அரசியல்

Thursday, January 18, 2018

கோமாதா"வைவிட "ஆடு அம்மா"தான் உயர்ந்தவர்!

கோமாதா"வைவிட "ஆடு அம்மா"தான் உயர்ந்தவர்!
அப்படியிருக்க ஆட்டை வணங்காதது ஏன்?
காந்தியார் குடித்தது ஆட்டுப்பால்தான். தந்தை பெரியார் பிள்ளைப் பருவத்தில் ஆட்டுப்பாலே குடித்தார்.
=========================
- மஞ்சை வசந்தன்
ஆச்சரியமாய் இருக்கிறதா?
கீழே படியுங்கள்!
பசு மாட்டிற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டால், தாய்ப்பால் இல்லாத நேரத்தில் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து பால் தந்து உதவுவது. எனவேதான் அதை கோமாதா என்கிறோம் என்கின்றனர். அதனால் அதைத் தெய்வமாக வணங்குகின்றனர் என்று பார்ப்பனர்கள் பதில் சொல்வர்.
ஆனால், உண்மை என்ன தெரியுமா?
பசு மாட்டின் பாலைவிட ஆட்டின் பால்தான் குழந்தைக்கு மிகவும் சிறந்தது. குழந்தையின் நலனுக்கு மிகவும் உயர்ந்தது.
ஒவ்வாமை இல்லை:
பசு, எருமை மாடுகளின் பாலைக் காட்டிலும் ஆட்டுப் பாலில் சில கூடுதல் மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வாமை இல்லை. ஆட்டுப்பால் தாய்ப்பாலைப் போன்று இருப்பதால், மாட்டுப்பாலைஅருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பால் அருந்துவதால் எற்படுவதில்லை. இதற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் புரதமான ஆல்பா எஸ்1 கேசினின் அளவு ஆட்டுப்பாலில் குறைவாக இருப்பதே காரணம். ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்துவதில்லை.
மாட்டுப்பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது சில ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.
எலும்புத் தேய்வு ஏற்படாமல் காக்கிறது
250 மிலி பசுவின் பாலில் 276 மி.கி. அளவு கால்சியமும் அதே அளவு ஆட்டுப் பாலில் 327 மி.கி. அளவு கால்சியமும் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு மிகுந்த வன்மையைக் கொடுக்கக் கூடியது. எலும்பு தேய்வு என்னும் ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான கால்சியத்தில் 35/40% ஒரு கப் ஆட்டுப்பாலில் நமக்குக் கிடைத்து விடுகிறது.
இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது
ஆட்டுப்பாலில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. உடலிலுள்ள கொழுப்பு அமிலங்களை சரி செய்வதின் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. அதன் மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ஆட்டுப்பாலில் அதிகளவில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
எளிதில் செரிக்கும்
பசுவின் பாலில் அதிகளவில் லாக்டோஸ் என்னம் சர்க்கரை உள்ளது.
அதை செரிக்க செய்யக்கூடிய லாக்டேஸ் என்னும் நொதி குறைவாக இருப்பின் பாலைச் செரிக்கச் செய்ய முடியாமல் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் நோய்நிலை ஏற்படும். ஆனால், ஆட்டுப்பாலில் லாக்டோஸ் குறைந்த அளவில் இருப்பதால் எளிதில் ஜீரணமாகி விடுகிறது.
ஆட்டுப்பாலில் இருக்கக்கூடிய கொழுப்பு அணுக்கள் பசுவின் பாலில் இருப்பதைவிட மிக சிறியதாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. மேலும் ஜீரணப்பாதையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மேலும் இதிலுள்ள கொழுப்பு அணுக்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியதில்லை.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய செலினியம் என்னும் சத்து ஆட்டுப்பாலில் இருப்பதால் நோயின்றி வாழ துணை செய்கிறது. இதிலுள்ள சத்துக்கள் ஏறக்குறைய தாய்ப்பாலில் இருப்பதைப் போலவே உள்ளதால் மிகச் சிறந்த உணவாகிறது.
உயிர்ச்சத்துக்கள்
புரதம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், செலினியம் போன்ற சத்துக்கள் ஆட்டுப்பாலில் அடங்கியுள்ளன.
இவை மட்டுமின்றி,
ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள் உணவுப் பாதையில் உறிஞ்சப்படுவதைத் தூண்டுவிப்பதால் சில நோய்களுக்கு மருந்துகள் வழங்கும்போது வெள்ளாட்டுப் பாலும் சேர்த்துக் கொண்டால் நோய் விரைவில் நீங்கும்.
வெள்ளாட்டுப் பாலுடன் நீர் சேர்த்துக் காய்ச்சி கற்கண்டுத் தூள் சேர்த்து காலை மாலை அருந்தினால் கப நோய்கள் நீங்கும்.
கல்லீரல், மண்ணீரல் நோய்களினால் வருந்துபவர்களுக்கு வெள்ளாட்டுப் பாலை உணவாக வழங்கலாம்.
முக்கியமாக பசுவுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் உயிர் ஊக்கிகள் போன்றவை ஆடுகளில் பயன்படுத்தப்படாததால் நச்சுத்தன்மை குறைந்த அல்லது நசுசுத்தன்மை அற்ற உணவாக இதைக் கொள்ளலாம்.
வெள்ளாட்டுப் பாலானது சித்த மருத்துவத்தில் அனேக மருந்துகள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள். கோமாதாவைவிட நம் ஆட்டம்மா தானே உயர்ந்தது! இதனால்தான் காந்தி ஆட்டுப்பாலை அருந்தினார் என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தந்தை பெரியார் பிள்ளைப் பருவத்தில் தன் பாட்டி வீட்டில் ஆட்டுப்பால் குடித்தே வளர்ந்தார் என்பது வரலாறு. அதனால்தான் அவர் மிகக் கூரிய அறிவாற்றலோடு இருந்தார்போலும்!
கோமாதாவிற்கு குட்பை சொல்லிவிட்டு. ஆடு அம்மாவை அதிகம் வளர்ப்போம்!
====================

No comments:

Post a Comment