அரசியல்

Tuesday, March 1, 2016

ஆர்.எஸ்.எஸ். சதிவலையுள் உயர்கல்வி! ஆர்த்தெழுந்து போராடும் மாணவர்கள்!

- மஞ்சை வசந்தன்
கல்விதான் உரிமை வேட்கைக்கான உயிரோட்டம் என்ற உண்மையை நன்கு புரிந்துவைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், அக்கல்வியை தனக்கு மட்டுமே உரியதாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருந்த நிலையை, ஆங்கில ஆட்சியும், ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றோரின் போராட்டங்களும் மாற்றி, அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தன.
இதன் விளைவாய் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் கல்வி பயின்று அய்-.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளாய், நீதிபதிகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், வழக்குரைஞர்களாய், பல்துறை வல்லுநர்களாய், கலைஞர்களாய் உருவாகி, உயர்ந்து வருவதோடு, ஆரிய பார்ப்பனர்களைப் பின்னுக்குத் தள்ளி சாதித்து வருவதால் ஆத்திரமுற்ற ஆரிய பார்ப்பன கூட்டம் இந்த வளர்ச்சியைத் தடுக்க என்னென்ன சதித் திட்டங்களைச் செயல்படுத்த முடியுமோ அத்தனையையும் செயல்படுத்திப் பார்த்தனர்.
ஆனால், பெரியார் தொண்டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும், கன்சிராம், மாயாவதி, முலாயம் சிங், லாலுபிரசாத் போன்றவர்களும், அவர்களது வழிகாட்டி களும் தொடர்ந்து விழிப்போடிருந்து ஆரிய ஆதிக்கத்தை, சூழ்ச்சியை முறியடித்தனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததாலும், நேரு, இந்திரா, வி.பி.சிங், மன்மோகன்சிங் போன்றவர்கள் சமூகநீதியைத் தாங்கி நின்றதாலும் ஆரிய பார்ப்பனக் கூட்டம் ஆடி அடங்கி ஒடுங்கியது.
ஆனால், இராமனைக் காட்டி, மதவெறியை ஊட்டி, பி.ஜே.பி.யை வளர்த்து, மோடி என்ற ஒரு மனிதரை மாற்றம், ஏற்றம், வளர்ச்சி இவற்றை உடனே உருவாக்கும் சக்தி படைத்தவராய் பரப்புரை செய்து, அதிக எண்ணிக்கையில் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து, ஏங்கிக் கிடந்த ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கூட்டம் (ஆரிய கூட்டம்) மீண்டும் எழுந்து, கொடூர கரம் நீட்டி, தாழ்த்தப்பட்டோரை, பிற்படுத்தப்பட்டோரை அடக்கி, நசுக்குவதிலும், தங்கள் ஆதிக்கத்தை வளர்ப்பதிலும், தங்கள் சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும், தங்களுக்குச் சாதகமான மனுஸ்மிருதி, பகவத் கீதை போன்ற மனித எதிர் நூல்களைப் பரப்புவதிலும் தீவிரங் காட்டுவதோடு, தாங்கள் சொல்வதைத்தான் சாப்பிட வேண்டும், தாங்கள் கூறும்படிதான் உடுத்த வேண்டும், தங்கள் சாஸ்திரப்படிதான் வாழவேண்டும், மீறினால் கொல்வோம் என்று கொடுங்கோல் செயல்பாடுகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.
இதன் முதற் கட்டமாக, சமூகநீதி, பகுத்தறிவு, ஆரிய பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன, சமஸ்கிருதத் திணிப்பு மறுப்பு என்று சிந்தனை விதை விதைத்த பகுத்தறிவாளர்களை வீட்டிற்கேச் சென்று படுகொலை செய்து மிரட்டல் விடுத்தனர். இதன்மூலம் கருத்துச் சதந்திரத்தின் கழுத்தை நெறித்து கொன்றுவிடலாம் என்று கனவு கண்டனர். ஆனால், விளைவு விபரீதமாய் மாற பின்வாங்கிப் பதுங்கினர்.
