அரசியல்

Thursday, June 11, 2015

அம்பேத்கர்-பெரியார் கொள்கை ஒப்பீடு

அம்பேத்கர்-பெரியார் கொள்கை ஒப்பீடு
 

1. ஆங்கிலோ இந்தியர்கள் எப்படியோ அப்படித்தான் இந்த நாட்டுப் பார்ப்பனர்களும். மேல்நாட்டு ஆரியர்களுக்கும் நம் நாட்டவர்க்கும் பிறந்தவர்கள் பார்ப்பனர்கள்.
(குடிஅரசு 28.06.1949)

1. பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்களை நிறுத்தினால் பார்ப்பான் அயல்நாட்டான் என்பது தெரியும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படியோ, ஒரு வெள்ளைக்காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அப்படி பார்ப்பான் சூத்திரர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு அன்னியன்.
(நூல்: காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்குச் செய்தது என்ன? பக்கம்: 215)

2. அரசியலமைப்பு என்ற நூலை எழுதிய புரபசர் டிசே என்பவர் புரட்சி மனப்பான்மை உடையவன் போப் ஆக மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்று கூறி இருக்கிறார். அதுபோலவே பார்ப்பானாகப் பிறந்தவன் புரட்சிக்காரனாக ஆகவே மாட்டான்.
(விடுதலை 29.8.1961)

2. புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகமாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான். இந்த அபிப்பிராயம் இந்தியப் பார்ப்பனர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்றே நம்புகிறேன். போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பனராகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது நிச்சயம்!
(ஜாதியை ஒழிக்க வழி பக்கம் 83)

3. நீங்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) மனித  சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும் மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டுமென்று சொல்லுகிறேன்.
_ (குடிஅரசு 13.10.1935 )

3. உடல் நலம் பற்றிய இலாபங்களைவிட சுயமரியாதையே மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுடைய போராட்டம் கவுரவத்திற்காக, சுயமரியாதைக்காகத்தான்.
(“Thus spoke Ambedkar” என்ற நூலிலிருந்து.)

4. வாயில்_நாக்கில் குற்றம் இருந்தால் ஒழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது, பிறவியில் மாறுதல் இருந்தால் ஒழிய புலி புல்லைத் தின்னாது. ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோலவாக்கும் நமது பார்ப்பனர் தன்மை.
(சென்னை உயர் நீதிமன்றில் தந்தை பெரியார் அறிக்கை 23.4.1957)

4. நான் உங்களைக் கேட்கிறேன். எலியும் பூனையும் ஒன்றுசேர்ந்து வாழமுடியுமா? அது ஒன்றையொன்று அழித்துக்கொள்ளும். பாம்பும் கீரியும் ஒன்றாக வாழக் கூடுமா? பார்ப்பனர்கள் _ தீண்டப்படாதாருக்கும் உள்ள நிலைமையும் இதுபோன்றதுதான். ஒரு பார்ப்பனன் ஒரு தீண்டப்படாதவனை முடிந்த வரையிலும், எவ்வளவு கீழான நிலையில் வைத்திருக்க முடியுமோ, அதைச் செய்திட முயற்சிப்பான். தீண்டப்படாதவன் மனித உரிமையைக் கூடப் பெற முடியாதபடி அவன் பார்த்துக் கொள்வான்.
_- அண்ணல் அம்பேத்கர்

5. சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்தப் பார்ப்பனர்கள் தாமே இந்த நாட்டு மக்களாக இருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தாமே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள்? ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை ஏற்படுத்திவிட முடியும்?
_ (குடிஅரசு 12.7.1931)

5. இந்த நாடு சுதந்திரம் பெறுவதை நாங்கள் எதிர்ப்பவர்களல்ல. ஆனாலும் சுயராஜ்யத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்னவாயிருக்கும் என்று காந்தியாரிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டும். காந்தியோ மற்றவர்களோ என்னுடைய கேள்விக்குத் தகுதியான பதிலை அளிக்கவில்லை.
_- அண்ணல் அம்பேத்கர்
 

6. இந்தியா ஒரு நாடு ஆனால் தானே இந்தியா முழுமையும் பற்றிப் பேச நமக்கு உரிமையுண்டு. இப்பொழுது இந்தியா ஒரு நாடாக இருக்கிறதா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஜாதிகள் காட்சிச்சாலையாக, மதங்கள் காட்சிச்சாலையாக, சாமிகள் காட்சிச்சாலையாக இருக்கிறதே யொழிய வேறு என்னவாயிருக்கிறது?
_ தந்தை பெரியார், குடிஅரசு 1.6.1930

6. ஆயிரக்கணக்கான ஜாதிகளாய் பிளவுண்டு கிடக்கும் மக்களை நீங்கள் எப்படி ஒரு தேசம் என்று அழைக்க முடியும்? இந்தியா என்ற ஒரு தேசம் இல்லை; இந்து மதம் என்ற ஒரு மதமும் இல்லை என்றார் அம்பேத்கர்.
-_ அண்ணல் அம்பேத்கர்

7. பார்ப்பான் வந்து திருமணம் செய்து வைப்பதுதான் புனிதமானது, பார்ப்பான் மேல் ஜாதி என்று கருதியே நாளாவட்டத்தில் கூப்பிடத் தொடங்கிவிட்டார்கள். இப்படிப் பார்ப்பானைக் கூப்பிடுவதும் நாம் கீழ்ஜாதி அவன் உயர்ந்த ஜாதி என்பதை உறுதிப்படுத்தவே கூப்பிடுகின்றோம். இந்தத் திருமண முறைக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.
(விடுதலை 3.10.1961)

7. பார்ப்பனப் பூசாரிகளைத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது. திருமணத்திற்காக அதிகம் செலவழிக்காதீர்கள். நேரத்தையும் பணத்தையும் சேமியுங்கள்.

