அரசியல்

Tuesday, November 15, 2016

உயிர்ப்பலியும் உடற்கேடும் உருவாக்கும் வெடிப்பொருட்களை உடனே தடை செய்க!

- மஞ்சை வசந்தன்
 “சல்லிக்கட்டு’’ விளையாட்டில் உயிரிழப்பும் விலங்குவதையும் இருக்கிறது என்று உச்சநீதி-மன்றம் வரை விவாதிக்கப்பட்டு தடை விதிக்கப்படுகிறது. ஒருசில மாடுகள் மிரளுவது “வதை’’; ஒருசிலர் இறப்பது உயிர்ப்பலி என்று கவலை கொள்ளப்படுகிறது; கண்டிப்புடன் தடை செய்யப்படுகிறது. சரி.

ஆனால், வெடிப்பொருட்களால் எத்தனை ஆயிரம் உயிர்கள் பலியாகின்றன; இந்தியாவே ஓரிரு வாரம் காற்று மாசால் கதிகலங்கிப் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி நிகழ்ந்தும் அரசும், நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாததும் கவலைப்படாததும் ஏன்?
வெடிப்பொருட்களால் என்ன பயன்?
பாறைகளைப் பிளப்பதற்குப் பயன்படுவதைத் தவிர மற்றபடி வெடிப் பொருட்களால் பயன் என்ன? விபத்தும் காற்று மாசும் வெடிப்பொருட்களின் இரு பக்கங்கள் என்பது கண்கூடான உண்மை. இதனை அறிய, உறுதி செய்ய பெரும் முயற்சிகள், ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை. அப்படியிருந்தும் தடை செய்யப்படாதது ஏன்?
பண்பாட்டைவிட மதம் உயர்வா?
சல்லிக்கட்டை நாம் ஆதரிப்பதில்லை. ஆபத்தோடு விளையாடுவதை வீரம் என்று நாம் எப்போதும் ஏற்பதில்லை. ஓடும் வாகனத்தில் ஏறுவதும், இறங்குவதும் எவ்வளவு பெரிய குற்றமோ அப்படித்தான் இதுவும் என்பதில் மாற்றுக் கருத்து நமக்கில்லை. என்றாலும், ஒரு இனத்தின் பண்பாடாக, வீரத்தின் வெளிப்பாடாக பன்னெடுங்காலமாய் நடத்தப்பட்டு வரும் சல்லிக்கட்டு விளை-யாட்டை தடை செய்யும் நீதிமன்றம், வெடிப்-பொருட்கள் உற்பத்தியையும், விற்பனையையும், வெடிப்பதையும் தடை செய்யாதது ஏன்? மதம் சம்பந்தப்பட்ட தீபாவளி விழா என்பதால் நீதிமன்றம் தயங்குகிறது என்பதுதான் உண்மை! அப்படியாயின் பண்பாட்டைவிட மதம் உயர்ந்ததா?
தீபாவளிக்கும் பட்டாசுக்கும் என்ன தொடர்பு?
தீபாவளி என்றால் தீபம் + ஆவளி = தீபாவளி. ஆவளி என்றால் வரிசை. ஆக, தீபாவளி என்றால் தீபவரிசை என்பதே பொருள்.
சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரர் உபதேசம் செய்து கொண்டிருக்கையில் விடியற்-காலை இறந்துவிட்டார். அதன் நினைவாய் அகல்விளக்கை வரிசையாய் ஏற்றி வழிபட்டனர். அதுவே தீபாவளி.
ஆனால், சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகை ஆக்க நரகாசுரன் கதை புனைந்தனர். நரகாசுரன் கதைக்கும் தீப வரிசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? ஆக, எந்த உண்மையும் இல்லாத, பொய்க் கதையைப் பின்புலமாகக் கொண்டு கொண்டாடப்படும் தீபாவளிக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும்? அரசு தவறு செய்தாலும் நீதிமன்றம் செய்யலாமா?
விளக்கு வரிசைப் பண்டிகைக்கு விளக்கு தானே ஏற்ற வேண்டும்? வெடி வெடிப்பது ஏன்? சிந்திக்க வேண்டாமா? இன்னும் சொல்லப் போனால், வெடிதான் தீபாவளியின் அச்சாணி என்று ஆக்கிவிட்டார்களே!.
மூடநம்பிக்கையில், மூடக் கொண்டாட்டத்-தில் இளைய தலைமுறையினரை என்றென்றும் ஈர்த்து வைத்திருப்பதற்கான கவர்ச்சித் திட்டந்தானே இது?
மதவாதிக்கு சுயநலம்; ஆதிக்க முனைப்பு; சுரண்டல் நோக்கு. ஆனால், நீதிமன்றங்கள் வெடிப்பொருட்களை அனுமதிக்கலாமா? மக்கள் உயிருக்கும், உடலுக்கும் பெரும் தீங்காய் அமையும் வெடிப் பொருட்களை தடை செய்ய காலம் தாழ்த்தலாமா?
கட்டுப்பாடுகள் தீர்வல்ல:-
இந்த இடத்தில்தான் விற்க வேண்டும். இந்த இடத்தில்தான் வெடிக்க வேண்டும். இத்தனை மணிவரைதான் விற்கவோ வெடிக்கவோ வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும், நிபந்தனை-களும் தீர்வுகள் ஆகா. அவை பாதிப்புகளை குறைக்க உதவுமேயன்றி, நீக்க உதவா.
நீதிமன்றங்களின் கட்டாயக் கடமை!
கோடிக்கணக்கான குழந்தைகள், நோயாளி-கள் உடலாலும் மனதாலும் பாதிக்கப்படு-கின்றனர். ஒரே நாளில் இந்தியா முழுவதும் வெடிக்கப்படுவதால் காற்று மண்டலமே மாசடைந்து சுவாசிக்கத் தகுதியற்றதாக்கப்-படுகிறது.
வெடிப்பொருட்களால் காற்று மாசு அடைவதோடு, நில மாசு, நீர் மாசும்  ஏற்படுகிறது. தீவிபத்துகள் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகிறது.
எனவே, அரசைவிட நீதிமன்றங்கள்தான் பொதுநல நோக்கில் தாங்களே வழக்கைப் பதிவு செய்து, வெடிப்பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்; விபரீதங்களைத் தடுக்க வேண்டும்.
தலைவர்களின் கடமை:
