அரசியல்

Tuesday, February 2, 2016

தற்கொலைக்கு முயலும் முன் தவறாது இவற்றைச் சிந்திப்பீர்!


 >> தற்கொலை செய்து கொண்டு அரிய உயிரை வெறுமனே போக்கிக் கொள்வதற்க்குப்பதில், தற்கொலைக்குக் காரணமான சிக்கலைத் தீர்பதில் கடுமையாக முயன்று போராடி அதில் அந்த உயிர் போனால் அதுதான் பயன் உடையது; அறிவுக்குகந்தது. பெரும்பாலும் சாதிக்கமுடியும். வெற்றியும் கிடைக்கும். மாறாக, தற்கொலை அறியாமையின் பாற்பட்ட கோழைச் செயல்!
>> அப்படிக் கடுமையாகப் போராடும் போது நான் கொலைச் செய்யப்பட்டாலோ, வேறு வகையில் நான் இறந்தாலோ என் உடல் உறுப்புகளை பலருக்குக் கொடுத்து உதவுங்கள் என்று, தான் உடலை பலருக்கும் பயன்படச் செய்ய வேண்டும்.

 >> 20 வயதுக்குமேல் ஒரு பிள்ளையை வளர்க்க பெற்றோர் என்னபாடுபட்டிருப்பார்கள்; அரசு எவ்வளவு செலவு செய்திருக்கும்; தற்கொலை செய்துகொள்கிறவரின் அறிவு, திறமை, அவரை நம்பிய குடும்பத்தார் என்று இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 >> எதிர்ப்பைக் காட்டவும், எழுச்சியைத் தூண்டவும், விசுவாசத்தைக் காட்டவும், பழிவாங்கவும் தற்கொலைகள் செய்து கொள்வது முட்டாள்தனம்; அறியாமை; தப்பானமுடிவு. உயிரை விடத் துணிகின்றவர்கள், சிக்கல் தீர போராடினால் அவர்களின் தீரம் தீவிரமாக இருக்கும் அது வெற்றியை விரைவில்தரும். எதிரியை அச்சங்கொள்ளச் செய்யும். வீழ்த்தும்.

 >> காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தேர்வு பயம், மதிப்பெண் குறைவு போன்ற காரணங்களுக்காக உயிரைப் போக்கிக் கொள்வதும் அறியாமையின் உச்சமேயாகும். வாழ்வின் ஒரு சிறுபகுதியே இவை. இவற்றிற்காக வாழ்வையே அழிப்பது குற்றம். இவற்றிலிருந்து மீண்டு சாதித்துக் காட்டுவதே மனிதன் என்ற தகுதிக்கு அடையாளம்.

 >> உலகில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமாவது தற்கொலை செய்து கொள்கிறதா? ஒவ்வொன்றும் எப்படித் தன் வாழ்வை; சவாலை துணிவுடன் முயற்சியுடன் எதிர் கொள்கின்றன! சிந்திக்க வேண்டும்.

 தற்கொலை எண்ணம் வரும் போது இவரை எண்ணுங்கள்....

ஸ்டீபன் ஹாக்கிங்

 21 - வது வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (myotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவேயுள்ளார்.

 காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் (Brief History Of time), பிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design) மற்றும் கருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) மேலும் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

 நரம்பு மண்டலமே பாதிக்கப்பட்டு பேச்சு இழந்து செயலிழந்து போன நிலையில் விஞ்சானியாய் உலக அளவில் இவர் சாதனை புரிந்துள்ளபோது, உடல் நலத்தோடு பலத்தோடு உள்ள இளைஞர்கள் தற்கொலைக்கு முயல்வது கோழைத்தனம் அல்லவா!

 சிந்தியுங்கள்!!

No comments:

Post a Comment