அரசியல்

Friday, September 29, 2017

பிரண்டை

Image result for பிரண்டை
கொடி இனத்தைச் சேர்ந்ததுபிரண்டை’. தோட்டங்களின் புறத்தில் வேலிகள் மீதும், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் அருகில் உள்ள மரம், செடி, கொடிகள் மீதும் பரவி வளர்கின்ற தாவரம் இது. காடு, மேடுகளிலும் பிரண்டை நம் கண்ணில் படும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை சென்டி மீட்டர் கனத்துடன், நீளமாக, தனித்தனிக் கிளைகளாகப் படரும் கொடிதான் பிரண்டை. இது நான்கு பட்டைகள் கொண்டுள்ளது. அவற்றில் நடுவில் ஆங்காங்கே கணுக்கள் உண்டாகும். அவற்றில் ஓரிரு இலைகள் காணப்படும். இவ்விலைகள் ஓர் அங்குலம் முதல் ஒன்றரை அங்குல அகலத்தில் வட்ட வடிவுடன் இருக்கும். இலைகளின் காம்பிலிருந்து இன்னொரு காம்பு தோன்றும். அது மலர்ந்து, காய்க்கும். பிரண்டையின் தண்டுகளும் இலைகளும் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

பிரண்டை தாவர இயலில் Cissus Quadrangularis என்ற பிரிவைச் சார்ந்த தாவரமாகும். இதில் பல வகைகள் உண்டு. சதுரப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, நாப்பிரண்டை, புளிப்பிரண்டை, களிப் பிரண்டை, தீப்பிரண்டை மற்றும் ஓலைப் பிரண்டை என்பன அவ்வகைகளாகும். எல்லாப் பிரண்டைகளும் சமமான அளவில் மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளன.
பிரண்டை நாவில் அல்லது உடலில் பட்டால், பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும். இது கரகரப்புக் குணமுடையது. உறுதியானது. உடலுக்கு உறுதி அளிக்க வல்லது. பொதுவாக அப்பளத்திற்குக் அளிக்க பிரண்டை பயன்படுத்தப்படுகிறது.

பிரண்டையில் கால்சியம், கரோட்டின், அமிரோன், அமைரின், சிட்ரோசிராஸ் என்ற மருத்துவ குணமுடைய வேதிப் பொருட்கள் (Chemicals) உள்ளன. மேலும், இதில் வைட்டமின் ‘‘C’’யும் உள்ளது.

பிரண்டையின் இளந் தண்டுகளைப் பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் உரம் பெறும்.

பிரண்டையின் பயன்கள்

மருத்துவ குணங்கள் நிறைந்த மகத்துவமுள்ள பிரண்டை மந்தநிலை நீங்கி நன்றாகப் பசியுணர்வைத் தூண்டுகிறது. இரத்த மூலம், உள்மூலம், வெளிமூலம் போன்ற அனைத்து மூலநோயையும் குணப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கி இயல்பான வாழ்வு பெற; வயிற்றுப் புண்கள், ஜீரணக் கோளாறுகள், புளிச்ச ஏப்பம் குணமாக; சுளுக்கினால் வீக்கம், வலி ஏற்பட்டால் குணமாக; எலும்பு முறிவு குணமாகி, எலும்புகள் ஒன்று சேர; உடல் வலிமை பெற என அத்தனை நோய்களுக்கும் அறு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு கால வயிற்றுவலி குணமாகவும், முறையில்லா மாதவிலக்கு சீரடைவதற்கும் சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

விலையுயர்ந்த ஆங்கில மருத்துவ மருந்துகளைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டும் குணமாகாத நோய்கள், நம் நாட்டு மூலிகை மருந்தான எங்கும் குறைந்த செலவில் கிடைக்கும் பிரண்டையைப் பயன்படுத்துவதால் விரைவாகவும், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமலும் குணமாகி விடுகின்றன. எனவே, இயற்கையின் அறுங்கொடையான பிரண்டையை பயன்படுத்துவோம்! பிணியின்றி வாழ்வோம்!




Wednesday, September 27, 2017

கீழடி அகழாய்வு முழுமையாய், முனைப்பாய், இடையறாது நடைபெறவேண்டும்


பிச்சை எடுத்து பிழைக்க வந்த ஆரியக் கூட்டம், நாங்கள்தான் இந்த மண்ணுக்கு உரியவர்கள், நாங்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல என்ற பச்சைப் பொய்யைக் கூறி, வரலாற்றையே மோசடியாய் திரிக்க முயன்றது.

சிந்து சமவெளி அகழாய்வு

அந்நிலையில், சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட அகழாய்வுகள், ஆரியர்கள் இந்தியாவிற்கு பிழைக்க வருவதற்கு முன்பே சிறந்த நாகரிக நகர வாழ்வை வாழ்ந்தவர்கள் தமிழர்கள் (திராவிடர்கள்) என்பதை உறுதி செய்தது.

