அரசியல்

Friday, June 17, 2016

சித்தர்கள் கூறிய சிறுநீர் சோதனை..................


காலை எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
¨ எண்ணெய்த் துளி பாம்புபோல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம்.
¨ மோதிரம்போல் வட்டமாக எண்ணெய்த்துளி மாறினால் உங்களுக்குப் பித்தம் அதிகம்.
¨ எண்ணெய்த் துளி முத்துபோல் அப்படியே நின்றால் கபம் உங்களுக்கு அதிகம்.
¨ எண்ணெய்த் துளி வேகமாகச் சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
¨ எண்ணெய்த் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
¨ எண்ணெய்த் துளி அமிழ்ந்தால் நோய் குணமாகாது.

மலிவான முள்ளங்கியின் மகத்தான மருத்துவ பயன்கள்................

இது கந்தகச் சத்து மிகுந்தது. வெள்ளை, சிவப்பு என்று இருவகை இதில் உண்டு.
¨ உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
¨ ஆஸ்துமா, மூச்சிறைப்பு, சைனஸ் பிரச்சினையைத் தீர்க்கும். 30 மில்லி முள்ளங்கிச் சாற்றுடன், நீர் கலந்து, சிறிது மிளகுத் தூள் கலந்து பருகினால் கபம் வெளியேறும்; தொண்டை அழற்சி நீங்கும்.
¨ கல்லீரலை பாதுகாக்கும். கொழுப்பை எளிதில் கரைத்து கல்லீரலை இது காக்கிறது. பித்தப்பையில் கற்கள் சேராமல் செய்கிறது.
¨ இரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது.
¨ முள்ளங்கி நார்ச்சத்துடையதால் மலச்சிக்கல் நீங்கும்.
¨ மூலம், பவுத்திரம், சிறுநீர்க்கடுப்பு ஆகியவை நீங்க இது நல்ல மருந்து. சிறுநீரகக் கற்களை வெளியேற்றும்.
¨ உணவில் அடிக்கடி முள்ளங்கியைச் சேர்த்தால், புற்றுநோய் வராமல் தடுக்கும்
¨ இதிலுள்ள போலிக் ஆசிட் கருவுள்ள பெண்களுக்கு நலம் தருகிறது. எனவே, அவர்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
¨ சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
¨ உடல் எடை குறைய உதவும். தோலுக்கு நல்லது; இளமையாய் இருக்கச் செய்யும்.

பிள்ளைகளை விளையாட தடை செய்யக்கூடாது....


பிள்ளைப் பருவம் என்பதே துள்ளித் திரிந்து விளையாடும் பருவம் ஆகும். எனவே, அவர்களை நன்றாக விருப்பப்படி விளையாட அனுமதித்து, படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். விளையாடினால் படிப்புக் கெடும் என்று எண்ணி அவர்களை முடக்குவது அவர்களின் உடல்நலத்தை, உள நலத்தைப் பாதிக்கும். விளையாடினால் படிப்பு பாதிக்கும் என்பது அறியாமை.
நன்றாக விளையாடுவதால் படிப்பு எவ்வகையிலும் பாதிக்காது. எப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பதும் தவறு. எப்பொழுதும் படித்துக் கொண்டிருப்பதும் தவறு. விளையாடும் நேரத்தில் விளையாட அனுமதிக்க வேண்டும்; படிக்க வேண்டிய நேரத்தில் படிக்கச் செய்ய வேண்டும். சிறு பிள்ளைகளாயின் நம் கண்காணிப்பில் விளையாடச் செய்ய வெண்டும்.

ஆதிக்கவாதிகளின் கொடுமை அறிவீர்களா இளைஞர்களே!

முலை பெரிதாக இருந்தால் வரியும் அதிகம்
முலை வரிக்கு எதிராய் தன் முலையையே
அறுத்துக் கொடுத்த இளம்பெண்

ஆதிக்கவாதிகளின் கொடுமை
அறிவீர்களா இளைஞர்களே! 

-------------------------------------
முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள்.
அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது.
இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜியம்தான்.
நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.
இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை.
தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.
இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில்
முலைக்கர்ணம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது.
மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.
‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.
நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.
ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.
மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்ப்கப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.
பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்க ஜாதியினர். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.
ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது.
முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார்.
அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.
இந்த இடம், இடம்பெறும், சேர்த்தலாதான் முன்னாள் இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி அவர்களின் சொந்த ஊர்.
இந்த வரலாறு பேணப்பட வேண்டும், அழகி நாங்கிலிக்கு நினைவிடம் ஒன்றும் எழுப்பப்பட வேண்டும் என்பது அந்த மக்களின் வேண்டுகோள்.
- டைம்ஸ் ஆஃப் இந்தியா, 7.3.2016

குழந்தைகள் முன் பொய் சொல்வதோ, பொய் சொல்லச் சொல்வதோ கூடாது.


