அரசியல்

Sunday, January 29, 2017

மருத்துவம் படித்தவர் மடமை வளர்ப்பதா? மகா வெட்கக் கேடு!



- மஞ்சை வசந்தன்

மருத்துவர் ச.தமிழரசன் தஞ்சாவுர்க்காரர். கால்நடை மருத்துவமும், பொது மருத்துவமும் பயின்றவர். கால்நடை துறையில் உயர் அதிகாரியாய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் எழுதிய நூல் என்ன தெரியுமா? “நோய் தீர்க்கும் சிவாலயங்கள்!’’
எந்த ஊரு சாமி எந்த நோயைக் குணப்படுத்தும் என்று நோய்வாரியாக பிரித்து கூறியுள்ளார்.

காசநோய்க்கு            _             வைத்தீஸ்வரன் கோயில் (சீர்காழிக்கருகில்)
தோல்நோய்கு          _             1. திருக்கட்சூர் மருந்தீசர் (சிங்கப்பெருமாய்கோயில் அருகில்)
                                 _                         2. திருவேற்காடு (வேதபுரீஸ்வரர்)
                                -_            3. திருத்துருத்தி உத்தவேதீர்வரர் (மயிலாடுதுறை                                                                       அருகில்)

இதயநோய்  _             திருநின்றவூர் (இருதயாலீசுவரர்)

மனநோய்     _             திருவிடைமருதூர் மருதீசர்

மன அழுத்தம்          _             திருவலிவலம் (திருவாரூர் அருகில்)

தொழுநோய்               _             தண்டலைச்சேரி (திருவாரூர் அருகில்)

வெண்புள்ளி               _             தலையாலங்காடு (திருவாரூர் அருகில்)

கண்நோய்     _             1. திருவாரூர் தூவாஸ்நாதர்
_             2. கண்கொடுத்தவனிதம் (திருவாரூர் அருகில்)

காதுநோய்    _             அன்பில் செவிசாய்த்த வினாயகர் (திருச்சிக்கு அருகில்)

ஊனம்              _             1. திருப்பெருவேளூர் சரஸ்வதீஸ்வரர் (கும்பகோணம் அருகில்)
  -_            2. திருப்பந்துரை சிவானந்தேஸ்வரர் (கும்பகோணம் அருகில்)

நரம்புத்தளர்ச்சி       _             திருபுவனம் (மயிலாடுதுறை அருகில்)

வலிப்பு நோய்            _             திருவாசி (திருச்சிக்கு அருகில்)

பக்கவாதம்  _             திருந்துதேவன்குடி (கும்பகோணம் அருகில்)
_             திருவாதவூர் (மதுரை மேலூருக்கு அருகில்)

வயிற்றுவலி             _             திருவதிகை (பண்ருட்டி அருகில்)

சர்க்கரை நோய்        _             கோவில்வெண்மணி கரும்பேஸ்வரர் (நீடாமங்கலம் அருகில்)

புற்றுநோய்  _             திருப்பராய்த்துறை பராய்ந்துறைநாதர் (திருச்சிக்க அருகில்)

பால்வினை நோய்                _             கஞ்சனூர் (ஆதுரை அருகில்)

கருப்பை நோய்        _             1. கடுவாய்க்கரை புத்தூர் (கும்பகோணம் அருகில்)
_             2. திருக்கருகாபூர் (கும்பகோணம் அருகில்)
_             3. திருச்சி தாயுமானவர்

குழந்தை மருத்துவம்_     சிவபுரம் (கும்பகோணம்)

முதுமை நீங்க          _             அவளிவநல்லூர் (தஞ்சைக்கு அருகில்)

உடலழகு      _             திருக்கொட்டையூர் (சுவாமிமலை அருகில்)

போதை மோகம்     _             திருப்பாம்புரம் (திருவாரூர் அருகில்)

நஞ்சு நீங்க    _             பூவனூர் (திருவாரூர் அருகில்)

சோர்வு             _             திருவெறும்பூர் (திருச்சி அருகில்)

என்று ஒவ்வொரு நோயும் எங்கு சென்று வழிபட்டால் நீங்கும் என்று விரிவாகக் கூறியுள்ளார். இதை ஒரு பண்டாரம், பரதேசி, பூசாரி கூறியிருந்தால் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. அறிவியல் கற்று, மருத்துவம் பயின்ற ஒரு மருத்துவர் நோய் நீங்க ஒவ்வொரு ஊராய் கோயிலுக்குப் போங்கள் என்று கூறுகிறார் என்றால் அதை நாம் புறந்தள்ள முடியாது. அவரின் சமூக எதிர் செயலை நாம் கண்டித்து மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டியது கட்டாயம்.

