அரசியல்

Thursday, September 8, 2016

தலைமடை தாதாக்களாய் தமிழகத்தை வஞ்சிப்பதா? மத்திய அரசே!

தலைமடை தாதாக்களாய்
தமிழகத்தை வஞ்சிப்பதா?
மத்திய அரசே!

மேலாண்மை வாரியம் அமைத்திடுக!
நதிகளை இணைத்திடுக!

- மஞ்சை வசந்தன்

பொதுவாக நதிகளின் பிறப்பிடம் ஒன்றாக இருப்பினும், அது பாய்ந்து செல்லும் வழியெல்லாம் பயன்பெறும் இடங்கள் ஏராளம். பிறப்பிடம் தங்கள் பகுதியென்பதால் அணைகட்டி நீர் முழுவதையும் அப்பகுதிக்கே என்பது அடாவடித்தனத்தின் உச்சம்!

நதியின் பாயும் நீளத்திற்கேற்ப பாசன நீரின் பகிர்மானமும் இருக்க வேண்டும். அதுவே நதிநீர் தர்மமாக இருக்க முடியும். ஆனால், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களின் செயல்பாடுகள், நதிநீர் தர்மமும் இன்றி, மனித நேயமும் குன்றி, சட்டத் தீர்ப்புகளையும் மறுத்து ஆதிக்க, ஆணவ மனப்பான்மையில் நடப்பதாய் உள்ளது.

தமிழகம் கேட்பது பிச்சையல்ல. தங்களுக்குச் சேர வேண்டிய உரிமையுள்ள நீர். ஆனால், கர்நாடகம் நாங்கள் கொடுக்கும்போது கொடுப்பதை மட்டுமே தமிழகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும்; சில நேரங்களில் ஒருசொட்டு நீரைக் கூடத்தரமுடியாது என்றும் தாதாக்கள் பாணியில் பதில் சொல்வது வாடிக்கையாய் உள்ளது. கர்நாடகத்திடமிருந்து கற்றுக்கொண்டது போல, ஆந்திராவும், கேரளாவும் செயல்படத்தொடங்கியதோடு, நதி நீர் சிக்கலை அரசியலாக்கி ஆதாயம் பெற நினைக்கின்றனர். நதிகள் என்பவை வேளாண்மையின் இரத்த நாளங்கள். இதயத்திலிருந்து இரத்தம் செல்வதால் இதயமே இரத்தம் முழுமைக்கும் சொந்தம் கொண்டாட முடியாது; கூடாது!

நதிகளின் பயன்பாடுகளும் சிக்கல்களும்:


காவிரி: கர்நாடகப்பகுதியில் இதன் தோற்றுவாய் இருப்பினும் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பாய்ந்து சென்று, அம்மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. 26 இலட்சம்  ஏக்கர் நிலங்கள் ஆற்றின் மூலம் பாசனம் பெறுகின்றன. சென்னை உட்பட 17 மாவட்ட மக்கள் இந்த ஆற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி உயிர்வாழ்கின்றனர். இந்நிலையில் கர்நாடக அரசு சட்டம், தர்மம், மனித நேயம், மாற்றார் உரிமை என்று எதையும் மதிக்காது புதிதுபுதிதாய் அணைகளைக் கட்டி 50 டி.எம்.சி. தண்ணீரை தங்கள் மாநிலத்திலேயே சேர்த்து வைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.

பாலைவனமாகும் பாசன நிலங்கள்: முப்போகம் பயிரிட்டு செழித்த தமிழகப் பகுதிகள் ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி தவிக்கும் அவலம் தற்போது எழுந்துள்ளது என்றால் அதற்கு தண்ணீர் பற்றாக்குறை மட்டும் காரணமல்ல, சரியான நீர்மேலாண்மை இன்மையும், மத்திய அரசின் துணிவான பகிர்மான திட்டங்கள், செயல்பாடுகள் இன்மையுமே காரணம்.

பாலாறு: கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திரா வழியாக 38 கி.மீ. தூரம் கடந்து வந்து தமிழ் நாட்டில் 222கி.மீ தூரம் கடந்து சதுரங்கப்பட்டினத்தில் கடலில் கலக்கிறது. ஆந்திர அரசு, ஒரு கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பனை என்று 20 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்திற்கு வர வேண்டிய பலாற்று நீரைப் பறிக்க முயற்சிக்கிறது. இதனால் பாலாற்றின் மூலம் பாசனமும் குடிநீரும் பெறும் பல மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.

சிறுவாணி ஆறு: உலக அளவில், சுவையான நீருக்குப் புகழ்பெற்ற சிறுவாணி ஆறு தமிழக வனப்பகுதியில் 25 கிலோமீட்டர் சென்று, கேரளாவில் காடப்பட்டி என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அதன் நீரை தமிழகமே பயன்படுத்த முடியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முத்திக்குளம், பட்டியாறு போன்ற அணைகளின் நீர் சிறுவாணி அணையில் சேருகின்றன. புல்மேடு பகுதியிலிருந்துவரும் மழை நீரும் அங்கு சேருகிறது.

சிறுவாணி அணைக்கும் அது பவானி ஆற்றில் கலப்பதற்கும் இடையில் உள்ள சித்தூரில் 450 மீட்டர் நீளம் அணைக்கட்டி அந்த நீர் பவானி ஆற்றுக்குக் கிடைக்காமல் தடுக்க முயற்சிக்கிறது. கேரள அரசு. இந்த அணை கட்டப்பட்டால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்வே கேள்விக் குறியாகும்!

சிறுவாணி ஆறு என்பது சிறுவாணி அணையிலிருந்தே உருவாகி, அகழி கோட்டத்தாரா, சோலையூர் போன்ற பகுதிகள் வழியாக 20 கிலோமீட்டர் கடந்து பவானி ஆற்றில் கலக்கிறது. கேரளத்தில் உற்பத்தியாகும் கொடுங்காரப்பள்ளம் என்ற ஆறும் பவானி ஆற்றில் கலக்கிறது. சிறுவாணி ஆற்றில் ஆண்டுக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை இங்கு அணைக்கட்ட  அனுமதி அளித்துவிட்டதாகக் கேரள அரசு கூறுகிறது. இந்த அணை கட்டப்பட்டால், பவானி ஆற்றுக்குச் செல்லும் நீர் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும். இந்த நீரை நம்பியுள்ள பில்லூர் அணைக்கு வரும் நீரும் கேள்விக்குறியாகிவிடும்.

இரு மாநிலங்களுக்கு இடையேயும் ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட வேண்டுமாயின், கடைமடை மாநிலத்தின் அனுமதி பெறவேண்டும். அதன்படி தமிழகத்தின் அனுமதியில்லாமல் கேரளா அணை கட்டக் கூடாது. ஆனால், இவ்விதியையெல்லாம் கேரளா மதிக்காது தன் திட்டத்தைச் செயல் படுத்த முயற்சிக்கிறது.

சிறுவாணி அணையின் குறுக்கே அணைகட்டிதான் அட்டப்பாடி மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கேரள அரசுக்கு இல்லை. கேரள மண்ணிலே உள்ள இடுக்கி அணையிலிருந்தே குழாய்மூலம் குடிநீர் கொடுக்க முடியும்.

கேரள அரசு பல வகைகளில் முயற்சி மேற்கொள்ளும் நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடிதம் எழுதியதோடு கடமை முடிந்ததாகக் கருதிக் கொண்டிருக்கிறார்.

முல்லைபெரியாறு:


அடாவடிச் செயலுக்கு அசல் உதாரணம் முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் கேரளா நடந்து கொள்ளும் முறை. மிக மிக வலுவாக உள்ள முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், 5 மாவட்டங்களைச் சேர்ந்து 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கற்பனை அச்சத்தை உருவாக்கி பிரச்சினையை எழுப்பியது. இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டவேண்டும் என்று கேரளா பிடிவாதம் பிடிப்பது தமிழக மக்களின் உயிராதாரத்திற்கு ஊறுவிளைவிக்கும் மனித நேயமற்ற செயலாகும்.