பிள்ளைகள் முன் நாம் பொய் பேசுவதோ அல்லது பிள்ளைகளைப் பொய் சொல்லச் சொல்வதோ அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். பெரியவர்களே சொல்லும்போது, அதைச் சரியென்று எடுத்துக் கொண்டு வழக்கமாகப் பொய் சொல்வார்கள். பிள்ளைகள் வளர்ந்ததும் அப்பழக்கம் மாறாது.
பொய் சொல்லும் பிள்ளை திருடவும் செய்யும். திருடச் சென்றால் எல்லா தீயச் செயல்களும் செய்வர். பிள்ளைகளுக்குப் பெற்றோர் முன்மாதிரியாக இருந்து நடந்து காட்டினால்
பிள்ளைகள் தீயனவற்றைச் செய்ய மாட்டார்கள்.

ஷு மற்றும் சாக்ஸ் போடும்போது சோதிக்காமல் போடக்கூடாது


மற்றும் சாக்ஸ் போடும்போது நன்றாகச் சோதித்துப் போட வேண்டும். தேள், சிறுபாம்பு, பூச்சிகள் அதில் அடைய வாய்ப்புண்டு.
கையை விட்டுச் சோதிக்காமல், கவிழ்த்துத் தட்டி, பின் உள்ளே ஏதாவது இருக்கிறதா என்று சோதித்து, ஏதும் இல்லையென்பதை உறுதி செய்த பின்னரே அணிய வேண்டும்.
இதில் கவனக் குறைவாக இருந்து, பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்குச் செல்லும் சிறுவன் ஷுவிற்குள் இருந்த கருந்தேள் கொட்டி உயிரிழந்த நிகழ்வு நடந்துள்ளது. எனவே, இதில் கட்டாயம் கவனம் தேவை.

சாலை விதிகளை மீறக்கூடாது................


சாலைவிதிகள் நம் நன்மைக்காக, நம் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை மீறும்போது பாதிக்கப்படுவது நாம் மட்டும் அல்ல, சரியாக நடக்கின்ற மற்றவர்களும்தான். எனவே, சாலைவிதிகளைச் சரியாக, முறையாகப் பின்பற்றினால் விபத்துக்களை, சேதங்களைத் தவிர்க்கலாம். அவசரப்பட்டுச் சாதிப்பது ஒன்றும் இல்லை. 15 நிமிடம் முன்னால் புறப்பட்டால் அவசரப்பட வேண்டியது இல்லை. 5 நிமிடம் நிற்கத் தயங்கினால் 50 வருட வாழ்க்கைப் போய்விடும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் கேள்விகளுக்குப் பெரியவர்கள் பதில் சொல்ல மறுக்கக் கூடாது:


பிள்ளைகள் குழந்தை நிலையிலிருந்து மாறி வரும்போது வினா எழுப்பிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் அப்பருவம் வினவத் தெரிந்த பருவம் என்று அழைக்கப்படுகிறது.
அப்போது அவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பொறுமையாக, சரியாக விளக்கம் அளித்தால் பிள்ளைகள் அறிவோடும், விழிப்போடும், விவரம் தெரிந்தவர்களாகவும் வளர்வர்.
தங்களுக்குத் தெரியவில்லை என்றால் தெரிந்து வந்து சொல்ல வேண்டும். மாறாக, அவர்கள் அடுத்தடுத்து கேள்விக் கேட்கும்போது, கடுப்பாகி, அவர்கள் ஆர்வத்தைத் தடுக்கக் கூடாது.
எந்த அளவிற்குப் பிள்ளைகள் கேள்விகள் எழுப்புகின்றார்களோ, எந்த அளவிற்கு நாம் சரியான பதில் சொல்கிறோமோ அந்த அளவிற்கு அவர்கள் வாழ்வில் உயர்வர், சிறப்பர்.

மதவெறி கொலையாளிகளை மத்திய அரசு வளர்த்துவிடுகிறதா?



- மஞ்சை வசந்தன்
கன்னையா குமாரை கொல்ல கல்லூரிக்குக்குள் காத்திருக்கும் கொலையாளிகள்!
நாளேட்டில் செய்தி வந்த பின்னும் நடவடிக்கை இல்லை!
மத்தியில் அரசமைப்புப் சட்டப்படி ஆட்சி நடக்கிறதா? 
அல்லது மதவெறியர்கள் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்களா?