தோண்டத் தோண்ட தொன்மங்கள் தமிழர்க்குச் சாதகமாக வரவே, ஆய்வை முடக்கி, அறிந்தவற்றையும் மறைத்து சதி செய்தனர் ஆரியப் பார்ப்பனர்கள்.

இந்தியாவெங்கும் அகழாய்வு நடத்தினால், ஏராளமாய், தமிழர்க்கு ஆதரவாய்த் தடயங்கள் கிடைக்கும் என்பதால், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த மத்திய அரசு இம்முயற்சியில் தொடர்ந்து இறங்கவும் இல்லை, ஆர்வம் காட்டவும் இல்லை.

என்றாலும், தொல்லியல் துறையினர் தம் கடமைகளைச் செய்ய சிறுசிறு முயற்சிகள் மேற்கொள்ளும் போதெல்லாம், பெரிய அரிய ஆதாரங்கள் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன.

தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்டபோதும், பூம்புகாரில் அகழ் ஆய்வு, கடலாய்வு மேற்கொண்டபோதும் தமிழரின் சிறப்பு, தொன்மை, மேன்மை உணர்த்தும் பல அரிய தடயங்கள் கிடைத்தன.

காவிரிப்பூம்பட்டனம் அகழ் ஆய்வுக்குப் பின் 40 வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல்துறை தமிழகத்தில்ஆய்வு நடத்தியிருக்கிறது. ஆக, நாற்பது ஆண்டுகள் தமிழ் இனத்தின் சிறப்பு வெளியிடக்கூடாது என்றே மத்திய அரசு திட்டமிட்டே ஆய்வுகளை முடக்கியுள்ளது என்பது விளங்குகிறது.

கீழடி ஆய்வின் சிறப்பு

மதுரைக்கு தென்கிழக்கில் 15 கி.மீட்டர் தூரத்தில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி என்னும் ஊர். அண்மையில் அங்கு அகழாய்வு செய்தபோது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் நகர நாகரிகம் அங்கு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைவிட கீழடி அகழ்ஆய்வு தனிச் சிறப்புடையது. சிந்து சமவெளி நாகரிகத் தடயங்களைவிட மிக அரிதான தடயங்கள் இங்குக் கிடைத்துள்ளன. இதனை அறிந்துதான் மத்திய பி.ஜே.பி. அரசு உடனே கீழடி அகழ்ஆய்வை முடக்கியது.

கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் கொண்ட ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிகத்தின் காலகட்டத்தில், தமிழகத்திலும் அதே நகர நாகரிகம் இருந்தமை இதன்வழி புலப்பட்டது என்பதோடு, தமிழர்கள் இந்தியா உட்பட தாங்கள் வாழ்ந்த அனைத்துப் பகுதிகளிலும், நகர வாழ்வு வாழ்ந்தனர் என்பதும் தெரியவந்தது.

கீழடியில் 70க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துகள் கிடைத்துள்ளன. ரோம், ஆப்கான், எகிப்து போன்ற நாடுகளுடனான தமிழர் தொடர்பும் இந்த ஆய்வின்வழி வெளிப்பட்டுள்ளது.

110 ஏக்கர் பரப்பளவில் இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

வரிசை வரிசையாகக் கால்வாய்கள்; அதன் முகப்பிலே பெரும் தொட்டிகள்; தொட்டிக்குள் தண்ணீர் உள் செல்லவும் வெளி வருவதற்குமான அமைப்புகள்; கால்வாய் தடத்தை ஒட்டிச் சிறியதும் பெரியதுமான ஆறு உலைகள்; கால்வாயின் ஆரம்பப் பகுதியில் வட்டக் கிணறுகள்; மூடிய வடிகால்கள், திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்களினால் ஆன வடிகால்கள் என மூன்று விதமான வடிகால் அமைப்புகள்  என்றவாறு ஒரு முழுமையான நகர அமைப்பை உறுதி செய்யும் சான்றுகள், தென்னிந்தியாவில் முதன் முறையாகக் கீழடியில்தான் கிடைத்திருக்கிறது.

பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அல்லது கட்டிடங்கள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டு, அதன் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு இருந்திருக்கலாம் எனவும், வீடுகளின் அருகே பட்டினப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உரைகேணிகளும் இருந்திருக்கலாம் எனவும் இங்கு கிடைத்துள்ள சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. மேலும், ஆப்கானிஸ்தானில் கிடைக்கும் சூது பவளத்திலான மணிகளும், ரோமாபுரியைச் சார்ந்த மட்பாண்டங்களும், வட இந்திய பிராகிருத எழுத்துக்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு, சிவப்பு நிறங்களிலான ஏறத்தாழ 1,000 கிலோகிராம் எடையளவுக்கு மண் ஓடுகளும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன.

சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட மட்பாண்டங்கள் வெளிப்புறத்தில் சுடப்பட்டதைக் குறிக்கும் வகையில், அவற்றின் வெளிப்புறம் கருநிறத்தில் இருந்தன. ஆனால், கீழடியில் கிடைத்த மட்பாண்டங்கள் உட்புறத்திலிருந்து சுடப்பட்டதைக் குறிக்கும் விதமாக அவற்றின் உட்புறம் கருநிறத்தில் இருக்கிறது. கீழடியில் வாழ்ந்த சமூகம் தொழில்நுட்பரீதியில் முன்னேறிய சமூகமாக இருந்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

கீழடியில் தொழிற்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டறியப் பட்டுள்ளன. நெசவுக்குரிய தக்கையில் துவங்கி எண்ணற்ற எளிய தொழில்நுட்பக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியில் கண்டறியப்பட்ட சுமார் 5,300-க்கும் மேற்பட்ட பொருட்களில், வணிகம், கலை, தொழில்நுட்பம், எழுத்தறிவு ஆகியவற்றின் சான்றுகளைக் காண முடிகிறது. மொத்தத்தில், ஒரு மேம்பட்ட நாகரிகத்தைக் கொண்ட சமூக அமைப்பாக கீழடி இருந்துள்ளது.

இது தொடக்க நிலை ஆய்வு மட்டுமே!

தற்போது வரை நடந்துள்ள ஆய்வுகள் தொடக்க நிலை ஆய்வுகள்தான். 2% ஆய்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 98% ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளன. இரண்டு வருடங்களாக நடந்த ஆய்வில் 5,300 தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.

பொறுப்பான அதிகாரி மீது வெறுப்பு காட்டும் மத்திய அரசு!

அமர்நாத் இராமகிருஷ்ணா என்ற பொறுப்பும், ஆர்வமும் உள்ள அதிகாரியின் முயற்சிதான் கீழடியில் நடந்த சிறப்பான ஆய்வுக்கு முதன்மையான காரணம். இவர் முயற்சியில் பல அரிய தடயங்கள் கிடைக்கவே, இவரை விட்டால் தமிழரின் தொன்மைச் சிறப்புகளைத் தோன்டி எடுத்து உலகறியச் செய்து விடுவார் என்று அதிர்ச்சியடைந்த பி.ஜே.பி. அரசு, அவரை அஸ்ஸாமுக்குப் பணி மாற்றம் செய்தது. மூன்றாண்டுக்கு மேல் பணியாற்றியதால் மாற்றிவிட்டோம் என்று ஒரு காரணத்தை மத்திய அரசு கூறியது. ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் மத்தியத் துறைகளில் எத்தனை அதிகாரிகள் உள்ளனர்? அவர்களையெல்லாம் மாற்றாதபோது இவரை மட்டும் மாற்றியது ஏன்? என்று சமூகப் போராளி திருமுருகன் காந்தி அவர்கள் காட்டமாகக் கேட்டார்.

ஆய்வுப் பணிகள்:

முதல்கட்ட ஆய்வுப் பணிகள்:

2015ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை முதல் கட்ட ஆய்வுப் பணி நடத்தப்பட்டது. 43 அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை 4 அடி அகலம் 4 அடி நீளம் உள்ளவை.

இரண்டாம் கட்ட ஆய்வு:

2016ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஆய்வு 59 அகழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 102 பள்ளங்கள் தோண்டப்பட்டன. தமிழகத்தின் மிகப் பெரிய அகழ் ஆய்வு இது. இந்த ஆய்வின்போதுதான் நகர்ப்புற நாகரிகத்திற்கான தடயங்கள் கிடைத்தன. கழிவு நீர் செல்லும் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கல் மேடைகள், ஆறு உலைக் கூடங்கள் கண்டறியப்பட்டன. இவை உற்பத்தித் தொழில் நடந்தமைக்கான ஆதாரங்கள்.

நிதி முடக்கமும் நிதிக் குறைப்பும்

மத்திய அரசு கீழடி ஆய்வை எப்படியாவது முடக்கி, சீர்குலைத்து உண்மை உலகிற்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, ஆய்வுக்குரிய நிதியை வழங்காமல் முடக்கியது. அண்மையில் இந்த ஆய்வுக்கான நிதியையும் குறைத்திருப்பது மிகப்பெரிய துரோகமாகும்.

இல்லாத சரஸ்வதி நதியைக் கண்டறியவும், அந்த நதிதான் சிந்துவெளி நாகரிகத்திற்குத் தொடக்கம் என்று உண்மைக்கு மாறான மோசடிப் பிரச்சாரம் செய்யவும் மத்திய அரசு திட்டமிடுவது பச்சையான ஆரிய ஆதிக்கத் தனமாகும்.

