அரசியல்

Tuesday, August 29, 2017

இருமொழிக் கொள்கை: திராவிட இயக்கத்தின் தொலைநோக்கு

- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

விடுதலைக்குப் பிறகு, மொழியின் அடிப்படையில், முதன்முதலில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட மாநிலம் ஆந்திரா. 1953 அக்டோபர் 1ஆம் தேதி அந்த அறிவிப்பு வந்தது. எனினும் அது நடைமுறைக்கு வராததால், சாகும்வரை பட்டினிப்போர் நடத்தி, 1953 டிசம்பரில் உயிர் துறந்தார் பொட்டி ஸ்ரீ ராமுலு. அவருடைய உயிர்த் தியாகத்திற்குப் பிறகே அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது.      

ஆந்திராவில் தொடங்கிய போராட்ட நெருப்பு, நாடெங்கும் பரவியது. எனவே வேறு வழியின்றி, 1953 டிசம்பரில்,  பஸுல் அலி (Fazul Ali ) தலைமையில், மாநில சீரமைப்புக் குழு (State Reorganising Commission)  ஒன்று மத்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்தக் குழு தன் அறிக்கையை 1955இல் அரசிடம் கொடுத்தது. அவ்வறிக்கையில் காணப்படும் ஓர் இன்றியமையாச் செய்தி, “மொழி என்பது, அம்மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் வலிமையான ஒரு சாதனம்’’ என்பதாகும்.      

எண்ணங்களின் வாகனமாய் (Vehicle of Thought)  மட்டும் மொழியைக் கருதாமல், அம்மொழி பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் அதனைக் கருத வேண்டும் என்பதே மேலே உள்ள வரியின் சாரம். ஆனால் அந்தச் சாரமான பொருளை, இன்றுவரையில் இந்திய அரசு சரியான பொருளில் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அதனால்தான், மொழிச்சிக்கல் இந்தியாவில் தீராத ஒன்றாகவே இன்னும் உள்ளது.

இந்தியா விடுதலை பெற்ற நாளிலிருந்தே மொழிவழி மாநிலக் கோரிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் அதனை மத்திய அரசும், மத்திய அரசினால் நியமிக்கப்பெற்ற இரண்டு குழுக்களும் (Dar Committee and JVP Committee)  ஏற்கவில்லை. இறுதியாக நாடு முழுவதும் உருவான மக்கள் எழுச்சியால், புதிய குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுப் பரிந்துரையின் அடிப்படையில், 1956 நவம்பர் 1 முதல் இந்தியா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதே நிலைதான், ஆட்சி மொழிச் சிக்கலிலும் நீடிக்கின்றது. இரண்டு சிக்கல்களும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர் புடையவை. ஒன்று தீர்ந்துவிட்டது. இன்னொன்றோ,  மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது.

வெள்ளையர்கள் ஆண்ட காலத்திலேயே இந்தியாவின் மொழிச் சிக்கல் தொடங்கி விட்டது. 1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இந்துஸ்தானியும் ஆங்கிலமும்தான் இனிமேல் காங்கிரஸ் கட்சியின் மாநாடுகளில் பயன்படுத்தப்பட  வேண்டிய மொழிகள் என்று காந்தியார் அறிவித்தார். விடுதலை பெற்றபின், இந்துஸ்தானிக்குப் பதிலாக இந்தியை வடநாட்டினர் முன்வைத்தனர்.

அரசமைப்புச் சட்ட வடிவமைப்புக் குழுவின் முன்னால், தொடக்க நாளிலிருந்து, தீர்க்க முடியாத சிக்கலாக இருந்தது மொழிச் சிக்கல்தான். இருமொழிக் கொள்கை யிலிருந்து, காங்கிரஸ் ஒரு மொழிக் கொள்கையை நோக்கி நகர்ந்தது. ஆங்கிலமே கூடாது, இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழியாக அல்லது குறைந்தபட்சம் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று சேத் கோவிந்ததாஸ் போன்றவர்கள் வலியுறுத்தினர். ஆண்டுக் கணக்கில் நடந்த விவாதம், 1949 செப். 12, 13, 14 ஆகிய தேதிகளில் ஒரு முடிவுக்கு வந்தது.

அந்த முடிவின்படி, இந்தியாவிற்கு இன்றுவரையில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை. இந்தி அலுவல் மொழி என்றும், 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்றும் முடிவாயிற்று. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவின், 343 முதல் 351 வரையிலான விதிகள் இதனை உறுதிப்படுத்தின.

தமிழகம் இந்நிலையை ஏற்றுக் கொண்டிருந்தால், 1965 ஜனவரி 26 முதல் இந்தியாவில் இந்தி மட்டுமே அலுவல் மொழியாக இருந்திருக்கும். தமிழகத்தில் எழுந்த பெரும் போராட்டமும், எழுச்சியும் அதனைத் தடுத்து நிறுத்தி விட்டன. இன்றுவரை ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகத் தொடர்கிறது.

இதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே, இத்தீமையைக் கண்டறிந்து, எதிர்க்கப் புறப்பட்டவர்  தந்தை பெரியார் அவர்கள்தான். 1926, 27ஆம் ஆண்டுகளிலேயே, ராமர் என்கிற கடவுள் பெயராலும், இந்தி என்கிற மொழியாலும் நம் நாட்டிற்குப் பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று தொலைநோக்குப் பார்வையுடன்  சொன்னவர் அவர்.
முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1937இல் தமிழ்நாட்டில்தான் நடந்தது. அப்போராட்டத்தினால் அரசே நிலைகுத்திப் போயிற்று. பிறகு 1965இல் நடைபெற்ற மாபெரும் போராட்டம் இன்றுவரை மொழிச்சிக்கலிலிருந்து நம்மைக் காப்பாற்றி வருகிறது.

பெரியார் தமிழுக்கு எதிரானவர், ஆங்கிலத்தையே முன்மொழிந்தவர் என்பது போன்ற ஒரு பரப்புரை இன்றுவரையில் நடந்து வருகின்றது. தமிழையும், தமிழர்களையும் காப்பாற்றியவர் பெரியார்தான் என்பதைக் காலம் சொல்லும். அன்று ஆங்கிலத்தை அவர் தூக்கிப் பிடிக்காமல் இருந்திருந்தால், இன்று நாம் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆகியிருப்போம்.

ஆங்கிலம் அந்நிய மொழி இல்லையா, நம் நாட்டுமொழிகளில் ஒன்றான இந்தியை எதிர்க்கும் நீங்கள் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பது எந்த விதத்தில் சரியானது என்று சிலர் நம்மிடம் கேட்கின்றனர். ஆங்கிலம் மட்டுமில்லை, இந்தியும் நமக்கு அந்நிய மொழிதான். அது தவிர, நாம் தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தைக் கோரவில்லை. இந்திக்கு மாற்றாகத்தான் ஆங்கிலம் நீடிக்கட்டும் என்கிறோம். அதுவும் கூட, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் இத்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்கப்பட வேண்டும் என்பதே நம் கோரிக்கை. அது நிறைவேற்றப்படும் வரை, ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே நம் அழுத்தமான கருத்து.    

இந்தக் கருத்தை, பேரறிஞர் அண்ணா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1963 மே, 1965 மார்ச் என இருமுறை தன் உரைகளில் வலியுறுத்தி  உள்ளார்.  எனவே, நம் கோரிக்கை என்பது நமக்கானது மட்டுமன்று. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்குமானது. நம் நிலைப்பாடு, இன்று இந்தியா முழுவதும் பரவிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தொடங்கிய இந்தி எதிர்ப்பு, இன்று கர்நாடகாவில், கேரளாவில், ஒடிசாவில் பரவுகின்ற நிலையைப் பார்க்க முடிகிறது. எனவே திராவிட இயக்கம்  எடுத்த மொழிக்கொள்கை தொடர்பான நிலைப்பாடு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை உணரலாம்.

இரண்டுமே அந்நிய மொழிகள் என்றான பிறகு, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி நீடிப்பதால் என்ன தவறு என்றும் சிலர் கேட்கின்றனர். இரண்டுக்குமிடையில் ஒரு நுட்பமான வேறுபாடு உள்ளது. ஆங்கிலம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அந்நிய மொழி. அனால் இந்தியோ, நம்மில் பலருக்கு அந்நிய மொழி, .பி., மத்திய பிரதேசம், ஹரியானா போன்ற மாநில மக்களுக்குத் தாய்மொழி!  ஆதலால் நாளை போட்டித் தேர்வுகள் இந்தியில் நடத்தப்படுமானால், நாம் அந்நிய மொழியிலும், அவர்கள் தாய்மொழியிலும் தேர்வுகளை எழுத நேரும். அப்போது எப்படிச் சமநிலை உருவாகும்? நாடு முழுவதும் தமிழில் பொதுத் தேர்வுகள் நடைபெறுமானால், வங்க மாணவர்களோ, இந்தி மாணவர்களோ நம்மோடு போட்டி போட முடியுமா? அதே நிலைதான், இந்தியில் தேர்வு எழுதும்போது நமக்கு ஏற்படும். மேலும், ஆங்கிலம் உலக இணைப்பு மொழியாய் உள்ளதால் அதனைக் கற்பதன் பயன் மிக அதிகம்!     

இவைகளையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்துதான், திராவிட  இயக்கம், இந்தியைத் தடுத்து, ஆங்கிலத்தை நிலை நிறுத்தியது. அதனால்தான், உலகம் முழுவதும், இன்று நம் தமிழ்ப்பிள்ளைகள் கணிப்பொறி உலகில் சிறந்து விளங்கு கின்றனர். ஆங்கிலத்தைப் புறக்கணித்து, இந்தியை மட்டுமே கற்ற வடநாட்டுப் பிள்ளைகள், கூலி வேலை தேடித் தமிழகம் வருகின்றனர்.

இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கையன்று. இருமொழிக் கொள்கையே இன்றையச் சூழலில் நம் நாட்டிற்கு ஏற்ற கொள்கை!

No comments:

Post a Comment