அரசியல்

Sunday, March 4, 2018

தமிழினத்தின் பெரும் பொறுப்பு தளபதியே உம்மிடம்!


தமிழினத்தின் பெரும் பொறுப்பு
தளபதியே உம்மிடம்!
அத்தகு தமிழினத்தின் நம்பிக்கை நாயகன்
மு.க.ஸ்டாலின் அவர்களே, வாழ்க பல்லாண்டு!
Image may contain: 1 person
=====================
நீடூழி வாழுங்கள் இந்த இனத்திற்காக!
கேடுகள் அகற்றி, நாடு நலம்பெற பீடுநடை போடுங்கள்! பெருஞ்சாதனைப் புரியுங்கள்!
கூடா நட்பும் குள்ளநரிகளும் நாடாது ஒதுக்கி, நலம் விரும்பிகளையும், தொண்டறத் தூயர்களையும் கூடவே வைத்துச் செயல்படுங்கள்!
வெற்றிடம் என்பர் வீணர்கள்! முற்றும் பிழையது!
50 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற நீங்கள் இருக்கும்போது வெற்றிடம் ஏது தி.மு.கழகத்தில்?
அரசியலைக் கைப்பற்ற முயலும் ஆதிக்கக் கூட்டத்திற்கும் அரசியலில் நுழைய விரும்பும் அரிதாரங்களுக்கும், அரசியலில் வளரத் துடிக்கும் புதிய வரவுகளுக்கும் நீங்களும் தி.மு.க.வும் பெரும் தடை. எனவேதான் அவர்கள் வெற்றிடம் என்ற ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுகிறார்கள்!
கலைஞர் செயல்பாட்டுடன் இருந்தபோதே நீங்கள் தலைமைத் திறத்தை தமிழகத்திற்கு காட்டியுள்ளீர்கள்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் 1% வாக்கே வித்தியாசம் என்கின்ற நிலையில் கட்சியை மீட்டெடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
அப்படியிருந்தும் வெற்றிடம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி உங்களைக் குறைத்து, மறைத்துக் காட்டி தங்களை முன்னிறுத்த முயலுகிறார்கள்.
பா.ம.க. அன்புமணியாயினும்,
தமிழ்த் தேசியம் பேசும் சீமானாயினும்
அவர்கள் திராவிடத்தை எதிர்த்தால் மட்டுமே தாங்கள் நிலைக்க முடியும், வளர முடியும் என்பதாலே அப்படிப் பேசுகிறார்கள். மற்றபடி அதில் உண்மை ஏதும் இல்லை.
ஆனால், ஆரிய பார்ப்பனர்கள் உங்களை மறைத்துக் காட்டுவது அவர்களின் ஆதிக்கத்தை உருவாக்க.
எனவே, எதிராளிகள் குறையாகச் சுட்டப்படுவதைக் களைந்து, தாங்கள் வந்தால் எதைச் சாதிப்பதாய்ச் சொல்கிறார்களோ அவற்றை நீங்கள் செய்ய திட்டம் வகுத்தால் எதிராளிகளுக்கு போர்க் கருவியே இல்லாமல் போகும்.
இதைச் சரியான வியூகம் அமைத்து செயல்படுத்த வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், சுப.வீ. அவர்கள் போன்றோரை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல்களை அணுபிசகாமல் பின்பற்ற வேண்டும்.
விடுதலை நாளேடு தான் என் வழிகாட்டி என்றார் கலைஞர். எனவே, அதுவே உங்களின் அரசியல் பாடப் புத்தகமாக வேண்டும். அன்றாடம் அதைப் படித்துச் செயல்படுங்கள்!
வைகோவின் வரவு உங்களுக்கு வலுவையும் வழிகாட்டுதலையும் அளித்துள்ளது. அத்துணையோடு உங்கள் களத்தை வெற்றிக் களமாக்குங்கள்!
ஊழல், கொள்ளை, சாராயம் இல்லாத ஆட்சிக்கு உறுதி கொடுங்கள்!
இதற்கு காரணமானவர்கள் யாராவது தி.மு.க.வில் இருப்பின் சற்றும் தயங்காது களையெடுங்கள்.
மக்கள் உங்களை எதிர்பார்க்கிறார்கள், நம்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் நம்பிக்கைக்கும் முழுமையாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
திருமாவளவன், பொதுவுடமைக் கட்சியினர், இஸ்லாமிய கிருத்துவ அமைப்புகள் எல்லாம் தி.மு.க.வுடன் இணக்கம் உடையவர்கள். அவர்களை துணை கொள்ளுங்கள்; அவர்களின் நல்ல கொள்கைகளையும் பற்றிக் கொள்ளுங்கள்!
பிறந்த நாளான இன்று முதல் இவற்றைக் கருத்தில் கொண்டு கவனத்துடன் களம் காணுங்கள்.
சமூகநிதி, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வேளாண்மை, நதிநீர், மீனவர் நல்வாழ்வு இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் சிக்கல்களை அறிந்து அப்பகுதி தொண்டர்கள் மூலம் அவர்கள் இன்னலைத் தீர்க்க முயலுங்கள். தொய்வற்ற தொடர்ந்த மக்கள் பணி உங்களை அசைக்க முடியாத ஆட்சி தலைமையேற்கச் செய்யும்.
செய்யுங்கள்! செய்வீர்கள்! அதன்வழி சாதிப்பீர்கள்! அத்தகுதியும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது!
தமிழகமும், தமிழினமும் வாழ, வளர, உழைப்பதற்காக நீங்கள் நூறாண்டுகளுக்கு மேலும் வாழ்க! வளர்க! என்று உங்கள் பிறந்த நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்!

அன்பு உடன்பிறப்பு,
- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment