அரசியல்

Monday, November 23, 2015

நீர் மேலாண்மையை நிறுத்திவிட்டு சாராயத்தை ஓடவிடுவது சரியா?

கல்லணையைப் பார்த்தே கற்றுக்கொண்டேன் பிரிட்டிஸ் பொறியாளர் ஒப்புதல்!

- மஞ்சை வசந்தன்
கடலா, ஏரியா என வியக்கும் அளவுக்கு பெரிய ஏரி, வீராணம் ஏரி! சென்னை மாநகருக்கே இன்று தண்ணீர் தரும் ஏரி! அப்படியொரு ஏரியை நிர்மாணித்தவர் நம் தமிழ் மன்னர் _ முதலாம் பராந்தக சோழன் என்றாலும், அதை வற்றவிடாமல் வளம் காப்பது ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயர் உழைப்புதான்.
தரிசாய்க் கிடக்கும் நிலங்கள் ஒருபுறம், ஒதுங்க ஆற்று நீர் வீணாய் கடலில் கலக்கும் நிலை. இப்படியிருந்த தென்னிந்தியாவை அணைக்கட்டுகளால் முறைப்படுத்தி வளம் ஆக்கியவர் ஆர்தர் காட்டன். சுமார் நூற்றி அய்ம்பது வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைத்து ஒரு சொட்டு நன்னீர் கூட வீணாகாமல் விவசாயம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு முயன்றவர் ஆர்தர். அதற்காக அன்றைய ஆங்கில அரசிடம் போராடி, வாதாடி சாதித்தவர். இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தையாக இவர் கருதப்படுகிறார்.
மிலிட்டரி மாணவராக பிரிட்டிஷ் இந்தியாவுக்கு 15 வயதில் வந்தவர் ஆர்தர். பிறவிக் கலைஞன் என்பதுபோல, அப்படியொரு பிறவிப் பொறியாளர் இவர். பொறியியல் துறையிலேயே படித்து, படிப்படியாக உயர்ந்து. சென்னை மாகாண பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் ஆனவர். தமிழகம் மட்டுமின்றி அன்றைய ஆந்திர மாநிலமும் அணைக்-கட்டுகளால் வளம் பெறச்செய்தவர். ஆர்தர் காட்டன் நிர்மாணித்த அணைகளில் திருச்சி முக்கொம்பில் உள்ள மேலணையும், தஞ்சை  அரியலூர்  கடலூர் ஆகிய 3 மாவட்டங்களின் எல்லையான அணைக்கரையில் உள்ள கீழணையும் முதன்மையானவை, முக்கியமானவை.
கர்நாடக மாநிலம் குடகிலிருந்து தமிழகம் நோக்கிப் பாயும் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் கிளை நதிதான்  கொள்ளிடம் ஆறு. திருச்சி முக்கொம்பில் பிரியும் இந்த நதி, தாய் நதியான காவிரியை விடவும் அதிகப் பள்ளமான பிரதேசங்களில் பாய்கிறது. எனவே, நீர் இதன் வழியே வெகுவேகமாகப் பயணித்து கடலில் வீணாகக் கலந்துவிடும். இதனால் காவிரியின் நீர் இருப்பே கூட வெகுவாகக் குறைந்துவிடும். இதைத் தடுத்து, நீரைத் தேக்குவதற்காக சர் ஆர்தர் காட்டன் 1835_1836ஆம் ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் மேலணையைக் கட்டினார். இதன் மூலம் காவிரி நீர் சேமிக்கப்பட்டு, தஞ்சை, நாகப்பட்டினம் டெல்டா பகுதிகளுக்கு பாசன நீரைப் பகிர்ந்தளிக்க முடிந்தது. மேலும் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடிய காலங்களில் கல்லணைக்கு பாதிப்பில்லாமல் இருக்க மேலணை வழியாக உபரி நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வழிசெய்யப்பட்டது.
இந்த உபரி நீரும் வீணாகக் கடலில் கலக்கக் கூடாது என நினைத்தார் ஆர்தர். இந்த நீரைத் தேக்கி வைத்தால் கடலூர். தஞ்சை, நாகப்பட்டினம் பகுதி நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அவர் கட்டியதுதான் அணைக்கரையில் உள்ள கீழணை. தனது அணைக் கட்டுத் திட்டங்களை முடிந்தவரை சிக்கனமாகவும் தொலைநோக்குப் பார்வையோடும் செய்து முடிப்பதில் வல்லவர் ஆர்தர். இதனால்தான் அன்றைய நலிந்த பொருளாதாரத்தைக் கொண்டே ஆங்கில அரசின் அனுமதியுடன் இத்தனை அணைகளை அவர்கட்டினார்.
