அரசியல்

Sunday, July 17, 2016

தமிழ்த் தேசியமும் தர்மபுரிகளும்

2012 -ல் எழுதிய கட்டுரை



காதல் தீ ஜாதியை எரிக்கும்; மோதல் தீ வீதியை எரிக்கும் என்பது தருமபுரி தந்துள்ள பாடம்.

காதலில் மோதலுக்கு வேலையில்லை; சாதலுக்கும் வேலையில்லை. ஆனால், இரண்டும் நடக்கிறது என்றால், அறியாமை, அறிவின்மை, ஆத்திரம், கோத்திரம், சாத்திரம், ஜாதிக்கட்டு. இப்படிப்பட்ட காரணிகள்தான் காரணம்.

இவையெல்லாம் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பால், கலப்பால், திணிப்பால், ஆதிக்கத்தால் வந்த விளைவுகள். ஆனால், இவற்றை முற்றாக மறைத்துவிட்டு, ஆரிய பார்ப்பனரும் தமிழர்களே என்று ஆரியத்தை அணைத்துக்-கொள்ளும் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து நாம் கேட்க விரும்பும் கேள்விகள் இவைதான்:

1.    ஜாதிப் பிரிவுகளைக் காத்துக்கொண்டே, ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசியம் அமைக்க முடியுமா?

2.    தமிழர் மரபுப்படியான வாழ்வமைப்பதே தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்றால், தமிழர் மரபில் ஜாதியில்லையே! ஜாதிப் பிளவு இல்லையே!

3.    தமிழ்த்தேசியத்திற்கு ஜாதி எதிரானது அல்லவா?

4.    தமிழ்த்தேசியவாதிகள் ஜாதித் தீ பற்றியெரியும் நேரத்தில் வேடிக்கை பார்த்து நிற்பது ஏன்? சம்மதமா? சண்டித்தனமா? இயலாமையா? எது காரணம்?

5.    தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே ஜாதியை வளர்ப்பவர்களுக்கு எதிராக, தமிழ்த்தேசிய-வாதிகளின் செயல் திட்டங்கள் என்ன?

மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிப்-பதோடு, தமிழ்த்தேசியம் வேண்டும் என்பதற்கு வெறும் தமிழ் உணர்வை மட்டும் ஊட்டிவிட்டால் போதுமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களுக்கு தனி நாடு, தனி வாழ்வியல் (மரபு சார்ந்தது), தனி பண்பாடு, கலாச்சாரம், ஆதிக்கமற்ற விடுதலை, உரிமை, சமத்துவம், தற்சார்பு, ஒற்றுமை, உறுதி.

இத்தனைக் கூறுகளும் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். இவற்றிற்கு எதிரி யார்? நாம் யார்? என்ற விழிப்பு வேண்டும். நம்மிடம் உள்ள ஜாதிகள், ஆரிய பார்ப்பனர்களால் நம் மீது திணிக்கப்பட்டவை என்பது ஆழ்மனதில் பதிய வேண்டும்; பதிக்கப்பட வேண்டும்.

மூடநம்பிக்கைகள் களையப்பட வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். சமத்துவ உணர்வு ஊட்டப்பட வேண்டும். கல்வி, உயர்கல்வி, அடித்தட்டு மக்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். கல்லாமை இல்லாமை நிலை வரவேண்டும்.
வேலை, கூலி என்ற நெருக்குதலால் கல்வி நிறுத்தப்படக் கூடாது. இடைநூற்றல் இல்லா நிலை முழுமையாக உறுதி செய்யப்படவேண்டும். காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும்; தீர்வுகள் காணப்படவேண்டும்.

ஜாதியொழிப்பு: தீண்டாமை ஒழிப்பு வேறு, ஜாதியொழிப்பு வேறு என்பதை உணரச் செய்யவேண்டும். காதல் திருமணம் வேறு, ஜாதி மறுப்பு மணம் வேறு. காதல் திருமணத்தில் ஜாதி மறுப்பு மணங்களும் அடங்கும் என்பது உண்மை. மாறாக, காதல் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஆகாது. சொந்த ஜாதியில்கூட காதல் திருமணங்கள் நடக்கும். ஆனால் அதில் ஜாதி ஒழியாது.

எனவே, காதல் திருமணங்கள் ஆதரிக்கப்படவேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயப்படுத்தியல்ல; கனிந்து கசிந்து காதல் பெருக்கில் தன்னுந்தலாய் வருமளவிற்கு விழிப்பு ஊட்டப்படவேண்டும்; பரப்புரைகள் பரவலாய் நடத்தப்படவேண்டும்.

அதற்கு முதல்படியாக தமிழ்த்தேசியம் பேசுவோர் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்பு மணங்களாக நடைபெற வேண்டும்; நடத்தப்பெற வேண்டும்.

வயது வந்த ஆணும் பெண்ணும் விரும்பியவரை மணக்கத் தடைவந்தால், அதைத் தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னின்று தடுக்க வேண்டும். அதற்கான தொண்டர்படை வேண்டும்.

ஏமாற்றியோ, வன்முறையாலோ எந்தவொரு ஆணையும், பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்-படுத்துவது குற்றம். அவர்களே விரும்பி மணம் புரிந்து-கொள்ள முன்வந்தால், அதைத் தடுப்பதும் குற்றம் என்பதை எல்லோருக்கும் புரியும்படி செய்ய வேண்டும்.

தருமபுரியில் எரிந்து சாம்பலானது குடிசைகள் மட்டுமல்ல; தமிழ்த் தேசியமும்தான் என்பதைத் தமிழ்த்தேசியம் பேசுவோரில் உள்ளச் சான்றும், தெள்ளிய சிந்தனையும் உடையோர் அறிவர்.

எனவே, தமிழ்த்தேசியத்தின் முதல்படி ஜாதியொழிப்பு! அடித்தளமும் அதுவே! ஜாதியொழிப்பு முயற்சியில்லா தமிழ்த்தேசிய முழக்கம் வெற்று ஆரவாரம்.
எந்த அணியில், எந்த அமைப்பில் இருந்தாலும் தமிழன் என்பவன் ஜாதியை ஏற்கக் கூடாது. ஜாதியை ஏற்பவன் உண்மையான தமிழனாகான்! காரணம் தமிழர்க்கு ஜாதியில்லை.

தமிழரிடையே என்றைக்கு ஜாதியை நுழைத்தார்களோ அன்றைக்கே தமிழன் இல்லாமல் போய், ஜாதிக்காரனாகி-விட்டான். இன்றைக்கு செட்டியார் உண்டு, வன்னியர் உண்டு, பறையர் உண்டு, கவுண்டர் உண்டு, உடையார் உண்டு, பிள்ளை உண்டு, கோனார் உண்டு, முதலியார் உண்டு, தமிழர் எவர்?
இப்போது புரிகிறதா ஜாதி வந்தால் தமிழர் இல்லை. தமிழர் என்றால் ஜாதியில்லை.

எனவே, மீண்டும் தமிழனாக வேண்டும் என்றால், ஜாதியை ஒழித்தால் மட்டுமே சாத்தியம். தமிழர் ஒற்றமைக்கு, தமிழர் உணர்விற்கு ஜாதியே முதல் தடை. அதை ஒழித்தால்தான் தமிழ்த்தேசியத்திற்கு விடை. தமிழ்த்-தேசியவாதிகளே தர்மபுரிகளில் முகாமிடுங்கள்! இல்லையேல் உங்கள் உண்மை முகம் வெளிப்படும்!

- .மஞ்சை.வசந்தன்

No comments:

Post a Comment