அரசியல்

Thursday, July 14, 2016

துணிவு இல்லையேல் ஆதிக்கம் ஆட்சி செய்யும்! இளைஞர்களே எச்சரிக்கை!

வீரம் வேறு - துணிவு வேறு!
துணிவு இல்லையேல் ஆதிக்கம் ஆட்சி செய்யும்!
இளைஞர்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!

- மஞ்சை.வசந்தன்
வீரம்; துணிவு இரண்டும் ஒரு பொருளில் கொள்ளப்படுவது சரியல்ல. இரண்டும் வேறுவேறு. சிறப்பிலும் ஒன்றைவிட மற்றொன்று மிக உயர்ந்தது.


மாட்டை அடக்குவது வீரம்; ஓடும் வாகனத்தில் ஏறுவது வீரம், பத்து பேரை வீழ்த்துவது வீரம் என்று பாராட்டப்படுகிறது! இவை சரியா? சிந்திக்க வேண்டியுள்ளது.
துணிவு, வீரம் இரண்டும் எழும் அடித்தளங்கள் வேறு வேறானவை.
வீரம் என்பது உடல் வலிமையால் வருவது. துணிவு என்பது உள்ளத்தின் வலிமையால் வருவது. இதற்கு உடல் வலு கட்டாயமன்று.
துணிவு என்பது காரணப் பெயர். துணிப்பு என்றால் வெட்டுதல் என்று பொருள். துணிக்கப்படுவதே துணி. துணி ஆடைக்கு ஒரு பெயர். அதேபோன்று துணித்துக்கொண்டு வருவதாலே துணிவு என்று வந்தது.
கண்ணெதிரே நடக்கும் கொடுமையைக் கண்டு, அதைத் தடுக்க முன்வராத மக்கள் கூட்டத்தில், யாரோ ஒருவரோ அல்லது சிலரோ அந்தக் கூட்டத்திலிருந்து தங்களைத் துணித்துக்கொண்டு வெளியில் வந்து, அக்கொடு¬யைத் தட்டிக் கேட்பதால் அதற்குத் துணிவு என்று பெயர் வந்தது.


இதற்கு உடல் வலு கட்டாயம் அல்ல. உள்ள வலுவே கட்டாயம். ஒத்த நாடியான ஓர் ஆள்கூட முன்வந்து தட்டிக்கேட்பார். அதுவே துணிவு.
இந்தத் துணிவு இச்சமுதாயத்தில் இன்று இற்றுப் போய்வருவது மிகமிக கேடாக மாறும். எனவே, இன்றைய சமூகம் குறிப்பாக இளைஞர்கள் இதற்கான ஒரு தீர்வை உருவாக்க வேண்டும்.
கொம்புள்ள மாட்டிடம் மோதுவதை பழம்பெருமை என்று பேசி ஆர்ப்பறிக்கின்றவர்கள், கொடுமைகள் நடப்பதைக் கண்டும் காணாமல் போகின்ற கோழைகள் என்பதற்கு வெட்கப்பட வேண்டாமா?
மாட்டிடம் மோதுவதால் என்ன லாபம்? ஓடும் வாகனத்தில் ஓடிச்சென்று ஏறுவதில் என்ன பயன்? அதில் உயிரைவிடத் துணிகிறவர்கள், நம் கண்ணெதிரே ஒரு கொலை, ஒரு வன்முறை, ஒரு கொள்ளை நடக்கும்போது அதைத் தடுக்க முன்வருவதில் தயங்குவது சரியா?
தமிழர் வீரத்திற்கு தவறான செயல்வடிவம் தரலாமா? ஆபத்தோடு மோதுவது வீரம் என்று தமிழன் என்றைக்கும் சொல்லவில்லையே! அறிவின்பட்டாக மட்டுமே வீரம் இருக்க முடியுமே தவிர, உணர்வு வயப்பட்டதாக இருக்க முடியாது!
கொல்லேறு தழுவுதல்கூட ஒரு பயிற்சியேயன்றி அதில் உயிர்விட வேண்டும் என்பதில்லையே!
குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், கழுத்துச் சங்கிலி அறுக்கப்படுகிறது. அய்ந்து நிமிட உடலுறவுக்கு 20 வயது பெண் கொல்லப்படுகிறார். அவளை வளர்க்க பெற்றோர் எவ்வளவு பாடுபட்டிருப்பர்!
பட்டப்பகலில் வெட்டப்படும்போதும், கொள்ளையிடும்போதும் பார்வையாளர்களாய் நின்றோம் என்றால், தடியெடுத்தவன் தண்டல்காரன், அறிவாள் ஏந்தியவன் ஆட்சியாளன் என்ற அவலம் அரங்கேறிவிடுமே!!
கொடுமை செய்கின்றவனுக்கு கூடுதல் துணிவு பிறந்துவிடுமே! இந்நிலை வளர்ந்து சென்றால் வெளியில் சென்று வீட்டுக்கு வந்துசேர உத்திரவாதமில்லாது போகுமே! குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை பரவிவிடுமே!
அற்பக் காரணங்களுக்காக தற்கொலை செய்து உயிர்விடுவதைக் காட்டிலும் அப்படிப்பட்டவர்களெல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு படையமைத்து கொடுமையைத் தடுப்பதில் உயிர் விடலாமே! அதற்கு தனி மரியாதையும், புகழும், அங்கீகாரமும் கிடைக்குமே! அந்த இறப்புக்கு அர்த்தம் உண்டே!
காவல் துறையும், ஆட்சியாளர்களும் இக்கொடுமைகளை அதிக முயற்சி செய்து அடக்க வேண்டும் என்பது கட்டாயக் கடமை! அதேநேரத்தில் சமூகத்தில் அங்கம் வகிக்கும் நாமும் நம் கடமையை தயங்காது செய்ய வேண்டும்.
“தட்டிக் கேட்டால் வெட்டிவிடுவானே!’’ இதுதானே தயக்கம்? கூட்டமாகச் சென்று தட்டிக் கேளுங்கள். கொடியவர்கள் தோற்று ஒடுங்குவர், ஓடுவார்கள்! 
இன்று சமுதாயம் சிதிக்க வேண்டிய, தீர்வு காண வேண்டிய, முன்வர வேண்டிய துணிவு இது.