கீழணையின் அமைப்பைப் பார்த்தால் ஆர்தரின் பொறியியல் வல்லமையைப் புரிந்து கொள்ளலாம். மூன்று மாவட்டங்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்கும் இந்தக் கீழணை மூலம் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 304 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கொள்ளிடம் ஆறு ஓரிடத்தில் மட்டும் இரண்டாகப் பிரிந்து 2கி.மீ பயணத்துக்குப்பின் மீண்டும் ஒன்று சேருகிறது. இந்த இரு நதிகளுக்கிடையே தீவு போல் அமைந்திருந்த இடம்தான் அணைக்கரை. நதி பிரிந்து ஒன்று சேரும் இடத்தில் மட்டும் சின்ன அணைக்கட்டு கட்டி நீரைத் தேக்கிவிட்டால், தீவாக இருக்கும் பரப்பு முழுவதும் நீரை நிறுத்தி வைக்க முடியும் எனக் கணக்கிட்டார் ஆர்தர். இதன் விளைவுதான் கீழணை. கொள்ளிடம் ஆறு அதிகப்பட்சமாக 1500 மீட்டர் அகலம் கொண்டது. ஆனால், கீழணை கட்டப்-பட்டிருக்கும் பகுதி மொத்தமே 400 மீட்டர்தான். தன் பொறியியல் திறமை முழுவதையும் தென்னிந்திய மக்களுக்காக செலவிட்டு, தன் வாழ்வை அர்ப்பணித்து  இதைச் சாதித்தார்.
1850_1851 காலகட்டத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கட்டப்பட்ட அணைக்-கட்டும் சர் ஆர்தர் காட்டன் கட்டியதாகவே கருதப்படுகிறது. அந்த அணையில்லையென்றால் ஏராளமான நீர் வீணாகும். அந்த அணையின் மூலம் சிதம்பரம் வட்டம் வளம் பெற்றது. காவிரி, கொள்ளிடம் மட்டுமல்லாது வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளின் தண்ணீரைப் பாசனத்துக்குப் பயனுள்ளதாக மாற்ற பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்த ஆர்தர் காட்டன், மேட்டூர் அணை கட்டுவதற்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளிலும் அணைகளைக் கட்டி பாசனத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்.
ஆர்தர் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களைக் கையாண்டு அங்கே மாபெரும் அணைக்கட்டை எழுப்பினார். இந்தியாவின் மிக முக்கிய நீராதாரமாக கோதாவரியை மாற்றிக் காட்டினார். யாராலும் தடுக்க முடியாத காட்டாற்றுப் பெருவெள்ளத்தைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை ஆர்தர் காட்டன் பெற்றதை அவரே கூறுகிறார் அந்தப் பெருமை என்னுடையதல்ல.... தமிழர்களின் முப்பாட்டனுடையது என ஆர்தரே விளக்கம் தந்துவிட்டார். ஆழம் காண முடியாத மணற்படுகையில் அடித்தளம் அமைப்பது எப்படி என்பதை கல்லணையைப் பார்த்துத்-தான் நான் கற்றுக்கொண்டேன்! என மனம் திறந்து ஒப்புக்கொண்ட ஆர்தர் காட்டன். நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே தமிழர்களின் அணை கட்டும் திறனும், தொழில் நுட்ப அறிவும், பாசன மேலாண்மையும் சிறந்து விளங்கியதை உலகறியச் செய்தார் அதனால்தான் பெருமைமிகு கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்-தால் ஒடிஷாவில் நிலவும் வறட்சியைப் போக்கலாம் எனும் விண்ணப்பத்தை ஆர்தர் 1858ஆம் ஆண்டே இங்கிலாந்து அரசிடம் கொடுத்தார். ஆனால், அதற்கு அவருக்கு அவகாசம் போதவில்லை. 1860 ஆம் ஆண்டே பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிவிட்டார். தனது 96 வயது வரை வாழ்ந்த அவர், 1899ஆம் வருடம் இறந்துவிட்டார்.
வறண்ட நிலங்களையெல்லாம் நதிநீரால் வளம் செய்ததற்காக ஆர்தர் காட்டனை ஆந்திர மக்கள் இன்றும் தங்கள் குலதெய்வமாகப் பார்க்கிறார்கள். அங்கு அவருக்கு கிராமங்கள் தோறும் சிலை வைக்கப்பட்டுள்ளன. கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்தர் காட்டன் சிலைகள் உள்ளன. இன்னும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்தர் காட்டனின் பெயரை வைக்கிறார்கள் அப்பகுதி மக்கள். ராஜ முந்திரியில் அவருக்கு அருங்காட்சியகமும் வைத்திருக்கிறார்கள்.
தமிழர்கள் இருசிலைகள் நிறுவி அவருக்கு மரியாதை செலுத்தினர். ஆனால், அவருக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை தமிழத்தில் ஒரு சொட்டு நீர்க்கூட கடலில் சென்று வீணாகாதவாறு அணைகள், ஏரிகள் கட்டி நீரைத் தேக்குவது ஒன்றே. சாராயத்தை ஆறாக ஓடவிடும் அரசு, அதை மூடிவிட்டு ஒடிவரும் நீரை ஒழுங்குப்படுத்துவதில் முழுகவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் மக்களுக்கு அதைவிடப் பெரிய துரோகம் வேறு எதுவும் இல்லை! நீர் மேலாண்மை செய்யாத அரசை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment