அரசியல்

Thursday, October 20, 2016

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு அவசரமோ அவசரம்! - (தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

அரை வேக்காடு ஆரிய அம்பிக்கு
அவசரமோ அவசரம்!
கருத்துக்கேட்டு காலம் தாழ்த்தாது
புதிய கல்விக் கொள்கையை உடனே அமல்படுத்த வேண்டுமாம்!

(‘தினமணி’ கட்டுரைக்கு எதிர்ப்பு)

- மஞ்சை வசந்தன்

சொல்பவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முதன்மையாளர்! பல்கலைக்கழகம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்). அம்பியின் பெயர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம். ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்குப் பொருத்தமானவர்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் அதற்கேற்ற நிதானத்தோடு, தொலைநோக்கோடு, சமுதாய அக்கறையோடு, மனித நேயத்தோடு, மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, சமூகச் சூழலை, சமூகத்தில் உள்ள பல்வேறு படிநிலைகளை, ஒடுக்கு முறைகளை, உரிமைப் பறிப்புகளை உற்றுநோக்கி கருத்துக் கூறவேண்டும். அதுவும் கல்வியில் கொள்கை வகுக்கும்போது மிகக் கவனத்துடன், ஒரு முறைக்குப் பலமுறை ஆய்வு செய்து, ஒருவருக்கு பலர் விவாதித்து சாதக பாதக விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும்.

ஆனால், இந்த அரைவேக்காட்டிற்கு அவற்றைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. “வெந்தது போதும் முந்தானையில் கொட்டு” என்ற சுயநல முனைப்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவரின் கட்டுரையின் தொடக்கமே அபத்தம். இப்படிப்பட்ட அபத்தக் கட்டுரைகள் வைத்தியநாதர் ஆசிரியராய் வந்தபிறகு ‘தினமணி’யில் அடிக்கடி வெளிவருகின்றன.

“வீட்டிற்கு வந்த விருந்தாளி தாகத்திற்கு ஏதாவது கேட்டால், அவருக்குச் சர்க்கரை இருக்கிறதா? ரத்தக் கொதிப்பு இருக்கிறதா? என்று கேட்டு அதற்கேற்ப பழச்சாற்றையோ, குளிர்பானத்தையோ, மோரையோ, காபி, டீ போன்றவற்றையோ கொடுக்க மாட்டோம். இருப்பதைக் கொடுப்போம். அதேபோல் கல்வித் துறையில் அடிப்படைச் சிக்கலுக்கு உடனடித் தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். பகுப்பாய்வாளர்களும், படித்தவர்களும் பெரிய பெரிய சிக்கல்களை எல்லாம் பட்டியலிட்டு, மேம்பாட்டிற்கு வேகத் தடையாக இருக்கக் கூடாது”.
இதுவே அவரது கட்டுரையின் தொடக்கம். இதுவே இவர் தரமும், திறனும், சமூகப் பொறுப்பும், நுட்பமும் எப்படிப்பட்டவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அது மட்டுமல்ல. இப்படிப்பட்டவர்களையெல்லாம்  பணியமர்த்தியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தரமும், தகுதியும், நோக்கும், போக்கும் எப்படிப்பட்டது என்பதையும் காட்டுகிறது.

130 கோடி பேர் கொண்ட ஒரு பரந்துபட்ட  நாட்டின் கல்விக் கொள்கையை வகுக்கும்போது எவ்வளவு பொறுப்போடும், பொறுமையோடும், கவனத்தோடும், நேர்மையோடும் செயல்பட வேண்டும் என்பது ஒரு சாதாரண மனிதனுக்கே புரியும். ஆனால், இந்த சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையருக்குப் புரியவில்லை!

விருந்தாக வந்தவருக்கு தாகந் தணிக்க பானம் தரும் விஷயமா கல்விக் கொள்கை? மூளைக் கோளாறு உள்ளவர் தவிர வேறு யார் இப்படிக் கூறுவர்?

