அரசியல்

Thursday, January 5, 2017

ஒன் இண்டியாவிற்கு ஒரு கேள்வி அயோக்கியத்தனமாக பதிவிடுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?


- மஞ்சை வசந்தன்
திராவிட இயக்கங்களின் தாய்க் கழகம் திராவிடர் கழகம். அது ஒவ்வொரு அரசியல் சூழலிலும் தன் கடமையை மிகச் சரியாக செய்து வந்துள்ளது.
திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கே அறிவுநுட்பம் வேண்டும். மதிகெட்ட ஆட்களெல்லாம் “மதி’’ என்று பெயர் சூட்டிக் கொண்டு மனம் போன போக்கில் எழுதுவது மானங்கெட்ட செயலாகும்.
“ஸ்டாலின் கொளத்தூர் மணி வியூகம்’’ என்பதே முதலில் தப்பு. இப்படி எழுதிய மதிக்கோ அதைப் பதிவு செய்த ஒன் இண்டியாவிற்கோ அறவே அரசியல் அறிவும், முழுத் தெளிவும், பலவற்றைப் படிக்கும் தேடலும் அறவே இல்லை என்பதை இப்பதிவு காட்டுகிறது.
கொளத்தூர் மணி கூறியது என்ன?
“குமுதம் ரிப்போர்ட்டர்’’ கொளத்தூர் மணியின் கருத்தை வெளியிட்டிருந்தது. “திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், சசிகலா அ.தி.மு.க.
பொதுச்செயலாளராக வந்து, அக்கட்சி சிதறாது காக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்ததில் எனக்கும் உடன்பாடுதான்’’ என்று கொளத்தூர் மணி கூறியிருந்தார்.
அப்படியென்றால் என்ன பொருள்? இக்கருத்தில் இருவரும் ஒரே திசையில் செல்கிறார்கள் என்பதுதானே. உண்மை இப்படியிருக்க அது தெரியாமல், பெரியார் திடலுக்கு வந்து நாலு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, மனம்போன போக்கில் எதையாவது உளறுவது ஓர் அரசியல் நோக்கருக்கும், ஒரு ஊடகத்திற்கும் அழகா? இதைவிட கேவலம் இருக்க முடியுமா? கீழ்த்தரம் வேறு உண்டா?
அது மட்டுமல்ல, திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும் என்று கவிஞர் அறிவுமதி வேண்டுகோள் வைத்தபோது, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அதேமேடையில் அப்போதே என்ன சொன்னார் தெரியுமா?
“எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஒன்றிணைந்தும் செயல்படலாம்; அல்லது தனி அமைப்பாக இருந்துகொண்டே ஒன்றுசேர்ந்து போராடலாம்’’ என்று பதில் கொடுத்தார்.
அந்த அடிப்படையில் பிரிந்து சென்றவர்கள் எந்த வெறுப்புணர்வும் இன்றி பொறுப்போடு அவரவர்களால் முடிந்த அளவு பெரியார் கொள்கையை வென்றெடுக்க போராடுகிறார்கள். இந்த நல்லிணக்கம் பிடிக்காத சில நரிகள் இதுபோல் பிரித்து வெறுப்பேற்ற முயற்சிக்கிறார்கள். அவர்கள் மூக்குடைபட்டு போவார்களேயன்றி பெரியார் தொண்டர்கள் பலியாக மாட்டார்கள்.
தி.க. நிலைப்பாடு மாறியதாகச் சொல்வது அசல் மோசடிப் பிரச்சாரம்
தி.மு.க.வை விட்டு விலகி, சசிகலாவை, அ.தி.மு.க.வை ஆதரிப்பதாக ஒன் இண்டியா கூறியுள்ளது மோசடிப் பிரச்சாரம்.
அ.தி.மு.க. ஒற்றுமையாய் வலுவாய் இருக்க வேண்டும். பி.ஜே.பி.யின் சூழ்ச்சிப் பொறியில் சிதைந்து போகக் கூடாது என்று வழிகாட்டி வலுப்படுத்தினால், அது தி.மு.க. எதிர் நிலையா?
ஒரு தாய்க்கழகம் செய்ய வேண்டிய பணியை தி.க. செய்துள்ளது. இதில் என்ன மாற்றம் வந்துவிட்டது?
“தி.க.வின் கொள்கைகளுக்கு ஒத்துப் போகக் கூடிய இயக்கம் தி.மு.க.தான்’’ என்று தி.க. தலைவர் வெளிப்படையாகவே விகடனுக்குப் பேட்டியளித்தது இந்த வெட்கங்கெட்ட மதிக்கோ, ஒன் இண்டியாவுக்கோ தெரியாதா?
அ.தி.மு.க. வலுவோடு இருக்க வேண்டும் என்று கூறிய அதேநிலையில், தி.மு.க.தான் எங்களுக்கு உகந்த கட்சி என்று கூறியதை மறைப்பது அயோக்கியத் தனமல்லவா? தி.மு.க.வைத்தான் நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதுதானே அதற்குப் பொருள்?
