அரசியல்

Tuesday, February 2, 2016

சபாஷ் சகாயம்!


- மஞ்சை வசந்தன்


 அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அவர்கள் நிதானமான, நிலை தடுமாறா, உறுதிப்பாடுடையவர்தான் என்பதை வெளிக் காட்டியதோடு, உருப்படியான நடைமுறைக்கு உகந்த ஒற்றை வரி செய்தியை உள்ளத்தில் பதிய உரைத்துள்ளார்.

 சகாயம் 2016 தேர்தலில் பங்குபெற்று தமிழகத்தில் மாற்றம் காண வேண்டும் என்று இளைஞர் குழுக்கள் எதிர்பார்த்தது. சில குழுக்கள் அவரை வலிய இழுத்துவர முயற்சித்தனர்.

 நாம் அப்போதே சொன்னோம், இது சரியான அணுகுமுறையல்ல. மாற்றம் என்பது தேர்தல் நேரத்தில் நிகழ்த்திக் காட்டக் கூடியது அல்ல. அது திட்டமிட்டு, அமைப்புரீதியாக, மக்களிடம் கொள்கைத் திட்டங்களைக் கொண்டு சேர்த்து, அணிதிரட்டி ஆண்டுகள் சில உழைத்து உருவாக்க வேண்டியது.

 மாறாக, தேர்தலில் நேர்மையானவர் பின்னே மக்கள் முழுக்க வந்துவிடுவர் என்பது சாத்தியமல்ல என்று. அதைத்தான் தற்போது சகாயம் வழிமொழிந்துள்ளார்.

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டத்தில் திருச்சியில் சகாயம் கலந்துகொண்டபோது, “அரசியலுக்கு வருவீர்களா? என்று அவரிடம் கேட்டபோது,

 “அரசியலில் நேர்மையைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் தொடங்க வேண்டிய இடம் சமூகத்தில் இருந்ததான். தேர்தல் அரசியலைத் தாண்டி சமூகத்தை நோக்கிச் செல்ல வேண்டும்’’ என்றார்.
ஆழ்ந்த சிந்தனையுள்ளவர் சகாயம் என்பதற்கு இப்பதிலே சான்று.

 ஆம். இன்னும் மூன்று மாதத்தில் ஒரு பெரும் மாற்றத்தை, அரசியலில் ஏற்படுத்திவிட முடியாது.

 இப்போதுள்ள அரசியல் கட்சிகளில் வலுவுள்ள அணியே இத்தேர்தலில் வெற்றிபெறும். மாறாக, மக்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக மாறி வாக்களித்து மாற்றி விடுவார்கள் என்று அறியாமை.

ரஜினிகாந்தை வா என்று அழைப்பது தப்பு!.......................................

 புதிய தலைமுறை ஏட்டில்கூட, ரஜினியை உசுப்பி விட்டிருக்கிறார்கள். ரஜினியைப் பொறுத்தவரை ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதாலும், வெளிச்சம் போட்டுக் காட்டுவதாலும் பிரம்மாண்டமாகத் தோன்றுகிறார். ஆனால், அவர் தேர்தலில் நின்றால் நிச்சயமாகப் படுதோல்வி அடைவார். அதுவே யதார்த்தம்.
ரஜினி மட்டுமல்ல, சீமானாக இருந்தாலும், வேறு புதியவர்களாக இருந்தாலும் 2016 தேர்தலில் எதையும் சாதிக்க முடியாது.

 மாற்றத்தைக் கொண்டுவர, ஊழலை ஒழிக்க, வளர்ச்சியை, வேலைவாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வை ஏற்படுத்த விரும்புகின்ற எவரும், இப்போதிருந்து இயக்கத்தை அமைத்து, கொள்கை வகுத்து, நோக்கு வரையறுத்து, அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கி, இப்படியிப்படி யெல்லாம் நாங்கள் இவற்றைச் சாதிப்போம் என்று மக்கள் மத்தியில் தொடர்ந்து பரப்புரை செய்து, மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்த அதைத் தீர்க்கப் போராட வேண்டும்.
எங்கு அநீதி கண்டாலும் அதைக் கண்டு கொதித்தெழுந்து தடுக்க வேண்டும்; தகர்க்க வேண்டும்.

மக்கள் பணிகளை மக்களோடு மக்களாய் கலந்து செய்து அவர்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.

 ஊர்தோறும் உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை உருவாக்க வேண்டும். இப்படி 5 ஆண்டுகள் செய்தால் 2020இல் மாற்றம் நிச்சயம் வரும். மக்கள் ஆதரவு கிடைக்கும். மற்றபடி தேர்தல் நேரத்தில் களத்தில் குதிப்பவர்கள் தேர்தல் முடிந்ததும் காணாமல் போவர். இதுவே உண்மை!

 எதிர்காலத்தில் சகாயம் நிச்சயம் பயன்படுவார்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan

No comments:

Post a Comment