அரசியல்

Thursday, October 20, 2016

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! - (தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு
அவசரமோ அவசரம்!
கருத்துக்கேட்டு காலம் தாழ்த்தாது
புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமாம்!

(‘தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

- மஞ்சை வசந்தன்

சொல்பவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முதன்மையாளர்! பல்கலைக்கழகம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்). அம்பியின் பெயர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம். ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்குப் பொருத்தமானவர்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் அதற்கேற்ற நிதானத்தோடு, தொலைநோக்கோடு, சமுதாய அக்கறையோடு, மனித நேயத்தோடு, மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, சமூகச் சூழலை, சமூகத்தில் உள்ள பல்வேறு படிநிலைகளை, ஒடுக்கு முறைகளை, உரிமைப் பறிப்புகளை உற்றுநோக்கி கருத்துக் கூறவேண்டும். அதுவும் கல்வியில் கொள்கை வகுக்கும்போது மிகக் கவனத்துடன், ஒரு முறைக்குப் பலமுறை ஆய்வு செய்து, ஒருவருக்கு பலர் விவாதித்து சாதக பாதக விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும்.

ஆனால், இந்த அரைவேக்காட்டிற்கு அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. “வெந்தது போதும் முந்தானையில் கொட்டு” என்ற சுயநல முனைப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரின் கட்டுரையின் தொடக்கமே அபத்தம். இப்படிப்பட்ட அபத்தக் கட்டுரைகள் வைத்தியநாதர் ஆசிரியராய் வந்தபிறகு ‘தினமணி’யில் அடிக்கடி வெளிவருகின்றன.

“வீட்டிற்கு வந்த விருந்தாளி தாகத்திற்கு ஏதாவது கேட்டால், அவருக்குச் சர்க்கரை இருக்கிறதா? ரத்தக் கொதிப்பு இருக்கிறதா? என்று கேட்டு அதற்கேற்ப பழச்சாற்றையோ, குளிர்பானத்தையோ, மோரையோ, காபி, டீ போன்றவற்றையோ கொடுக்க மாட்டோம். இருப்பதைக் கொடுப்போம். அதேபோல் கல்வித் துறையில் அடிப்படைச் சிக்கலுக்கு உடனடித் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். பகுப்பாய்வாளர்களும், படித்தவர்களும் பெரிய பெரிய சிக்கல்களை எல்லாம் பட்டியலிட்டு, மேம்பாட்டிற்கு வேகத் தடையாக இருக்கக் கூடாது”.
இதுவே அவரது கட்டுரையின் தொடக்கம். இதுவே இவர் தரமும், திறனும், சமூகப் பொறுப்பும், நுட்பமும் எப்படிப்பட்டவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அது மட்டுமல்ல. இப்படிப்பட்டவர்களையெல்லாம்  பணியமர்த்தியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தரமும், தகுதியும், நோக்கும், போக்கும் எப்படிப்பட்டது என்பதையும் காட்டுகிறது.

130 கோடி பேர் கொண்ட ஒரு பரந்துபட்ட  நாட்டின் கல்விக் கொள்கையை வகுக்கும்போது எவ்வளவு பொறுப்போடும், பொறுமையோடும், கவனத்தோடும், நேர்மையோடும் செயல்பட வேண்டும் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கே புரியும். ஆனால், இந்த சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையருக்குப் புரியவில்லை!

விருந்தாக வந்தவருக்கு தாகந் தணிக்க பானம் தரும் விஷயமா கல்விக் கொள்கை? மூளைக் கோளாறு உள்ளவர் தவிர வேறு யார் இப்படிக் கூறுவர்?

விருந்தாக வந்தவரின் நலத்தைப் பேண வேண்டியது விருந்து கொடுப்பவரின் தலையாய கடமை. அவருக்கு எது உகந்ததோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பலின் மாண்பு. அவரின் உடல் நிலைக்கு எது தவிர்க்கப்பட வேண்டுமோ அதைத் தவிர்த்து, எது உகந்ததோ அதைத்தான் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த அம்பி அப்படியெல்லாம் கவலைப்பட மாட்டாராம். எது இருக்கோ அதைக் கொடுத்து உனக்கு பாதகமாய் இருந்தாலும் குடி என்பாராம்! எப்படிச் சிரிப்பது? எதனால் சிரிப்பது?

கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டுமாம். பகுப்பாய்வாளர்களை, படித்தவர்களையெல்லாம் கேட்டு அதற்கேற்ப செயல்படக் கூடாதாம். அதனால் அரசின் செயல் வேகம் பாதிக்குமாம். படித்தவர்களை, கல்வியாளர்களை, சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்களை கருத்துக் கேட்பது வேகத் தடையாம்! சுத்த சுயநலக்காரர்கள். அடுத்தவர்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆதிக்கக்காரர்களைத் தவிர இக்கருத்தை எவர் கூறுவர்? எவர் வெளியிடுவர்?

