அரசியல்

Sunday, October 15, 2017

தேவாசுரப் போர்கள் தெரிவிக்கும் உண்மைகள்!



- மஞ்சை வசந்தன்

புராணங்கள், இதிகாசங்கள், கற்பனை கதைப்புகளின் களம்தான் என்பது உண்மையானாலும், அந்தக் கற்பனைகளின் அடித்தளம் வரலாற்று நிகழ்வுகள்தான் என்பதை நுணுகிநோக்கின் அறியலாம்.

ஆரியர்கள் அயல்நாட்டிலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் (திராவிடர்கள் இந்த மண்ணின் மக்கள். அயல்நாட்டிலிருந்து வந்தவர் என்பதால் அவர்களுக்கென்று சொந்த நிலம் இல்லை. எனவே, தமிழர்களிடம் நிலத்தைத் கொடையாகப் பெற்றே தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.

அக்காலத்தில் நிலப்பரப்பு மிகுதி; மக்கள் மிகவும் குறைவு. எனவே, ஆரியர் தமிழர் நிலங்களை மெல்ல மெல்ல கைப்பற்றுவது எளிமையாய் நடந்தது. அவ்வாறு அவர்கள் கைப்பற்றிய இடங்களில் குழுக்களாய் வாழ்ந்தனர்.

ஆரியர் நுழைவு அதிகரிக்க, நில அபகரிப்பும் அதிகரித்தது. ஆரியர்கள் இந்தியாவெங்கும் பரவினர். இதனைத் தமிழர்கள் எதிர்க்க, ஆரிய-திராவிட மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல்தான் தேவாசுரப் போர் என்று புராணங்களில் எழுதப்பட்டன.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பரவிய தொடக்க காலங்களில் பசு மாட்டுக் கறியைத்தான் அதிகம் உண்டனர். சோமபானம், சுரபானம் என்ற இரண்டு போதை பானங்களைக் குடித்தனர். சுரபானம் குடித்தமையால், ஆரிய பார்ப்பனர்கள் “சுரர்கள்” என்று அழைக்கப் பட்டனர். ஆரியர் அல்லாத தமிழர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சுத்தம் எதிர்ச்சொல் அசுத்தம் என்பதுபோல்

சுரர் என்பதன் எதிர் இனத்தார் அசுரர் எனப்பட்டனர்.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்று இன்று நாம் அழைப்பதுபோல், அன்று சுரர், சுரர் அல்லாதவர் (அசுரர்) என்று அழைக்கப்பட்டனர்.

பூதேவர் - பூசுரர்

“விண்ணுலகில் தேவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மண்ணுலக தேவர்கள்” என்று ஆரியர்கள் தங்களைப் பெருமையாகக் கூறிக்கொண்டனர். மண்ணுலக தேவர்கள் என்பதை பூதேவர் என்றனர். சுரபானத்தை இந்திரன் கூறியதற்கிணங்க ஆரியர்கள் குடித்ததால், பூசுரர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டனர். குடிகாரர்கள் என்ற இழுக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திரன் கூறித்தான் குடித்தோம் என்று பின்னாளில் கூறிக் கொண்டனர். இதுதான் ஆரியப் பித்தலாட்டம் என்பது.

இந்தச் சொற்களின் பயன்பாட்டிற்கான உட்பொருள் என்னவென்றால், விண்ணில் உள்ள கடவுள்கள் விண்ணுலக தேவர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் மண்ணுலகில் தேவர்கள் என்பதேயாகும்.

திராவிடர்-ஆரியர் மோதல்:

தமிழரின் இனப் பெயர் திராவிடர் என்பது. தமிழர்களை ஆரியர்களிடமிருந்து பிரித்துக்காட்ட திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

திராவிடர்-ஆரியர் போர்கள் இரு முதன்மைக் காரணங்களுக்காக நிகழ்ந்தன.

1. மண்ணுரிமை - பாதுகாப்பு

2. பண்பாட்டுரிமை - பாதுகாப்பு

1. மண்ணுரிமை

தமிழர்கள் (திராவிடர்கள்) முழுக்க முழுக்க இந்த மண்ணின் உரிமையாளர்கள். ஆரியர்கள் அயல்நாட்டார் என்பதால் நிலங்களைத் கொடையாகப் பெற்றே தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர்.

காலப்போக்கில் கொடையாகப் பெறுவதற்குப் பதிலாய் கைப்பற்றி உரிமை கொள்ள முற்பட்டனர். அதனைத் தமிழர்கள் எதிர்க்க இரு இனத்திற்கும் இடையே போர் நிகழ்வது தொடர்ந்து நடந்தது.