இருக்கின்றவர் எல்லோரும் எதிர்த்தால் எப்படிப்படிப்பட்டவனும் பயந்தோடுவான்! அஞ்சி வேடிக்கைப் பார்த்தால், கூட்டத்தைப் பார்த்து விரட்டிவிட்டுச் செல்வான்! இதுதான் உளவியல்.
பத்து இடத்தில் கூட்டாகச் சேர்ந்து தடுத்துப் பாருங்கள்; தாக்கிப் பாருங்கள் கொடுமை செய்ய அதன்பின் அஞ்சுவார்கள். இதுபோன்ற முயற்சியில் குற்றவாளி கொலை செய்யப்பட்டால்கூட அது கொலைக்குற்றமாகாது; தற்காப்பு நடவடிக்கையே என்கிறது சட்டம்!
வழக்கு, வம்பு, காவல் நிலையம் என்று அலைய நேருமே என்ற தயக்கங்களில் ஒதுங்கினால், வன்முறையாளர்கள் வளமாக தழைத்துவிடுவார்கள்!
கொடுமையைச் செய்வதும், கொடுமையைப் பார்த்து நிற்பதும் ஒன்றே! என்ற குற்ற உணர்வு நமக்கு வேண்டும்!
“உன்னைப்பற்றி மட்டும் கவலைப்படு! ஊரைப்பற்றி கவலைப்படாதே!’’ என்று தன்னலத்தை அறிவுரையாக பெற்றோர் வழங்குகின்றனர். இப்படி வளர்க்கப்படும் பிள்ளைகள் எப்படித் தட்டிக் கேட்பர்?
பொறுக்கிகளை கதாநாயகனாகக் காட்டுவதும், “வெட்ரா அவளை’’ பாடல்களை பரப்புவதும் கொலை குற்றத்தைவிட கொடிய குற்றமாகும்! பண்பாடு வளர்க்கும் யோக்கியதை இதுவா?
“கொடுமை கண்டு கொதித்தெழு!
கூட்டடாக எழு! துணிந்து தடு!’’

என்பதை இன்றைக்கு ஒவ்வொருவரும் உள்ளத்தில் உரமாக ஏற்றிக்கொள்ள வேண்டும்! குறிப்பாக இளைஞர்கள் ஏற்றிக்கொள்ள வேண்டும்!
பெண்கள், தந்தை பெரியார் நூறாண்டுகளுக்கு முன்பே சொன்னதுபோல், தற்காப்புப் பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
சமுதாயம் என்பது கூட்டுப் பொறுப்பு. நமக்கென்ன என்று ஒதுங்கும் உளநிலை வளர்ந்தால் ஒருவருக்கும் பாதுகாப்பு இருக்காது!
இணையத் தொடர்பு உள்ள இன்றைய இளைஞர்களே! துணிவுடையவர்கள் முதலில் ஒன்று சேருங்கள். ஆங்காங்கே, “கொடுஞ்செயல் தடுப்புக் கூட்டமைப்பை’’ ஏற்படுத்துங்கள்.
பணிச் சுழற்சி முறையில் இரவு பகலில் அணியணியாக ரோந்து சுற்றுங்கள். இந்தப் பொதுநலத்தில் ஒவ்வொருவரின் சுயநலமும் உள்ளது. எனவே, உடனே செய்யுங்கள்!
கொடுமைகள் பொது இடங்களிலும், வீடுகளிலும் இனி நடக்காமல் விழிப்போடு செயல்படுவோம்!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
கூட்டாக எதிர்த்தால் கொடுமைக்கு வீழ்வு!

No comments:

Post a Comment