அரசியல்

Tuesday, September 29, 2015

ஆடைச் சுதந்திரம் என்பது என்ன?



எனது முகநூலில் ஆடைச் சுதந்திரம் பற்றிக் கருத்து எழுதியிருந்தேன். பலரும் பாராட்டி வரவேற்ற நிலையில், ஒருசில பெரியார் தொண்டர்களே, பெரியார் தொண்டரான நீங்கள் இப்படிச் சொல்லலாமா? என்று வினா எழுப்பியுள்ளார்கள். எனவே, விரிவான ஒரு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

முதலில் நான் சொன்ன கட்டுப்பாடும் கண்ணியமும் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும்தான் என்பதை அழுத்தமாகச் சொல்லிக் கொள்கிறேன்.

சென்னையில் தொடர்வண்டியில் நான் பயணம் செய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் நின்றுகொண்டு பயணம் செய்தான். அவன் அணிந்துள்ள பேன்ட்டை தொடைப்பகுதிவரை இறக்கியுள்ளான். அவன் ஜட்டி முழுவதும் வெளியில் தெரிகிறது. அந்த ஜட்டியையும் கீழே இறக்கிவிட்டுள்ளான் பெண்களும் பயணம் செய்யும் நிலையில் இப்படிச் செல்கிறான். இது சரியா? இது அவன் விருப்பம் என்பதால் இப்படி அணிவதுதான் ஆடைச் சுதந்திரமா?

சில பெண்கள் மிக மெல்லிய லெகின்ஸ் இறுக்கமாகப் போட்டு செல்லும்போது அவர்களின் தோலின் நிறம்கூட தெரிகிறது. சற்று தொலைவிலிருந்து பார்த்தால் ஆடையில்லாமல் இருப்பதுபோல் தெரிகிறது. இது ஆடைச் சுதந்திரமா?

ஆடைத் சுதந்திரம் வேறு ஆபாசம் வேறு! ஆடைச் சுதந்திரம் என்ற பெயரில் ஆபாசமாய் உடையணிவது என்பது வரம்பு மீறும் செயல்.

ஆபாசத்திற்கு அளவு என்ன? என்று கேட்பார்கள். பேசும்போது சில சொற்கள் ஆபாசம்,  பேசக்கூடாது என்று ஒதுக்குகிறோம் அல்லவா? அதற்கு என்ன அளவுகோலா? அதே அளவுகோல்தான் இதற்கும்!

சுதந்திரம் என்பது வரம்புமீறிய செயல் அல்ல. வரம்புக்குட்பட்டு நம் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றுவது ஆகும். ஆணைப் போலவே பெண்ணும் உடையணிய வேண்டும் என்பதே முற்போக்காளர் விருப்பம். அதை நாம் முழுமையாக ஏற்கிறோம்.

காட்டில், மலையில் மழை பொழிகிறது. அந்நீர் கண்டபடி வழிந்தோடி வருகிறது. அது அப்படியே கண்டபடி ஓடியனால் அதனால் எந்தப் பயனும் ஏற்படாது, பாதிப்புகளே அதிகம் ஏற்படும்.

அதே நீரை கரைகள் அமைத்து கொண்டு சென்றால் வேண்டும் இடத்தில் அது பயன்படும். தேவையற்ற இடத்தில் பாய்ந்து பாழாவது தவிர்க்கப்படும்.

கரைகள் அமைப்பதால் நீரின் சுதந்திரம் பாதிக்கப்படுவதில்லை. கரைக்குள்ளே அது தடையின்றித்தான் ஓடுகிறது. சுதந்திரம் என்பதும் இதுதான்.

சாலையில் வாகனம் ஓட்டுகிறவன் என் வாகனம், என் விருப்பப்படி ஓட்டுவேன் என்று ஓட்டினால் என்னாகும்? பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. எதிரில், அருகில் வருகிறவர்களுக்கும்தான்.

சாலையில் ஏன் இடது பக்கம் செல்ல வேண்டும்? நான் விருப்பப்படிச் செல்வேன் என்றால் அங்கு போக்குவரத்தே முட்டி மோதி நிற்கும்.

வீட்டில் தனியறையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மற்றவரோடு சேர்ந்து வாழும்போது சில கட்டுப்பயாடுகள் கட்டாயம்.

குளியறைச் சுதந்திரத்தை பொது இடங்களில் செயல்படுத்த முடியுமா? இடம் அறிதல் வேண்டுமல்லவா?

பெரியார் நிர்வாண சங்கத்தில் நின்றாரே! என்கின்றனர்.

ஆடை என்பது ஒரு மூடத்தனம் என்று எண்ணும் நிலையில் நிர்வாண சங்கம் உருவானது. அதை ஏற்பதுபோல பெரியார் செயல்பட்டார். ஆனால், அதே பெரியார் அந்த இடத்தைவிட்டு அகன்றதும் ஆடை உடுத்திக்கொண்டார். அதன்பின் அவர் அம்மணமாகத் திரியவில்லை.

நிர்வாண சங்கத்தில் அம்மணமாய் நின்றவர் பிற இடங்களில் ஏன் ஆடையுடன் சென்றார்? இதுதான் இடம் அறிதல்.

கூர்மையாக சிந்தித்தால் நாம் உலகில் ஏன் வாழவேண்டும் என்பது கூட அர்த்தமற்றதாகத் தெரியும். அதற்காக வாழமல் இருக்கிறோமா? அது போல் தான் சிலவற்றை உலக இயல்புக்கு ஏற்ப ஏற்று வாழ வேண்டும்.

சுதந்திரம் என்பது கட்டுப்பாடற்றது என்ற கற்பனைத் தவறு. கூடுக்கும் கூண்டுக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் சுதந்திரம் என்பது என்ன? என்பது விளங்கும்.

ஒரு கிளியை சுயநலத்துக்கு அடைத்து வைப்பது கூண்டு. ஆனால், தன் பாதுகாப்பிற்கு பறவை தானே அமைத்துக்கொள்வது கூடு.

பறவை தன் பாதுகாப்பிற்கு கூடு அமைத்துக் கொள்வதுபோல, ஆணும் பெண்ணும் தன் பாதுகாப்பிற்கும், நலத்திற்கும், சமூக பாதுகாப்பிற்கும் நலத்திற்கும், தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்வது சுதந்திரத்திற்கு எதிரானதல்ல. கட்டுப்பாடுடன் கூடிய சுதந்திரமே ஆகும்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan 

https://www.facebook.com/manjaivasanthan

------

No comments:

Post a Comment