2. பண்பாட்டுரிமை

தமிழர்கள் சாதியற்ற, மூடநம்பிக்கை யற்ற அறிவுசார் வாழ்க்கைக்கு உரியவர்கள். தமிழர்களுக்கு இயற்கையாய் இனப்பலம், நிலப்பலம், உடற்பலம் இருந்தது. எனவே, தமிழர் வீரத்தில், போர்த்திறத்தில் நம்பிக்கை உடையவர்கள். ஆரியர்களுக்கு இம்மூன்றும் இல்லை. எனவே, அவர்கள் யாகம், பலி, சடங்குகள் என்று மூடச் செயல்களின் மூலம் பலம் பெற முயன்றனர்.

நேருக்கு நேர் உடல் வலிமைகாட்டிப் போராடி, ஆரியர்களால் வெல்ல முடியாது என்பதால், இயற்கை வழிபாடு, யாகம் போன்றவற்றின் வழி வெற்றி பெற முயன்றனர்.

அந்த யாகங்களை தமிழர்கள் அழித் தனர். இராமாயணத்தில்கூட, ஆரியர்கள் தங்கள் யாகத்தை அழிக்கும் தாடகையை அழிக்க வேண்டும் என்று இராமனைத் துணைக்கழைத்ததை அறியலாம்.

தாய்வழிச் சமுதாயம்:

தமிழர்கள் பெண்களை பெரிதும் மதித்தனர். சொத்து, ஆளுகை எல்லாம் பெண்களிடம்தான் இருந்தது. அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பெண்ணான தாடகை படைக்குத் தலைமையேற்று ஆரியர் யாகத்தை அழித்தாள்.

தாடகை வதம்:

ஆக, தாடகை வதம் என்பது தமிழ்த் தலைவியை வதைத்தல் என்பதே ஆகும். புராணங்களையும், இதிகாசங்களையும் ஆய்வு செய்தால் நிறைய ‘யாக’ அழிப்புகள் நடந்ததாய் கூறப்பட்டிருக்கும் அதன் உட்பொருள் இதுதான். வீரத்தின் மீது நம்பிக்கை கொண்டது தமிழர் பண்பாடு. மூடச் சடங்குகளின் வழி சக்தி பெறலாம் என்பது ஆரியக் கலாச்சாரம். இந்த இரண்டிற்கும் இடையேயான போர்தான் யாக அழிப்பு, யாக காப்பு முயற்சிகள்.

அசுரர்-தேவர் போர்கள்

மாவலி, நரகாசுரன், சூரபதுமன், இரணியாட்சதன் போன்றவர்கள் அசுரர்களாய் புராணங்களில் சுட்டப்படுவதைக் காணலாம். இவர்களோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் யார் என்றால், மகாவிஷ்ணு, முருகன், இந்திரன் போன்ற கடவுள்கள். இதன் உட்பொருள் என்ன?

தமிழர்கள் பலசாலிகள், வீரம் நிறைந் தவர்கள், மண்ணின் உரிமையாளர்கள், மக்கள் பலம் உடையவர்கள். எனவே, அவர்களைச் சிறு கூட்டமான ஆரியர்கள் போரிட்டு வென்றதாய்க் கூறமுடியாது என்பதால், ஆரியர்களுக்குத் துணையாய் ஆண்டவர்களே வந்தார்கள் என்று கூறப்பட்டது.

மண்ணுரிமைப் போர்:

வாமன தத்துவம் என்ன?

மாவலி கதையைக் கூர்ந்து ஆய்ந்தால், அது ஒரு மண்ணுரிமைப் போர் என்பது விளங்கும்.

வாமனன் நிலத்தைக் கொடையாகக் கேட்டான் என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன?

ஆரியர்கள் நிலத்தை தமிழர்களிடம் கொடையாகப் பெற்றே பயன்படுத்தினர் என்பதுதான். அந்த அடிப்படையில்தான் ஆரியர்கள் மாவலியிடமும் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர்.

வாமன அவதாரம் என்பதன் உட்பொருள் என்ன?

“வாமன” என்றால் “சிறு” என்று பொருள். ஆரியர்கள் சிறுபான்மையினர் என்பதன் அடையாளமாகத்தான் வாமன அவதாரம் புனையப்பட்டது. சிறுபான்மையினரான ஆரியர்கள் அயல்நாட்டவர் என்பதால், மண்ணின் சொந்தக்காரர்களான தமிழர்களிடம் நிலத்தைக் கொடையாகக் கேட்டனர் என்பதே அதன் உள்பொருள், உள்ளடக்கம் எனலாம்.