விருந்தாக வந்தவரின் நலத்தைப் பேண வேண்டியது விருந்து கொடுப்பவரின் தலையாய கடமை. அவருக்கு எது உகந்ததோ அதைக் கொடுத்து உபசரிப்பதுதான் விருந்தோம்பலின் மாண்பு. அவரின் உடல் நிலைக்கு எது தவிர்க்கப்பட வேண்டுமோ அதைத் தவிர்த்து, எது உகந்ததோ அதைத்தான் கொடுக்க வேண்டும்.

ஆனால், இந்த அம்பி அப்படியெல்லாம் கவலைப்பட மாட்டாராம். எது இருக்கோ அதைக் கொடுத்து உனக்கு பாதகமாய் இருந்தாலும் குடி என்பாராம்! எப்படிச் சிரிப்பது? எதனால் சிரிப்பது?

கல்விக் கொள்கையை உடனடியாக நிறைவேற்றிவிட வேண்டுமாம். பகுப்பாய்வாளர்களை, படித்தவர்களையெல்லாம் கேட்டு அதற்கேற்ப செயல்படக் கூடாதாம். அதனால் அரசின் செயல் வேகம் பாதிக்குமாம். படித்தவர்களை, கல்வியாளர்களை, சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்களை கருத்துக் கேட்பது வேகத் தடையாம்! சுத்த சுயநலக்காரர்கள். அடுத்தவர்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆதிக்கக்காரர்களைத் தவிர இக்கருத்தை எவர் கூறுவர்? எவர் வெளியிடுவர்?

கல்விக் கொள்கை இது ஒன்றும் புதிதல்ல. இவரே ஒத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் கல்விக் கொள்கை வரும்போது கருத்தறிந்து, பரிசீலனை செய்து விவாதித்துதான் முடிவு செய்யப்படும். அப்படியிருக்க இவருக்கும் ‘தினமணி’ வைத்தியநாத அய்யருக்கும் அப்படியென்ன அவசரம் வந்தது?

கல்வித் துறையின் அடிப்படைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு காண, கருத்துக் கேட்காமலே, விவாதிக்காமலே, பரிசீலிக்காமலே, சாதக பாதக விளைவுகளை ஆராயாமலே அமல்படுத்தி விடவேண்டுமாம்; காலவிரயம் கூடாதாம். ஆகா, என்னே அவசரம்! என்னே சமுதாய அக்கறை!

மோடியால் கொண்டுவரப்படுவதால், கல்வி காவிமயமாக்கப்படுவதாக ஓலமிடுகிறார்களாம்! கண்டுபிடித்து விட்டார் இந்த அறிவாளி! கொண்டுவருவது மோடியா? கேடியா? என்பதல்ல இங்கு பிரச்சினை. கொண்டுவரப்படுவதில் என்னென்ன உள்ளன? என்ன நோக்கத்தில் கொண்டுவரப்படுகிறது? யாருக்கு இதனால் சாதகம்? யாருக்கு இதனால் பாதகம்? என்பவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கல்வியாளர்களும், சமுதாய இயக்கங்களும், ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறையுள்ளவர்களும், பண்பாட்டுப் படையெடுப்பு தடுக்கப்பட வேண்டும், மொழி மேலாதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுள்ளவர்களும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கிறார்கள்; ஏற்க வேண்டியவற்றை ஏற்கிறார்கள்.

“புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதற்குக் காரணம், இக்கொள்கை சிறுபான்மையினர் கல்வி நிலைய  கோட்பாடுகளில் குறுக்கிடுகிறதோ என்ற அச்சம்தான்” என்பது  இவரது இன்னொரு கண்டுபிடிப்பு.

கொல்லைப்புற வழியாக குலக்கல்வியைக் கொண்டுவரும் முயற்சி; வழக்கொழிந்த சமஸ்கிருதத்தை எல்லோர் மீதும் திணித்து ஆயிரக்கணக்கானோர் மட்டுமே பேசும் அம்மொழியை ஆட்சி மொழியாக்கும் முயற்சி; முதல் தலைமுறை கல்வி பயிலும் பிள்ளைகளின் கல்வியை இடையிலே முறித்து குலக்கல்விக்கு மடை மாற்றும் மோசடி; கிராமப்புற ஏழைகளுக்கான தாய்மொழி வழிக் கல்வியை ஒழித்துக் கட்டி, மேல்தட்டு மக்களுக்கான சி.பி.எஸ்.சி. கல்வியை ஊக்குவிப்பதன் மூலம், கிராமப்புற அடித்தட்டு மாணவர்கள் அறவே தலையெடுக்காமல், உயர் பதவிகளுக்கு வரவொட்டாமல் தடுக்கும் சூழ்ச்சி போன்ற எத்தனையோ கேடுகளை தன்னகத்தே கொண்டுள்ள இக்கல்வி முறையை, எதையும் பரிசீலிக்காமல் கொண்டுவர வேண்டும் என்று துடிதுடிப்பதன் நோக்கம் என்ன? அவாள் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல்தானே? அக்கறைதானே?