மோடி அரசு கொலையாளிகளை வேடிக்கைப் பார்க்கிறதா? அல்லது கொலையாளிகளை வளர்த்து விடுகிறதா?
“கன்னையாகுமாரைக் கொலைசெய்ய பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்கிறார்கள்!’’ என்று நவநிர்மாண் சேனையினுடைய தலைவர் அமித் ஜானி வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட பின்பும், அவர்மீதும் நடிவடிக்கையில்லை!
கொலை செய்யக் காத்திருப்போர் மீது நடவடிககை இல்லை!
உளவுத் துறையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இதுபோன்ற கொலை முயற்சிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும், உரியவர்கள் மீது நடவடிக்கை யெடுத்திருக்க வேண்டும். மாறாக, கொலைகாரர்கள் கன்னையாகுமாரையும், உமர் காலித்தையும் கொலை செய்ய ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக ஒரு கட்சியின் தலைவர் அறிவித்த பின்பும் நடவடிக்கை யில்லையென்றால் என்ன பொருள்? மத்திய அரசே இச்சதிக்கு உடந்தை; அல்லது மத்திய அரசே இப்படிப்பட்ட கொலையாளிகளை வளர்த்து விடுகிறது. இப்படிப்பட்ட மதவெறி கொலைகளுக்குத் துணைநிற்கிறது என்றுதானே பொருள்?
உயர்கல்வி பயிலும், ஆழ்ந்த அறிவும், விழிப்பும், மாணவர்களிடையே செல்வாக்கும் உள்ள, நாடறிந்த மாணவர் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அவர்களை அறிவித்துவிட்டே கொலைசெய்ய அலைகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பதுதானே உண்மையாகும்!
கன்னையாகுமார் செய்த தவறு என்ன? 
மத்திய அரசால் கூறமுடிந்ததா? நீதிமன்றம் குற்றம் செய்தார் என்று கூறியதா? இல்லையே!

மாணவர்களின் கல்வி உரிமைக்காக, சமூக நீதிக்காக, இந்து மதவெறியர்களின் அடாவடிச் செயல்களுக்கு எதிராக, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக, சமஸ்கிருத ஆதிக்கத்தை, மனுதர்ம அநீதிகளை தடுப்பதற்கு தகர்ப்பதற்கு எழுச்சி கொண்டு முழங்கினார்.
துடிப்பும், துணிவும், விழிப்பும், வழிகாட்டும் தகுதியும் கொண்ட, அறிவார்ந்த மாணவர் கூட்டம் கட்டாயம் செய்ய வேண்டிய சமூகக் கடமையை அவர்கள் செய்தார்கள்; செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆரிய பார்ப்பன, மதவெறி கூட்டத்தின் கையாட்கள் ஊடுறுவி தப்பான முழக்கங்களை எழுப்பியதோடு, கன்னையா குமாரைச் சேர்ந்தவர்கள் எழுப்பியதாய் பழிபோட்டு, கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியது அயோக்கியத்தனம் அல்லவா? அப்படிப்பட்ட கயவர்கள் அல்லவா தண்டிக்கப்பட வேண்டும்?
மாறாக, நியாயக் குரல் எழுப்பும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும், வழக்குத் தொடுப்பதும் எவ்வகையில் நியாயம்?

18.02.2016 அன்று எபிவிபியின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை விட்டுவிலகினர். எபிவிபி கூட்டத்தில் காவி அமைப்பினர் தேவையில்லாமல் காவிக் கொடிகளுடன் கலந்து கொண்டதைக் கண்டித்தனர். காவிகள்தான் தப்பான முழக்கங்களை எழுப்பினர் என்பதையும் அப்பட்டமாகக் கூறினர்.
வீடியோ பதிவுகளும் மோசடியாகத் தயாரிக்கப்பட்டதைக் கண்டித்து விஷ்வ தீபக் தனது தலைமை எடிட்டர் பதவியை விட்டுவிலகினார்.
குற்றவாளிகள் முழுக்கக் காவிகளாக, மதவெறிக் காலிகளாக இருக்க, உரிமைக்காகப் போராடும் மாணவர்களைக் கைது செய்வதும், வழக்குப் போடுவதும் செய்து அராஜகமாய் நடந்து கொண்டதோடு அல்லாமல் சமூக நீதிக்காகப் போராடும் மாணவர் தலைவர்களைக் கொல்ல ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்பியுள்ளோம் என்று அச்சமின்றி கூறுவது அராஜகத்தின் உச்சமாகும்.
இதற்கு மேலும் மோடி அரசு காவிக் காலிகளுக்கு பக்கத் துணையாக நிற்குமேயானால், மாணவர்களின் உணர்வு ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராய் கிளம்பும்; அப்படித் திரும்பினால் அதன் விளைவுகள் மிக மோசமாகும்.
எனவே, மதவெறியர்கள்மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் கட்டாயக் கடமையாகும்!