கல்விக் கொள்கை இது ஒன்றும் புதிதல்ல. இவரே ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் கல்விக் கொள்கை வரும்போது கருத்தறிந்து, பரிசீலனை செய்து விவாதித்துதான் முடிவு செய்யப்படும். அப்படியிருக்க இவருக்கும் ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்கும் அப்படியென்ன அவசரம் வந்தது?

கல்வித் துறையின் அடிப்படைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காண, கருத்துக் கேட்காமலே, விவாதிக்காமலே, பரிசீலிக்காமலே, சாதக பாதக விளைவுகளை ஆராயாமலே அமல்படுத்தி விடவேண்டுமாம்; காலவிரயம் கூடாதாம். ஆகா, என்னே அவசரம்! என்னே சமுதாய அக்கறை!

மோடியால் கொண்டுவரப்படுவதால், கல்வி காவிமயமாக்கப்படுவதாக ஓலமிடுகிறார்களாம்! கண்டுபிடித்து விட்டார் இந்த அறிவாளி! கொண்டுவருவது மோடியா? கேடியா? என்பதல்ல இங்கு பிரச்சினை. கொண்டுவரப்படுவதில் என்னென்ன உள்ளன? என்ன நோக்கத்தில் கொண்டுவரப்படுகிறது? யாருக்கு இதனால் சாதகம்? யாருக்கு இதனால் பாதகம்? என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கல்வியாளர்களும், சமுதாய இயக்கங்களும், ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறையுள்ளவர்களும், பண்பாட்டுப் படையெடுப்பு தடுக்கப்பட வேண்டும், மொழி மேலாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்களும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கிறார்கள்; ஏற்க வேண்டியவற்றை ஏற்கிறார்கள்.

“புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்குக் காரணம், இக்கொள்கை சிறுபான்மையினர் கல்வி நிலைய  கோட்பாடுகளில் குறுக்கிடுகிறதோ என்ற அச்சம்தான்” என்பது  இவரது இன்னொரு கண்டுபிடிப்பு.

கொல்லைப்புற வழியாக குலக்கல்வியைக் கொண்டுவரும் முயற்சி; வழக்கொழிந்த சமஸ்கிருதத்தை எல்லோர் மீதும் திணித்து ஆயிரக்கணக்கானோர் மட்டுமே பேசும் அம்மொழியை ஆட்சி மொழியாக்கும் முயற்சி; முதல் தலைமுறை கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வியை இடையிலே முறித்து குலக்கல்விக்கு மடை மாற்றும் மோசடி; கிராமப்புற ஏழைகளுக்கான தாய்மொழி வழிக் கல்வியை ஒழித்துக் கட்டி, மேல்தட்டு மக்களுக்கான சி.பி.எஸ்.சி. கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் அறவே தலையெடுக்காமல், உயர் பதவிகளுக்கு வரவொட்டாமல் தடுக்கும் சூழ்ச்சி போன்ற எத்தனையோ கேடுகளை தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வி முறையை, எதையும் பரிசீலிக்காமல் கொண்டுவர வேண்டும் என்று துடிதுடிப்பதன் நோக்கம் என்ன? அவாள் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல்தானே? அக்கறைதானே?

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விசேஷ உரிமைகளை அரசு வழங்கியது. அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கல்வி வணிகத்திற்கு உதவுகிறது என்பதால், புதிய கல்விக் கொள்கை இச்சிறப்புரிமை தேவையற்றது என்கிறது என்கிறார் இந்த அதிமேதாவி.

இதுதான் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பரிவார புத்தி என்பது. புதிக கல்விக் கொள்கையின் பாதிப்புகளில் சிறுபான்மையினருக்கான சில சலுகைகள் பாதிப்பு உண்டு. ஆனால், அதற்காக மட்டும் புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படவில்லை. மாறாக, மேலே நாம் கூறிய, தலைமுறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளன என்பதால்தான் எதிர்க்கப்படுகிறது. ஆனால், முழுப் பூசணிக்காயைப் பிடி சோற்றில் மறைப்பது போல, எல்லா உண்மையையும் மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகையை மட்டும் சுட்டிக்காட்டி, இந்துக்களை உசுப்பி வெறியேற்றவும் பிரச்சினையை திசைதிருப்பவும் இவர் முயல்வதன் தில்லுமுல்லு தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது.