முப்புறமும் மூன்று மாநில அரசுகளும் நமது குரல் வளையை நெறிப்பது போல அணைகளைக் கட்டுவதும், நீர் தர மறுப்பதும், தமிழக வேளாண் விளை நிலங்களை பாலை நிலமாக்கும் முயற்சியாகும். இந்தியா வேளாண் நாடு. அப்படியிருக்க 75% மக்கள் வேளாண்மையை நம்பியுள்ளனர். அந்த மக்களின் வாழ்வாதாரமான நிலங்கள், நீரின்றி பாலைவனமானால், அம்மக்கள் வாழ்வதெப்படி? பாதிக்கப்படும் மக்களின் உணர்வுகளோடு மோதுவது என்பது இந்தியாவின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை என்பதை உணரவேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள்  உணர்ந்து செயல்படவேண்டும்.

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பதில் எந்த அளவிற்கு தீவிரம் காட்டுகிறோமோ அந்த அளவிற்கு நம் மாநில மக்கள் நம்மை விரும்புவார்கள் என்ற மாநில அரசுகளின் வாக்கு நோக்கும் சரியான நடவடிக்கை மேற்கொண்டால் பாதிக்கப்படும் மாநிலமக்கள் நம்மை வெறுப்பார்கள் என்ற மத்திய அரசின் தயக்கமுமே நதி நீர் சீக்கல் தீராமைக்கு காரணங்கள்.

என்னென்ன? தீர்வுகள்


காவிரிச் சிக்கலுக்கான தீர்வு: உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து, அதன் முடிவுப்படி காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும். மீறும் மாநிலங்களை அரசியல் சாசன 315ஆவது பிரிவின்படி கண்டிக்க வேண்டும். கட்டாயம் நேர்ந்தால் கலைக்கவேண்டும். ஆட்சியே பறிபோகும் என்ற அச்சம் வந்தால்தான் வாக்குநோக்கில் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்கள் தடுக்கப்படும். பற்றாக்குறை காலங்களில் தங்களுக்கு மிஞ்சினால்தான் தரமுடியும் என்ற பிடிவாதம் முற்றிலும் சட்ட, தர்ம, மனிதநேய விரோதமானது. பற்றாக்குறை காலங்களிலும் உரிய விகிதாச்சாரப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப் படவேண்டும்; நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கர்நாடக அரசு புதிய தடுப்பு அணைகளை தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கட்டக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

முல்லைப் பெரியாறு: அணையில் துளையிட்டு ஆய்வு செய்து, உச்சநீதிமன்றம் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ள தீர்ப்பு கூறிய பின்பும், அதில் சிக்கலை உருவாக்குவது அடாவடிச் செயல் அன்றி வேறில்லை. அணை குறித்த அச்சம் அப்பட்டமான கற்பனை. எனவே, இதில் மத்திய அரசின் நிலைப்பாடு உறுதியாக இருந்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
சிறுவாணி: நீர்த்தேக்கம் கேரளப் பகுதியில் இருந்தாலும், அணையிலிருந்து வெளியேறும் நிர் தமிழகத்திற்கே உரியது என்ற நிலையில், மூச்சுக்குழலை அடைப்பதுபோல, கேரள அரச புதிய அணையை தேவையின்றி கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டியது.

பசி ஏப்பக்காரனுக்கும் புளியேப்பக்காரனுக்கும் இடையேயான போட்டிச் சிக்கலைப் போன்றது இது. மேற்கு நோக்கி அரபிக் கடலில் ஏராளமான நீர் வீணாகிக் கொண்டிருக்கும்போது, தேவையின்றி தமிழக மக்களின் உயிர் நாளத்தின் குருதியோட்டமாய் ஓடும் பாசன ஆறுகளில் அணைகளைக் கட்டுவது, விண் வம்புக்கு வரும் விபரீத செயலாகும். எனவே, கேரளா தனது பிடிவாத முடிவுகளை மக்கள் நலன் சார்ந்து கைவிட வேண்டும்.

