அரசியல்

Thursday, December 14, 2017

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

தனித்தமிழ்நாடு கேட்டு போராடியவர் பெரியார்!

பெரியார் பின் சென்ற நாம் தமிழர் கட்சி!

இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம்

தமிழ்த் தேசியம் பேசி பெரியாரை எதிர்ப்போர் இந்த வரலாற்று உண்மையை அறிக!

- மஞ்சை வசந்தன்
==========================
1960 ஜூன் திங்கள் 5ஆம் நாள் மாலை, தமிழ்நாடு நீங்கலாக இந்திய யூனியன் படம் எரிப்புப் போராட்டம் என்று பெரியார் அறிவித்து விட்டார். “நாடெங்கும் தீவத்தி ஊர்வலமும் நடைபெறும். இது அரசியல் போராட்டமல்ல; இனப் போராட்டம்!

போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த நான் மே 31, ஜூன் 1, 2, 3, 4 தேகிளில் ரயில்மார்க்கமாகப் பயணம் செய்வேன்’’ என்றும் பெரியார் கூறிவிட்டார். 25.5.1960 “கரண்ட்’’ இதழில் பெரியார் படத்தையும் போட்டு, சுதந்திரத் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்ற கோரிக்கைக்காகப் பெரியார் போராட்டம்! இது 23 ஆண்டுகாலமாய் இருந்துவரும் கோரிக்கை வெற்றிக்காகப் பெரியாரின் 1960ஆம் ஆண்டு வேலைத்திட்டம்!

இந்திய யூனியன் பட எரிப்பு (தமிழ்நாடு நீங்கலாக) என்ற செய்தி பிரதான இடத்தில் வெளியிடப்பட்டது.
நாம் தமிழர் இயக்கமும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்திருந்தது.

ஆயிரம் வீரர்களாவது சிறை செல்வதாக மட்டுமில்லாமல் உயிரையும் பலி கொடுக்கத் தயாரான தன்னல மறுப்பு உணர்வுடன் வந்தால்தான், இந்தியக் கூட்டாட்சி என்னும் பார்ப்பனப் பிரசிடெண்ட், பார்ப்பனப் பிரதமர் எனும் ஏகபோக ஆட்சியிலிருந்து விலகித் தமிழ்நாட்டைத் தனிச் சுதந்திர நாடாக ஆக்கித் தமிழ்நாடும் தமிழனும் தப்பிப் பிழைக்கலாம் என்றார் பெரியார். தமிழ்நாடு என்ற பெயரை இந்த ராஜ்யத்துக்குச் சூட்டுகின்ற அதிகாரம், சக்தி எல்லாம் டெல்லி ஆட்சிக்கே உண்டு. ஆகையால் தமிழ்நாட்டு அரசோடு முட்டிக்கொள்ளாமல் அநீதிகளுக்குக் காரணமான டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட வேண்டும். தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லையே என்று கொதிக்கும் உள்ளங்கொண்ட இளைஞர்களே, தோழர்களே, புலவர்களே, பெருமக்களே, எழுத்தாளர்களே, பேச்சாளர்களே நாட பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை.

ஜுன் 5இல் யூனியன் படத்தை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்!

ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கமோ, பயமோ இருக்குமானால் அவரவர் வீட்டு வாசலில் கொளுத்திவிட்டுப் பெயர் கொடுங்கள்’’ என்றார்.
மே மாதம் முழுவதும் பெரியாரின் இந்த வீர முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.

சிகரம் வைத்தது போல் 4.6.1960 நாள் சென்னை திருவல்லிக்கேணிக் கடற்கரையில் டி.எம்.சண்முகம் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடந்தது.

பெரியாரும் கி.வீரமணி அவர்களோடு, நாம் தமிழர் இயக்கத்துச் சார்பில் ஆதித்தனார், ஈரோடு சின்னசாமி, வரதராசன், ஜெயச்சந்திரன் ஆகியோரும் பேசினார்கள். 2 லட்சம் படங்கள் கொளுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்தன. இது பட எரிப்பு அல்ல; படையெடுப்பு என 3.6.1960 ‘விடுதலை’ வர்ணித்தது. ஜூன் முதல் நாள் அமைச்சரவை கூடிற்று. சென்னையில் 41ஆவது பிரிவின் கீழ் ஜூன் 4 முதல் 11 வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஜூன் 5 காலை 10.30 மணியளவில் 151ஆவது தடுப்புக்காவல் சட்டத்தின்படிப் பெரியாரும், வீரமணி, குருசாமி, புலவர் கோ.இமயவரம்பன் ஆகியோரும், ஆதித்தனாரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுதும் அன்று பல இடங்களில் தேசப்படங்கள் தீக்கிரையாயின. நள்ளிரவு வரையில் போலுசார் வேட்டையாடி 4000 பேரைக் கைது செய்திருந்தனர். சென்னையில் டி.எம்.சண்முகம், லோகநாதன் உள்ளிட்ட 75 பேர் மீது வழக்குப் போட்டு 24.6.1960இல் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்கினார்கள்.

ஈரோடு திராவிடர் கழகத் தலைவர் அங்கமுத்து மீது 124ஏ, 153 பிரிவுகளில் வழக்குத் தொடுத்து ஒருமாத சிறை அளிக்கப்பட்டது,

7.7.1960 அன்று.

No comments:

Post a Comment