அரசியல்

Friday, January 6, 2017

அர்த்தமற்றச் சடங்குகள் என்பது அர்த்தம் புரியாமையாலா?


- மஞ்சை வசந்தன்

பார்ப்பனர்கள் எதை விட்டாலும் விடுவார்கள். சடங்குகளை மட்டும் விடமாட்டார்கள். காரணம், அவர்களின் உயர்விற்கும், வாழ்விற்கும் உயிர்மூச்சாக நிற்கும் மதம், சாஸ்திரம் இவைகளை நிலைநிறுத்திக் காப்பரணாக இருப்பவை சடங்குகள்.

தீபாவளி தத்துவம் புரிந்து கொண்டாடுவதால் தீபாவளி தலைமுறை தலைமுறையாய் நிலைக்கவில்லை. மாறாக, தீபாவளிச் சடங்குகளான புத்தாடை, பட்டாசு, மத்தாப்பு, பலகாரம்தான் அந்த விழாவை விழாமல் ஆண்டாண்டு காலமாய் நிலைநிறுத்தி வருகிறது. இச்சூட்சுமம் புரிந்துதான் சடங்குகளை அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கிறார்கள்!

அவாளின் அறிவிக்கப்படாத தலைமையகமாகச் செயல்படக்கூடியஹிந்துபத்திரிகை, தொடர்ந்து அப்பணியைச் செய்து வருகிறது, அவாள் நலன் காக்கப்படுவதற்காக. இதற்காக, சந்தடிசாக்கில், இண்டு இடுக்கில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சடங்குகளைக் காப்பாற்ற முயற்சிப்பார்கள்.

அந்த அடிப்படையில் 02.01.2017 தேதியிட்ட தமிழ் இந்து’’ நாளிதழில் 12ஆம் பக்கத்தில் மெட்ராஸ் அந்த மெட்ராஸ்’’ என்ற பகுதியில், “எல்லைக்கப்பால் நடந்த திருமணங்கள்’’ என்ற தலைப்பில் எஸ்.முத்தையா என்பவர் அயல்நாட்டவர். இந்தியாவில் திருமணம் செய்துகொள்வது பற்றி எழுதியுள்ளார். அதில் அவர்,

17 ஆண்டுகளுக்கு முன் ஓர் திருமணம்... மணப்பெண் யூகோஸ்லாவியா. தங்கச் சரிகைப் பட்டுப் புடவையைக் கூறைச் சேலையாக அணிந்திருந்தது மிகப் பாந்தமாக இருந்தது. தென்னிந்திய அணிகலன்கள் அணிந்திருந்தார். வெளிநாட்டு மணமகனுக்கு பட்டுவேட்டி. ஆனால், இடுப்பில் நிற்கவில்லை.
ஆரிய சமாஜ் புரோகிதர். புரோகிதம் இவருக்கு பகுதிநேரப் பணியாம்-.(Part Time Job) திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்கு முன், சடங்கின் பெயர், ஏன் செய்கிறார்கள்? என்ற மணமக்களுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் நகைச்சுவை கலந்து விளக்கினாராம் என்று கூறும் முத்தையா, அடைப்புக் குறிக்குள் (அர்த்தமற்ற சடங்குகள் என்று பலர் கருதுவதற்குக் காரணம் அர்த்தம் தெரியாததால் அல்லவா?) என்கிறார்.

எனவே, திருமணச் சடங்குகள் அர்த்தமுள்ளவையா? என்று ஆராயவேண்டிய அவசியத்தை அவர் ஏற்படுத்திவிட்டார்.

திருமணச் சடங்குகள்:

அக்னி வளர்த்தல் அர்த்தம் உடையதா?

சாஸ்திரப்படியான திருமணத்தின்போது அக்னி வளர்ப்பதுதான் முதன்மைச் சடங்கு. இது ஏன்? இதற்கு என்ன அர்த்தம்?

அக்னி சாட்சியாக திருமணம் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக’’ என்பதே அதன் அர்த்தம், அதற்கான காரணம் என்கின்றனர்.

சுள்ளிக் கட்டையை வைத்து, அதில் நெருப்பு வைத்து எரியச் செய்து, தொடர்ந்து எரிய, பருப்பில் ஊற்ற வேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றி, தீ வளர்த்தால் அது எப்படி சாட்சியாகும்?

அதற்குக் கண் இருக்கிறதா திருமண நிகழ்வைப் பார்க்க?

காது இருக்கிறதா அங்குச் சொல்லப்படுபவற்றைக் கேட்க?

நாளைக்கு கோர்ட்டில் இத்திருமணம் பற்றி வழக்கு வந்தால், இந்த அக்னி கூண்டில் நின்று சாட்சி சொல்லுமா? அக்னிக்கு வாய் இருக்கிறதா?

அக்னி கோர்ட்டுக்கு வந்தால் கோர்ட் தீ பிடிக்காதா? தீயணைப்பு இஞ்சின் அல்லவா அதற்கு எதிராய் வந்து நின்று, வருணப் பகவானை அனுப்பும்? அதன்பின் அக்னி பகவானுக்கும், வருண பகவானுக்கும் அல்லவா அங்கு போர் நடக்கும்?

சாட்சி சொல்ல வந்த அக்னியை வருணபகவான் அழித்து விடுவானே! அதன்பின் சாட்சி சொல்லவே ஆள் இருக்காதே! என்னங்க முத்தையா? இந்த அர்த்தம் புரியாமல்தான் சடங்குகளை எதிர்க்கிறார்கள் என்கிறீரா?

திருமண மந்திரம்: சாஸ்திரப்படியான திருமணத்தில் மந்திரம் முக்கியம். அந்த மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா முத்தையா?

