அரசியல்

Tuesday, February 6, 2018

எனது பிறந்த நாள் செய்தி


இன்று எனது பிறந்த நாள்


எல்லோருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அனைவரும் நலமும், வளமும், மானமும், உரிமையும், சமவாய்ப்பும் பெற்று, மனிதநேய கொள்கையுடன் ஒருவருக்கொருவர் உதவி ஒன்றுசேர்ந்து வாழ வேண்டுகிறேன்.

வாழ்வித்து வாழ்வோம்!
என்பதே உலக மக்களுக்கு நான் கூறும் வாழ்க்கை நெறி!

மக்களை நேசித்து, மக்களுக்கு உதவி, வாழ்வித்து வாழ்வோம் என்று வாழ்ந்தோம் என்றால், கடவுள், மதம், சாதி, இனம் போன்ற மதிற்சுவர்களுக்கு தேவையேயில்லை!

கடவுளுக்கு கோயில், விழா, படையல் என்பது கடவுள் கொள்கைக்கே எதிரானது|

கடவுளுக்கு செய்ய மக்கள் யார்? சிந்திக்க வேண்டாமா?

கடவுளுக்குத் தொண்டு என்பதே கையூட்டு முயற்சிதானே!

கடவுள் இவற்றை எதிர்பார்ப்பதாய் மனிதன் நம்புவதுதான் முதன்மையான மூடத்தனம்!

கடவுளை மக்கள் ஏற்பது என்பது சரியல்ல. கடவுள் மக்களை ஏற்கும்படி நடக்க வேண்டும் என்பதே கடவுள் கொள்கையின் அடிப்படை. இந்த அடிப்படை புரிந்தால் கடவுள் நம்பிக்கையோ, அதுசார்ந்த மற்ற செயல்பாடுகளோ அர்த்தமற்றவை என்பதும் அவை கடவுள் கொள்கைக்கு எதிரானவை என்பதும் எளிதில் விளங்கும்!

நான் தமிழர்களுக்கும், இந்திய அளவில் வாழும் ஆரிய பார்ப்பனர் அல்லாதாருக்கும் விடுக்கும் வேண்டுகோள்:

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காட்டிய நெறியும், ஊட்டிய உணர்வுகளுமே இந்த மண்ணிற்கு ஏற்றவை! அவற்றைப் பின்பற்றுவதே நமக்கு உயர்வளிக்கும்! ஆதிக்கவாதிகளை அடக்கி ஒடுக்கும்!

பி.ஜே.பி. ஆட்சியை அகற்ற இப்போதே ஒன்று சேருங்கள். அதற்கான பரப்புரையை, செயல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்!

தமிழகத்தில் அ.தி.மு.க. அடிமை ஆட்சியை அப்புறப்படுத்துங்கள்.

தமிழ்த் தேசியவாதிகள், இடதுசாரிகள், மதச்சார்பற்ற கொள்கையில் பற்றுள்ளவர்கள், திராவிட எதிர் விமர்சனத்தைக் கைவிட்டு, தி.மு.கழகத்தின் குறைகளை நீக்க வலியுறுத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தி, அவர்கள் எவ்வித தவறும் செய்யாமல் கண்காணித்து, தமிழர், தமிழ்நாடு, நலன் சார்ந்த, உரிமை மீட்கும், ஆட்சி நடக்கவும், விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், பெருகவும் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அப்போது, தி.மு.க. ஆட்சி உங்களுக்கு நிறைவளிக்காமல் போனால், அதற்கு அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.

மாறாக, வரவுள்ள சட்டமன்றத் தேர்தலிலே ஒருவருக்கொருவர் விமர்சித்து, வாக்குகளைச் சிதைத்து, பி.ஜே.பி.யின் பினாமியான இரஜினி போன்றோர் தலைதூக்கவோ, பி.ஜே.பி. காலூன்றவோ காரணமாக அமையாதீர்கள்!

மக்கள் நலக் கூட்டணி அமைத்து தி.மு.க.வை சென்ற தேர்தலில் தோல்விவுறச் செய்ததன் பாதக விளைவுகளை இப்போது தமிழகம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வரலாற்றுத் தவற்றை மீண்டும் செய்ய வேண்டாம்.

இவற்றை தி.மு.க. சார்பான கருத்தாகக் கொள்ளாமல், தமிழர், தமிழ்நாடு நலன் சார்ந்த சரியான முடிவாகக் கொள்ளுங்கள்!

நமக்குள் இருக்கும் முரண்பாட்டால் எதிரிகள் காலூன்றவோ, ஆட்சியில் அமரவோ நாம் காரணமாகலாமா? என்று சிந்தித்து முடிவெடுப்பதே சரியாக இருக்கும்.

யார் வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம்! அந்த வகையில் நடைமுறைக்கு உகந்த செயல்பாட்டை தேர்வு செய்து, தமிழக மக்கள் நலன் சார்ந்து முடிவு செய்யுங்கள்!

1977ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகாலம், தன்னலம் சிறிதும் இன்றி தமிழ்ச் சமுதாயத்திற்காகவே பாடுபட்டுவருபவன் என்ற உரிமையில், எனது பிறந்த நாள் வேண்டுகோளாக இவற்றை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

தமிழர்கள் இனி ஏமாற மாட்டார்கள்!

தமிழர் இனி சிறப்பர் என்று நம்புகிறேன்.

 நன்றி வணக்கம்!

- மஞ்சை வசந்தன்
07.02.2018
====

No comments:

Post a Comment