கல்யாண வீட்டில் விருந்தில் உப்புக் குறைவாகவுள்ளது என்பதற்காக கல்யாணத்தை நிறுத்தக் கூடாது. அதுபோல குறைகளுக்காக புதியக் கல்விக் கொள்கை தடைப்படுவது தேவையற்றது என்று மீண்டும் சாப்பாட்டு உதாரணம் தருகிறார் இவர்.

நம் பிள்ளைகளின் தலைமுறைப் பாதிப்பு, ஒடுக்கப்பட்டோரை ஒழிக்கும் முயற்சி, சமஸ்கிருதத் திணிப்பு, மாநிலக் கல்வியை உதவாததாக்கி, மத்தியக் கல்வியை தூக்கிப் பிடித்து, ஏழைகளை, தாய்மொழி வழிப் பயில்வோரை வேலைவாய்ப்பிற்குத் தகுதியற்றவராக்கி, இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சூழ்ச்சிக் கொள்கைகளைக் கொண்டது இப்புதியக் கல்விக் கொள்கை என்ற மிகமிக முதன்மையான காரணங்களை அறவே மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகை என்பதைக் காரணமாகக் காட்டி மத மோதலுக்கு, வெறுப்பிற்கு வழிவகுக்கும் வேலையை இவர் செய்திருக்கிறார்.

தலைமுறைத் தலைமுறையாய் படித்து உத்தியோகத்தையும், அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள ஆதிக்கக் கூட்டத்திற்கு அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? பி.ஜே.பி ஆட்சியிலே நினைத்ததைச் சாதித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆர்வம் என்பதைத் தவிர இவர் அவசரத்திற்கு வேறு காரணம் இருக்க முடியும்?

மனுதர்ம காலம் மலையேறி விட்டது.  மாணவர் சமுதாயம் இந்தியா முழுவதும் விழிப்பும் எழுச்சியும் பெற்றுவருகிறது. இனி ஏமாற்று வேலைகள் எடுபடாது. பாதிப்புகளை அகற்றிய பின்புதான் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட விடுவோம் என்பதை இவர்களுக்குத் திட்டவட்டமாய் தெரிவித்துக் கொள்கிறோம்! தீவிரமாயும் தெரிவித்துக் கொள்கிறோம்!

Friday, October 14, 2016

பித்தலாட்டமே உன் பெயர் பி.ஜே.பி.யா?


- மஞ்சை வசந்தன்

தொலைக்காட்சி விவாதம். பி.ஜே.பி நாராயணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரவிக்குமார் பங்கேற்று வாதிட்டனர்.

அப்போது சமூகநீதி சார்ந்து பேச்சு வந்தது. சமூகநீதி என்றாலே பெரியாரும், திராவிடர் கழகமுமே முதன்மை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றார் இரவிக்குமார்.

அதைப் பொறுக்கமுடியாத நாராயணன், திராவிடர் கழகத்திற்கும், பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? “மண்டல் குழு தமிழகம் வந்தபோது சந்திக்காதவர் திராவிடர் கழக வீரமணி’’ என்று பித்தலாட்டமான ஒரு பொய்யைச் சொன்னார்?

பச்சைப் பொய் சொல்லுதல், பித்தலாட்டமாய் பேசுதல், உண்மைகளைத் திரித்தல் என்பது பி.ஜே.பி பரிவாரங்கள் இயல்பு, வாடிக்கை, யுக்தி!

நெறியாளராய் அமர்ந்தவர் அதைப் பற்றி பெரிதாய் அதிர்ச்சியடையவில்லை! அவருக்கோ, நாராயணனுக்கோ உண்மை தெரியவில்லை என்ற கொள்வதா? சொல்வதா? அல்லது தெரிந்தும் பித்தலாட்டமா? என்பதே விவாதத்திற்கு, ஆய்வுக்கு உரியது!

தெரியாததை வலுவாகக் கூறி வாதிடுவது அயோக்கியத்தனமாகுமே!

மண்டல் குழு சாதனைகள் அனைத்தும் திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் சாதித்தவை!

சமூகநீதியின் உற்றுக் கண்ணையே மாற்றி ஏமாற்ற முயல்வது முதல்தர மோசடியல்லவா?

