அரசியல்

Sunday, March 4, 2018

காவிரி நீர்ப் பங்கீட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் உடன் செய்ய வேண்டியவையும்!




தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இது தொடர்பாக மெட்ராஸ்  மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ஆம் ஆண்டில் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து 1924-ஆம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அது 1973-இல் காலாவதியானதால், மீண்டும் சிக்கல் எழுந்தது.

காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, தமிழக  கர்நாடக மாநிலங்கள் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 1990 -ஆம் ஆண்டு ஜூன் 2-இல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

இந்த நடுவர் மன்றத்தில் கர்நாடகா 465 டி.எம்.சி., தமிழகம் 566 டி.எம்.சி., கேரளா 99.8 டி.எம்.சி., புதுச்சேரி 9.3 டி.எம்.சி. என்ற அளவில் தண்ணீர் கேட்டன. அதைத் தொடர்ந்து 1991ஆம் ஆண்டு, ஜூன் 25-ஆம் தேதி, காவிரி நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என அதில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடகத்தில் பெரும் போராட்டம் வெடிக்க தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

நடுவர் மன்றத்தின் இந்த உத்தரவை கர்நாடகம் அமல்படுத்தவில்லை. இதனால், 1998இல் தனியாக காவிரி நதிநீர் ஆணையம் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது.

இதனிடையே, காவிரி விவகாரத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி தனது இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர் மன்றம் அறிவித்தது.

நடுவர் மன்றத்தின் இந்தத் தீர்ப்பில், காவிரி மூலம் கிடைக்கும் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்று கணக்கிடப்பட்டு, அதில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி., கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., மீதமுள்ள 14 டி.எம்.சி. இயற்கை வளத்திற்கு என்று பிரித்தளிக்கப்பட்டது.

காவிரியில் இருந்து தமிழகம் பெறும் ஒட்டுமொத்த நீரான 419 டி.எம்.சி. தண்ணீரில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டுமென்றும் நடுவர் மன்றம் கூறியது. மேலும், தமிழகத்திற்கு உரிய 192 டி.எம்.சி. தண்ணீரை, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி., ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி, நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. என்ற அடிப்படையில் கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது. ஆனால், இந்தத் தீர்ப்பில் திருப்தியில்லை என்று, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுமே உச்சநீதிமன்றத்திற்குச் சென்றன. 192 டி.எம்.சி. நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக திறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதுபோல் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டி.எம்.சி. என்பதை 132 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டும்; தங்களுக்கு கூடுதலாக 60 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகமும், இதேபோல கேரளா, புதுச்சேரி அரசுகளும் உச்ச நீதிமன்றம் சென்றன.

இவ்வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், .எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி இறுதி விசாரணையைத் துவக்கியது. 28 வேலை நாள்களில் விசாரணை முடிக்கப்படும் என்று அப்போதே தெரிவித்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் தாங்கள் அளிக்கும் தீர்ப்பே இறுதியாக இருக்கும் என்றும், மீண்டும் இவ்விவகாரம் நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்படாது என்றும் அறிவித்தனர்.

தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கர்நாடகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாரிமன், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் இவ்வழக்குகளில் ஆஜராகி வாதாடினர். கடந்த 2017 செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் அண்மையில் தனது இறுதித் தீர்ப்பில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை 14.75 டி.எம்.சி. குறைத்து உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்பதால் வருடத்துக்கு 15 டி.எம்.சி. என்ற கணக்கின்படி 225 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாட காவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.
இதுவே இறுதி தீர்ப்பு. மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீரை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரச்னையை தமிழகத்துக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது என்ற பாதிப்பு உள்ள நிலையில், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் காவிரி பிரச்னையில் நிரந்தரத் தீர்வு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட் டங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்தும், கடலோரப் பகுதிகளின் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியும் உள்ள நிலையில், தமிழகத்தில் நிலத்தடி நீர் உள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது வேதனைக் குரியதும், ஒருதலைப்பட்சமான கருத்தும் ஆகும்.

ஏற்கெனவே நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல் கர்நாடகம் தாமதித்து வந்துள்ளது.

எனவே, இத்தீர்ப்பை உடன் அமல்படுத்த தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரலும் ஒலிக்க வேண்டியது கட்டாயமாகும்!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் வலியுறுத்தியவை:

பல்வேறு பிரச்சினைகளில் மாறுபட்டு இருக்கும் நாம், தமிழ் நாட்டின் உயிர்ப் பிரச்சினையான இந்தக் காவிரி பிரச்சினையில்,  அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதுதான் முக்கியம்.தந்தை பெரியார் ஒரு கருத்தைக் கூறுவார். பொதுப் பிரச்சினை என்று வரும்போது, எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனை அலட்சியப்படுத்த வேண்டும்.

எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்தவேண்டும் - ஆழப்படுத்தவேண்டும்‘’ என்பார். அந்தக் கருத்துதான், அணுகுமுறைதான் நமக்கு இப்பொழுது தேவை.

நாம் காட்டுகிற ஒற்றுமைதான் நமக்கு மிகப்பெரிய பலம்; கருநாடகத்தைப் பொறுத்தவரையில் கட்சிகளைக் கடந்து அவர்கள் ஒன்றுபட்டு நிற்பதை நாம் அறிவோம்!

500 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புரையில், பல பாதகமான அம்சங்களும் உண்டு; நியாயமான, சாதகமான அம்சங்களும் உண்டு. பாதகமான அம்சங்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம் - இனியும் எதிர்ப்போம்.

அதேநேரத்தில், சாதகமான அம்சங்களை எப்படி செயல்படுத்த வைக்கவேண்டும் என்பதுதான் நமது முக்கிய கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்பற்றி தீர்ப்பில் அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில், அது பொருத்த மற்றதாகும். தமிழ்நாட்டின் நிலத்தடி நீரைப்பற்றிப் பேசும் தீர்ப்பு, கருநாடகத்தின் நிலத்தடி நீர்ப்பற்றி ஏனோ பேசவில்லை!

இந்த வழக்கைப் பொறுத்தவரை மேல்முறையீடு செய்ய முடியாது என்றாலும், மறு ஆய்வு கோர இடம் உண்டு; அதையும் ஒரு பக்கத்தில் நாம் செய்யவேண்டும். நிலத்தடி நீர்பற்றி தமிழ்நாட்டில் ஒரு நிபுணர் குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை மறு ஆய்வில் இணைத்திட வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 450 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

399. The Tribunal directed appointment of a Regulatory Authority to peroperly monitor the working of monthly schedule with the help of the concerned States and Central Water Commission and further directed that the upper riparian State shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian States. The other directions which had been issued by the Tribunal, we think it appropriate to reproduce, are as under:-

இதன் தமிழாக்கம் வருமாறு:

399. காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, தொடர் புடைய மாநிலங்கள் மற்றும் மத்திய நீர் ஆணையத்துக்கு உதவிட, வல்லுநர்களைக் கொண்ட ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும். மாதந்தோறும் அக்குழு கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஒரு மாநிலத்துக்குரிய  (Lower Riparian State)  பங்கீட்டளவு பாதிக்கக்கூடிய வகையில் அடுத்த மாநிலம் (Upper Riparian State)  எவ்விதத்திலும் செயல்படக்கூடாது.’’ (பக்கம் 450).

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 456 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

74.        The Report of the Commission as the language would suggest, was to make the final decision of the Tribunal binding on both the States and once it is treated as a decree of this Court, then it has the binding effect. It was suggested to make the award effectively enforceable. The language employed in Section 6(2) suggests that the decision of the Tribunal shall have the same force as the order or decree of theis Court. There is a distinction between having the same force as an order or decree of this Court and passing of a decree by this Court after due adjudication. Parliament has intentionally used the words from which it can be construed that a legal fiction is meant to serve the purpose for which the fiction has been created and not intended to travel beyond it. The purpose is to have the binding effect of the Tribunal’s award and the effectiveness of enforceability. Thus, it has to be narrowly construed regard being had to the Purpose it is meant to serve.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பிரிவு 6(2)இல் கூறியுள்ளதன்படி, நடுவர் மன்றம் அறிவிக்கின்ற தீர்வு என்பது உச்சநீதிமன்றம் அளிக்கின்ற ஆணை அல்லது உத்தரவைப்போன்று வலிமையுள்ளதாகும். ச்சநீதிமன்றம் அளிக்கின்ற உத்தரவைப்போன்றே, நடுவர்மன்றம் அளிக்கின்ற உத்தரவுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப்போன்று முழுமையான வலிமை உண்டு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்நோக்குடன் சட்ட கற்பனை எனும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. கற்பனை என்று கூறுவதன் நோக்கம் அதனுடைய எல்லைகளுக்கப்பால் சென்று விடக்கூடாது என்பதுதான். உண்மையில் நோக்கம் என்னவென்றால், நடுவர் மன்றம் அளிக்கின்ற உத்தரவை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதுதான்.

ஆகவே, அதுகுறித்து சுருக்கமாக தெளிவு படுத்தும்போது, அதன் நோக்கம் செயல் படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.’’  (பக்கம் 456) என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக் கூறுகிறது.

இந்தத் தீர்ப்பு நடுவர் மன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் கண்டிப்பாக அமைத்தே ஆகவேண்டும்.

அதனை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்! இன்னொன்று முக்கியமானது. நமக்குத் தேவையான நேரத்தில் மாத வாரியாக தண்ணீரைக் கருநாடகம் தந்தாகவேண்டும்; கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில், அதற்குமேல் அணையில் தேக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலையில், தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.

காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டால், இதில் கருநாடக அரசு தன் விருப்பப்படி எல்லாம் செயல்பட முடியாது.

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்காகக் கூறப்பட்டுள்ள அம்சங்களைச் செயல்படுத்திட அனைத்துக் கட்சித் தலைவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்திப் பேசினார்.

எனவே, இன்று தமிழகத்தின் மூத்தத் தலைவர், தமிழினத்திற்கான 75 ஆண்டுகால போராளி என்ற நிலையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கருத்துக்களை ஒவ்வொரு தமிழரும் உள்வாங்கி ஒன்றிணைந்து, பலமான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தச் செய்ய வேண்டும்.

இது தமிழர்களின் தலைமுறை வாழ்வாதாரம், உரிமை என்பதால் இதில் விடா முயற்சியுடன் தொடர் போராட்டங்களை நாம் முன்னெடுத்து நம் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்!

கமலகாசனின் குறுக்குசால் கண்டிக்கத்தக்கது!

அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று கமலஹாசன் கூறியிருக்கிறார். இது காவிரிப் பிரச்சனைக்குப் பொருந்தாது. கடந்த காலங்களில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படாத நிலையில்தான் நம்முடைய வற்புறுத்தல்களாலும் போராட்டங்களாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படியும் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பை மீண்டும் கிடப்பில் போடாமல் உறுதியாக மத்திய அரசும் கர்நாடக அரசும் அமல்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும். இதற்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க போராட வேண்டிய நேரத்தில், அதற்காக இன்று அனைத்து கட்சி கூட்டம் தமிழக அரசு சார்பில் நடைபெற இருக்கிறபோது நேற்று மதுரையில் பேசிய கமலஹாசன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வற்புறுத்துவது தமிழக நலனை காவு கொடுப்பதாக அமையும்.’’ எனவே, அவரது கருத்து கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்து ஏட்டின் எச்சரிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், தமிழகத்தில் இருக்கும் இயற்கைச் சூழல் பெருமளவில் பாதிக்கப்படும். டெல்டா பகுதி என்பது ஒரு ஈர நிலம். புனல் நாடு என்றுதான் இதைச் சொல்கிறோம். நீர் பரவிக் கிடந்த அந்தப் பகுதியில் இன்றைக்கு இயற்கைச் சூழல் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. இங்குள்ள வாய்க்கால் பகுதிகளில் முன்பு அத்தனை மீன்கள் இருக்கும். நீர்த்தாவரங்கள் இருக்கும். இப்போதெல்லாம் அவை அருகிவிட்டன. மேலும், தமிழகத்தில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் இருக்கிறது. அதில் 10 டிஎம்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறது உச்ச நீதிமன்றம். இது துல்லியமான கணக்கீடு இல்லை. காவிரி டெல்டாவை காவிரிப் பிரிவு, வெண்ணாற்றுப் பிரிவு, புதுஆற்றுப் பிரிவு என்று மூன்றாகப் பிரிக்கலாம். இவை எல்லாவற்றிலும் நிலத்தடி நீராதாரம் மேம்பட்ட அளவுக்கு இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, காவிரிப் பாசனப் பகுதியில் கொஞ்சம் நிலத்தடி நீர் உண்டு. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அது குறைவு. புது ஆற்றுப் பாசனப் பகுதியில் நிலத்தடி நீர் மிகக் குறைவு. இதில் 10 டிஎம்சி நிலத்தடி நீரை எங்கிருந்து எடுப்பது?

அது மட்டுமல்ல, நிலத்தடி நீர் என்பது தொடர்ந்து சுரக்க வேண்டும். ஆற்றில் நீர் இல்லாமல் அது எப்படிச் சாத்தியமாகும்? மழையும் குறைந்துவருகிறது. நன்னிலம், கொரடாச்சேரி, மன்னார்குடி வரைக்குமே நிலத்தடி நீர் அதிகம் எடுக்கப்படுவதால் உப்புத் தண்ணீர் கலந்துவிட்டது. மேலும், நிலத்தடி நீரை எடுத்தால் இனிமேலும் பாதிப்புகள் அல்லவா ஏற்படும்!  ஆற்றில் தண்ணீர் குறைவது என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பிற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். டெல்டா பகுதிகளில் முன்பு அத்தனை எருமை மாடுகள் இருக்கும். இப்போது அவை கண்ணில் படுவதேயில்லை. எருமை மாடுகளுக்குத் தண்ணீரும் சேறும் நிறைய தேவை. இப்போது அதெல்லாம் எங்கே?

கிராமங்கள் என்பவை விவசாய அலகுகள். ஒரு கிராமத்தில் எத்தனை வேலி பயிர் செய்கிறார்களோ அதைப் பொறுத்துத்தான் மக்கள்தொகை உட்பட எல்லா விஷயங்களும் அந்தக் கிராமத்தில் அமையும். ஆற்றிலிருந்து கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்குப் பாசன வாய்க்கால் இருக்கும். இன்றைக்கு, பாசன வாய்க்கால்கள் பாதி கிராமத்துக்குக்கூடத் தண்ணீர் கொடுப்பதில்லை. மேல்மடையில் மட்டும்தான் தண்ணீர் நின்றுகொள்கிறது. இனி கீழ்மடையில் இருக்கும் விவசாயிகளுக்கு அதிகமான விவசாயச் செலவும் குறைச்சலான விளைச்சலும் ஏற்படும். அதாவது, ஒரே விவசாய அலகாக இருந்த கிராமம், கொஞ்சம் ஆற்றுப் பாசனம் உள்ள பகுதி, ஆற்றுப் பாசனமே இல்லாத பகுதி என்று இரண்டு அலகுகளாகப் பிரியும். கிராமங்களின் அமைப்பே குலையும்.

ஆற்றுப் பாசனம் குறைந்து, இனி ஆழ்துளைக் கிணறு, மழையை நம்பித்தான் விவசாயம் எனும் நிலை உருவானால் பெரிய அளவிலான இடப்பெயர்ச்சி, நகரங்களில் அழுத்தம், மாற்றுத் தொழில் என்று பல்வேறு விஷயங்களை நாம் எதிர்கொள்ள நேரும்’’ என்றுஇந்துஎச்சரித்துள்ளது. எனவே, காவிரி நீர் பங்கீடு என்பதும், காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழு உடன் அமைக்கப்பட வேண்டியதுவும் கட்டாயமாகும்.

மத்திய பி.ஜே.பி. அரசு கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இதில் அக்கறை கொள்ளாமல் இருக்கும். தமிழர்கள்தான் இதற்கான அனைத்து வழிகளையும் பின்பற்றி முயற்சிகளை மேற்கொண்டு, நம் உரிமையை நிலைநாட்டியாக வேண்டும். எனவே, அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் ஒற்றுமையாய் நின்று மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து சாதிக்க வேண்டும்!

- மஞ்சை வசந்தன்
====



No comments:

Post a Comment