ஸ்டாலினிடம் வீரமணி சரண்டரா?
கலைஞர் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்தபோது அவரையே எதிர்த்து அரசியல் செயல்பாட்டையும், இயக்கச் செயல்பாட்டையும் செய்தவர் தி.க. தலைவர் வீரமணி அவர்கள். ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவைப் பகைத்துக் கொண்டு, தி.மு.க.வை ஆதரித்தவர். அப்படிப்பட்டவர், கோவை இராமகிருஷ்ணனையும், கொளத்தூர் மணியையும் கூட்டத்தில் பேச தி-.மு.க. அழைத்ததால், அதிர்ந்து, அஞ்சி சரண்டர் ஆகிவிடுவாரா?
இப்படி எழுத கேவலமாக இல்லை! கை கூசவில்லை! இதைவிட வேடிக்கையான விமர்சனம் உண்டா?
தி.மு-.க. இரண்டாம் நிலை தலைவர்கள் தி.க.வின் அணுகுமுறையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம். ஏன் வெறுப்புகூட அடைந்திருக்கலாம். ஆனால், தி.க.வின் நிலைப்பாட்டைக் கூர்ந்து, ஆய்ந்து அறிந்த பின் அவர்களே உண்மையைப் புரிந்துகொண்டனர். அதன் அடையாளம்தான் கலைஞர் தொலைக்காட்சி, ஸ்டாலின் செயல்தலைவர் பொறுப்பேற்றதும் தி.க. தலைவரைத் திடலுக்குத் தேடி வந்து பேட்டி கண்டது. ஆசிரியரின் பாசம் கசியும் வாழ்த்தை கலைஞர் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது.
அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், மாலை ஸ்டாலின் திடலுக்கு வந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது. ஆசிரியர் அவரை அன்புடன் வரவேற்றது. அதன்பின் இருவரும் மனம்விட்டு பேசிக்கொண்டது!
இதில் சரண்டர் எங்கே வந்தது? குழைந்து குறுக வேண்டியது எங்கே வந்தது?
எந்த இடத்திலும் யாரிடமும் குழைந்து குறுகாத ஒரே தலைவர் தி.க. தலைவர் கி.வீரமணி. இதை கலைஞரே கூறியுள்ளார். ஸ்டாலினும் நன்கறிவார்.
தி.மு.க.வின் ஆதரவு என்பது வேறு. அ.தி.மு.க.வை அழித்து பா.ஜ.க. வளருவதைத் தடுப்பது என்பது வேறு. இதைப் புரிந்துகொள்ளாத மண்டூகங்கள், மனதில் பட்டவாறு எழுதுவது கண்டிக்கத்தக்கது. கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் மீது குரோதமும் இல்லை. அவர்கள் ஸ்டாலினை சந்திப்பதால் அதிர்ச்சியும், அச்சமும் அடைய வேண்டிய அவசியமும் தி.க.வுக்கு இல்லை.
தி.மு.க.விற்கும் தி.க.விற்கும் இடையே விரோதத்தை வளர்த்து வேடிக்கை பார்க்க நினைத்தவர்களின் வேதனை, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதான் இதுபோன்ற கீழ்த்தரப் பதிவுகள், விமர்சனங்கள்.
தி.க., தி.மு.க. நல்லுறவு என்பதும், அ.தி.மு.க.வை பி.ஜே.பி.யிடம் இருந்து காப்பது என்பதும் தி.க.வின் தாய்நிலைக் கடமைகள்!
அதை அது மிகச் சரியாகச் செய்கிறது; என்றைக்கும் செய்யும்!
திராவிடர் கழகம் பதவிக்கு அலையும் கட்சியல்ல. எனவே, அது என்றைக்கும் குழைந்து குறுக வேண்டியது அவசியம் இல்லை.
தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் ஸ்டாலின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும், மிசா காலத்திலே உலகம் அறிந்தவை. அழகிரியைப் பகைத்துக் கொண்டு ஸ்டாலினை ஆதரித்தார் தி.க. தலைவர். அவர்கள் பாசத்தை வேசம் என்பது அற்பத்தனம்!
அயோக்கியத்தனம்!
ஊடகங்களும், எழுத்தாளர்களும் மக்களை நெறிப்படுத்தும் தகுதியுடன் செயல்பட வேண்டும். அற்பத்தனங்கள் அதற்கு அழகு சேர்க்காது!
சொந்த விருப்பு வெறுப்புகளை பொதுவெளியில் பரப்புவதும் பகிர்வதும் மக்கள் விரோதச் செயல் ஆகும். திருத்திக் கொள்வதுதான் உயர் தகுதிக்கு அழகு!
திருந்துவீர்களாக!

No comments:

Post a Comment