கோயிலில் உள்ள கற்சிலைகள் நோய் நீக்கும் என்றால் இவர் எதற்கு மருத்துவராய் பணியாற்றி ஊதியம் பெற்றார்? இன்னமும் ஓய்வு ஊதியம் பெறுகிறார்? தன் மருத்துவ பட்டத்தை வீசி எறிந்துவிட்டு, வீதியில் நின்ற எந்த நோய்க்கு எங்கு செல்ல வேண்டும் என்று வழிகாட்ட வேண்டியதுதானே!

ஈஸ்வரன் ஒருவரா பலரா?

புராணப்படி, மூடநம்பிக்கைப்படி பார்த்தாலும் ஈஸ்வரன் எனப்படும் சிவன் ஒருவன்தானே. அப்படியிருக்க அவனே பல ஊரில் பல பெயரில் பல நோய்க்கு வைத்தியம் பார்க்கிறான் என்றால் அது மோசடியல்லவா? முதலில் அவனை சுகாதாரத்துறை கைது செய்ய வேண்டாமா?

என்னென்ன நோய் உண்டோ அத்தனைக்கும் ஒவ்வொரு ஊர் ஈஸ்வரர் என்று அடையாளப்படுத்தி மக்களை அலையவைப்பது படித்துப் பட்டம பெற்றவர்களுக்கு அழகா?

ஜுரத்துக்கு மட்டும் 16 ஊர்களில் ஈஸ்வரன் வைத்தியம் பார்க்கிறார் என்று ஒரு பட்டியலே கொடுக்கிறார். ஜுரம் அடிக்கடி வரும் என்பதால் அந்தந்தப் பகுதியில் வைத்தியம் பார்த்துக் கொள்ள வசதி செய்து கொடுக்கிறார் இந்த வைத்தியர்.

இப்படி எல்லா நோயையும் ஈஸ்வரன் குணப்படுத்துகிறான் என்றால், எல்லா மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும், மூடிவிட்டு, மருத்துவ படிப்பையே நிறுத்தி விடலாமே!

அதிகம் கேட்க விரும்பவில்லை. இந்த மருத்துவரையும், இந்நூலை வெளியிட்ட தினத்தந்தி பொறுப்பாளர்களையும் கேட்கவிரும்பும் ஒரே கேள்வி. உங்களுக்கு நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வீர்களா? மருந்தீஸ்வரரிடம் செல்வீர்களா?

நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்! நிச்சயம் மருத்துவமனைக்குத்தான் செல்வீர்களா! செல்கிறீர்கள்! பின் இது என்ன ஊரை ஏய்த்து கல்லா கட்டும் யுக்திதானே!

இங்கு தொகுத்துக் கூறியுள்ள செய்திகளைத்தான் 160 பக்கங்களில் அச்சிட்டு, 150 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏற்கனவே பல வாரம் தினத்தந்தியில் அச்சிட்டு வியாபாரம்!

பத்திரிகைகள் மக்களின் மடமையைப் பயன்படுத்திச் சுரண்டலாமா? இதுவா பத்திரிகை தர்மம்? உளச் சான்றோடு செயல்பட வேண்டாமா? மனிதன் என்பதற்கு அதுதானே அழகு!

இதே தினத்தந்தி “உடலும் உணவும்’’ என்ற ஒரு நூல் வெளியிட்டுள்ளது. டாக்டர் எஸ்.அமுதகுமார் எழுதியது.

அதைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது 
வாழ்வியல் சிந்தனைகள் தொடரில் 1002ஆவது கட்டுரையாக எழுதியுள்ளார். (‘விடுதலை’ நாளேட்டில்)

ஆக, நாங்கள் மக்கள் நலத்திற்கும் வளர்ச்சிக்கம் செய்யப்படும் எதையும் பாராட்டுவோம், ஆதரிப்போம். அதேநேரத்தில் மக்களை மடையராக்கிச் சுரண்டும் செயலை வன்மையாகக் கண்டிப்போம். இதில் எந்த விருப்பு வெறுப்புக்கும் இடமில்லை.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’’

என்ற குறளுக்கேற்ப மக்கள் அச்சில் வருவதையெல்லாம் நம்பாது, தொலைக்காட்சியில் சொல்வதையெல்லாம் கேட்காது எது சரி? எது தப்பு? என்பதைப் பகுத்தறிவு கொண்டு தேர்வு செய்து பின்பற்றி வாழ்வதே அறிவுள்ள வாழ்விற்க அழகு!

 «««

No comments:

Post a Comment