அரசியல்

Sunday, March 25, 2018

பாட்டாளி மக்கள் கட்சியின் பரிணாம வளர்ச்சி பார்ப்பனியத்தை நோக்கிச் செல்கிறது!




- மஞ்சை. வசந்தன்



திண்டிவனத்தின் மருத்துவத் தொழில் செய்துவந்த டாக்டர் இராமதாஸ் அவர்கள், வன்னிய சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வன்னியர் சங்கம் அமைத்து அதை பல இடங்களிலும் வளர்த்தார்.

அதன்பின் சமுதாய முன்னேற்ற சங்கம் (SSS) என்று ஒர் அமைப்பைக் கூடுதலாக அமைத்து அதை வார்த்தார்.

பூ.தா.அருள்மொழி, பூ.தாஇளங்கோவன் ஆகிய இருவரும் தளகர்த்தர்களாக இருந்து ஊர்ஊராய் அமைப்புகளைக் கட்டமைத்து வளர்த்தனர்.

எம்.ஜி.ஆர் முதல்வராய் இருந்தபோது, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு பலப் போராட்டங்களை நடத்தினார்.

சாலை மறியல் போராட்டந்தான் முதன்மையாக இருந்தது. இதனால் துப்பாக்கிச் சூடு எம்.ஜி.ஆர் அரசால் நடத்தப்பட, சில வன்னியர்கள் உயிர் இழந்தனர். இதனால் வன்னியர் வாழும் பகுதிகளில் வன்னியர் சங்கம் விரைவான வளர்ச்சி பெற்றது.

இடஒதுக்கீடு டாக்டர் இராமதாஸ் அவர்களின் முதன்மை இலக்காக இருந்ததால் பெரியாரின் மீது அளப்பறிய பற்று கொண்டு பெரியார் கொள்கையை பின்பற்றினார். பிரச்சாரம் செய்தார்.

நான் எழுதிய அர்த்தமற்ற இந்து மதம், பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை, தமிழா நீ ஒர் இந்துவா?, பார்ப்பனத் தந்திரங்கள் போன்ற நூல்களை என்னிடமே கேட்டு வாங்கி விரும்பிப் படித்தார்.

அவர் நடத்தும் பயிலரங்குகளில் இந்நூல்களை பயிற்சிக்கு வருவோருக்கு வழங்கினார்கள்.
அரசியல்வாதிகளை வெறுத்து தேர்தலைப் புறக்கணித்து சமுதாய இயக்கமாகவே தன் அமைப்பை வளர்த்தார். ஓட்டுப் பொறுக்கிகளே ஊருக்குள் வராதீர்கள் என்று பதாகைகளை ஒவ்வொர் ஊரிலும் வைத்தார். தேர்தல்களைப் புறக்கணித்தார்.
பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்தார். அவரின் கொள்கை முரண்பாடு அங்குதான் தொடங்கியது.

கலைஞரோடும், திராவிடர் கழகத்தோடும் இணக்கமான போக்கில் இருந்து, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தார். கலைஞரின் முயற்சியால் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்க, கலைஞரிடம் அவரின் நெருக்கம் மேலும் அதிகமானது.

கூட்டணி அமைத்ததன் மூலம் மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பிடித்தது (தலித் எழில்மலை மத்திய அமைச்சராக்கப்பட்டார்.)
மக்கள் தொலைக்காட்சி ஆரம்பித்தார். திராவிடர் கழகக் கொள்கைகளை முழுமையாக அத்தொலைக்காட்சி பரப்பியது. பலரும் பாராட்டினர்.

இச்சூழலில், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்க வரமாட்டார்கள் என்ற உறுதியை மீறி தனது மகன் டாக்டர் அன்புமணி அவர்களை அரசியலுக்குக் கொண்டுவந்தார்.

முதலில் கூட்டணி, எம்.எல்.ஏ., எம்.பி என்ற அளவில் இருந்த அவரது இலக்கு, ஸ்டாலினுக்கு மாற்றாக அன்புமணியை உருவாக்க வேண்டும் என்ற அளவிற்கு மாறியது. அவரது கொள்கைப் பிடிப்பு, தன்னல மறுப்பு எல்லாம் மெல்ல மெல்ல விடைபெற, அன்புமணி வளர தி.மு.க., அ.தி.மு.க. தடையாக உள்ளது என்று முடிவெடுத்து திராவிடத்திற்கு எதிரான ஒரு பிரச்சாரத் திட்டத்தை வகுத்தார்.

