அரசியல்

Monday, April 20, 2015

16.4.2015 நடுப்பக்க தினமணி கட்டுரைக்கு மறுப்பு

சிந்தனை வறட்சி யாருக்கு?
(16.4.2015 நடுப்பக்க தினமணி கட்டுரைக்கு மறுப்பு)

- மஞ்சை வசந்தன்
அரை வேக்காடுகள் அணிவகுத்து பத்மன்களாக அரங்கேறத் தொடங்கி யிருக்கிறார்கள்!

மண்டைச்சுரப்பை உலகுதொழும்! என்ற பெருமைக்கும், தீர்க்க தரிசி என்று யுனஸ்கோ நிறுவனம் சிறப்பித்த சீர்மைக்கும் உரிய பெரியாரின் சிந் தனைகள் ஊற்றாகப் பெருகக்கூடி யவை. அது ஒரு நாளும் வற்றாது.

தாலி அகற்றும் நிகழ்வு என்பது கருத்துச் சுதந்திரத்திற்காக, கட்டாயம் கருதி அறிவிக்கப்பட்டது. அது போராட் டம் அல்ல புரட்சி; எழுச்சி, விழிப்பு, கிளர்ச்சி, விளக்கம்! 1930 முதலே தாலி அகற்றுதல் என்பது திராவிடர் கழக மாநாடுகளில் நிகழ்வுகளில் தொடர்ந்து செய்யப்பட்டுவருவது.

அறுத்தல் வேறு, அகற்றுதல் வேறு, தாலி அணிந்து செல்பவர்களிடம் வலியச்சென்று அறுக்கும் செயல் அல்ல. தாலி வேண்டாம் என்போர் விரும்பி அகற்றும் செயல். இதையே புரிந்து கொள்ளாத மண்முகங்கள் கத்திக் 
கொண்டிருக்கின்றன.

இது ஒரு விழிப்பூட்டும் வியூகம்.
மந்திரம் இல்லை என்பதை விளக்க செயல் விளக்கம் செய்வது போல,

தீமிதி, அலகு, ஆணிச்செருப் பணிதல் கடவுள் சக்தியால் அல்ல என்பதற்கான செயல் விளக்கம்போல இராகுகாலம், எமகண்டம் போன்ற அச்சங்கள் அகற்ற அந்த நேரத்தில் திருமணம் போன்ற நிகழ்வுகளை நடத்திக்காட்டல் போல, தாலி அகற்றும் நிகழ்வும் ஒரு செயல்விளக்க, விழிப் பூட்டும் நிகழ்வு. இதற்கு தெளிவும் துணிவும் தன்னம்பிக்கையும் தேவை.

தாலி என்பது புனிதப் பொருள் அல்ல; அதைக்கண்டு பெண்கள் நடுங் கத் தேவையில்லை; அது பூசிக்கப்பட வேண் டிய புனிதமும் அல்ல என்பதை விளக்க, உணர்த்தவே இதுபோன்ற நிகழ்வுகள். ஏன், பத்மனே அதை ஒரு பரிசுப் பொருள் என்கிறார். அது பூசிக்கப்பட வேண்டியது என்று கூறவில்லை. தாலி ஒரு பரிசுப்பொருள் என்பது நகைப் பிற்குரிய ஒன்று.

பரிசுப்பொருள், விருதுப்பொருள் என்றால், அன்பளிப்பு என்றால் அதை ஆயுளுக்கும் கழுத்தில் மாட்டிக் கொண்டு யாரும் திரியமாட்டார்கள்.

அதுபரிசுப் பொருள் என்றால் கணவன் இறந்தவுடன் அது ஏன் அறுக்கப்பட வேண்டும்? பத்மன்பதில் சொல்ல வேண்டும்.

