அரசியல்

Saturday, August 29, 2015

தமிழ் வழிக்கல்வி குறைந்தது திராவிட ஆட்சியாலா?


எதற்கெடுத்தாலும் திராவிடக்கட்சி களைக் குறை சொல்லும் போக்கு இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறது! திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் குறைகளோ, மக்கள் எதிர்ச் செயல்களோ, ஊழலோ, மோசடிகளோ, கொலை, கொள்ளைகளோ இல்லை என்று வரிந்துக் கட்டிக்கொண்டு வாதம் செய்ய நாம் வரவில்லை.
காரணம், இவையெல்லாம் யார் ஆட்சிக்கு வந்தாலும் இப்போதுள்ள ஆட்சி அமைப்பில் நடந்தே தீரும். காரணம் ஊழலை மக்களே தொடங்கி வைக் கிறார்கள்.
பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப் பதும், இலவசம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதும் இருக்கும் வரை இவை யெல்லாம் இருக்கும். இவற்றிற்காக ஓர் ஆட்சியை, ஓர் அமைப்பைக் குறை சொல்ல வேண்டும் என்றாலும் எல்லாவற்றையும் சொல்லலாம். இதில் நான் உத்தமன் என்பதெல்லாம். உண்மைக்குப் புறம்பான ஏமாற்று வேலை!
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. ஓராண்டு ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது! ஆக, யாரும் விதி விலக்கல்ல இதுவே யதார்த்த நிலை. தேர்தலில் நின்று வென்று ஆட்சிக்குவர செலவே இல்லை என்ற நிலைவந்தால் இவை ஒழியும். இல்லையேல் ஒழிய வாய்ப்பே இல்லை.
எனவே, மக்கள் வாக்களிக்கும்போது பணம் வாங்காமல், நேர்மையானவர் களைத் தேர்ந்தெடுத்தால் இவற்றைக் குறைக்கலாம். வாக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் ஒதுக்கப்பட்டால் சீர்கேடுகள் பெரும்பாலும் குறையும்.
உண்மை நிலைகள் இப்படியிருக்க, அவற்றைக் கருதாமல், எதற்கெடுத்தாலும் திராவிடக்கட்சிகளே காரணம் என்பது உள்நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டு என்பதில் எந்த அய்யமும் இல்லை. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணச்சட்டம், அரசின் செயல்பாடுகள் தமிழில், தமிழ் எழுத்துச்சீர்திருத்தம், ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், குடிசைமாற்று வாரியம், கல்லூரிவரை இலவசக்கல்வி,
கண்ணொளி, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு, உயர்ஜாதி ஆதிக்க ஒழிப்பு, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகும் உரிமை, பெண்கள் சொத்துரிமை, செம்மொழி, தமிழ்ப்புத்தாண்டு, தமிழ்ப் பல்கலைக் கழகம், கணினித்துறை வளர்ச்சி,
புதிய தொழில்சாலைகள், மேம்பாலங்கள், வேளாண்மைக்கு இலவச மின்சாரம், பேருந்துகள் நாட்டுடைமை சமத்துவ புரங்கள் என்று எத்தனையோ எழுச்சி, வளர்ச்சி, கிளர்ச்சி இத்தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்டுள்ளன என்பதை உளச்சான்று உள்ள ஒருவரும் மறுக்க மாட்டார்கள்.
இவையெல்லாம் உண்மையாய் இருக்க, திராவிடக்கட்சி ஆட்சியை முடித்துவிட வேண்டும் என்று மும்முரமாக சில அரசியல் கட்சிகள் களம் இறங்க, தங்களுக்கு கையாள்கள் கிடைத்து விட்ட தெம்பில் பார்ப்பனர் களும் அவர்களின் பத்திரிகைகளும் திராவிட கட்சிகளுக்கு எதிராக அவதூறு பரப்புவதை,
திரிபு செய்வதைத் தொழிலாகக் கொண்டு தினந்தோறும் செயல் படுகின்றனர். பெயருக்குப் பின்னால் ஜாதி பெரியாரால் ஒழிக்கப் பட்டதால் தமிழர்கள் அடையாளம் இழந்து விட்டதாக தமிழ்த் தேசிய வாதிகள் கருதி, ஜாதியை போடுவதை தூண்டுகின்ற முயற்சியில் இறங்கியுள் ளனர்.
கேரளாவில், ஆந்திராவில், கர்நா டகாவில் உள்ளதுபோல் ஆண்களும் பெண்களும் ஜாதிபோட வேண்டும் என்று கூறும் பிற்போக்குச் சிந்தனையும் தலைக்காட்டுகிறது.  தமிழ்த்தேசியம் என்ற பெயரில் அரைவேக்காடுகள் தான் அதிகம் ஆர்ப்பரிக்கின்றன.