_ அண்ணல் அம்பேத்கர்
The Prisons we broke - baby hamble, , தலித் முரசு --_ சனவரி 2009)

8. சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய நற்செயலுக்காக ஒருவன் தன்மானம் பாராது மக்கள் நலனுக்காக செயல் செய்ய வேண்டும். மானம் பார்த்தால் செயல் கெட்டுவிடும். எனவே, பொது நன்மைக்கு மானம், ஈனம் பற்றி பொருட்படுத்தாது பாடுபட முன்வர வேண்டும்.
(இளைஞர்களுக்கு அழைப்பு பக்கம்_30)

8. சிறந்ததோர் இலட்சியங்களை அடைவதற்கு தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து இடையறாது பாடுபட வேண்டும். குறிக்கோளை அடையும்வரை துன்பங்கள் இழிவுகளை ஏற்க வேண்டும். நாம் பிறந்த மக்களுக்காக தங்கள் நேரத்தை திறமையை எல்லாவற்றையும் அளிக்க வேண்டும்.
(அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பக்கம்_692)

9. திராவிட நாடு, திராவிட மொழி, திராவிட மக்கள் என்பவற்றை தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ் மக்கள் என்ற கருத்தில்தான் வழங்குகின்றனர். திராவிடர் என்பவர் தமிழரே ஆவர். திராவிட நாடென்பதும், திராவிடர் என்பதும் இந்தியா முழுமையும் கொண்டிருந்தது.
_தமிழ், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு, பக்கம்_4

9. திராவிடர்கள் (நாகர்கள்) இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். திராவிடம் என்பதும் தமிழ்தான். ஆரியர்கள் நுழைவால் வடபுலத்தில் தமிழோடு சமஸ்கிருதம் கலந்தது. தென்னகத்தில் தமிழ் தனித்து நின்றது.
(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 7 _ பக்கம் _300)

10. சாதி ஒழிப்புக்காரர்கள் அதன் ஆதாரத்தை ஒழிக்க வேண்டும். மலேரியாவை ஒழிக்க கொசுவை ஒழிப்பதுபோல, மதத்தை ஒழிக்கச் சாதியை ஒழிக்க வேண்டும். சாதிக்கு ஆதாரமான மதம், கடவுள், புராணம் ஒழிக்கப்பட வேண்டும்.

(16.9.1961இல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு)

10. இந்து மதமும் ஒற்றுமையும் ஒன்றோடொன்று சேரவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் பிரிவை (சாதியை) கொள்கையாகக் கொண்டது. இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் இந்துமதத்தைத் தூக்கியெறிய வேண்டும்.
(காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதவர்க்கு என்ன செய்தனர்? பக்கம் _175)

11. இந்துமதம் உங்களுக்கு உரியதில்லை. சாதி, தீண்டாமை ஒழி. அதிலிருந்து வெளியேறுங்கள்.

புத்த மார்க்கம் வைதீகத்திற்கு எதிர்ப்பானது. புத்தர் தர்க்கரீதியில் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து சொன்னவர். புத்தம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவது. ஒழுக்கத்தைப் போதித்தவர். அது மனிதர் பின்பற்றிவந்த மார்க்கம். சம அந்தஸ்து கொடுத்து சமமாய் நடத்தும் மார்க்கத்தில் சேருங்கள்.
(15.05.1957இல் புத்தர் விழாவில் ஆற்றிய உரை)

11. தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்கள் என்று இணைக்கப்பட்டாலும் அவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும்.
இந்துமதத்திலிருக்கும் வரை எவரும் முன்னேற முடியாது. ஏற்றத்தாழ்வின் மீது கட்டப்பட்டது இந்து மதம். நமக்கு உரிய புத்த மார்க்கம்தான் நமக்குரியது. அதில் சேருங்கள்.
(15.10.1956இல் நாகபுரியில் ஆற்றிய உரை)

12. தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமைப் போரைத் தொடங்கி, பின்னர் மொழிவாரி மாநிலத்தை பின்னாளில் ஏற்றார். சென்னை இராஜ்யம் என்பதைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.
(11.10.1955 விடுதலை)

12. மொழிக்கு உண்மையான சொந்தக்காரர்களைக் கருத்தில் கொண்டு நாம் புதிய மொழிவாரி மாநிலம் அமைக்க வேண்டும்.
(1953இல் அம்பேத்கரின் நாடாளுமன்ற உரை)

இப்போது சொல்லுங்கள், அம்பேத்கரும் பெரியாரும் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் உடையவர்களா? இல்லையா? ஒரே தீர்வை சொல்லுகிறவர்களா? இல்லையா?

ஆயிரம் நீலகண்டன்கள் வந்தாலும் அய்யாவையும் அம்பேத்கரையும் பிரிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது!

அய்யா தொண்டர்களும், அம்பேத்கர் தொண்டர்களும் ஓரணியில் நின்று உங்கள் ஆதிக்கத்தை ஒழித்தேத் தீருவர்! இது உறுதி!

 *******

No comments:

Post a Comment