எனவே, பி.ஜே.பி சார்ந்த குழுக்களும், அதன் ஊதுகுழல்போல சுயநலத்திற்காய் ஊடக தர்மத்தைப் புறந்தள்ளி செயற்படும் ஊடகங்களும், உண்மை அறியா மக்களுக்கும் தெளிவாய்த் தெரிய மண்டல் சார்ந்த உண்மைகளை இங்கு சுருக்கமாக இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

மண்டல் குழுவின் தமிழக வருகை

பிற்படுத்தப்பட்டோரின் சமூக நிலையினை அறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்திலேயே கூட வைத்து விவாதிக்கப்படாத நிலையில், இரண்டாவது  பிற்படுத்தப்பட்டோர் குழு ஜனதா அரசால் அமைக்கப்பட்டது. பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தோஷ் பிரசாத் மண்டல் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மகாராஷ்டிர மாநில மேனாள் தலைமை நீதிபதி போலே, ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

30.06.1979 அன்று சென்னை வந்த இக்குழுவினரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து கழகத்தின் சார்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தென்னக இரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் இக்குழுவிற்கு வரவேற்பு மற்றும் கோரிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்த அக் கமிஷன் உறுப்பினர் சுப்பிரமணியம் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ரமணிபாய், வலம்புரிஜான் ஆகியோர் உடன் வந்தனர்.

இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரான பி.பி.மண்டல், அதன் உறுப்பினர்களான ஜஸ்டிஸ் போலே, சுப்ரமணியம், ஜனதா பொதுச் செயலாளர்-களான வலம்புரி ஜான், இரமணிபாய் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் பேசிய மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமணியம் அவர்கள் தமது உரையில், “பிற்படுத்தப்பட்டோரின் தந்தையான பெரியார் நூற்றாண்டு விழாவில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதனை மனிதனாக வாழவைக்க தனது காலம் முழுவதும் புரட்சி செய்தவர் பெரியார். அந்த காலம் வந்துவிட்டது. கிராமம் கிராமமாக சென்று பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். நண்பர் வீரமணி இதை செய்வார், நாங்கள் என்றென்றும் உங்களுடன் இருப்போம்’’ என்றார்.

பின்னர் பேசிய மண்டல் குழு உறுப்பினரும், மராட்டிய மாநில மேனாள் தலைமை நீதிபதியுமான போலே அவர்கள் தமது உரையில், “வடநாட்டில் பெரியார் தோன்றாத காரணத்தால்தான் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளார்கள். இங்கே தந்தை பெரியாரின் உழைப்பால் ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

பார்ப்பனியம் இன்னும் உயிரோடு உதைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் தரப்போகும் அறிக்கையை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதிகார வர்க்கத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் ஒழியவில்லை. நாம் ஏமாந்தால் பார்ப்பனியம் நம்மை அழித்துடும்’’ என்று கூறினார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, “பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டு பெருமிதப்படுகிறோம். நீங்கள் மூன்று பேரும் மூன்று முத்துக்களாக எங்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள்.

நீங்கள் தரப்போகும் அறிக்கை -_ குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. துணிந்து செல்லுங்கள்! உங்களுக்குப் பின்னாலே கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது _ என்றும் நிற்கும்.

நீங்கள் தரப்போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையை இந்த முறையும் அரசின் அலமாறியில் தூங்கிக் கொண்டிருக்க நாங்கள் விடமாட்டோம்! விடமாட்டோம்!’’ என்று கூறினார்.

பின்னர் உரையாற்றிய பி.பி.மண்டல் அவர்கள், “நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.

நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையை செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.

அதை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.

பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள்.

இது பெரியாரின் மண் இந்த மண்ணில் நான் ஏராளமாக தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்-பட்டவர்களை, “சூத்திரர்கள்’’ என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்த சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.

மார்க்சிஸ்ட்டு கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி பிற்படுத்தப்-பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.

எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இந்த நாட்டில் அதிகார வர்க்கம் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் கிடைத்துவிடாது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள். 

இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.

காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு-விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.

எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார். 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் என்றவுடன் உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்ற பி.பி.மண்டல் அவர்கள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து ஏடு விஷமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தது. அதையும் மறுநாள் விடுதலை ஏடு தலையங்கம் மூலம் கண்டித்தது.

உண்மைகள் இவ்வாறு இருக்க, வெந்ததைத் தின்றுவிட்டு வந்ததை உளறுவதுபோல் உளறுவது கண்டிக்கத்தக்கதாகும். ஊடக நெறியாளர்கள், சமூகநீதி வரலாறுகளை, இயக்க வரலாறுகளை நன்றாக கற்றறிய வேண்டும. பேசப்படும் தலைப்பு சார்ந்தவற்றை நன்கு தெரிந்து, புரிந்து நிகழ்வில் நியாயம் நிலைக்க துணை நிற்க வேண்டும். இல்லையேல், ஊடகங்களின் சொந்த நோக்கத்திற்காக உண்மைகளை மறைத்து திரித்து வெளிப்படுத்துவது, வெளிச்சம் போடுவது குற்றச் செயல்பாடு மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான செயல்பாடும் ஆகும்!