மாவலியின் அமைச்சர், “கொடையாக நிலத்தை ஆரியர்களுக்குக் கொடுக்காதே, கொடுத்தால் உனக்குக் கேடு” என்று எச்சரித்தார். ஆனால் மாவலி, பிச்சை கேட்பவனுக்குக் கொடுக்க வேண்டும் என்ற பேருள்ளத்தில் கொடுத்தான். மெல்ல மெல்ல கேரளாவில் ஆரியர் ஊடுருவி ஆதிக்கம் செலுத்த, தமிழ் இனமும், தமிழ் மொழியும் அழிந்தன என்பதே மாவலி கதை உணர்த்தும் உண்மை வரலாறு.

இரணியாட்சதன் பூமியைப் பாயாய்ச் சுருட்டி கடலுள் பதுக்கினான் என்ற புராணக் கதையின் உட்பொருள், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

புராணக் கதையின் உட்பொருளும், தமிழ் மன்னன் ஆரியர்களிடமிருந்து மண்ணைக் காத்தான் என்பதே!

நரகாசுரன் பூமி மைந்தன்:

நரகாசுரன் பூமிக்குப் பிறந்தான் என்று புராணம் கூறுவதன் உட்பொருள். பூமி பிள்ளை பெற்றது என்பதல்ல. ஆரியர்கள் வந்தேறிகள் பூமிக்கு உரியவர்கள் அல்ல, நரகாசுரன் மண்ணின் மைந்தன் என்பதைக் குறிக்கவேயாகும்.

சூரபதுமன் போர்:

சூரபதுமன் கதையின் உட்கரு, சூரபதுமன் தன் ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தினான். அது ஆரிய நில அபகரிப்புக்கு இடையூறாக இருந்தது. எனவே, சூரபதுமனை எதிரியாய்ச் சித்தரித்து, அவனைக் கடவுள் அழித்ததாய்க் கதை எழுதினர். சிறுபான்மை ஆரியர் போரிட்டு வென்றதாய்க் கூற முடியாது என்பதால், கடவுள் அவர்களுக்கு துணைநின்றதாய் கதை புனைந்தனர்.

இராமாயணம் என்பதும் ஆழமாய் ஆய்வு செய்தால் மண்ணுரிமைப் போரின் கற்பனை விரிவாக்கம் என்பது விளங்கும்.

சீதை இராமன் என்பதெல்லாம் கற்பனைப் பாத்திரங்கள்.

“சீதை” என்றால் “நிலம்” என்று பொருள். இராவணன் சீதையை கொண்டு சென்றான் என்றால், ஆரியர் அபகரித்த நிலத்தை இராவணன் மீட்டான் என்பதேயாகும்.

நிலம் சீதையாகவும், கரியமேகம் (மழை) இராமனாகவும் உருவகம் செய்யப்பட்டன. அதனால்தான் இராமனை நீலமேகவண்ணன் (கரியமால்) என்பர். கரியமேகம் மழையாய் பூமியை அடைவது “அவதாரம்” எனப்பட்டது. அவதாரம் என்பதற்கு மேலிருந்து கீழ் வருதல் என்பதே பொருள். அதுவே இராம அவதாரம் எனப்பட்டது. கரிய மேகம் மழையாய் பூமியில் வந்து சேர்வதை இராமன்-சீதை கல்யாணம் என்று கதைக்கப்பட்டது. காம உணர்வு மன்மதனாய் கதைக்கப்பட்டதுபோல.

இராவணன் இந்த இலங்கையில் வாழவில்லை. அவன் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இலங்கையில் வாழ்ந்தான். இன்னும் அவனுக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ளதே இலங்கை. தற்போது சிறீலங்கா எனப்படும் இலங்கை தென்னிலங்கை என்று அழைக்கப்படுவதிலிருந்து இவ்வுண்மையை அறியலாம்.

ஆக, இராவணன் மண்ணை மீட்ட மாவீரன் என்பதே உண்மையான நிகழ்வு.

ஆக, புராணங்களில் வரும் அசுரர்களானாலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் ஆனாலும் அவையெல்லாம் மண்ணுரிமைப் போர் சார்ந்த நிகழ்வுகளின் கற்பனை விரிவாக்கங்களே!

இராவணன், நரகாசுரன், மாவலி, சூரபதுமன் போன்றவர்கள் தமிழர் தலைவர்கள். தமிழர் மண்ணுரிமை காத்த மாவீரர்கள்.

எனவே, அவர்கள் நம்மால் போற்றப்பட வேண்டியவர்கள். இந்த உண்மை உணராது அவர்களைக் கொடியவர்களாய் ஆரியர் சித்தரித்ததை நம்பி, அவர்கள் அழிவைக் கொண்டாடுவது அறியாமை. எனவே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக்கொண்டதுபோல், அசுரர்களான நாம் போற்றிக் கொண்டாட வேண்டும். அது தமிழரின் கடமை!



No comments:

Post a Comment