குலக்கல்வியைக் கொண்டுவர கோடை விடுமுறையைப் பயன்படுத்த தினமணி சூழ்ச்சி

- மஞ்சை வசந்தன்
குலக்கல்விக்கு கொல்லைப் புறவழி, குறுக்குவழி என்று பல வழிகளில் முயற்சி செய்து வரும் ஆரிய பார்ப்பனர் கூட்டம், அம்முயற்சியை விடுவதாக இல்லை.
அசல் ஆரிய பார்ப்பன ஏடாக மாறிவிட்ட தினமணி இளைஞர் மணியில் (29.03.2016) நல்லது கூறும் பாணியில் நலிந்த பிரிவு மாணவர்களின் உயர்நோக்கைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றது.
படிக்கும்போதே கைத்தொழில் ஒன்றைக் கற்கவேண்டும். இதற்கு பெற்றோர் ஆவன செய்ய வேண்டுமாம். இதனால் +2 முடிக்கும்போது ஒரு தொழிலைச் செய்ய தயாராகிவிடுவார்கள் என்கிறது தினமணி.
நம்முடைய எதிர்க் கருத்துக்களைக் கூறுவதற்கு முன் இந்த தினமணி வகையறாக்களுக்கு நாம் கூறுவது இதுதான்.
சரி. நல்ல யோசனைதானே! நல்ல பயன்கள் இருக்கிறதுதானே... ஆரிய பார்ப்பனர் வீட்டு பிள்ளைகளை முன் மாதிரியாக சைக்கிள் பஞ்சர் ஒட்டுதல், தையல், ஒயரிங், புத்தக பைண்டிங், மெக்கானிக் வேலை, முடிவெட்டுதல் போன்ற எல்லா வேலைகளுக்கும் பயிற்சி எடுக்கச் சொல்லுங்கள். அதன்பிறகு மற்ற பிள்ளைகளை அனுப்புவதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
சிறார் தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு எதிரல்லவா?
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் இப்படி பயிற்சியென்ற பெயரில் தொழில் செய்யச் சொன்னால் சிறார் தொழிலாளர்களாக ஆக்கப்பட்டுவிடுவார்களே! அது சட்ட விரோதம் அல்லவா?
படிக்கின்ற பிள்ளைகளின் சிந்தை அதில்தான் செல்ல வேண்டும். ஓவியம், பாடல், ஆடல், எழுதுதல் போன்ற திறன் வளர்த்தல் வேறு, தொழில்கள் பயிலல் வேறு.
தொழிற்கல்வி உண்டே
பள்ளிகளிலே நெசவு, ஓவியம், தையல், வேளாண்மை போன்ற தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனவே.
அதை முறைப்படுத்தினாலே போதுமே.
மேல்நிலை வகுப்புகளில்
மோட்டார் மெக்கானிக், ரேடியோ டி.வி. மெக்கானிசம், ஒயரிங், மோட்டார் ரீஒயின்டிங் போன்ற தொழிற்கல்விகள் பயிற்றுவிக்கப்படுகின்றனவே.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து ஏதோ இவர்கள் இளைஞர்களின்மீது அளவுகடந்த அக்கறையுள்ளவர்களாய்க் காட்ட முற்படுவது மோசடியானது.
“ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம்!’’. அந்த கதை இவர்களுக்கு இம்மியளவும் பிசகின்றிப் பொருந்தும்.
கவனம் சிதற, கல்வியை விட வழிவகுக்கும்
இதுபோன்று படிக்கின்ற பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி பயிற்றுவித்தல், குலத்தொழிலைப் பயிற்றுவித்தல் என்று பயிற்சியளித்தால் அவர்களின் கவனம் படிப்பிலிருந்து புரளும்.
சிலர் கல்வியையே கைவிடுவர். எனவே, படிக்கின்ற மாணவர்கள் அதில் முழுமையாகக் கவனம் செலத்தி, தனித்திறன் பெற்றுச் சாதிக்கிக வேண்டும். கல்வி என்பது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்திற்குமானது.
படித்து முடித்த பின்
படிக்க வேண்டிய அளவு படித்த பின், ஏதாவது ஒரு தொழிலை விருப்பப்படி வாய்ப்புள்ளவர்கள் பயிலுதல் தவறல்ல. ஆனால், தினமணி கூறுவது ஒடுக்கப்பட்ட மக்களின் கற்றலை சீர்குலைக்கும் சூழ்ச்சியாகும்.
கோடை விடுமுறை வரவிருப்பதால், அந்த விடுமுறையில் தங்கள் சூழ்ச்சிக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களை பலியாக்கும் தினமணியின் திட்டமாகும் இது. பெற்றோர் இவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.