அரசியல்

Wednesday, September 20, 2017

கோயபல்ஸ் குருமூர்த்தி நியாயம் பேசுகிறார் கேளுங்கள்!


- மஞ்சை வசந்தன்

ஆரிய பார்ப்பனர்களுக்கு நீதி என்பது அவர்களுக்குச் சாதகமானது; அவர்கள் ஆதிக்கத்திற்கு உதவுவது; அடுத்தவர்களை அடிமைப்படுத்தி இழிவுபடுத்துவது என்பதே!

மனுதர்மம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு:

“மற்றவர்கள் கொலைக்குற்றம் செய்தால் அவர்கள் தலையை வெட்ட வேண்டும். ஆனால்,  பார்ப்பான் கொலை செய்தால் அவன் தலைமுடியை மொட்டையடித்தால் போதும்’’ என்கிறது மனுதர்மம். “பார்ப்பானுக்குப் பணிவிடை செய்யவே மற்ற ஜாதியார் படைக்கப்பட்டிருக்கின்றனர்.’’ இதுவும் மனுதர்மந்தான். இப்போது புரிகிறதா? பார்ப்பான் நீதி எப்படிப்பட்டது என்று.
கோயங்கா கணக்குப் பிள்ளை குருமூர்த்தி, தற்போது ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர். அதில் எழுதுவதற்கு குத்தகைக்கு அமர்த்தப்பட்ட நான்கைந்து ஆட்கள்.

நியாய உணர்ச்சியே இல்லாத இந்த ஆட்கள் நியாயம் நிறைய பேசுகிறார்கள்! சரி, தப்பு பற்றி கூறுகிறார்கள்! நாட்டு நடப்புகளை விமர்சிக்கிறார்கள்!

வடிவேல் வசனம் போல, “அவனா நீ’?’’ என்று இவர்கள் பெயர்களைக் கேட்ட அளவிலே இவர்கள் நியாயம் எப்படியிருக்கும் என்று எவரும் சொல்லிவிடலாம்.

என்றாலும், ஏமாளித் தமிழர்கள் இன்னும் இவர்கள் கூறுவதை நியாயம் என்ற நம்பிக் கொண்டிருப்பதால், நாம் அவ்வப்போது அந்த மண்டைகளில் ஏறவேண்டும் என்பதற்காகச் சில விளக்கங்களைக் கூறவேண்டியது கட்டாயக் கடமையாகிறது.

மோசடி, அயோக்கியத்தனம், அநியாயம் என்று தெரிந்தே அதை நியாயம் என்று காட்டும் வேலைதான் இவர்கள் சொல்வது! இதற்காகத்தான் இந்தத் ‘துக்ளக்’ இதழ் வந்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் நாம் சவுக்கடியல்ல, தார்க்குச்சியாலேகூட குத்தித்தான் பார்க்கிறோம்! அவர்கள் தடித்தத் தோல் அப்படி காய்ப்பேறிப் போய் இருப்பதால், அவர்களுக்கு உறைப்பதே இல்லை! அவர்கள் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் உள்ளனர். அதனால் நாமும் நம் வேலையை செய்யத்தானே வேண்டும்!

27.09.2017 ‘துக்ளக்’ இதழில், இரஜினிகாந்தும், பா.ஜ.கவும் இணைந்து தேர்தலைச் சந்திக்குமாம். அப்படிச் சந்தித்தால் எல்லா கட்சிகளும் செல்வாக்கு இழந்து பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்தில் வருமாம்!

குருமூர்த்தியின் குஷியான கற்பனை இது! இரஜினிகாந்தின் “மனசாட்சி’’ தமிழருவி மணியன் பி.ஜே.பி.யுடன் இரஜினி கூட்டணி வைக்கவே மாட்டார்! என்று ஓங்கி அறைந்து சத்தியம் செய்து கூறியபின், இந்தக் குருமூர்த்தி இன்னும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு எலும்பை எதிர்நோக்கும் நாயாய் அலைவது ஏன்?

அது மட்டுமல்ல, இரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் தமிழகமே அப்படியே அவர் பின்னே போய்விடும் என்பது அடிமுட்டாள்தனமான கற்பனையல்லவா?
ஊருக்கு நாலு பேர் இரஜினி இரசிகர். ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா? என்ற ஆவலில் அலைவதை வைத்து, தமிழகமே, “தலைமையேற்கவா’’ என்று அழைப்பதாய்க் கற்பனை செய்து கொள்வது போன்ற ஓர் அறியாமை வேறு ஏது?