அதற்கு பெங்களூர் குணா என்ற ஆரிய பார்ப்பனக் கைக்கூலியை தன் கைக்கூலியாகப் பயன்படுத்தி, திராவிடத்தால் வீழ்ந்தோம்! என்று ஒரு கட்டுரையை பாட்டாளி மக்கள் கட்சி மாநாட்டில் படிக்க ஏற்பாடு செய்தார். ஆனால், அது நூலாகவே வெளியிடப்பட்டது.
திராவிடத்திற்கு எதிரான, பெரியாருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய முதல் விதை அதன்மூலம் ஊன்றப்பட்டது. இந்த நூலை பார்ப்பன ஊடகங்கள் விளம்பரப்படுத்தின. இந்த நூலை மறுத்து ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! என்று நூலை வெளியிட்டேன். குணவிற்கு சவால் விட்டேன். இதுவரை அந்த குணா ஒரு வரிக்குக் கூட மறுப்பு கூறவில்லை.
மக்கள் தொலைக்காட்சி சௌமியா அன்புமணியின் ஆதிக்கத்திற்குச் செல்ல, அது பகுத்தறிவிற்கும் இனமானத்திற்கும் எதிரான கொள்கைகளை பரப்பத் தொடங்கியது.

மருத்துவர் இராமதாஸ் தொடங்கிய திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பிரச்சாரத்தை, புதிதாக அரசியலுக்கு வரும் எல்லோரும் இப்போது கையில் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதேபோல் மருத்துவர் இராமதாஸைப் பின்பற்றி ஒவ்வொரு சாதியினரும் சாதிக் கட்சியை வளர்க்கத் தொடங்கினர்.

பெரியாரால் நொறுக்கப்பட்டு அழிந்த சாதி உணர்வுகள், மெல்ல மெல்ல துளிர்விடத் தொடங்கின.
பாட்டாளி மக்கள் கட்சி என்பது வன்னியர் கட்சி என்பதை மாற்ற பல ஜாதியினரையும் தன் கட்சியில் சேர்த்தார்.
ஆனால், பாட்டாளி சொந்தங்கள் என்று சொல்லி ஜாதி உணர்வைத் தூண்டியும் வருகின்றனர்.

-குடும்ப அரசியல் கூடாது என்றவர், தன் மகன்தான் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். எப்படியாவது அன்புமணியை முதல்வராக்கிட வேண்டும் என்று பல வியூகங்கள் வகுத்து செயல்படுகின்றனர். அதில் முதல் வியூகம் ஸ்டாலின் எதிர்ப்பு. திராவிட எதிர்ப்பு.

இப்படி சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, சமூக நீதிக்கு எதிரான, பெண்ணுரிமைக்கு எதிரான ஆரிய பார்ப்பனர்களையே கட்சியின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தும் நிலைக்குச் சென்றுவிட்டது.

விரைவில் அவர்கள் மதவெறிக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கவும் செய்வர். ஆக, வளர்ச்சி, திட்டம், நேர்மை, தூய்மை என்று ஒரு பக்கம் பேசிக்கொண்டே, தமிழ் மண்ணுக்கு எதிரான மதவாத சக்திகளுடன் சமூக நீதிக்கு எதிரான சதிகாரர்களுடன் சேர்ந்து, சாதிய உணர்வை மீண்டும் வளர்க்கும் போக்கு இந்த சமுதாயத்திற்கு செய்யும் மாபெரும் துரோகமாகும் என்பதை அவர் உடனே உணர வேண்டும்.

அண்மையில் காஞ்சிபுரத்தில் நடந்த பா.ம.க. கூட்டத்தின் நோட்டீசில் சாதிப் பெயர்களை அச்சிடும் மிக மோசமான ஒரு நடைமுறையை மீண்டும் துவக்கியுள்ளனர். ஆக, பாட்டாளி மக்கள் கட்சி பார்ப்பன வலையில் சிக்கிவிட்டது! பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போடக்கூடாது என்ற தமிழகத்தின் சிறப்பான நிலைக்கு எதிராக பெயருக்குப் பின்னாலும் சாதிப் பெயர் போடப்பட்டுள்ளது. இது மிக மோசமான பின் விளைவை உருவாக்கும்! சாதி உணர்வை வளர்க்கும்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சுயநலத்திற்காக விதைக்கப்பட்ட திராவிட எதிர்ப்புப் பிரச்சாரம் எப்படிப் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறதோ அதேபோல், சாதிய உணர்வுகளை, சாதி அடையாளங்களை அரங்கேற்றும் நடைமுறையும் பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படும் என்பதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

