அரசியல்

Thursday, December 28, 2017

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை வைத்து தி.மு.க. பலம் சரிவு என்பது அறியாமை அல்லது அயோக்கியத்தனம்!



ஆர்.கே.நகரில் நடந்தவை என்ன என்பது ஊடகங்களுக்கு முழுமையாய்த் தெரியும்; அரசியலில் பங்குகொண்டுள்ள தலைவர்கள், விமர்சகர்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால், எல்லாம் தெரிந்திருந்தும் தி.மு.க. தோல்வியை வைத்து, தி.மு.க.வின் பலம் சரிந்துவிட்டதாய்ப் பேசுவதும், எழுதுவதும், கருத்துக் கூறுவதும் ஒன்று அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது அயோக்கியத்தனமாக இருக்க வேண்டும்.

காரணம், ஆர்.கே.நகரில் முழுக்க முழுக்க பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானித்துள்ளது. போட்டிப் போட்டு கொடுத்த தினகரனும், அ.இ.அ.தி.மு.க. மதுசூதனனும் அந்த விகிதத்திற்கு ஏற்ப வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தி.மு.க. பணம் கொடுக்கவில்லை. ஓட்டும் கிடைக்கவில்லை. “பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும்’’ என்ற பழமொழி நீண்டகாலமாய் நிலைத்து வெற்றிபெற்ற பழமொழி. அதன்படிதான் ஆர்.கே.நகரில் நடந்துள்ளது.

தி.-மு.க.விற்கு வாக்களிக்க கூடிய பலரும் பணத்திற்காக வாக்களித்துள்ளனர். இந்த ஒரு தொகுதியில் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது; பணம் கிடைக்கிறதே! என்ற மனநிலையே காரணம்!

தி.மு.க. பணம் கொடுக்காமல் இவ்வளவு வாக்குகளைப் பெற்றது. அதன் செல்வாக்கைக் காட்டுகிறதே தவிர சரிவையல்ல.

சற்றேறக்குறைய தினகரன் தரப்பாரும், அ.தி.மு.க. தரப்பாரும் சேர்ந்து ஒரு வாக்குக்கு 20 ஆயிரம் ரூபாய் மொத்தமாகக் கொடுத்த பின்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.விற்கு வாக்களித்திருப்பது என்பது தி.மு.க.வின் செல்வாக்கின் பலமே! இவ்வளவு பணம் ஒரு வாக்குக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தி.மு.க. பெற்றுள்ள வாக்குகள் மதிப்பு மிக்கவை.

உண்மை இப்படியிருக்க ஆர்.கே.நகரில் தோற்றதை வைத்து தமிழ்நாடு முழுக்க அதுவே நடக்கும் என்பதும் அக்கருத்தைப் பரப்புவதும் அசல் அயோக்கியத்தனம் ஆகும்!

ஒரு மாதத்திறகு முன் தமிழகம் முழுக்க அறியப்பட்ட கருத்துக் கணிப்பில் 55%க்கும் மேற்பட்ட மக்கள் தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று கூறியிருந்தனர். அதன்பின் 2ஜி வழக்கில் தி.மு.க.வின் களங்கம் நீக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாய் 60% வாக்குகளுக்கு மேல் தி.மு.க.விற்கு அளிக்க மக்கள் தயாராய் இருக்கும் நிலையில், தி.மு.க. செல்வாக்கு சரிந்து விட்டதாய்ச் சொல்வது எந்த அடிப்படையில்? நாணயமாய் ஊடகங்களும், விமர்சகர்களும் பதில் சொல்ல வேண்டும்.

இந்த சந்தடி சாக்கில் மு.க.அழகிரி தி.மு.க. இனி வெற்றி பெறாது என்பது, அவரது ஆறா அரிப்பை தேய்த்துக் கொள்ளும் முயற்சிதான்.

தம்பி மீதுள்ள வெறுப்பை தி.மு.க.வுக்க எதிர்ப்பாய்ப் பயன்படுத்தும் அவரைத் தி.மு.க.வின் நலம் விரும்பியாக எப்படி ஏற்க முடியும்? தனக்குச் செல்வாக்கு இல்லாத தி.மு.க. அழிய வேண்டும் என்று நினைக்கும் சுயநலக்காரர் அவர் என்பதை இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, தி.-மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொண்டர்களும் சோர்வடையாது பழைய நம்பிக்கையில், உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

தி.மு.கழகத்தில் சுற்றியுள்ள, பற்றியுள்ள சுயநலக்காரர்களை, அரை வேக்காடுகளை அப்புறப்படுத்தி சரியானவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட வேண்டியது ஸ்டாலின் அவர்களின் தலையாய கடமையாகும்.

இன்றைக்கு மக்கள் விரும்புவது பி.ஜே.பி.யை வன்மையாக எதிர்க்கும் கட்சியைத்தான். தற்போது அத்தகுதி தி.மு.க.விற்கே உள்ளது. அதில் தி.மு.க. உறுதியாக நின்று வெல்ல வேண்டும்! வெல்ல முடியும்!

தமிழக மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஊடகங்கள் மக்களைக் குழப்புகிறார்கள். தங்கள் நோக்கத்திற்கு ஏற்ப!

வேண்டுமானால் சரியான கருத்துக் கணிப்பு நடத்திப் பாருங்கள்! உண்மையை உணரலாம்!

- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
====

No comments:

Post a Comment