அயோத்தியில் இராமன் அருங்காட்சியகம் அமைக்க ரூ.151 கோடியை கொட்டிக் கொடுக்கும் இந்த காவி அரசு ஓர் உண்மை வரலாற்றை அறிய நிதி ஒதுக்காதது கடுமையான கண்டனத்துக்குரியதாகும்.

மூன்றாம் கட்ட ஆய்வு:

“மூன்றாம் கட்டத்திற்கான திட்ட முன்மொழிவை (Proposal) நான்தான் உருவாக்கினேன். அதற்கான அனுமதியும் எனக்குக் கிடைத்தது. தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கை (Status Report)   தாக்கல் செய்யப்படவில்லை என்று காரணம் காட்டி ஏற்பட்ட தாமதத்தைத் தாண்டி, மார்ச்சில்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், மிகத் தீர்மானகரமான அகழ்வாராய்ச்சிக் கட்டத்தின் மத்தியில் என்னை, துரதிருஷ்டவசமாக, மாறுதல் செய்துவிட்டனர். நான் ஏமாற்றமடைந் திருக்கிறேன். இருந்தாலும், அகழ்வாராய்ச்சியை புதிய குழுவினர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்றும், இன்னும் சிறந்த, இன்னும் பழமையான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பார்கள் என்றும் நம்புகிறேன்’’ என்று இந்த ஆய்வின் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளது கருத்தில்கொள்ள வேண்டிய முக்கியச் செய்தியாகும்.

கண்டெடுத்த பொருள்கள் கர்நாடகத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?

கீழடி அகழாய்வில் கண்டெடுத்த அரிய தொல்பொருள்களை மைசூருக்கு மாற்ற முயற்சிகள் நடப்பது மோசடி, சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள், கீழடி அகழாய்வுப் பொருட்களை அங்கேயே ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாகும்.

வழக்கமாக, மத்திய பி.ஜே.பி அரசின் மிரட்டலுக்குப் பயந்து இந்த முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அது மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

கீழடியில் கண்டெடுக்கப்படும் பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க வேண்டும். ஆய்வுகளும் அங்கேயே  செய்யப்பட வேண்டும்.

கீழடி ஆய்வாளர் சு.வெங்கடேசன் கருத்து!

"காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போது தான் மத்தியத் தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின் போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்தியத் தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது."
நான்காம் கட்ட ஆய்வு - நீதிமன்றம் உத்தரவு:

இது தொடங்கப்பட வேண்டும். இதை உடனே தொடங்கச் சொல்லி மதுரை நீதிமன்றம் கடுமையான உத்தரவை இட்டுள்ளது. திருமதி கனிமொழி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது.

¨     தொல்லியல் துறைக்கான உரிமம் உடனே (இரண்டு வாரத்தில்) புதுப்பிக்கப்பட வேண்டும்.

¨     நான்காம் கட்ட அகழாய்வை உடன் நடத்த வேண்டும்.

¨     அகழாய்வுப் பணி சார்ந்து மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.

சென்ற ஆண்டு (டிசம்பர் மாதம்) திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்றுப் பேராயத்தின் மாநாட்டில் கீழடி அகழாய்வு தொடர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றட்டிருக்கிறது.  அந்த அமர்வுக்குத் தலைமை வகித்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், கீழடியானது தமிழகத்தில் கிடைத்துள்ள மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் மூலம் தமிழக வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கான ஆய்வு மேலும் தொடர வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார்.

எனவே, கீழடி ஆய்வை இனி முடக்க முயல்வது மிகப்பெரும் எதிர்விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகிறோம்.

ஆகவே, கீழடி ஆய்வை முழுமையாய், வெளிப்படையாய், விரைவாய் நடத்தி உண்மை கண்டறிந்து உலகிற்குத் தெரிவிக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கட்டாயக் கடமையாகும். 

- மஞ்சை வசந்தன்

மாவலி, நரகாசுரன் போன்றோர் நமது இன, மண்ணுரிமைப் போராளிகள்!


- மஞ்சை வசந்தன்

புராணங்கள் கற்பனை என்பதில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், அவற்றுள் நுழைத்துள்ள சில உள்ளார்ந்த கருத்துகள் அன்றைய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டவை.

சில நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை காது, மூக்கு வைத்து, கற்பனையாகப் பலவற்றைப் புனைந்து புராணக் கதைகளாக்குகின்றனர்.

இரணியன் பிரகலாதன் கதை. நாத்திகத் தந்தைக்கும் ஆத்திக மகனுக்குமான போராட்டத்தின் கற்பனை விரிவாக்கம்.

சிறுத்தொண்டன் தன் பிள்ளையை அறுத்துச் சமைத்து சாமியாருக்குப் போட்டது உண்மை நிகழ்வு. வடநாட்டுச் சாமியார்கள் அக்காலத்தில் நரமாமிசம் சாப்பிட்டவர்கள். அப்படியொரு சாமியாருக்கு மனிதக் கறி படைக்கவே சிறுத்தொண்டர் தன் மகனை அறுத்துச் சமைத்தான்.