பெரியார் மண்ணில் திரிபுகளும், தில்லுமுல்லு பிரச்சாரங்களும் எடுபடாது. மோசடிகளை முழுவதுமாய் திராவிடர் கழகம் தகர்க்கும் என்பதை நினைவில் கொண்டு இனஎதிரிகள் பேசவேண்டும்! 

Friday, October 7, 2016

சுப்ரமணியசாமி வடிவில் ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!

சுப்ரமணியசாமி வடிவில் 
ஆரிய பார்ப்பன அயோக்கியத்தனம் பாரீர்!..................

செல்வி செயலலிதா மருத்துவமனையில் உள்ளார். அரசு நிர்வாகம் நடந்து கொண்டுதானிருக்கிறது! அவரைப் பற்றிய உண்மை நிலையைக் கூறி, அரசு நிர்வாகத்தில் தொய்விருந்தால் அதை சரிய செய்ய வேண்டும். அல்லது புதிய முதல்வரைத் தேர்வு செய்ய கேட்க வேண்டும். இப்படித்தான் நியாயமான மனிதர்கள் கேட்பார்கள்.
ஆனால், ஆரிய பார்ப்பன சுப்பிரமணியசாமிக்கு முதல்வர் உடல்நிலைப் பற்றி கவலையில்லை.
தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலையில்லை. ஆரிய பூணூல் ஆதிக்கத்தை எப்படியாவது கொண்டுவந்து அவசரகால நிலையைப்போல ஆட்சி செய்ய வேண்டும் என்று அரிப்பெடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தலைமைச் செயலரைக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டுமாம்.
தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு தென்மாவட்டங்களில் வந்துவிட்டதாம். திராவிடர் கழகம், விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் போன்றவ்ற்றின் கூட்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாம்.
எப்படிங்க!
ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாதம் கேரளாவில் பரவி உள்ளது என்பதுதான் அண்மைச் செய்தி. ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டுமென்றால், கேரளாவில் கொண்டு வர வேண்டும்! ஆனால், அங்கு கொண்டுவரச் சொல்லி இந்த ஆள் கேட்கவில்லை!
மத்திய புலனாய்வுத் துறை தமிழகத்தில் 11 பேரை விசாரணை செய்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 11 பேர் ஐஎஸ் இயக்க செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.
ஐஎஸ் ஆதரவாளர் என்பதால் அவர்களை கைது செய்ய முடியாது என்று கூறியுள்ளது. உண்மை இப்படியிருக்க இல்லாத ஒன்றுக்கு, தொண்டு இயக்கமான திராவிடர் கழகத்தைத் தொடர்புபடுத்தி பழி தீர்க்கத் துடிப்பது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா?
உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காது நடக்கும் கர்நாடக ஆட்சியைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்! என்று இந்த ஆள் கூறவில்லை.
மாறாக, முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்கு குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் என்பதைவிட கோமாளித்தனம், பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியுமா? இதைவிட அநியாய கோரிக்கைதான் இருக்க முடியுமா?
திராவிடர் கழகம் என்றைக்கு வன்முறையில் ஈடுபட்டது? ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, சூத்திர மக்களை சுயமரியாதைக் கொள்ளச் செய்த இயக்கத்தின் மீது எந்த அளவிற்கு இந்தக் கும்பலுக்கு ஆத்திரம், வேகம் இருந்தால் இப்படி வெளிப்பட்டிருக்கும் என்பதை சொரணையுள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!
அது மட்டுமல்ல,
Therefore I urge the Union Home Monister Mr. Rajnath Singh to (1) invoke Article 356 of the Constitution and (2) put the Legislative Assembly in suspended animation (3) impose the AFSPA in all southern districts as well as Chennai for a period of six months till Ms Jayalalitha is able to attend office. The Apollo hospital has expressly made clear in the Press Release that she is required to remain in hospital for a futher period. Hence the pre-emptive action by the Union Government is not only constitutional but also urgent.
என்கிறார் சுப்ரமணியசாமி.
இந்த ஆட்களையெல்லாம் உலவவிட்டு வேடிக்கைப் பார்க்கும் மத்திய மோடி அரசுக்கும்,
சுப்பிரமணியசாமிக்கும் தமிழினம் சரியான பாடம் கற்பிக்கும்! கற்பிக்க வேண்டும்!
அ.தி.மு.க. அமைச்சர்களும் தொண்டர்களும் எப்படிப் பதில் தரப் போகிறார்கள் பார்ப்போம்!
- மஞ்சை வசந்தன்