அறிவுத் திறன்வாய்ந்த மனிதர்களுக்கு அடுத்தப்படியாக அறிவுநுட்பம் வாய்ந்த ஆரியர் அல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்கள் உருவாவதையும், அவர்கள் விழிப்போடும், விவரத்தோடும், உரிமை வேட்கையோடும் வளர்வதையும் தடுக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன் முதல்கட்ட வெள்ளோட்டம் சென்னை அய்.அய்.டி.யில் அவர்களால் தொடங்கப்பட்டது. அந்த நிறுவன மாணவர்களேயன்றி, அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஆர்தெழுந்து போராடிய தாலும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் போர்க்கோலம் பூண்டு போராடியதாலும் ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பன ஆதிக்கம் அடங்கிப் பணிந்து போனது.
அடுத்து அய்தராபாத்தில் அவர்களின் ஆதிக்க வெறியை அரங்கேற்றினர். அந்த வெறிக்கு அறிவார்ந்த ஒடுக்கப்பட்ட மாணவர் ரோகித் வெமுலா பலியானார். போராட்டம் இந்தியா எங்கணும் பரவ, ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அப்படியே பின்வாங்கி ஓடி ஒளிந்தது.
எவ்வளவு மூக்குடைப் பட்டாலும், எத்தனை முறை தோற்றாலும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவது ஆரிய பார்ப்பனர்களின் பரம்பரை பழக்கம் என்பதால், அய்தராபாத் சூடு தணிவதற்குள், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்களின் கலவரத்தை, மோசடியை மூலதனமாகக் கொண்டு தொடங்கினர்.
கடந்த 9ஆம் தேதி (09.02.2016) ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியதாக தேசவிரோத குற்றஞ்சாட்டி, இப்பல்கலைக் கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரைக் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.அய்.) தேசியச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜாவின் மகள் அபராஜிதா உட்பட 7 பேர் மீது தேசவிரோத வழக்குப் போடப்பட்டு இருக்கிறது.
அரசின் இந்த மோசடிச் செயலைக் கண்டித்து மாணவர்களும் பேராசிரியர்களும் பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-_இ_தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீது இருப்பதாக வெளிப்படையாகக் குற்றச் சாட்டினர்.
இக்குற்றச்சாட்டு முற்றிலும் மோசடியானது. இதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் அறிக்கைவிட்டனர்.
“போலி ட்விட்டர் கணக்கு மூலம் எனது பெயரில் பொய்யான கருத்து பகிரப்பட்டிருக்கிறது. எனக்கும் ஜே.என்.யு.வில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்நிகழ்வில் இந்திய அரசாங்கம் என்னைத் தொடர்புப்-படுத்தியிருப்பது வியப்பளிக்கிறது!’’ என்று தீவிரவாத அமைப்பான ஜெ.யு.டி. (JUD) வெளியிட்டுள்ள வீடியோவில் ஹஃபீஸ் சயீது தெரிவித்திருக்கிறார்.
இப்படியொரு மோசடியான பழியைப் போட்டு மாணவர்களை நெருக்கிக் கசக்கி, அச்சுறுத்தி அடக்க ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கூட்டம் முயலுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
“நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சதவிகித ஏழைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்தவரை தேசத்தை வழிபடுவது ஆகும். எங்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. அரசமைப்பை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவாரங்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான ஜந்தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித் தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்தத் தேசத்தின் சாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுதலுமில்லை.’’ என்று இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஏஅய்எஸ்எப்  கன்னையகுமார் பேசியதுதான் அவர்களை பாடாய்ப் படுத்தியிருக்கிறது.
அவரது பேச்சில் எவராவது குற்றம் சொல்ல முடியுமா? எவ்வளவு தெளிந்த, பொருள் பொதிந்த உரிமை சார்ந்த, ஆதிக்கவாதிகளுக்கு எதிரான கருத்துரை இது!
அரசமைப்பை மதிக்கிறோம், மாறாக ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்களின் ஆதிக்கச் செயல்பாடுகளை எதிர்க்கிறோம் என்பதுதானே அவர் பேச்சின் சாரம்.
உரிமை வேட்கையுள்ள, ஆதிக்கம் அழிக்க நினைக்கும் மனித உரிமைப் போராளி எவரும் பேசக்கூடிய, பேச வேண்டிய பேச்சுதானே இது! இதில் என்ன குறை கண்டார்கள்? குறைதான் காண முடியுமா?
முடியாது. எனவேதான் இந்த மோசடி முறையில் பழிபோட்டு, தேச விரோத வழக்குப் புனைந்து சிறைப்படுத்திய சிறுமை! அயோக்கியத்தனம்.
மோசடி வழக்கைப் புனைந்து கைது செய்ததோடு, 15.02.2016 அன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கன்னையாகுமார் நேர் நிறுத்தப்பட்டபோது, அங்குத் திரண்ட ஆசிரியர்கள் மாணவர்களை 40க்கும் மேற்பட்ட பி.ஜே.பி. வழக்குரைஞர்கள் திடீர் என்று தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுபான்மையினர் அமைப்பின் உறுப்பினர் அமீக் ஜமேய் என்பவரை, பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மாவும் அவரது ஆதரவாளர்களும் வெறிகொண்டு தாக்கினர்.
2001இல் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் கிலானி குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்ட பின், 16.02.2016 அன்று தேச விரோத வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தக்கட்ட விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கன்னையாகுமார், நீதிமன்ற கட்டுக் காவல்களை யெல்லாம் மீறி நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டள்ளார்.
மனித உரிமைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு எதிராய் யார் குரல் கொடுத்தாலும், போராடினாலும், அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்குவது அல்லது அழித்தொழிப்பது. அதற்கு என்னென்ன மோசடி, பித்தலாட்டம் உண்டோ அத்தனையும் செய்வது என்ற ஒற்றைக் கொள்கையுடன் கொலை வெறிகொண்டு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும், பி.ஜே.பி. கட்சியினரும் வினையாற்றுவதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர் நிகழ்வுகள்.
இதுவரை நடந்துள்ள எதிலும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர் தரப்பில் எந்த உண்மையும், நேர்மையும் நியாயமும் இல்லை. எல்லாம் மோசடி, புனைவு, ஏமாற்று, பித்தலாட்டம், பொய்தான்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழககத்தில் புனையப்பட்ட தேசவிரோத குற்றச்சாட்டும் அப்பட்டமான மோசடி என்பது அண்மையில் உறுதியாகிவிட்டது.
காணொலியைப் பதிவு செய்த விஷ்வ தீபக்  தனது தலைமை எடிட்டர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதன் பிறகு அவர் டில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மோசடித் திரையைக் கிழித்தார்.
“அதிர்ச்சி! அதிர்ச்சி!! மனசாட்சி என்னை உறுத்தியது. என்னை மாணவர் அமைப்பின் செயலாளர் ஒருவர் தனது நிகழ்ச்சியைப் படம் பிடிக்க அழைத்தார். அவரது அழைப்பின் பேரில் நான் தான் டில்லி பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் கருத்தரங்கத்தைப் பதிவு செய்தேன்.  எனது மொபைல் காமிராவிலும் எனது நன்பர் ஒருவரை படம் பிடிக்கக் கொடுத்து பதிவு செய்தேன்.
அந்த நிகழ்ச்சியை நான் பணிபுரியும் ஜீ செய்தி நிறுவனத்திடம் கொடுத்து அதற்கான செய்தியை எழுதித் தொகுக்க அனுமதி கேட்டிருந்தேன். இந்த நிலையில் 11ஆம் தேதி அன்று மாலை நான் தொகுத்த காணொலி, ஜீ ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சியில் வெளியானது. அதைப் பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியடைந்தேன், அதில் பாகிஸ்தான் ஸிந்தாபாத், பாரத் முர்தாபாத், இந்துஸ்தான் கோ துக்டே கரேங்கே(பாகிஸ்தான் வாழ்க, இந்தியா ஒழிக, இந்தியாவை உடைப்போம்) என்ற வார்த்தைகள் மாணவர்கள் முழங்குவதாக பின்புலத்தில் ஒலித்தன, இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன், இது எங்கு சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், எடிட்டோரியலில் விஷமத்தனம் செய்யப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
மேலும் அந்த காணொலியின் தலைப்பே பாகிஸ்தான் ஸிந்தாபாத் அட் ஜே என் யு (பாகிஸ்தான் வாழ்க இது ஜே என் யு வின் முழக்கம் என்று கூறினார்) என்று இருந்தது.
ஜே.என்.யு.வில் நான் செய்தி சேகரிக்கும் போது, எனது நிலைய நிருபர் பவன் நெஹராவும் உடனிருந்தார்.அவரிடமும் நான் இந்த நிகழ்ச்சியை விரிவான செய்தியாக எழுதி ஞாயிறு அன்று சிறப்பு நிகழ்ச்சிக்காக கொடுக்க உள்ளேன் என்று கூறியிருந்தேன்.’’
விஷ்வ தீபக் செய்தித் தொடர்புத்துறை கல்வி நிறுவனமான (மிமிவிசி) அய் அய் எம் சி டில்லியில் பட்டம் வாங்கியவர், முதலில் மராட்டி நாளிதழான ஜன்சத்தா மற்றும் இந்தி ஆன்மீக நாளிதழ் சன்ஸ்கார் போன்ற இதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு நியூஸ் 24, ஆஜ் தக், நியூஸ் நேசன் மற்றும் பகுதி நேர செய்தியாளராக பிபிசி, இந்தி தூர்தர்ஷன் செய்தி பிரிவில் பணியாற்றியவர்.
டில்லியில் உள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு விஷ்வ தீபக் தான் மொபைலில் பதிவு செய்த காணொலியை கொடுத்துள்ளார். அதுதான் சமீபத்தில் வெளியானது. அதில் கன்னையா, பார்ப்பனீயத்தில் இருந்து விடுதலை, மனுதர்ம ஆட்சியில் இருந்து விடுதலை, காவிக் குண்டர்களின் கைக்கூலிகளிடமிருந்து விடுதலை, கார்ப்பரேட்டுக்ளின் அடிமைகளிடமிருந்து விடுதலை போன்ற முழக்கங்களை எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  (இதை விடுதலை ஞாயிறு மலரில் படங்களுடன் வெளியிட்டிருந்தது.)
கோஷங்களின் குரல் யாருடையது?
மிகப் பெரிய தில்லுமுல்லு!
பிப்ரவரி 10 ஆம் தேதி எனக்கு ஓய்வு நாள் ஆகும், ஆகவே அந்த நாளில் வேறு ஒரு தலைமை எடிட்டர் எனது காணொலியைப் பார்த்திருக்கிறார். இந்தக் காணொலியை மூன்று பகுதிகளாகப் பிரித்து தனியாக கோஷங்களை யாரையோ எழுப்பவைத்து உண்மையான காணொலியுடன் இணைத்துள்ளனர். இவ்வளவு முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் யார் இந்த விஷமத்தனத்தைச் செய்தது என்று எனக்குத் தெரியவில்லை. போலியான காணொலியில் இணைக்கப்பட்ட வாசகங்கள் மாணவர்கள் அமைப்பினர் பேசவில்லை. அந்த வாசகங்கள் அனைத்தும் வேறு இடத்தில் மிகச்சிலரைப் பேசவைத்து பதிவு செய்யப்பட்டது, இந்த காணொலியைப் பார்க்கும் வல்லுநர்களுக்கு மிகவும் எளிதாகப் புரியும்; அதே நேரத்தில் இந்தக் காணொலியை மிகக் கவனமாகக் கேட்டால் சின்ன குழந்தைக்குக் கூட போலியாக சேர்க்கப்பட்ட வாசகங்கள் என தெரிந்துவிடும்’’ என்று கூறினார்.
ஆக, ஆர்.எஸ்.எஸ். ஆரிய பார்ப்பனக் கூட்டம், தங்கள் ஆதிக்கத்தைக் கொண்டுவர கொலை, மோசடி, பித்தலாட்டம், அயோக்கியத்தனம், அடாவடித்தனம் என்று எதையும் செய்வார்கள் என்பதை இந்நிகழ்வுகள் காட்டுகின்றன. அவர்கள் சரியான இடத்தில்தான் கை வைத்துள்ளனர். மாணவர்கள் உணர்வு திரண்ட எழுச்சி சக்தி. அவர்கள் உண்மை தெரிந்து உணர்வு கொண்டு எழுந்துவிட்டனர். அந்த எழுச்சி ஆரிய ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கத்தை அழித்தே தீரும். அதற்கு மாணவர் தலைவர்கள் ஒன்றுகூடி, செயல்திட்டம் வகுத்து, மனித உரிமைக்கு எதிரான ஆதிக்கச் சக்திகளை அறவே வேர் பறித்து வீழ்த்தவேண்டும். மாணவர் எழுச்சி மகத்தான சக்தி!

No comments:

Post a Comment