அரசியல்

Monday, January 1, 2018

இரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இவைதான் நடக்கும்!

இரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் 
இவைதான் நடக்கும்!
இரஜினி எழுதி வைத்துக் கொள்ளட்டும்!
- மஞ்சை. வசந்தன்
≠=========≠=======
தமிழருவி மனியனுக்கு தன் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சிக்கு இரஜினிகாந்த் தேவை. ஆனால், இரஜினிகாந்த்திற்கு அரசியல் தேவையா? இதை அவர் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டும்.
இரஜினியை அரசியலுக்குள் இழுக்க முயற்சிப்பவர்கள் தமிழக அரசியல் போக்கும், மக்களின் மனநிலையையும் சரியாக அறியாதவர்கள்.
அதிமுக பலவீனப்பட்டிருப்பது உண்மை. ஆனால், தி.மு.கழகத்தில் வெற்றிடம் என்பது தப்பு. ஸ்டாலின் வலுவாக கட்சியை வைத்துள்ளார்; மக்கள் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.
எனவே, இங்கு மக்கள் மாற்றுத் தலைமையைத் தேடுகிறார்கள் என்பது முழு உண்மையல்ல. இங்கு மக்கள் என்று தனியாக யாரும் இல்லை! எல்லோரும் ஏதோ ஒருவகையில் ஒரு கட்சியின் பற்றில் உள்ளவர்களே! கட்சி சாராதவர்கள் வெகுசிலர். அவர்களில் படித்த இளைஞர்கள் அதிகம். அவர்கள் பலரும் வாக்களிக்கவே வராதவர்கள். வந்தாலும் நோட்டாவுக்குப் போடக் கூடியவர்கள்.
பா.ம.க. அன்புமணி இராமதாஸிடம் இல்லாத திட்டங்களா? 
அவரும் அவர் தந்தையும் பல வருடங்கள் மக்களைச் சந்திப்பவர்கள், போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள்.
இரஜினி சவாலை முறியடித்தவர்கள்.
அவர் சாதிக் கட்சியென்ற வெறுப்பில் பலராலும் புறக்கணிக்கப்படுகிறார். மற்ற சாதிக்காரர்களால் ஒதுக்கப்படுகிறார்.
நாம் தமிழர் கட்சி சீமான் தமிழனின் உணர்ச்சியைக் கட்டமைக்கும் ஆற்றல் பெற்றவர். நிறைய திட்டங்களை வைத்திருக்கிறார். ஆனால், ஆரியப் பகை உணராது, அவர்களும் தமிழர் என்கிறார். 
திராவிடத்தை வெறுக்கிறார். அதனால் மக்கள் அவர் கட்சிக்கு அதிகம் வாக்கு அளிப்பதில்லை. இவர்களைவிட இரஜினி மக்கள் பணியாற்றிவிட்டாரா?
தமிழகத்தில் அரசியலில் மாற்றாக ஒருவர் வேண்டும் என்று மக்கள் விரும்பினால் இந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்களே! ஆனால், அவர்களையே மக்கள் ஏற்கவில்லை!
அப்படியிருக்க இரஜினி போன்ற நடிகர்களை, மக்களுக்காக களம் காணாதவர்களை எந்தக் கொள்கையும் இல்லாது வாழும் சுயநலக்காரர்களை எப்படி ஏற்பர்? சிந்திக்க வேண்டாமா?
இரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரது இரசிகர்கள் அவர்களைச் சார்ந்தோர் வாக்களிப்பர். பொது மக்களில் சிலர் சில எதிர்ப்பார்ப்பில் வாக்களிப்பர். இரஜினி என்னதான் முயன்றாலும் 5 முதல் 7 சதவீத வாக்குகளையே பெற முடியும்!
தமிழகத்தில் 40% வாக்குகள் பெறாமல் ஆட்சி அமைக்க முடியாது.
தமிழகத்தில் மக்கள் அப்படியே தலைகீழாய்ப் புரண்டு (மாறி) வாக்களித்து விடுவார்கள் என்று எண்ணுவது அறியாமையாகும்.
ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் செல்வாக்கை, பிம்பத்தை இரஜினி உண்மையென்று எண்ணி ஏமாந்தால் அது அவரது அறியாமையாகும்.
ஊடகங்கள் தங்கள் ரேட்டை உயர்த்த இரஜினியை தூக்கிக் காட்டுகின்றன.
அது ஒரு வணிக யுக்தி! அவ்வளவே!
இந்த பிம்பத்தை உண்மையென்று இரஜினி எண்ணக் கூடாது.
அவர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால், யார் ஆட்சியில் இருந்தாலும் அதிலுள்ள குறை, கொள்ளை, ஊழலை எதிர்த்துப் போராடி மெல்ல மெல்ல தன்மீதான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கை பெருமளவிற்கு வர சில ஆண்டுகள் பிடிக்கும்.அதன்பின் அரசியல் என்பது பயன்தரும். இது ரஜினிக்கு மட்டும்ல்ல, அரசியலுக்கு வரத் துடிக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
மேலும், தமிழ்நாட்டை தமிழர் ஆளவேண்டும் என்ற கருத்து வலுப் பெறுவதால் இரஜினி போன்ற அயல் மாநிலத்தார் அரசியலில் வெல்ல முடியாது!
வாய்மை, நேர்மை, ஒழுக்கம், தொண்டு, போராட்டம், தியாகம் என்று வாழும் எத்தனையோ தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தலைமை தாங்கும் தகுதி அவர்களில் பலருக்கு உண்டு. அப்படியிருக்க இரஜினியை தேர்வு செய்யும் கட்டாயம் மக்களுக்கு என்றைக்கும் வராது.
இவற்றை உணராது இரஜினி அரசியலுக்கு வர விரும்பினால் வரட்டும்! படட்டும்!

No comments:

Post a Comment