காவடி தூக்கலாமா? அலகு குத்தலாமா என்று அலைகிறார்கள்! இதுவெல்லாம் தமிழ் தேசியம் அமைக்குமா? தமிழ்த்தேசியம் அமைப்பதற்குரிய செயல்திட்டங்கள் எவரிடம் உள்ளது? எல்லாம் வெற்று முழக்கங்கள்! இல்லை, தமிழ்த்தேசியம் அமைக்க இயலும்,
அதற்கான செயல் திட்டம் எங்களிடம் உள்ளது என்று கூறுகின்றவர்கள் இருப்பின் அதை அறி வியுங்கள், விவாதிப்போம் சரியென்றால் ஒன்று சேர்ந்து முயல்வோம். அதைவிட்டு விட்டு ஒருவரையொருவர் குறைசொல்லி குத்திப் பேசி அலைவது ஒற்றுமையைச் சிதைக்கும், இன எதிரிக்கு வலுசேர்க்கும்!
முருகன் தமிழ்கடவுள் தமிழர்கள் ஏற்க வேண்டும் என்பது ஒருவாதம் கடவுளில் என்ன தமிழ்க் கடவுள் இங்கிலீஷ் கடவுள்! முருகன், வேலன் என்ப தெல்லாம் நிலத்தலைவர் வழிபாடு. அது எப்படி கடவுளாகும்?  படைவீரர் வழிபாடு - வீரன்வழிபாடு ஆனது போல இதுவும் ஆனது.
அதுசரி, இதை யெல்லாம் மீண்டும் புதுப்பித்தால் தமிழ்த் தேசியம் அமைந்துவிடுமா? செயல் திட்டம் இல்லாமல் உணர்வேற்றி உசுப்பிவிடுதல் மட்டுமே இங்கு செய் யப்படுகிறது. மலிவான விளம்பர வேட்கை, தலைமைத்தினவு  தீர்க்க மட்டுமே இவை பயன்படும்.
தமிழகப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி குறைந்து வருகிறது ஆங்கில வழிக்கல்வி அதிகரிக்கிறது. தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இது இன்றைய நிலை. இதற்குத் திராவிடக் கட்சிகள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி குதறியெடுக்கிறார்கள்.
தமிழ்வழிக்கல்வி குறைவதற்கு திராவிடக் கட்சிகள் எப்படிக் காரண மாகும்? இது காலத்தின் மாற்றம். மக்கள் நாட்டம். ஒருவர் பிள்ளை இப்படித் தான் படிக்க வைக்க வேண்டும் என்பதற்குச் சட்டம் இயற்ற முடியுமா? குழந்தைகளுக்கு மூன்று வயது முடிவ தற்குள் ஆங்கில வழியில் சேர்த்து விடவே விளிம்பு நிலை மக்கள் கூட விரும்புகின்றனர். வருவாய் குறைவு என்றாலும் கடன் வாங்கியாவது ஆங்கிலவழியில் சேர்க்கின்றனர்.
சிறுவயது முதலே என்பிள்ளை ஆங்கிலத்தில் படித்தால்தான் எதிர் காலத்தில் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதற்கு என்ன செய்யலாம்? தீர்வு சொல்லுங்கள்! அதைவிட்டு விட்டு கண்ணைமூடிக் கொண்டு காழ்ப்பின் வெளிப்பாட்டால் கருத்துகள் கூறுவது சரியாகுமா?
அய்ந்தாம் வகுப்புவரை தாய் மொழிவழிக்கல்வி கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரலாம். அதற்குப் பெற்றோர்களின் கடும் எதிர்ப்பைத் தீர்க்க வேண்டும். அதற்குமேல் ஆங்கில வழி தமிழ்வழி என்று பிரிந்து சென்று படிப்பதைத் தடுக்க முடியாது. காரணம், இன்றையச் சூழல் அப்படி. உயர் கல்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் அதற்குத் தீர்வு காணாமல் தமிழ்வழியில் கடைசிவரைச் செல்வது இயலாது.
தமிழ்நாட்டில் அரசு வேலை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே என்று ஒரு ஆணை போட லாம். அது தமிழ்வழியை ஊக்குவிக்கும். ஆனால், அரசின் வேலை எங்கு உள்ளது? எல்லாம் தனியார் மயம். கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம். அங்கு ஆங்கிலம் கோலோச்சுகிறது. ஆங்கிலத்தில் திறமையாக சரளமாகப் பேசத்தெரிய வேண்டும். பெரும்பாலான வேலைவாய்ப்பு இதைச் சார்ந்து இருக்கும்போது தமிழ்வழிப் படிப்பை பெற்றோர் எப்படி ஏற்பர்?
ஆக, இதுபோன்று அறிவு பூர்வமாய் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியவை பல இருக்கும் போது, குறை சொல்கின்றவர்கள் தீர்வுகளைத் திட்டங்களைத் தரவேண்டும். அதை ஆட்சியாளர் செய்யும்படிச் செய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு, திராவி டக்கட்சிகள் தான் கெடுத்து விட் டார்கள் நாங்கள் வந்தால் கிழித்து விடுவோம் என்பது பதவி அரிப்பின் பக்க விளைவேயன்றி வேறில்லை.
எனவே, தீர்வுடன் கூடிய செயல் திட்டங்களை வைத்துக் கொண்டு பேசவேண்டும். செயல்படுத்த அழுத்தங் கொடுக்க வேண்டும். அதுவே மக்க ளுக்காகப் போராடுவதற்கான அடை யாளம்! நேர்த்தி என்ற தமிழ்வார்த் தையை ஷிuஜீமீக்ஷீ என்ற ஆங்கில வார்த்தை விழுங்கிவிட்டது. கிராமத்தில் கடைக் கோடிப் பெண் கூட  ஷிuஜீமீக்ஷீ என்கிறார். இப்படி பல சொற்களை தமிழ் நாள்தோறும் இழந்து வருகிறது.
தமிழில் பெயர் வைத்த திராவிடக் கட்சிகளின் செயல்திட்டம் இப்போது, கேலிசெய்யப்படுகிறது. வடமொழிப் பெயர்களே சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது என்று கனிஷ்கா, நிவேதிதா, ஹர்ஷினி, ரூபினி, மகேஷ், சுரேஷ் என்று பெயர்கள் எல்லா தமிழர் வீட்டிலும் வைக்கப்படுகின்றன. தமிழ்ப்பற்றாளர் பேரக்குழந்தைகளுக்கே தமிழ் பெயர் சூட்ட முடியவில்லை. வற்புறுத்தினா லும் எடுபடவில்லை. மக்கள் விருப்பம், நாட்டம் மாறிச்செல்லும் நிலையில், இதற்கெல்லாம் சட்டம், ஆட்சி என்ன செய்ய முடியும்?
தீர்வு சொல்லுங்கள். சரியென்றால் அதற்காக ஒன்று சேர்ந்து போராடு வோம்! எப்பொழுதும் மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியவர்கள் அதைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பர். ஆனால், சுயநலம் விரும்பி, விளம்பரம், பரபரப்பு, தலைமைநாட்டம் கொண்டு செயல்படுகின்றவர்கள் அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டேயிருப்பர், செயல் செய்யமாட்டார்கள். இதுதான் இன்று தமிழகத்தில் நடக்கிறது.
உலகு ஒரு குடும்பம் என்று சுருங்கி வரும் நிலையில் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றைக்காப்பது என்பது கடினமான செயல் ஆகும்.
மக்களின் பேச்சுவழக்கு இருக்கும் வரை ஒரு மொழியை அழித்துவிட முடியாது. அழிந்துவிடும் என்பது வீண் அச்சம். ஆனால், இன்றைய இளைஞர் கள் நாளைய மக்கள். இவர்கள் எதை ஏற் கிறார்களோ அதுவே, நிலைக்கும். இளைஞர்கள் இதைத்தான் ஏற்கவேண் டும் என்று கட்டாயப்படுத்த இயலுமா?
தீர்வு என்ன?
மொழியைக் காக்க வேண்டுமானால், அனைத்தும் அரசுடைமையாக இருந் தால் மட்டுமே இயலும். தாய்மொழி யிலே உயர்கல்வி வரை படிக்க நூல்களைத் தயார் செய்து; எல்லோரும் தாய் மொழியில் படிக்க சட்டம் இயற்றி தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் சரளமாய் பேச சிறுவயது முதலே பயிற்சியளித்து கல்வித் திட்டத்தை கொண்டுவந்து, அனைத்து வேலை களும் அரசின் கையில் என்ற நிலை வந்தால் இதைச் சாதிக்க முடியும்.
மாறாக சந்தைப் பொருளாதாரத்தில், கார்ப் பரேட் கம்பெனி முதலாளிகளின் கையில் வேலைவாய்ப்பு இருந்தால், ஆங் கிலமே கோலோச்சும், தமிழ் தன்னிலை இழக்கும். மூலகாரணம் அறிந்து போராட வேண்டும், தீர்வுகாண வேண் டும். அதுவே அறிவுடைமை! மற்றபடி உணர்ச்சிப் பெருக்கில் முழங்குவதால் எந்தப் பயனும் வராது!
முதலில் தமிழன் ஜாதி, மதம் இவற்றால் பிரியாமல் ஒற்றுமையாய் இருந்தாலே பல சிக்கல்களை எளிதில் தீர்க்கலாம். நாம் நினைப்பதை அடைய அதுவே வழி!
மாறாக, தமிழ்த்தேசியம் பேசுகின் றவர்களே பத்துப்பிரிவாக பிரிந்து நின்று மோதினால் சாதிப்பது எப்படி? சிந்திக்க வேண்டுகிறோம்.
- மஞ்சை வசந்தன்

No comments:

Post a Comment