சமூக ஆர்வலர்கள்; ஆசிரியர்கள், ஊடகங்கள், திரைத்துறையினர் வெடிப்-பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
நடிகர் விஷால் வெடி வெடிக்காதீர்கள் என்று துணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது பாராட்டத்தக்கது. மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும்.
பிள்ளைகள் விளைவுகளை அறியாது, ஆர்வத்தில் ஆவல் கொள்வது இயற்கை. அவர்களுக்கு பெரியவர்கள் பெற்றோர்கள்தான் எடுத்துச் சொல்லி, வழிகாட்டி கட்டுப்படுத்த வேண்டும்.
ஒலி அளவு கட்டுப்பாடு பின்பற்றப்படாமை!
இவ்வளவு அளவு ஒலி எழுப்பும் வெடிப் பொருட்கள்தான் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு அறவே கடைபிடிக்கப்-படுவதில்லை.
யார் வெடிப்பது அதிக சத்தம் எழுப்புகிறது என்று போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தமுள்ள வெடியை வெடிக்கின்றனர்.
ஆயிரம் வெடி, அய்யாயிரம் வெடி, பத்தாயிரம் வெடி என்று ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் தொடர்ந்து வெடிக்கப்படுவதால் உடலும் உள்ளமும், செவியும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அளவுக்கு அதிகமான புகையால் மூச்சுத்திணறலும், நுரையீரல் நோய்களும் ஏற்படுகின்றன.
எல்லா நிகழ்வுகளிலும் வெடிப்பொருட்கள்:
தீபாவளிக்கு தொடங்கிய வெடிக் கலாச்சாரம் இன்றைக்கு அரசியல்வரை நீட்சி பெற்றுள்ளது.
கோயில் விழாக்களில் வெடிவெடிப்பது பெரும் பொருட்செலவில் நடத்தப்படுகிறது.
பிறந்த நாள், திருமணம், ஊர்வலம், இறப்பு, இறுதி ஊர்வலம் என்று எதற்கெடுத்தாலும் வெடி வெடிக்கப்படுகிறது. வெற்றியைக் கொண்டாட வெடிதான் முதன்மை இடம் வகிக்கிறது.
தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட வெடி கார்த்திகை தீபத்திலும் வெடிக்கப்படுகிறது. ஆக, வெடிப்பொருள் பயன்பாடு என்பது ஆடம்பரத்தின், ஆரவாரத்தின் அடையாள-மாகி-விட்டது.
சாலைகளில், பொது இடங்களில், கடைவீதிகளில் முன் அறிவிப்பின்றி திடீர் திடீர் என்று வெடிக்கப்படுகிறது. மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் அவலம் நடக்கிறது.
தடை செய்யப்பட்ட இரசாயனக் கலப்பு
தடை செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு போன்றவற்றை பயன்படுத்தி வெடிகள் தயாரிப்பதால் கொடிய பாதிப்புகள் விளைகின்றன.
விபத்துகளில் சில:
1. டிசம்பர் 23, 1995 அரியானா மாநிலம், தப்வாலி என்ற ஊரில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 442 பேர் மரணமடைந்தனர். இதில் அதிகம் பள்ளிக் குழந்தைகள் ஆவார்கள்.
2. செப்டம்பர் 15, 2005 பிகாரில் உள்ள சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலை வெடித்து சிதறியதில் 36 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.
3. ஏப்ரல் 16, 1990 பிகார் மாநிலம் பட்னா சென்று கொண்டிருந்த ஓடும் ரெயிலில் பட்டாசு வெடித்து சிதறியதில் 7 பேர் மரணம். 12 பேர் காயம்.
4. ஜூன் 9, 2011 சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் செகுசுப் பேருந்தில் பட்டாசு பார்சல்களை கொண்டு சென்றபோது பார்சல்-கள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பிடித்ததால் 31 பேர் மரணமடைந்தனர்.
5. நவம்பர் 20, தலைநகர் டில்லியில் திருமண விழாவில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் பெட்டிகளில் தீப்பொறி பட்டு பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 15 பேர் மரணமடைந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.
6. அண்மையில் சிவகாசி கடைவீதியில் வேனிலிருந்து பட்டாசுகள் இறக்கப்பட்ட போது வெடிகள் வெடித்துச் சிதறி ஸ்கேன் சென்டர் எரிந்து 10 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
அடுத்து கோவை காந்தி பார்க் அ-ய்.ஏ.எஸ். அகாடமியில் வெடிகளால் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர்.
விழுப்புரம் வானூர் அருகே துருவை கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும்போது வெடித்து விபத்து ஏற்பட்டதில் 5 பேர் இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
இப்படி ஒவ்வொரு நாளும் இச்செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால்அரசும் நீதிமன்றமும் உடன் தலையிட்டு வெடிப் பொருட்கள் தயாரிப்பை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்.

No comments:

Post a Comment