கணவன் இறந்தவுடன் தாலி அறுக் கப்படுவதே, தாலி ஓர் அடிமைச் சின்னம் என்பதன் அடையாளம்தானே! அதுமட்டு மல்ல கணவன் வாழ்வே மனைவியின் வாழ்வு, கணவனைச் சார்ந்தே மனைவி வாழவேண்டும். அவள் சுயமரியாதையும் சுதந்திரம் உடைய மனுஷி அல்ல என்பது தானே தாலியின் தத்துவம்.

சங்கராச்சாரி தெய்வத்தின் குரல் நூலில் அப்படித்தானே சொல்கிறார். அதுமட்டுமா? கணவன் இறந்தவுடன் மனைவி அந்த நெருப்பிலே வீழ்ந்து வேக வேண்டும், சாகவேண்டும் என்கிறார். நெருப்புச் சுடாது, தென்றல் போல குளுமையாய் இருக்கும் என்கிறார். இப்படிப்பட்ட சிந்தனைகள் தான் வறளாத சிந்தனை என்கிறார் பத்மன்!

கணவன் இறந்ததும் தாலி அறுக்கப் பட்டு, அழகிய கூந்தலை அகற்றி மொட் டையாக்கி, அணிகளைக் கழற்றி அலங் கோலமாக்கி, படுக்கப்பாயும், சுவையான உணவும் பறிக்கப்பட்டு, நடைபிணமாக, அபசகுனமாக பெண் ஆக்கப்படுகிறாள். அதுவும் இளம் வயதிலே ஆக்கப் படுகிறாள் என்றால், ஆணுக்குப் பெண் அடிமை என்பதைத் தவிர வேறென்ன?

காலமாற்றத்திற்கும், சுயமரியாதைக் கும், சுதந்திரத்திற்கும், அறிவுக்கும், வசதிக் கும் ஒத்துவரவில்லையென்றால் அது அகற்றப் பட வேண்டியதுதானே அறிவு டைமை!

தொல்காப்பியத்தில் இருக்கிறதா? சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள் ளதா? என்று ஏன் தேடப்பட வேண்டும்? யார் சொன்னால் என்ன? எவ்வளவு காலம் பின்பற்றப்படுவ தானால் என்ன? ஏற்றதல்ல என்றால் எற்றித் தள்ள வேண்டியதுதானே சரி! அதுதானே அறிவுடைமை! அதுதானே வளர்ச்சி!

கணவன் இறந்ததும் மனைவியைத் தீயில் தள்ளிக் கொன்றது மரபு. அதை இன் றைக்குப் பின்பற்ற முடியுமா? கணவனை இழந்த பெண் தரிசு நிலம் என்கிறார் சங்கராச்சாரி சரஸ்வதி ஜேயேந்திர  ஏற்க முடியுமா? இவற்றை நாம் மாற்ற வில்லையா? இராசாராம் மோகன் ராய் ஆங்கியேர் துணையுடன் இக்கொடு மையை அகற்றிய போது பத்மன்கள் அன்றைக்கும் அலறித் தான் துடித்தார்கள்! என்றாலும் சட்டத்தால் மரபை மாற்றவில்லையா? மரபை மாற்றித் தானே பெண்ணின் கொடுமைக்கு விடிவு கண்டோம்!

தரிசுநிலம் என்ற தத்துவத்தைத் தகர்த் துத்தானே இன்று மறுமணம் செய்கிறோம். கணவனை இழந்த ஏராளமான பெண்கள் இன்று மனம் ஒப்பி மறுமணம் செய்து கொள்கிறார்களே! இந்த மாற்றங்கள் புரட்சியா? வறட்சியா? கடல் தாண்டி பிராமணன் செல்லக் கூடாது என்றது மரபு. மரபுதாண்டித்தானே அத்தனை பிராமணனும் அயல்நாடு செல் கிறான், செழிக்கிறான். வருவாயும் வசதியும் வரும்போது மரபு மீறலாம்; பெண்ணுக்கு விடிவும் மரியாதையும் கிடைக்க மரபு மீறினால் அது வறட்சியா?

