அரசியல்

Thursday, June 15, 2017

திராவிடம் வேண்டாம் என்கிறாரா திருமாவளவன்?


- மஞ்சை வசந்தன்

“திராவிடத்தால் எழுந்தோம்!’’ என்று மேடைக்கு மேடை முழங்கியவர் திருமாவளவன்.

10 நாள்களுக்கு முன்புகூட, “தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கத் தயார்’’ என்றார். தி.மு.கழகத்திற்குள் தொல்காப்பியன் போன்றோர் திருமாவளவனுக்கு எதிராய் கருத்துப் பதிவுகள் செய்தபோது, என்னைப் போன்றோர் அதை வன்மையாகக் கண்டித்து திருமாவளவன் தி.மு.க.வோடு இணக்கமான நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் தமிழகத்தின் நலன் கருதி.

ஆனால், இரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் ஊகங்கள் வலுப்பெற்றதும், “தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது உண்மை’’ என்றும்; “கலைஞர், ஜெயலலிதா இடங்களை இரஜினிகாந்த் நிரப்புவார்” என்றும், திருமாவளவன் கருத்துக் கூறியிருப்பது அவருக்குள்ள சிந்தனைத் தெளிவை சந்தேகப்படச் செய்கிறது.

திருமாவளவனா பேசுவது? என்றே அவரது நலம் விரும்பக் கூடியவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். காரணம், மேற்கண்ட இரண்டு கருத்துக்களும் தப்பானவை; உண்மைக்கு மாறானவை, உள்நோக்கம் உடையவை! தமிழர் நலனுக்கு எதிரானவை.

தி.மு.க. தலைவர் கலைஞர் செயல்பாட்டில் தொய்வும் பின் முடக்கமும் ஏற்பட்ட நிலையில், ஸ்டாலின் திறமையாகவும், கடினமாகவும் உழைத்து தி.மு.க.வை வலுவான எதிர்கட்சியாக்கினார். ஜெயலலிதாவின் அதிகாரமும், ஜாதி செல்வாக்கும், பணபலமும்தான் அ.தி.மு.க. வெற்றிக்கு - அதுவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணங்களாகும்.

உண்மை இப்படியிருக்க, ஜெயலலிதாவின் வெற்றி அவரது ஆளுமைத் திறத்தாலும் மக்கள் செல்வாக்காலும் பெற்றதாகவும்; மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் செல்வாக்கைப் பெற முடியவில்லை என்றும் கூறுவது, அப்பட்டமான தப்பு; அசல் தப்பு. திருமாவளவன் திசைமாறுகிறார். அதுவும் தப்பான திசை நாடுகிறார்; எதையோ நம்பி இருப்பதையும் இழக்கிறார் என்பதையே இது வெளிப்யபடுத்துகிறது.

ஜெயலலிதாவிற்குப் பின் அ.இ.அ.தி.மு.க.வில் வெற்றிடம் என்றால்கூட அதை ஓரளவிற்கு ஏற்கலாம். காரணம், அங்கு கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்லும் தலைமை இல்லை. அதுகூட பி.ஜே.பி.யின் சதியாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் துரோகத்தாலும் ஏற்பட்டது.

ஆனால், தி.மு.க.வில் ஏது வெற்றிடம்? சற்றேறக்குறைய 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள, ஆளுமையும், திறமையும் உள்ள ஸ்டாலின் அங்கு கட்சியைக் கட்டுப்கோப்புடன் நடத்துகிறார். கலைஞர் காலத்தில் இருந்த பிளவுகூட தற்போது இல்லை. உண்மை இப்படி இருக்க, தி.மு.க.வில் ஏது வெற்றிடம்? எந்த வகையில் ஸ்டாலின் தகுதியற்றவர்? மக்கள் செல்வாக்கு அவருக்கு இல்லை என்பது அப்பட்டமான பொய் அல்லவா? ஸ்டாலின் செல்வாக்கு 2014 தேர்தலைவிட மிகவும் கூடியுள்ளது என்பதே உண்மை. ஆனால், ஆதிக்க சக்திகள் அதை மறைக்கின்றன. அதற்கு திருமாவளவனும் துணை போவதுதான் வேதனையளிக்கிறது.

தான் காலூன்ற, பி.ஜே.பி. தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற கோயபல்ஸ் பொய்யைச் சொல்லி, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவது போல, தோழர் திருமாவளவன் இரஜினிகாந்த்திற்காக ஒரு வெற்றிடத்தை தமிழக அரசியலில் காட்ட முற்படுகிறாரா? திருமாவும் திராவிடம் வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாரா?

திருமாவளவனுக்கு இது அழகுமல்ல, அடையாளமும் அல்ல. வழுக்குவது மனித இயல்பு. உடன் உண்மை உணர்ந்து தன்னைச் சரியான தடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தற்போது திருமாவளவன் அதைச் செய்தாக வேண்டும்.

இரஜினியைப் பிடித்து கறையேற நினைப்பதும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதும் ஒன்றே!

ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டும் மாயத் தோற்றமே இரஜினியின் மக்கள் செல்வாக்கு என்பது. உண்மையில் அவருக்கு 5% வாக்குக்கு மேல் கிடைக்காது.
அதுவும் சீமான், பாரதிராஜா போன்றோரின் “தமிழன்தான் ஆளவேண்டும்” என்ற கண்டனக் குரலுக்குப் பின், இரஜினியின் பழைய செல்வாக்குக்கூட குறைந்துவிட்டது.

அரசியலில் தொலைநோக்கும், துல்லியநோக்கும் இல்லையென்றால், வீழ்ச்சியை தடுக்க முடியாது. அப்படி வீழ்ந்து எழமுடியாமல் போனவர்கள் பலர். அப்பட்டியலில் திருமா சேர்வது அவருக்கும் நல்லதல்ல; அவரை நம்பி நிற்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் நல்லதல்ல. திருமாவிற்கு உரிய இடம் தி.மு.க. மட்டுமே! அந்த உறவே தமிழர்க்கு நலம் பயக்கும்! திருமாவளவன் தீர்க்கமாக சிந்தித்து, திடமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளும்; சந்தர்ப்ப வாதமும், சமுதாய பாதுகாவலர்களாக செயல்படுவோர்க்கு விலக்கப்பட வேண்டியவை! திருமா தெளிவு பெற வேண்டும். திடமாக திராவிடத்தின் பக்கம் (தி.மு.க. பக்கம்) நிற்க வேண்டும்.

கொள்கையே என்னவென்று தெரியாத நடிகர் பின் திருமாவா?

தமிழர்க்குத் தலைமை தாங்கும் தகுதியுடைய, ஆற்றலுடைய திருமா என்ற உண்மையான இடத்தை அவர் இழக்க விரும்புவது அவருக்கு மட்டுமல்ல, தமிழர்க்கும் கேடானது! இதை உணர்ந்து நடக்க வேண்டியது திருமாவின் கட்டாயக் கடமை!


No comments:

Post a Comment