¨    மன்னார்குடி குடும்பம் அ.தி.மு.க.வை தி.மு.க.விடம் தாரைவார்க்கப் போகிறது என்று கவலைப்படுகிறார் குமாஸ்தா குருமூர்த்தி.

அது பரவாயில்லை. இங்கிருந்து போனவர்கள் இணைந்தால் என்ன தப்பு?

ஆனால், அசல் அயோக்கியத்தனமாய் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுடன் இணைத்துவிட்ட பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும் எப்படிப்பட்ட துரோகிகள்? இவர்கள் செய்யும் துரோகம் குருமூர்த்திக்கு ருசிக்கிறதா?
என்ன யோவ்! இதுதான் உங்களவா நியாயமா?

¨    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எல்லோரையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டுமாம்! நீட் தேர்வு இவர்களுக்கு வைத்து வெற்றி பெறுபவர்களை மட்டும் வேலையில் திரும்ப சேர்க்க வேண்டுமாம்!

அட அடிமுட்டாளே! நீட் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் நடத்தப்படுவது. அப்படியென்றால் இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நீட் தேர்வு வைத்து, தேர்வு செய்யப்பட்டவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றல்லவா பொருள்!

ஆரிய பார்ப்பனர்கள் தவிர வேறு யாரும் வேலைக்குப் போகக் கூடாது என்ற ஆதிக்க வெறியின் பித்தம் தலைக்கேறி உளரும் உளறல் அல்லவா இது?

அரசுக் கல்லூரியில் படிக்க ஆண்டுக்கு 13 ஆயிரம் ரூபாய் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். தனியார் கல்லூரியில் அரசு கோட்டாவில் ரூ.2 லட்சம் முதல் 4 லட்சம் வரை செலவாகும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ரூ.12 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அப்படியென்றால் என்ன பொருள்? அய்ந்து ஆண்டு ஒரு மாணவன் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு 100 லட்சம் ரூபாய் (1 கோடி) கட்டணம் கட்ட வேண்டும். கட்டணக் கொள்ளையை நீட் ஒழித்துவிட்டது என்று இவ்வளவு நாளாய்க் கூறினீர்களே, அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? இது அசல் மோசடிப் பிரச்சாரம் அல்லவா?

சரி. எல்லாவற்றிற்கும் நீட் தேர்வு என்கிறாயே!

சங்கராச்சாரி தேர்வு, அர்ச்சகர் தேர்வு இவற்றிற்கு முதலில் நீட் தேர்வு வைக்கத் தயாரா?

சூடு, சொரணை, நீதி, நேர்மை, வெட்கம், மானம் இருந்தால் முதலில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு துக்ளக் இதழை நடத்து! இல்லையென்றால், இத்தோடு அதை மூடு! செய்வாயா?

Tuesday, September 12, 2017

துரோகம் புரியும் கிருஷ்ணசாமிதான் ‘துக்ளக்’கின் பாராட்டுக்குரியவர்!


திருமாவளவன் தாழ்த்தப்பட்டோரின் எதிரியாம், ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காகச் செயல்படுகிறாராம். கம்யூனிஸ்டுகள், மற்ற உரிமை காப்பு, மீட்பு அமைப்புகள் எல்லாம் தேசத் துரோகிகளாம்.

துக்ளக்குருமூர்த்தியின் கூட்டம்தான் தியாகத்தின் திருஉருவங்களாம்!

இந்த நவீன உலகத்தில்கூட எவ்வளவு அப்பட்டமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள்.

அனிதாவின் மரணத்தை வைத்து ஆதாயம் அடையப் பார்க்கிறார்கள் என்கிறது இந்த அய்யர்வாள் கூட்டம்.

பி.ஜே.பியிடம் விலைபோன, தலித் துரோகி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர் துரோகி இந்த கிருஷ்ணசாமி.

எப்போது ஆரியப் பார்ப்பனக் கூட்டம், இப்படிப்பட்ட கோடாரிக்காம்புகளை உருவாக்கி, தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட கருவியாய்ப் பயன்படுத்தும் காரியத்தை பரம்பரையாய் செய்து வருகின்றன.

இராவணனின் உடன்பிறந்த விபீஷணனையே பதவி ஆசைகாட்டி தங்கள் கையாளாய்ப் பயன்படுத்திய கூட்டம் அல்லவா?