விவாகரத்தை சட்டம் ஏற்கிறதே! இது தாலித்தத்துவத்தை தகர்த்த நிலைதானே! தாலித்தத்துவப்படி விவாகரத்து இயலுமா? விவாகரத்து தாலித் தத்துவத்திற்கு முரண் அல்லவா? எதிர் அல்லவா?

வேட்டியெல்லாம் பேண்ட் ஆனதும், பாவாடை சுடிதார் ஆனதும், பஞ்சமனும் படிக்க வந்ததும் மரபுப்படி ஏற்புடையதா? மரபு மீறலால் வந்த மாற்றங்கள் ஏற்றங்கள் அல்லவா இவை? மரபு மீறிய இப்புரட் சிகள் வறட்சி சிந்தனையால் வந்தவையா?

பித்தலாட்டம், ஏமாற்று இவற்றைத் தடுக்கவே திருமண முறை வந்தது. அதன் தொடர்ச்சியாய் பிற்காலத்தில் தாலி வந்தது சரி. பித்தலாட்டத்தைத் தடுக்க அதைவிட சிறந்த வழி, பாதுகாப்பான, நம்பகமான வழி பதிவுத் திருமணம் செய்து கொள்வது தானே! வீண் செலவும், வெட்டி அலைச்சலும் தாலியும் தேவை யில்லையே!

தாலியே திருமண அடையாளம் என்பது ஒரு வாதம். பெண்ணுக்கு அடை யாளம் தாலி என்றால் ஆணுக்கு எது அடையாளம்? நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்.

தாலி பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பது இன்னொருவாதம். பதிமூன்று வயதில் பருவமடைந்து செழித்து நிற்கும் பெண் 23 வயதில் (தற்காலத்தில்) திருமணம் முடிக் கிறாள். பலருக்கு 30 வயது கூட ஆகி விடுகிறது. இந்த பத்து, பதினைந்து ஆண்டுகள் தான் அவளுக் குப் பாதிப்பு நிறைந்த காலம். இந்தக்காலக் கட்டத்தில் அவளுக்குப் பாதுகாப்பு எது? சிந்திக்க வேண்டாமா?

கூர்மையாகச் சிந்தித்தால் தாலியே இல்லாமல் இருந்தால் யார் திருமணமான வர் என்ற அடையாளம் நீங்கும். அப் போது ஆண் யாரிடமும் விலகியே செல்வான். இதுதானே பெண்ணுக்கு நல்லது. அதுதானே அவளுக்குப் பாது காப்பு.

எனவே, தேவையற்ற சப்பைக்கட் டுகள் கட்டுவதை விட்டுவிட்டு அறிவிற் கும், மனித உரிமைக்கும், மனித நேயத் திற்கும், சமத் துவத்திற்கும், ஆதிக்க அழிப்பிற்கும், சுயமரியாதைக்கும் உகந்தவற்றைப் பின்பற்றி, இவற்றிற்கு எதிரான வற்றை எதிர்த்து விலக்கி வாழ்வதுதானே செம்மையான வாழ்வாக இருக்க முடியும். இப்படிச் சிந்திப்பதுதானே சிறப்பான சிந்தனையாக இருக்க முடியும்!

வாய்க்கு வந்தபடி வாதம் செய்வதை விடுத்து, பிடிவாதம் தவிர்த்து, அறிவு வளர்ச்சி, காலமாற்றத்திற்கு ஏற்ப ஏற்றதை ஏற்பதே அறிவு நாணயமாகும். இல்லை யெனில் அது சுயநலவாதமாகும்.