பா.ஜ.க.வில் இஸ்லாமியர் ஒரு சிலரும், கிறித்தவர் ஒரு சிலரும் இருப்பதால் அது மதச்சார்பற்ற கட்சியாகிவிடுமா? இந்து மதவெறி கட்சி என்பதுதானே உண்மை! அப்படித்தான் பாட்டாளி மக்கள் கட்சியில் பல சாதியினரைச் சேர்த்தாலும் அதன் அடித்தளம் மாறிவிடாது! இப்படி சாதிகளைப் போடுவது சாதியை வளர்க்குமே தவிர, சாதிக் கட்சி என்ற பெயரை மாற்ற உதவாது.

அன்புமணி முதல்வராக வர அவர்கள் முயற்சி செய்வதில் நாம் குறுக்கிடவில்லை. ஆனால், திராவிட கட்டமைப்பைப் பலிகொடுத்து, ஆரிய ஆதிக்க எதிர்ப்பை கைவிட்டு, இன எதிரிகளை சமூகநீதிக்கு எதிரான மதவெறியர்களை சேர்த்துக் கொண்டு செயல்படுவது சரியா? இது சமூகத் துரோகம் அல்லவா? இது சமத்துவ சமுதாய மலர்ச்சிக்கு எதிரான செயல் அல்லவா? என்பதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராக, சமூகநீதி, சம உரிமை, மத இணக்கம், சாதி ஒழிப்பு இவற்றை இலக்காகக் கொண்டது திராவிடம்.

திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்றால் அக்குறைகள் களையப்பட வேண்டுமே தவிர திராவிடக் கட்டமைப்பு சிதைக்கப்படக் கூடாது. அது சிதைத்தால் ஆரிய ஆதிக்கம் தலைதூக்கும் என்பது பால பாடமல்லவா? அதை மறக்கலாமா?
வேண்டுமானால், பாட்டாளி மக்கள் கட்சியையே சரியான திராவிடக் கொள்கையுடைய கட்சியாக, ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரான அரசியல் கட்சியாக கட்டமைத்து வளர்ப்பதுதான் சரியான சமூகநீதிச் செயல்பாடாகும்! அதைவிடுத்து ஆரியத்துடன் கைகோர்ப்பது, தானும் கெட்டு, திராவித்தையும் குலைத்த குற்றமாக முடியும்! தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் துரோகமாகவும் ஆகும்! மருத்துவர் இராமதாஸ் அவர்கள் ஆழமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும்.

ஆரிய ஆதிக்கத்திற்கு, மதவெறிக்கு, சாதி வெறிக்கு எதிரான கொள்கை மட்டுமே தமிழ் மண்ணில் நிலைக்கு, மாறான அணுகுமுறை எதுவாயினும் அது செல்லாது; வெல்லாது!

ஆரிய ஆதிக்கம் ஒழியவும், இன இழிவு நீங்கவும், சாதி, மதம் மாயவும், சமூகநீதி நிலைக்கவும், தழைக்கவும், தமிழ் வளரவும், தமிழர் மேன்மையுறவும், தமிழர் உரிமைகள் காப்பாற்றப்படவும், பா.ஜ.க. எதிர்நிலையும், பார்ப்பன ஆதிக்க எதிர்நிலையும் கட்டாயம். இதை மருத்துவர் இராமதாஸ் அவர்கள் அடித்தளமாகக் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் தமிழகத்தின் ஒரு கணிசமான மக்களை தவறான பாதையில் பலி கொடுத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்குத் துணை நின்ற குற்றமாக அமையும்! மறுபரிசீலனை பலவற்றிலும் தேவை! ஒரு நல்ல தலைவர் ஆரிய பார்ப்பன சூழ்ச்சிக்கு பயன்படக் கூடாது, பலியாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இவற்றைச் சொல்ல வேண்டியது கடமை என்பதால் சொல்கிறோம்.

Image may contain: 2 people, people smiling
=============

No comments:

Post a Comment