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு விசேஷ உரிமைகளை அரசு வழங்கியது. அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கல்வி வணிகத்திற்கு உதவுகிறது என்பதால், புதிய கல்விக் கொள்கை இச்சிறப்புரிமை தேவையற்றது என்கிறது என்கிறார் இந்த அதிமேதாவி.

இதுதான் ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ். பரிவார புத்தி என்பது. புதிக கல்விக் கொள்கையின் பாதிப்புகளில் சிறுபான்மையினருக்கான சில சலுகைகள் பாதிப்பு உண்டு. ஆனால், அதற்காக மட்டும் புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படவில்லை. மாறாக, மேலே நாம் கூறிய, தலைமுறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளன என்பதால்தான் எதிர்க்கப்படுகிறது. ஆனால், முழுப் பூசணிக்காயைப் பிடி சோற்றில் மறைப்பது போல, எல்லா உண்மையையும் மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகையை மட்டும் சுட்டிக்காட்டி, இந்துக்களை உசுப்பி வெறியேற்றவும் பிரச்சினையை திசைதிருப்பவும் இவர் முயல்வதன் தில்லுமுல்லு தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறது.

கல்யாண வீட்டில் விருந்தில் உப்புக் குறைவாகவுள்ளது என்பதற்காக கல்யாணத்தை நிறுத்தக் கூடாது. அதுபோல குறைகளுக்காக புதியக் கல்விக் கொள்கை தடைப்படுவது தேவையற்றது என்று மீண்டும் சாப்பாட்டு உதாரணம் தருகிறார் இவர்.

நம் பிள்ளைகளின் தலைமுறைப் பாதிப்பு, ஒடுக்கப்பட்டோரை ஒழிக்கும் முயற்சி, சமஸ்கிருதத் திணிப்பு, மாநிலக் கல்வியை உதவாததாக்கி, மத்தியக் கல்வியை தூக்கிப் பிடித்து, ஏழைகளை, தாய்மொழி வழிப் பயில்வோரை வேலைவாய்ப்பிற்குத் தகுதியற்றவராக்கி, இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் சூழ்ச்சிக் கொள்கைகளைக் கொண்டது இப்புதியக் கல்விக் கொள்கை என்ற மிகமிக முதன்மையான காரணங்களை அறவே மறைத்துவிட்டு, சிறுபான்மையினர் சலுகை என்பதைக் காரணமாகக் காட்டி மத மோதலுக்கு, வெறுப்பிற்கு வழிவகுக்கும் வேலையை இவர் செய்திருக்கிறார்.

தலைமுறைத் தலைமுறையாய் படித்து உத்தியோகத்தையும், அதிகாரத்தையும் தன் கையில் வைத்துள்ள ஆதிக்கக் கூட்டத்திற்கு அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? பி.ஜே.பி ஆட்சியிலே நினைத்ததைச் சாதித்துத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஆர்வம் என்பதைத் தவிர இவர் அவசரத்திற்கு வேறு காரணம் இருக்க முடியும்?

மனுதர்ம காலம் மலையேறி விட்டது.  மாணவர் சமுதாயம் இந்தியா முழுவதும் விழிப்பும் எழுச்சியும் பெற்றுவருகிறது. இனி ஏமாற்று வேலைகள் எடுபடாது. பாதிப்புகளை அகற்றிய பின்புதான் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தப்பட விடுவோம் என்பதை இவர்களுக்குத் திட்டவட்டமாய் தெரிவித்துக் கொள்கிறோம்! தீவிரமாயும் தெரிவித்துக் கொள்கிறோம்!

No comments:

Post a Comment