பக்தி வெறியில், பக்தி தீவிரத்தில் தன் மனைவியைக் கேட்ட சாமியாருடன் மனைவியையே அனுப்பிவைத்தவன்தான் இயற்பகை நாயனார். சமைக்கப்பட்ட சிறுதொண்டனின் பிள்ளையை சாமியார் மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார் என்பதெல்லாம் ஜோடனைப் புனைவுகள்!

அந்த வகையில் மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் கதைகளின் உள் ஒடுங்கியுள்ள மய்யக் கரு வரலாற்று நிகழ்வினைக் குறிப்பதாகும்.

மாவலிச் சக்கரவர்த்தி, நரகாசுரன் போன்றவர்கள் திராவிட இனத்தின் மன்னர்கள். இந்த மண்ணின் உரிமையாளர்கள்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள். அவர்களுக்கென்று உரிமையான நிலம் எதுவும் இல்லை.

ஒண்ட வந்த ஆரியர்கள் நிலம் கேட்டு தொல்லை தர, தர முடியாதென்று நம் இனத் தலைவர்கள் மறுக்க, அதன் வழி எழுந்த சிக்கல் கதைதான் புராணங்களாக புனையப்பட்டன.

மாவலி கதையிலும், நரகாசுரன் கதையிலும் நிலம் சார்ந்த சிக்கலே, அடித்தளமான கருப்பொருள் என்பதை உய்த்தறிந்து உணர்ந்துகொண்டால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ளலாம்.

அது மட்டுமல்ல, மாவலியும் நரகாசுரனும் ஒரே தலைமுறையில் வந்தவர்கள் என்ற செய்தி  புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பொருத்திப் பார்த்தால், இருவரும் திராவிடத் தலைவர்கள் என்ற உண்மை எளிதில் புலப்படும்.

அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே போர் என்பதுதான் புராணங்களில் இடம்பெறும் போர்ச் செய்திகள் எல்லாம்.

அப்படியென்றால் என்ன பொருள்? தேவர்கள் யார்? அசுரர்கள் யார்?

சுத்தம்’’ _ அதன் எதிர்ச்சொல் அசுத்தம்.

சுரர் என்றால் தேவர் _ சுரபானம் குடித்த ஆரியர்கள்.

அசுரர் என்றால் சுரர் அல்லாதவர். அதாவது திராவிடர்கள் (தமிழர்கள்) என்பதுதானே அதன் உண்மை.

தமிழர்கள் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட மாபெரும் நிலப்பரப்பிற்கு உரிமையானவர்கள். வேறு எந்த இனமும் கலக்காத நிலையில் தனிமையாய் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், நகரவாழ்வு, கட்டுமானம், மருத்துவத்திறன் என்று பல வகைகளிலும் சிறந்து வாழ்ந்தவர்கள்.

சிந்து, நைல், காவிரி என்று நதிக்கரை நாகரிகம் எல்லாம் தமிழர் திராவிடர் நாகரிகங்களே!

இப்படி வாழ்ந்த தமிழரின் பரந்த நிலத்தில் முதலில் ஆரியர்கள்தான் பிழைப்புக்காக உள் நுழைந்தனர். அவ்வாறு தமிழர்ப் பகுதிக்குள் (இந்தியாவுக்குள்) நுழைந்த அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இல்லாததால், வருவாய் இல்லாததால், தமிழர்களிடம் பிச்சையெடுத்தே வாழ்ந்தனர்.

அவ்வாறு அவர்கள் பிச்சை எடுத்தபோது தங்களை, “பரதேசி’’ (அயல்நாட்டார்) என்று அழைத்துக்கொண்டனர். அந்தப் பெயரே பிச்சைக்காரர்களைக் குறிப்பதாய் பின்னாளில் ஆயிற்று.

ஆக, பிச்சையெடுத்து பிழைத்த ஆரியர்கள், நாளடைவில் தமிழர் மண்ணை சிறிது சிறிதாய் தானமாக, இனாமாக, பிச்சையாகப் பெற்றனர்.

அன்றைய சூழலில் பரந்த நிலப்பரப்பு, குறைந்த மக்கள் தொகை. எனவே, நிலம் ஏராளமாய் இருந்ததால், ஆரியர், தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு ஆரியர் கைப்பற்றிய இடங்களில் அவர்கள் குழுக்களாய் வாழ்ந்தனர். மேலும் மேலுர் ஆரியர்கள் தமிழர் நிலத்தில் நுழைவது தொடர்ந்தது.

ஆரியர் நுழைவு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் தமிழர் நிலங்களைக் கைப்பற்றுவதும் தொடர்ந்தது. அதன் விளைவாய் ஆரியக் குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க, அவர்களின் எண்ணிக்கையும்கூட, அவர்கள் இந்தியாவெங்கும் பரவினர்.

