அரசியல்

Thursday, January 25, 2018

சங்கராச்சாரி செய்தது குற்றம் பெரியார் பேசியது கொள்கை! வேறுபாடு அறியாது ஒப்பிடுவது அறியாமை அல்லது அடிமுட்டாள்தனம்!



சங்கராச்சாரி தமிழ் வாழ்த்தினை அவமதித்த குற்றத்தை மறைக்க
கடவுள் கற்பிதங்கள் பற்றி தந்தை பெரியார் பேசிய பேச்சை எடுத்துக்காட்டி
சிலர் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர்.
சங்கராச்சாரி செய்தது குற்றம்
பெரியார் பேசியது கொள்கை!
வேறுபாடு அறியாது ஒப்பிடுவது
அறியாமை அல்லது அடிமுட்டாள்தனம்!

- மஞ்சை வசந்தன்
விளக்கம் இதோ:
ஒரு அரசின் ஆணைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது. எல்லோரும் எழுந்து நிற்க விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை. அதே ஆள் தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்கிறார். இது தமிழை இழிவுப்படுத்தும் அவமரியாதைச் செயல்.
இதைத் தமிழர்கள் உணர்ச்சி பொங்கக் கண்டிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கச் சொல்கிறார்கள்.
இதை திசைதிருப்ப, பெரியார் பேசிய கொள்கைப் பேச்சை இந்த நிகழ்வோடு முடிச்சிப் போட்டுக் கருத்து பரப்புகின்றனர் சில சூழ்ச்சிக்காரர்கள்.

பெரியார்
பேசியது என்ன?
கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த கூட்டத்தில் (14.08.1971) தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கொண்டுவந்ததுபற்றி பெரியார் கருத்து தெரிவிக்கிறார்.
பெரியார் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், வாழ்த்தில் நம்பிக்கை இல்லாதவர். சாபத்தில் நம்பிக்கை இல்லாதவர். ஒரு மொழியை மொழியாகப் பார்க்க வேண்டும். அதைத் தாயாக, தந்தையாக, கடவுளாகக் கற்பிக்கக் கூடாது. அவ்வாறு கற்பிப்பது கடவுளைக் கற்பித்தது எப்படி முட்டாள்தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம்தான் இதுவும் என்பதே பெரியார் கருத்து; பெரியார் பேசியது.
ஆனால், அவ்வாறு பேசிய கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார் பெரியார்.
பெரியார் கடவுளை மறுத்தாலும், வாழ்த்துக்களை மறுத்தாலும், மொழியைக் கடவுளாக, தாயாக கற்பிப்பதைத் தன் கொள்கைப்படி மறுத்தாலும், அவர் பொது நிகழ்வில் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், மொழி வாழ்த்துப் பாடினாலும் எழுந்து நிற்கத் தவறியதே இல்லை.
உண்மை இப்படியிருக்க விஜயேந்திரர் செய்த தவறை மறைக்க பெரியாரின் கொள்கை விமர்சனத்தைக் காட்டுவது திசைதிருப்பும் சூழ்ச்சி! தமிழர்களே எச்சரிக்கை!
எடுத்துக்காட்டாக, நான் கடவுளை நம்பாதவன். ஆனால், நான் ஆசிரியராக இருந்து பாடம் நடத்தும்போது கடவுள் பற்றிய பாடல் வந்தால் நடத்த முடியாது என்று சொல்ல முடியாது. கொள்கை வேறு. நடைமுறை, அரசு ஆணையை மதித்தல் என்பது வேறு.
மேலும், தந்தை பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று இழிவாய்ப் பேசினார் என்ற கருத்தையும் இந்த நேரத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சங்கராச்சாரியின் குற்றத்தை மறைக்கப் பரப்புகின்றனர்.
தந்தை பெரியாரை முழுமையாக அறிந்த எவரும் அவர் தமிழ் வளர்ச்சியில் கொண்ட பற்றை, அக்கறையை அறிவர்.
அவர் தமிழைக் காட்டுமிராண்டிக் கால மொழியாக வைத்திருக்கக் கூடாது. கால வளர்ச்சிக்கு ஏற்ப, உலக வளர்ச்சிக்கு ஏற்ப, அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப அதை மாற்ற வேண்டும். பழைய புராணங்களையும், இதிகாசங்களையும் கற்பனைக் கதைகளையும் இன்றும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது என்றே கருத்து கூறினார்.
குறிப்பு: பெரியாரின் தமிழ்த் தொண்டை அடுத்தப் பதிவில் விரிவாகக் கூறுகிறேன்.
===

No comments:

Post a Comment