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித:/ த்ருத்யோ அக் நிஷ்டே பதி: துரீயஸ்த மனுஷ்யஜா:

பொருள்: ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன்தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்
: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத்தான் இப்பொழுது கலியாணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டுவிட்ட பின்புதான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக்கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத்தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும்பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஹேத்வா /அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாவசு என்னும் கந்தர்வனே, இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத்தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே / அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்
:
இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கித் துதித்துக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்
: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால், அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக்கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

அதாவது கலியாணமான அந்த மணப்பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்துகொண்ட இந்த மணமகன், தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

(ஆதாரம்: விவாஹ மந்த்ரார்த்த போதினி
ஆக்கியோன்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி..எல்.,
பக்கங்கள்: முறையே 22,59.)

இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு இருக்க முடியுமா?

பூணூல் சடங்கு: மாப்பிள்ளைக்கு பூணூல் மாட்டுகிறீர்களே அது எதற்கு? அதன் பொருள் என்ன? பூணூல் அணிய பிராமணனைத் தவிர மற்றவர்களுக்கு உரிமையுண்டா? அயல்நாட்டுக்காரன் பூணூல் அணிய சாஸ்திரத்தில், சடங்கில் இடம் உண்டா?

பூணூலின் அர்த்தம் என்ன தெரியுமா?

கோவணக் கயிறுதான் பின்னால் பூணூல் கயிறு ஆனது! ஆச்சரியமாக இருக்கிறதா? அல்லது அபத்தமாக, அசிங்கமாக இருக்கிறதா? எல்லாத்துக்கும் அர்த்தம் சொன்னா இன்னும் அசிங்கமாய் இருக்கும்.

பூணூலுக்கு அர்த்தம் விவேகாநந்தர் சொல்கிறார் பாருங்கள்.
கோவணக்கயிறு பூனூலான கதை!

"குருவானவர் தன் சிஷ்யனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்கு தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரியாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக் கொள்ளுவான். அதுவே பூணூலாக பின்னாளில் ஆனது." 

குத்து விளக்கு: பட்டப்பகலில், பளிச்சென்று மின் விளக்குகள் எரிய, குத்துவிளக்கு, நாத்தி விளக்கு என்று ஏற்றிவைப்பதற்கு என்ன பொருள்? இதைவிட முட்டாள்தனம் வேறு உண்டா?

அந்த விளக்கு அணைந்து அபசகுனம் ஆகிவிடக் கூடாது என்பதற்கு காத்தாடி (Fan)  கூடப் போடாமல், புரோகிதன் கிளப்பிய புகைப் புழுக்கம் போதாது என்று இப்படியும் புழுங்கி வேகச் செய்கிறீர்களே இதுதான் உங்கள் அர்த்தமுள்ள சடங்குகளா?

கூறைப்புடவை என்பது பட்டுப்புடவையா?

சடங்குகளுக்கு அர்த்தம் கற்பித்து வக்காலத்து வாங்கும் முத்தையா அவர்களே கூறைப்புடவை பருத்தி நூலால் அல்லவா இருக்க வேண்டும். பட்டுப் புடவை சாஸ்திர விரோதமல்லவா?

அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

கற்பு கெட்ட அகலிகைபோல் வாழாதே கற்பில் சிறந்த அருந்ததிபோல் வாழ் என்று இந்தச் சடங்குக்கு அர்த்தம் சொல்கிறீர்கள்?

சரி. மணப்பெண்ணுக்கு கற்பாய் இருக்க இவற்றைச் செய்கிறீர்கள். மணமகனுக்கு கற்பைப் போதிக்க என்ன சடங்கு வைத்திருக்கிறீர்? அவன் எங்கு வேண்டுமானாலும் மேயலாமா? பாயலாமா? இதுதான் உங்கள் அர்த்தமுள்ள சடங்கின் நீதியா? அது சரி, பகலில் அருந்ததி தெரியுமா? ஒருவேளை முத்தையாக்களுக்குத் தெரியும்போலும்!

இந்து மதச் சடங்குகளை கிறித்தவர்களுக்கும், அயல்நாட்டார்களுக்கும் செய்ய உங்கள் சாஸ்திரத்தில் இடம் உண்டா? இது எந்த அர்த்தத்தில் சேர்ந்தது?

இந்தச் சடங்குகளின் அர்த்தத்தை புரோகிதர் ஆங்கிலத்தில் சொல்ல அயல்நாட்டு தம்பதிகள் சிரித்தார்களாம்.

இப்படிப்பட்ட பைத்தியக்கார செயல்களைப் பார்த்து சிரிக்காமல் வேறு என்ன செய்வார்கள்?

மதத்தை விட்டு, ஜாதியை விட்டு, இனத்தை விட்டு, நாட்டை விட்டு மனிதன் என்ற பார்வையில் மணம் புரிகின்றவர்களுக்குச் சடங்கு செய்வது அக்ரமம் என்ற குற்ற உணர்ச்சி உங்களுக்கு வரவில்லையா?

திருமணம் முடிந்த அன்றே சன்னியாசம்:

திரு.முத்தையா அவர்களே உங்கள் அர்த்தமுள்ள சடங்கின்கிளைமேக்ஸ்’’ என்ன தெரியுமா? திருமணம் முடிந்த அன்றே சன்னியாசம்’’ போவதுதான். இதைவிட பித்துக்கொள்ளித்தனம் (கிறுக்குத்தனம்) வேறு உண்டா?
இந்த அபத்தங்களுக்கு அர்த்தம் கற்பிக்க சில ஆள்கள்! அதை வெளியிட சில தாள்கள்! அபத்தம்! அபத்தம்!!


No comments:

Post a Comment