இப்படிப்பட்ட பரவல் அதிகரிக்க அதிகரிக்க, அதைத் தமிழர்கள் தடுத்தனர். ஆரியர் அபகரித்த நிலப் பகுதியையும் மீட்க முயன்றனர். இதன் விளைவாய் ஆரியர் திராவிடர் போர் தொடர்கதையானது!

இரண்யாட்சதன், மாவலியின் கதையை ஆய்வு செய்தாலும், நரகாசுரன் கதைகளைக் கூர்ந்து நோக்கினும், சூரபதுமன் கதையை நுணுகி நோக்கினாலும், நிலத்தை தமிழர்கள் தரமறுக்க, ஆரியர் அபகரிக்க முயலும் நிகழ்வுகளே உள்ளடக்கமாய் இருப்பதை எளிதில் அறியலாம்.

மாவலியின் கதை என்ன?

மாவலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்வுடன் வாழ்ந்தனர். அசுர குலத்தின் வாரிசான மாவலி மன்னனின் வளர்ச்சியைக் கண்ட தேவர்கள், மாவலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் வெற்றிபெறவே, தேவர் குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டது

அசுர குலத்தவனான மாவலி, தான தர்மங்களிலும், யாகங்கள் நடத்துவதிலும்  சிறந்தவனாக விளங்கினான். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த வாமனன் (பார்ப்பனன்), மாவலியின் அரண்மனைக்குச் சென்று, தாம் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டான். வந்திருப்பது சூழ்ச்சிக்கார வாமனன் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மாவலியைத் தடுத்தார்.

தம்மிடம் கையேந்தி நிற்பவர்க்கு உதவ எண்ணிய மாவலி மன்னன், குரு சொன்னதைக் கேளாமல், மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார்.

உடனே, திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால், ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற, மாவலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அளக்குமாறு கூறினான். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த, அவன் பாதாள லோகத்திற்குள் சென்றான். அந்த சமயத்தில் மாவலி சக்ரவர்த்தி, வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அதற்கு வாமனனும் வரமளித்தார் என்கிறது புராணம்.

மேற்கண்ட கதையை கூர்ந்தாய்வு செய்தால், மாவலி மன்னன் (தமிழ் மன்னன்) தன் திறத்தால் பெரும் நிலப் பகுதியை ஆண்டவன் என்பது தெளிவாகிறது. மாவலி என்றாலே மிக வலிமை உடையவன் என்பதே பொருள். ‘வலிஎன்றால் வலிமை என்ற பொருள்.

மாவலி மன்னனுக்கும் ஆரிய பார்ப்பனர்களுக்கும் இடையே மண்ணுரிமைப் போர் நடந்தது என்பதை இக்கதை பதிவு செய்துள்ளது. அப்போரில் மாவலியே வென்றுள்ளார் என்பதும் இக்கதை குறிப்பிடுகிறது.

வலிமையால் போரிட்டு வெல்ல முடியாத ஆரியப் பார்ப்பனக் கூட்டம், நிலத்தை பிச்சையாகப் பெற்று மாவலி ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஊடுருவினர் என்பதே இக்கதையின் வழி அறியப்படும் செய்தியாகும்!

பிச்சை பெற்றதை மறைத்து பெருமையாகக் காட்ட வாமன அவதாரக் கதையைப் புனைந்தனர்.

மூன்றடி மண் கொடுக்க சம்மதித்தான். ஒருஅடியில் மண் உலகம் முழுவதும் அளந்துவிட்டார். இரண்டாம் அடியில் விண்ணுலகத்தை அளந்துவிட்டார். மூன்றாம் அடி எங்கு வைக்க என்றதும் மாவலி தன் தலையைக் காட்ட, அதில்வைத்து அவனை அழித்தார் என்பது ஆரியப் பித்தலாட்ட புனைவு.

ஒரு அடியில் மண் உலகத்தை அளந்துவிட்டார் என்றால் மண் உலகில் உள்ள அனைத்தும் மாவலி உட்பட வாமனனுக்கு உரிமையாகி விட்டது என்று பொருள். அப்படியானால், முன்னமே வாமனனுக்கு உரிமையாகிவிட்ட மாவலியின் தலையில் மூன்றாம் அடி அளந்ததாய்ச் சொல்வது பித்தலாட்டம் அல்லவா? ஒன்றையே இருமுறை அளப்பது மோசடி அல்லவா?

எனவே, மண், விண் அளந்து பின் மூன்றாமடி மாவலி தலைமீது என்பது ஆரியப் பித்தலாட்டப் புனைவு.