இன்றைய விபீஷணன், எட்டப்பன் டாக்டர் கிருஷ்ணசாமி.

எப்போதுமே எதிரிகளைவிட, அவர்களின் கையாளாய்ப் பயன்படும் கைக்கூலிகள்தான் அதிகம் குதிப்பர். அந்தக் குறிப்பை டாக்டர் கிருஷ்ணசாமியிடம் தற்போது காணலாம்.

அனிதாவின் தற்கொலையை, படுகொலையென்றே மனிதநேயம் உள்ள அனைவரும் கூறுகிறார்கள் என்றால் அதன் பொருள் என்னவென்று மனிதத் தன்மையுள்ள எவரும் சிந்தித்து உணர்வர். அந்தப் பெண் கோழையல்ல, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர் அல்ல.

பின் ஏன் அனிதா அந்த முடிவை எடுத்தார்?

வேலுநாச்சியார் படையிலிருந்த குயிலி ஆயுதக் கிடங்கை அழிக்க தன் உடல் முழுக்க நெய்ப்பூசி தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு அக்கிடங்கில் குதித்தாளே அது தற்கொலையா?

ஆங்கில ஆதிக்கத்தை அழிப்பதற்காக அவர் கையாண்ட தியாகம் அல்லவா?

இன்று அனிதா செய்துள்ளதும் ஆதிக்கச் சக்திகளின் சூழ்ச்சியை அழிப்பதற்கான தியாகமே!

இதை புரியாத, புரிந்தும் புரியாததுபோல அவர் மரணத்தையும், அவர் மரணத்தால் தமிழகம் கொதித்தெழுந்ததையும் கொச்சைப்படுத்துகிறது ஒரு கூட்டம் என்றால், அவர்களுக்கு அறம் கிடையாது, நீதி கிடையாது, நேர்மை கிடையாது, நலிந்தோரின் வலி தெரியாது, மொத்தமாக மனிதநேயம் என்பதே கிஞ்சிற்றும் கிடையாது.

காரணம் அது பாசிசக் கூட்டம், தன் ஆதிக்கம், தன்னலம், தன் வாழ்வு, தன் உயர்வு இதற்கு எதையும் அழிப்பர்; யாரையும் ஒழிப்பர்.

தொடக்கக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே மருத்துவர் என்ற கனவை மனதிற் சுமந்து, அல்லும் பகலும் அதற்காகவே உழைத்து, பொதுப் போட்டியிலே மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் தகுதிபெற்ற ஒரு பெண்ணைப் பார்த்து உனக்கு மருத்துவம் பயில தகுதியில்லை என்கிறது ஒரு கூட்டம். அதுதான் சரி என்கிற அடிமை கிருஷ்ணசாமிக்கு சபாஷ் தெரிவிக்கிறார் குருமூர்த்தி அய்யர். கிருஷ்ணசாமிதான் நேர்மையாய்ப் பேசுகிறார் என்கிறார்.

ஒரு ஒடுக்கப்பட்ட 17 வயதுப் பெண்நீட்என்னும் சுருக்குக் கயிற்றால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல் ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் விரக்தியின் உச்சத்தில், வேதனையின் விளிம்பில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களின் உரிமையை அபகரித்த ஆதிக்க, பாஸிஸ கும்பல், கொஞ்சங்கூட குற்ற உணர்ச்சியின்றி ஊருக்கு நியாயம் சொல்லிக் கொண்டிருப்பதுதான், சகிக்க முடியாத வேதனை!

இப்படிப்பட்ட யோக்கியர்களிடம் நன்சான்றும் சபாஷும் பெறும் கிருஷ்ணசாமிகள் எப்படிப்பட்ட துரோகிகள் என்பதை இவற்றிலிருந்தே  எடைபோட்டுக் கொள்ளலாம்!

இன எதிரிகளிடம் எவன் ஒருவன் பாராட்டுப் பெறுகிறானோ அவன் இனத் துரோகி! இன எதிரிகளால் எவன் வெறுக்கப்படுகிறானோ அவனே இனத்தின் காவலன்’’ என்பதே அடிப்படை நியதி, உலக அனுபவம் உணர்த்தும் உண்மை!
அந்த அடிப்படையில் பார்த்தால் இன எதிரிகளால் பாராட்டப்படும் கிருஷ்ணசாமி இனத் துரோகி என்பதை எவரும் அறியலாமே!