அரசியல்

Friday, June 17, 2016

மதவெறி கொலையாளிகளை மத்திய அரசு வளர்த்துவிடுகிறதா?



- மஞ்சை வசந்தன்
கன்னையா குமாரை கொல்ல கல்லூரிக்குக்குள் காத்திருக்கும் கொலையாளிகள்!
நாளேட்டில் செய்தி வந்த பின்னும் நடவடிக்கை இல்லை!
மத்தியில் அரசமைப்புப் சட்டப்படி ஆட்சி நடக்கிறதா? 
அல்லது மதவெறியர்கள் ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்களா?

மோடி அரசு கொலையாளிகளை வேடிக்கைப் பார்க்கிறதா? அல்லது கொலையாளிகளை வளர்த்து விடுகிறதா?
“கன்னையாகுமாரைக் கொலைசெய்ய பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதங்களுடன் ஆட்கள் காத்திருக்கிறார்கள்!’’ என்று நவநிர்மாண் சேனையினுடைய தலைவர் அமித் ஜானி வெளிப்படையாகவே அறிவித்துவிட்ட பின்பும், அவர்மீதும் நடிவடிக்கையில்லை!
கொலை செய்யக் காத்திருப்போர் மீது நடவடிககை இல்லை!
உளவுத் துறையைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, இதுபோன்ற கொலை முயற்சிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும், உரியவர்கள் மீது நடவடிக்கை யெடுத்திருக்க வேண்டும். மாறாக, கொலைகாரர்கள் கன்னையாகுமாரையும், உமர் காலித்தையும் கொலை செய்ய ஆயுதங்களுடன் காத்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக ஒரு கட்சியின் தலைவர் அறிவித்த பின்பும் நடவடிக்கை யில்லையென்றால் என்ன பொருள்? மத்திய அரசே இச்சதிக்கு உடந்தை; அல்லது மத்திய அரசே இப்படிப்பட்ட கொலையாளிகளை வளர்த்து விடுகிறது. இப்படிப்பட்ட மதவெறி கொலைகளுக்குத் துணைநிற்கிறது என்றுதானே பொருள்?
உயர்கல்வி பயிலும், ஆழ்ந்த அறிவும், விழிப்பும், மாணவர்களிடையே செல்வாக்கும் உள்ள, நாடறிந்த மாணவர் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அவர்களை அறிவித்துவிட்டே கொலைசெய்ய அலைகிறார்கள் என்றால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பதுதானே உண்மையாகும்!
கன்னையாகுமார் செய்த தவறு என்ன? 
மத்திய அரசால் கூறமுடிந்ததா? நீதிமன்றம் குற்றம் செய்தார் என்று கூறியதா? இல்லையே!

மாணவர்களின் கல்வி உரிமைக்காக, சமூக நீதிக்காக, இந்து மதவெறியர்களின் அடாவடிச் செயல்களுக்கு எதிராக, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக, சமஸ்கிருத ஆதிக்கத்தை, மனுதர்ம அநீதிகளை தடுப்பதற்கு தகர்ப்பதற்கு எழுச்சி கொண்டு முழங்கினார்.
துடிப்பும், துணிவும், விழிப்பும், வழிகாட்டும் தகுதியும் கொண்ட, அறிவார்ந்த மாணவர் கூட்டம் கட்டாயம் செய்ய வேண்டிய சமூகக் கடமையை அவர்கள் செய்தார்கள்; செய்கிறார்கள்.
அப்படிப்பட்டவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆரிய பார்ப்பன, மதவெறி கூட்டத்தின் கையாட்கள் ஊடுறுவி தப்பான முழக்கங்களை எழுப்பியதோடு, கன்னையா குமாரைச் சேர்ந்தவர்கள் எழுப்பியதாய் பழிபோட்டு, கைது செய்து நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியது அயோக்கியத்தனம் அல்லவா? அப்படிப்பட்ட கயவர்கள் அல்லவா தண்டிக்கப்பட வேண்டும்?
மாறாக, நியாயக் குரல் எழுப்பும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும், வழக்குத் தொடுப்பதும் எவ்வகையில் நியாயம்?

18.02.2016 அன்று எபிவிபியின் முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை விட்டுவிலகினர். எபிவிபி கூட்டத்தில் காவி அமைப்பினர் தேவையில்லாமல் காவிக் கொடிகளுடன் கலந்து கொண்டதைக் கண்டித்தனர். காவிகள்தான் தப்பான முழக்கங்களை எழுப்பினர் என்பதையும் அப்பட்டமாகக் கூறினர்.
வீடியோ பதிவுகளும் மோசடியாகத் தயாரிக்கப்பட்டதைக் கண்டித்து விஷ்வ தீபக் தனது தலைமை எடிட்டர் பதவியை விட்டுவிலகினார்.
குற்றவாளிகள் முழுக்கக் காவிகளாக, மதவெறிக் காலிகளாக இருக்க, உரிமைக்காகப் போராடும் மாணவர்களைக் கைது செய்வதும், வழக்குப் போடுவதும் செய்து அராஜகமாய் நடந்து கொண்டதோடு அல்லாமல் சமூக நீதிக்காகப் போராடும் மாணவர் தலைவர்களைக் கொல்ல ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்பியுள்ளோம் என்று அச்சமின்றி கூறுவது அராஜகத்தின் உச்சமாகும்.
இதற்கு மேலும் மோடி அரசு காவிக் காலிகளுக்கு பக்கத் துணையாக நிற்குமேயானால், மாணவர்களின் உணர்வு ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிராய் கிளம்பும்; அப்படித் திரும்பினால் அதன் விளைவுகள் மிக மோசமாகும்.
எனவே, மதவெறியர்கள்மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியதும் அரசின் கட்டாயக் கடமையாகும்!

No comments:

Post a Comment