உண்மை என்னவென்றால், நிலமற்ற சிறு ஆரியக் கூட்டம் மாவலியிடம் நிலத்தைத் தானம் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டது என்பதே ஆகும்.   ஆரிய சிறுகூட்டம் என்பதன் உருவகம்தான் வாமன அவதாரம் என்பது. அதுவும் மாவலியின் அமைச்சர் ஆரியக் கூட்டத்திற்கு நிலத்தைத் தானம் கொடுக்கக் கூடாது என்று தடுக்கிறார். அதையும் மீறி, மாவலி ஆரியக் கூட்டத்திற்கு பிச்சையாக நிலத்தைக் கொடுத்தான். அப்போது மாவலியின் அமைச்சர், என் பேச்சைக் கேட்காத நீ எல்லாவற்றையும் இழக்கப் போகிறாய் என்று எச்சரித்தார்.

அமைச்சரின் பேச்சைக் கேட்காது மாவலி ஆரியர்களை தன் ஆளுகைப் பகுதியில் விட்டதால், ஆரியர்கள் மேலும் மேலும் நுழைந்து நிலத்தைக் கைப்பற்றியதோடு, தமிழ்ப் பெண்களோடு சேர்ந்து தங்கள் இனத்தைப் பெருக்கினர். இறுதியில் தமிழ் மொழியோடு ஆரியம் அதிகம் கலந்து மலையாளம் என்ற ஒரு புது மொழியும் வந்து, மொழியும் கெட்டது.

எனவே, ஆரியர்கள் திராவிடர்களிடம் நிலத்தைப் பிச்சை பெற்றே தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர் என்பதும், தமிழர்களிடம் ஆரியர்கள் போரிட்டுத் தோற்றனர் என்பதும் இக்கதையின் வழி நாம் உறுதியாய் அறிய முடிகிறது.

வாமன அவதாரக் கதையில் குறிப்பாய் படும் சில செய்திகளும் இதை உறுதி செய்கின்றன.

வாமனன் மாவலியிடம் நிலம் பிச்சையாகப் பெற்றபோது அங்கு வந்த பிரம்மன், “மாவலி தூய உள்ளத்துடன் தானம் (பிச்சை) செய்திருப்பதால் அவன் தண்டிக்கத்தக்கனவல்ல. பெருமைக்குரியவன்’’ என்கிறான்.

வாமனனாக வந்த திருமால், “மாவலி, மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன்’’ என்று பாராட்டுவதாய் இக்கதையில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர்தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக் கூடாது என்று எண்ணிய கண்ணன், தர்மருடன் மலைநாட்டுக்குச் சென்றார். அந்த நாட்டை மாவலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.

அவர்கள் மாவலியின் அரசவைக்குச் சென்றனர். கண்ணபிரான் தர்மரை மாவலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர்தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்'' என்றார்.

மாவலி, தர்மரின் முகத்தில்கூட விழிக்கவில்லை. "கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரிதான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்துகிடக்கிறது. எனவேபிச்சை’’ என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால்தர்மம்’’ என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே, அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை.

இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறேன்'' என்றார்.

தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா’’ என்ற கதையும் மாவலியின் சிறப்பைச் செப்பி நிற்கின்றது.

ஆக, மாவலியின் வரலாறு என்பது, ஆரிய திராவிடப் போராட்டத்தில் ஆரியரை வீழ்த்தி, மண்ணுரிமையைக் காத்தவன் மாவலி. பிச்சையாகக் கேட்டதால் ஆரியர்களுக்கு சிறு நிலத்தை அளித்து உதவினான் என்பதே ஆகும்.

மாறாக, மாவலியை ஆரியம் அழித்ததாகவும், தான் அழிந்த நாளைக் கொண்டாட மாவலி வேண்டியதாயும் கூறுவது மோசடிப் பிரச்சாரம்.

அழிந்தவனை யார் கொண்டாடுவார்கள்?

ஆரியருக்கு எதிராகப் போரிட்டு, ஆரியர்களை வீழ்த்திய தமிழ் மன்னன் மாவலி என்பதாலே, அவன் இறந்த நாளை (திருவோணம்) ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் சரியான வரலாறு. 19ஆம் நூற்றாண்டில் மகராஷ்டிரத்தில் ஜோதிபா பூலே - மாவலி திரும்பி வந்ததைவசந்த விழாவாகக் கொண்டாடினார் என்று புதிய திருவிழா உருவாக்கப்பட்டது.

இன்றைய கேரளம் பண்டைய சேர நாடு. தமிழ் மன்னன் சேரன் ஆண்டது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ மண். ஆக, தமிழரும், தமிழ் மண்ணுமே பிற்காலத்தில் மலையாளிகளாகவும், கேரளாவாகவும் மாற்றம் பெற்றது உண்மை வரலாறு.

அடுத்து நரகாசுரன் கதை:

நரகாசுரன் என்ற பெயரே ஆரியருக்கு எதிரான திராவிட மன்னன் அவன் என்பதை உறுதிசெய்கிறது.

நரன் என்றால் மனிதன். மனிதக் கறியை நர மாமிசம் என்பது வழக்கு. அதன்வழி நோக்கின் இதன் பொருள் புலப்படும்.

