்கும் காரணம் காமராசர் அய்யாதான். அவருக்குத்தான் தமிழன் கடன் பட்டிருக்கான். அவர் மட்டும் இல்லான்னா 1952 லேயே நம்ம தலைமுறையையே இராஜகோபாலச்சாரியார் குழித்தோண்டி புதைத்திருப்பார்” என்று பெரியார் சொன்னதைக் கூறினார் நெ.து.சு.

உடனே காமராசர், “அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் அய்யாவாலேதான் நடக்குது! அவர் சொல்றார் நாம செய்றோம்...! காரணகர்த்தா அவர்தானே! 1952ல் வந்த பிரச்சினை” அய்யாயிரம் வருஷமா இருக்கிற தாச்சே...! கடவுள் பேராலும், மதத்து பேராலும் நம்ம ஒடுக்கிவைச்சுட்டானே...! இதைப்பத்தியாரு கவலைப்பட்டா...?

பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டிட்டு பண்ணிட்டிருக்கார். அவர்மட்டுமில்லன்னா நம்ம புள்ளைங்க கதி என்னாயிருக்கும்?

கோவணங்கட்டி ஏர் ஓட்டினவர்கள், கலக்டரா, செக்ரட்டரியா. ஒக்காந்திருக்க யார் காரணம்! பெரியார் தானே...!

நம் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரியார் சொல்றதை செய்யுறோம்...!

பெரியார் எந்த அதிகாரமும் இல்லாமலே எவ்வளவு பெரியகாரியத்தையெல்லாம் நம்மக்களுக்காச் செய்கிறார்! “என்று உணர்வு பொங்கக் கூறினார் காமராசர். தமிழன் வீடு என்றால் அங்கு பெரியார் படமும் காமராசர் படமும் இருக்க வேண்டும், என்றார் நெ.து.சு!

வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment