அரசியல்

Saturday, July 25, 2015

தினகரன் முகநூல் மூக்கை உடைத்த முகநூலாளர்கள்

வாகனங்களுக்கு முன்னால் வறமிளகாய், எலுமிச்சம்பழம் கட்டுவது அறிவியலா?

தினகரன் முகநூல் மூக்கை உடைத்த முகநூலாளர்கள்



எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா  (Cidronic amilga)  என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid)  என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட்  (Methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid)   என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பார்த்துக்கொள்கிறது.

இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..! விஞ்ஞான அடிப்படையில்தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!

நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!

இதற்கு முகநூலில் நமது இளைஞர்களும் சிந்தனையாளர்களும் கூறிய கருத்தை கட்டாயம் படியுங்கள்.

அத்தனையும் சிந்திக்க, சிரிக்க, உண்மை உணர உதவும்.

அய்ட்ரிஷ் கா.: எலுமிச்சை பழத்தை இந்த பதிவை போட்டவரின் மண்டையில் தேய்த்தால் அவருக்கு பிடித்துள்ள பைத்தியம் நீங்கும்..

ராதாகிருஷ்ணன் சுந்தர் : அந்தக் காலத்தில் ஏதுடா டீசல் வண்டியெல்லாம் _ இதில் முன்னோர் எப்படி சொல்லியிருப்பார்கள். காசா? பணமா? சும்மா அடுச்சிவிடுங்கடா.

முகம்மது ஹாஜி: அதை வண்டியில் கட்டுவதைவிட ஓட்டுநரின் கழுத்தில் கட்டுங்கள். ஓட்டுநர் தூங்கவே மாட்டார்.

அய்சக் ஞானராஜ்: அப்போ... தூக்கத்துல நடைமேடை  (Platform) மேல வண்டிய ஏத்தி சாவடிச்சவனெல்லாம் எலுமிச்சை பழத்துக்கு பதிலா கொய்யா பழத்த வச்சிருப்பானோ? ரூம் போட்டு யோசிப்பாங்களோ....

சிவக்குமார் கலியபெருமாள்:  வெளிநாடுகளில் கார் விபத்து மிகவும் குறைவு ஏன்? அதற்கு எலுமிச்சை பழம், மிளகாய் காரணம் கிடையாது. சாலை விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. காருக்கு முன்னால் எந்தப் பழம் கட்டியிருந்தாலும் சாலை விதிகள் சரியில்லை எனில் சங்குதான்...

முத்துராஜ் ஜானி:  இப்படி சொல்லியே ஏமாத்திக்கொள்ள வேண்டியதுதான். அந்த காலத்துல ஏதுடா இப்பொ உள்ள மாதிரி மோட்டார் வாகனம். காதுல பூ சுத்திட்டு அதுக்கும் ஒரு வியாக்கியானம் சொல்ல பலரும் அதற்கு ஒத்துக் கொள்ள பலர் உண்டு.

ஜமால் முகம்மது:  மிளகாய் போட்டுதான் தயிர் சாதம் செய்ரோம். தொட்டுக்க எலுமிச்சம் பழம் ஊறுகா சாப்ட்ரோம். தூக்கம் பயங்கரமா வரும். 

அல்ஜாஸ்மின் பாபு உசேன் ஜமால்:  இதை மத நம்பிக்கை அடிப்படையில் செய்வதை நாம் விமர்சிக்கக் கூடாது. ஆனால் முன்னோர்கள் விஞ்ஞானம் என்று அள்ளிவிடுவதை ஏற்க முடியாது. காரை நம் முன்னோர்கள் கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் மாட்டு வண்டியில் இதே எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டி வண்டி ஓட்டியவர்கள். மாட்டு வண்டியில் இஞ்சின் எங்கே இருந்தது?

தமீம் அன்சாரி அப்துல் கறீம்: ஹா ஹா ஹா... என்னமா யோசிச்சிருக்கானுங்கையா. இத நெனச்சி சிரிக்குறதா இல்ல வருத்தபட்றதா...???

லூசு பயளுகளா பத்திரிகையோட கடமை உணர்ச்சின்னு ஒன்னு இருந்தாதானடா நீங்கல்லாம் உண்மைய பேசுவீங்க. உங்களை சொல்லியும் தப்பில்ல உங்களையெல்லாம் இன்னும் நம்ம மக்கள் நம்புறாங்கள்ல இதுவும் சொல்வீங்க வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கிட்டுத்தான் இருப்பிங்க...

ஓகே இது உண்மையா இருக்கட்டும். இது எந்த நாட்டுல நடத்துன ஆராய்ச்சி..??? எப்ப நடந்தது..???இந்த ஆதாரமாவது நீங்க சொல்லுவீங்களா..????

வாகனத்துல தொங்க விட்டதுக்கு நீங்க அள்ளி விட்டுட்டீங்க சரி, அப்போ வீட்டுல கடை-ஙல்ல தொங்க விட்ருக்காங்கள்ளே அது எதுக்கு...????

உங்க பீலாவுக்கு ஒரு வரைமுறை வச்சிக்கோங்கடா. அளவுக்கு மீறுன கற்பனையா இருக்கு...  

ஜோசப்  எம்.வி. :  இப்படிச் சொல்லியே இன்னும் மனுசன முட்டாளாக்குங்கடா?

முகம்மது ஹாஜி:  எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga)  என்னும் அமிலமானது பிரேக் ஆயிலை வற்றாமல் பாத்துக்கொள்கிறது.

அப்போ நெல்லிகாயை டீசல் டேங்கில் போடுங்கள். டீசல் வெளியாகிற குழாயை அடைத்து டீசல் வற்றாமல் பார்த்துக்கொள்ளும்.

கண்ணன் ஜீசஸ்: வண்டிக்கு கீழே கட்டி வச்சா? வாயு டிரைவருக்கு எப்படி கிடைக்கும்?

ஷாய்க் தம்பி: மாட்டிடம் பாலை கறந்து கல்லுக்கும் மண்ணுக்கும் கொட்டிவிட்டு மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் குறைமதியாளர்கள் இருக்கும் நம் நாட்டில் இன்னும் என்ன எழவெல்லாம் நடக்கப்போகுதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரான்சிஸ் ராஜா:  ஹாஹாஹா டே கூமுட்டை மரமண்டைகளா! என்னே உங்க அதீத அறிவு. இதல்லாம் கட்ற இந்தியாலதான் அதிக விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறதாம்.

டேனியல் ராஜா: இதை கண்டுபுடுச்ச விஞ்ஞானி யாருப்பா... எதை போட்டாலும் ஆட்டு மந்தை மாதிரி நம்புறதுக்குனு ஒரு கூட்டம்.

புருனோ என்னாரெஸ்: கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுவானுங்கலாம்! மோட்டார் வாகனங்களை கண்டுபிடித்த வெளிநாடுகளில் மிளகாயும், எலுமிச்சையும் கட்டுவதே இல்லையே, அங்கே மிகக்குறைவாகவே விபத்துகள் நடக்கின்றன. ஆனால் இந்த இரண்டையும் கட்டும் இந்தியாவில்தான் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன! முதலில் இது போன்ற உணவுப்பொருட்களை வீணடிப்பதை பொறுப்புள்ள ஊடகமாக கண்டியுங்கள், இது போன்ற மூட நம்பிக்கைகளை பரப்புவதுதான் தினகரனின் தலையாய பணியாக இருக்குமோ என்னவோ! 

 ஜாகீருசேன் அகமது எஸ்ஸா : இவர்களை எல்லாம ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

எஸ்எம்ஜேஎம் எஸ்எம்ஜேஎம்: எலுமிச்சம் பழத்தை டயருக்கடில விட்டு நசுக்கி நாறடிப்பாங்களே! அதை இந்த பீலா வுடுற கதையில காணாம். ஒரு லெமன் ஒரு வரமிளாயாயில ஒரு வாயு பேக்டரியே இருக்குன்னு அற்புதமான கதை. ஆனால் பாவம். இதையும் இன்னும் நம்புறாங்க பாரு!

முகமது இக்பால்: ஓட்டுநர்களுக்கு சரியான ஓய்வு கொடுத்தால் போதும். ஓட்டுநர்களுக்கு தூக்கம் வராதாம். பிரேக் ஆயில் வற்றதாம், என்ன ஒரு மூடநம்பிக்கை.

தினகரன் முகநூல் கருத்தும் அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவு செய்த கருத்துக்களையும் இதுவரைப் பார்த்தோம்.

 இதிலே ஓரளவு உங்களுக்கு உண்மைத் துலங்கியிருக்கும். என்றாலும் முறையான விளக்கத்தை இனிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

இங்கு சில முதன்மையான கருத்துகளை சிந்திக்க எடுத்துக் கொண்டோம் என்றால் உண்மை பளிச்சிடும்.

1. எலுமிச்சைப் பழம், மிளகாய் இரண்டும் இரசாயன மாற்றம் அடையும் வகையில் ஒன்று சேர்த்து பிய்த்து கசக்கி சாறு சொட்ட யாரும் கட்டுவதில்லை. எனவே, அங்கு இரசாயன விளைவு ஏற்பட்டு மிதீரியட் வாயு வெளியாவதில்லை.

2. வெள்ளிக்கிழமை படையல் என்பது வாகனத்துக்கு மட்டுமல்ல. எல்லா காரியங்களுக்கும் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை நடக்கிறது. இது தொடர்புப்படுத்திக் கொள்ளும் புத்தியால் கூறப்படும் கருத்து. எனவே, மிதீரியட் வாயு ஒரு வாரம் இருக்கும் என்று தெரிந்து செய்த செயல் அல்ல இது.

3. இதைக் கட்டியதால் வாகன ஓட்டி தூங்காமல் இருந்ததில்லை. பிரேக் ஆயில் வற்றாமல் இருந்ததும் இல்லை. வாகன ஓட்டிகளைக் கேட்டால் இந்த உண்மையை உச்சந்தலையில் அடித்துச் சொல்வர்.

மேற்கண்ட மூன்றையும் நன்கு சிந்தித்தால் இக்கருத்து பொருத்திப் புனையப்பட்ட, வலிந்து காரணம் கற்பிக்கும் முயற்சி என்பதைக் காட்டும். காரில், வாகனங்களில் கருப்புக் கயிறு கட்டுகிறார்களே அது எதற்கு அதிலும் ஏதாவது அறிவியல் இருக்கிறதா?

இங்கு ஒரு கருத்தை மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும். அக்காலத்தில் மாட்டு வண்டிதான். எஞ்சின் இல்லை. அதில் எலுமிச்சை, மிளகாய் கட்டினார்கள். அங்கு எந்த அறிவியல் வேலை செய்கிறது? முன்னோர் கார்களுக்கு கட்டவில்லை. மாட்டுவண்டிகளுக்குத்தான் கட்டினார்கள். எனவே செயலும் தவறு. அதற்குக் காரணம் கற்பிப்பதும் தவறு.

ஏதாவது பரபரப்புச் செய்தி வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்வது மக்களை மேலும் மடையராக்கும் முயற்சியாகும்.

சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை காவு கொடுக்கிறான். அதற்கு என்ன அறிவியல் காரணம்?

பூசணிக்காயை நடுரோட்டில் போட்டு உடைக்கிறான். அதனால்தான் சாலையில் விபத்துகளே ஏற்படுகின்றன. இதற்கும் ஏதாவது அறிவியல் உண்டா?

எனவே, இதுபோன்ற விளக்கங்களைக் கூறி முட்டாள் தனத்திற்கு, மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பதற்குப் பதில் நல்ல அறிவியல் சிந்தனைகளை, விழிப்புணர்வைக் கொடுப்பதுதான் பெரியாரின் வெளிச்சத்தில் பெரிதும் பயன்அடைந்த பரம்பரையினர்க்கு அழகு!

- மஞ்சை வசந்தன்
____

2 comments:

  1. Am Dr. M. K. Dhinakaran, Ph.D., holder in chemistry, now working in china as a researcher, i never hear these chemical words, I have also searched in scifinder an online database for chemical, no entry was there in these chemical name. There a set of people who are well educated and give scientific reasons for their superstitious activity and make these as true. There was evidences for these stupidity.

    ReplyDelete
  2. பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்தும் குறுமதியாளர்கள்

    ReplyDelete