ஆரியர்கள் திராவிடர்களை மனிதர்களாகவும், தங்களைத் தேவர்களாகவும் குறிப்பிடுவது வழக்கம். அந்த அடிப்படையில் தமிழ் மன்னன்நரகன்என்று அழைக்கப்பட்டான்.

நரகன் ஆட்சிக்காலம் (கி.மு.2200 முதல் கி.மு.1389) என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

காமரூபம் என்ற பகுதியை ஆண்ட திராவிட மன்னன் நரகன் என்பதும் வரலாறு.

அஸ்ஸாமின் பழைய அரச பாரம்பரிய மன்னன் நரகன். அஸ்ஸாம், வங்காளம் போன்ற பகுதிகள் தமிழர்கள் பரவி பெருமளவில் வாழ்ந்தனர் என்பது அகழாய்வின் மூலம் அறியப்படும் உண்மை. அஸ்ஸாமில், “தமிழ்ப்பூர்’’ என்று ஓர் ஊர், ராங்கிய மாவட்டத்தில் இன்றும் இருப்பதே இந்த உண்மையை உறுதி செய்கிறது.

நரகாசுராகாவ்’’, “நகாசுர கிராமம்’’, “நரகாசுரபஹாட்’’, “நரகாசுர மலை’’ போன்றவை இன்றும் இருப்பது நரகனின் ஆட்சியை உறுதி செய்கிறது.

மண்ணின் மைந்தர்கள் என்பதுதான் பூமிபுத்திரன் என்று திரிக்கப்பட்டு, பூமிக்குப் பிறந்தவன் என்று கதைக்கப்பட்டது.

ஆரியர்கள் வந்தேறிகள். தமிழர்கள் மண்ணிற்கு உரியவர்கள் என்பதுதான் இது உணர்த்தும் உண்மை.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டிக் கொண்டான். அதை விஷ்ணு மீட்டான் என்ற புராணக் கதையின் உட்பொருளை ஊன்றி நோக்கினால், அது உணர்த்தும் உண்மையை அறிய முடியும். பூமியைப் பாயாய் சுருட்டினான் என்றால் என்ன பொருள்?

தனக்கு உரிமையான மண்ணை ஆரியர்கள் அபகரிப்பதற்கு எதிராய் இரண்யாட்சதன் செயல்பட்டான் என்பதே அதன் பொருள்.

அவன் மகன் நரகாசூரன் அதேபோல், ஆரியர்களுக்கு எதிராய் தனது மண்ணுரிமையைப் பாதுகாத்தான் என்பதையே அவன் கதைச் சொல்கிறது-

நரகாசுரன் தேவர்களை எதிர்க்கிறான். தேவர்களின் குமாரர்களைச் சிறை வைத்தான். எனவே அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்ட, விஷ்ணு நரகாசுரனை அழித்தார் என்கிறது புராணம்.

தேவர்கள் யார்? ஆரியர்கள்தான் தங்களை அப்படி அழைத்துக் கொண்டார்கள் என்று முன்னமே கண்டோம். தேவர்களை எதிர்க்கிறான் என்றால் ஆரியர்கள் ஊடுருவலை எதிர்க்கிறான் என்பது பொருள். தேவர் குமாரர்களை சிறை வைத்தான் என்றால், தமிழர் மண்ணை அபகரிக்கும் ஆரிய இளைஞர்களைத் தண்டித்தான் என்பதே பொருள்.

ஆக, நரகாசுரன் என்பவன் தன் ஆளுகைக்கு உட்பட்ட தங்களின் மண்ணுரிமையைக் காக்க ஆரியர்களுக்கு எதிராகப் போரிட்டான் என்பதுதானே இவற்றின் பொருள்.

மாவலி, நரகாசூரன் மட்டுமல்ல எல்லா அசுரர்களும் தமிழர்கள். அவர்கள் ஆரிய ஊடுருவலை எதிர்த்து தங்களின் மண்ணைக் காத்த போராளிகள் என்பதே பொருள்.

அதை மாற்றி அசுரர்கள் கொடுமைக் காரர்கள் போல் சித்தரித்து அவர்களைக் கடவுள் அழித்ததாய்க் கதைகட்டி, நம் இனத் தலைவர்களின் அழிவை நாமே கொண்டாடும் படி சதி செய்துவிட்டனர்.

எனவே, திராவிடர்கள் _ தமிழர்கள், இந்த உண்மையை நன்றாக உணர்ந்து புராணக் கதைகளை நம்பி விழா கொண்டாடுவதை விட்டுவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளது போல, நம் மண்ணுரிமை காத்த அவர்களை சிறப்பிக்கும் விழாவாக நாம் அவற்றைக் கொண்டாட வேண்டும். இதுவே நம் இனத்தின் தலைவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். நம் இனப் பெருமை காத்து இழிவு அகற்றும் வழியுமாகும்.