பவானி ஆற்றிலிருந்து 6 டி.எம்.சி. தண்ணீரை கேரளா எடுத்துக்கொள்ளலாம் என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால், கேரள விவசாயிகள் 13 டி.எம்.சி. தண்ணீரைப் பயன்படுத்துவதை தமிழக அரசு சரியான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

பாண்டியாறு, பனம்புழா திட்டத்தை நிறைவேற்றினால், 14 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கும். மத்திய அரசின் நிதியுதவி பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பவானி பாசனப் பகுதிகள் முழுவதையும் சொட்டு நீர்ப் பாசனமாக மாற்றினால் தண்ணீர் சேமிப்பு ஏற்பட்டு, பற்றாககுறை தவிர்க்க உதவும். இதற்கு அரசு, விவசாயிகளுக்கு நிதிவுதவி செய்ய வேண்டும்.

இறுதித் தீர்ப்பின்படி 30 டி.எம்.சி. நீரை கேரளத்துக்கு நாம் வழங்க வேண்டும். காவிரியில் கபினிக்கு மேலாகக் கேரள எல்லையில் 21 டி.எம்.சி.யும், பவானி ஆற்றில் 6 டி.எம்.சியும், பாம்பாற்றில் 3 டி.எம்.சி.யும் தரவேண்டும். இதுகுறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பவானி, பாம்பாற்றில் தரவேண்டிய 9 டி.எம்.சி. நீரையும் கபினிக்கு மேலே காவிரியிலிருந்தே எடுத்துக்கொள்ள வழி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பவானி ஆறு வரண்டுபோகாமல் காக்கப்படும்.

கர்நாடகம் வழங்கும் இந்த கூடுதலான 9 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்குத் தரவேண்டிய 192 டி.எம்.சி. நீரில் கழித்துக் கொள்ளச் செய்யலாம்.

பவானியாற்றை நம்பியே தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் குடிநீர் தேவையை அமராவதி அணை நிறைவு செய்கிறது. மறுபக்கம் பல்லடம், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி போன்ற பகுதிகளின் குடிநீர்த் தேவையை பவானி ஆறே நிறைவு செய்கிறது.

பாலாறு: பாலாறு பிரச்சினை தீர ஒரே வழி, ஆந்திர அரசு தனது எல்லையில் ஓடிவரும் பாலாற்றுப் பகுதியில் தடுப்பணைகளைக் கட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். ஒரு சிறு பகுதி தன் மாநில வழியே செல்கிறது என்ற ஒரு காரணத்திறக்காக, அங்கே எல்லா நீரையும் முடக்க முயற்சிப்பது தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் கொள்ளையிடும் கொடுஞ்செயலாகும். அவரவர்க்குரிய பங்கு அவரவர்க்கு என்ற ஒற்றை வரி ஒப்பந்தமே அத்தனைச் சிக்கலுக்கும் ஒரே தீர்வு ஆகும்.

மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை:

நதிநீர் சிக்கலை அந்தந்த மாநில அரசு கையில் எடுப்பதும், தீர்மானிப்பதும் மிகத் தவறான செயல்பாடாகும். நீராதாரங்கள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிமையானது. அவரவர் விகிதாச்சாரப்படி நீர்வளத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும். எனவே, நதிகளை நாட்டுடமை ஆக்க வேண்டும். நதிகளை இணைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும். இது விரயத்தையும், வீண் சிக்கலையும், பாதிப்புகளையும் (வெள்ளம், வறட்சி) தடுக்கும். இதில் மத்திய அரசு மவுனியாக இருந்தால், மாநிலங்களுக்கிடையே மோதல் முற்றி, உச்சநிலையில், பிரிவினை, போராட்டங்கள் தீவிரமடைய நேரும். அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை உருக்குலையச் செய்யும். இந்நிலையை முற்றாகத் தவிர்க்க நதிநீர்ச் சிக்கலுக்கு நதிநீர் மேலாண்மை வாரியங்களை உடனே அமைத்து, அவற்றின் தீர்ப்புப்படி நீரைப் பங்கிட்டுக் கொள்ளச் செய்ய வேண்டும். தவறினால், ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டிவரும்.