மரபு, மரபு என்று கூறுகின்றவர் களுக்கு எதிராகத்தான் தாலி தமிழர் மரபா? என்று கேட்கப்படுகிறது. உண் மையில் தாலி ஆரிய மரபும் அல்ல. தமிழர் மரபும் அல்ல. ஆரிய எண் வகைத்திருமணத்திலும் தாலியில்லை. தமிழர் பழந்தமிழ் வாழ்விலும் தாலி இல்லை. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பிற்காலத்தில் வந்த வழக்கு இது. இதுவும் பலவாகப் பிரிந்து மாறிமாறி இன்றும் பலவிதத் தாலியாகப் பரிமாணம் பெற்றுள்ளது.

தமிழர் திருமணம் பற்றி தெரி விக்கும் அகநானூறு - மருதம் - 86ஆம் பாடல் 1600 ஆண்டுகளுக்கு முன் நல்லாவூர் கிழாரால் பாடப்பட்டது. மற்றும் கவிஞர் விற்றூற்று மூதெ யின்னார் எழுதிய அகம் - மருதம் - 136ஆம் பாடலும் தமிழர் திரு மணம் பற்றித் தெரிவிப்பவை. இவற்றை ஆய்வு செய்தால் திருமண நிகழ்வில் தாலி இல்லையென்பதை அறியலாம்.

பத்மன் காட்டும் வரிகள் பின் னாளில் வந்தவையென்பது மட்டுமல்ல. அவை திருமண நிகழ்வைக் காட்டும் சான்றுகள் அல்ல. அவை ஊகங்கள், உறுதிப்பாடு டையவை அல்ல.

எடுத்துக்காட்டாக
கொளற்கு உரிமரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரிய மரபினர் கொடுப்ப கொள்வதுவே
என்ற தொல் காப்பிய காட்டு.

இதை, கொளற்கு உரிய மரபின் கிழவன், கிழத்தியை கொடைக்கு உரிய மரபினர் கொடுப்ப கொள்வதுவே என்று பொருள் பிரித்தால் கன்னிகா தானம் என்ற அவலம் வரும், பெண்ணை பொருளாக வழங்கும் இழவு ஏற்படும்.

அதையே கொளற்கு உரிமரபின் கிழவன் கிழத்தியை கொடைக்கு உரிமரபினர் கொடுப்ப கொள்வதுவே
 
என்று பிரித்தால் ஆண் பெண் இருவருக்கும் பொதுவாகும். கன்னிகா தானம் என்ற அவலம் நீங்கும்.

எனவே ஊகங்கள், வியாக்யானங் களை விடுத்து தெளிவான ஆதாரங் களை மறைக்காது காட்ட வேண்டும். அதுவே நாணயமான சிந்தனை, விளக்கம் ஆகும்.

திருமண நிகழ்வைக் குறிக்கும் பாடலில் பெண்ணுக்கு தாலிகட்டும் நிகழ்வு சொல்லப்படவில்லை. நான் கூறிய இரு அகநானூற்றுப்பாடலையும் ஆய்வு செய்க.

ஆனால், பெரியாருக்கோ, திரா விடர் கழகத்திற்கோ, எது மரபு, எது வழக்கம் என்பதில் கவலையில்லை. எது மனித நேயத்திற்கு, சமத்துவத் திற்கு, ஆதிக்க ஒழிப்பிற்கு, அறிவுக்கு, வளர்ச்சிக்கு ஏற்றதோ அதை ஏற்க வேண்டும். எதிரானதை எதிர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதே! எனவே திராவிடர் கழகச் செயல் பாடுகள் விமர்சிக்கப்படும் வேளையில் இந்த அணுகுமறை கட்டாயம்.

தாலி, தமிழ்ப்புத்தாண்டு இரண்டு பற்றியும் வாதிக்க வேண்டுமானால் தினமணி ஒரு மேடைக்கு ஏற்பாடு செய்யட்டும் வாதிட நாங்கள் தயார்! பத்மன்கள் தயாரா? அறிவு நாணயம் இருந்தால் இதை ஏற்க வேண்டும். மாறாக ஒரு தலையாக எழுதிக் கொண்டிருப்பது நரித்தனமாகும்!