அரசியல்

Thursday, March 30, 2017

ஆரியம் போற்றட்டும் சீதையை - தமிழன் போற்ற வேண்டும் மதிவதனியை!

ஆரியம் போற்றட்டும் சீதையை - தமிழன் போற்ற வேண்டும் மதிவதனியை!

யார் இந்த மதிவதனி? உள்ளே படியுங்கள்!

- மஞ்சை வசந்தன்

“1984, ஜனவரி 9, தமிழ் மாணவர்கள் மீதான இலங்கைக் கல்வித் துறையின் பாரபட்சத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் உண்ணானோன்பு மேற்கொண்டனர். அதில் நான்கு பேர் பெண்கள். மூன்ற நாள்களைக் கடந்தும் அந்தப் போராட்டம் தொடர்ந்தது. 

‘உங்களுக்காக நாங்கள் குரல்கொடுக்கிறோம். நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்துவிடாதீர்கள். போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று புலிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும், மாணவர்கள் மறுத்துவிட்டனர். காவல்துறையும் ராணுவமும் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருந்தன.

உண்ணாவிரதத்தின் ஆறாவது நாள் மாணவர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தனர். ஒன்று... அவர்கள் பட்டினியால் சாக நேரும் அல்லது அரசுத் தரப்பால் ஆபத்து நேரும் எனும் சூழல். அவர்களின் உயிரைக் காக்கும் பொருட்டு இயக்கம் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியது. ஒரு படகு மூலம் அவர்களை சென்னைக்குக் கொண்டுவந்து திருவான்மியூரில் இருந்த பாலசிங்கம் _ அடேல் தம்பதியினர் வீட்டில் தங்க வைத்தனர்.

அந்த மாணவிகளின் பெயர் _ஜெயா, வினோஜா, மதிவதனி, லலிதா. சென்னையில் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் ஹோலி பண்டிகை வருகிறது. அருகில் இருந்தவர்களைப் பார்த்து அந்த மாணவர்களும் வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடினர். அப்போது அங்கு வந்த புலிகள் தலைவர் பிரபாகரன் மீதும் மதிவதனி வண்ணப் பொடிகளைத் தூவினார். ‘இது நமது பண்டிகை இல்லையே...’ என்று பிரபாகரன் கோபப்பட்டார். ஆனால், இதன் மூலம்தான் மதிவதனி பிரபாகரனைக் காதலிப்பதை பாலசிங்கம் கண்டுபிடித்தார்.

உண்ணாவிரதத்தில் சாகாமல் காப்பாற்றப்பட்ட அதே மதிவதனிதான், 2009_ம் ஆண்டு மே மாதம் வரை, ஒவ்வொரு கணமும் மரணம் துரத்தத் துரத்தப் போராடி பிரபாகரனோடு வாழ்ந்தார்.

வண்ணப்பொடி தூவித் தொடங்கிய அவர் வாழ்வில், அதிகம் பார்த்த வண்ணம் ரத்தச் சிவப்புதான். பாலசிங்கத்தின் மனைவி அடேலும் மதிவதனியைப் போன்றவரே. இங்கிலாந்தில் பிறந்த அடேல் பல காலம் ஈழப் போர்க்களத்தில்தான் இருந்தார். அடேல்தான் புலிகளின் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தினார்.

பெண் புலிகளுக்கும் தலைமைக்குமான தொடர்பாளர்களாக மதிவதனியும் அடேலும் திகழ்ந்தனர். பால் வேற்றுமையற்ற தலைமை எனும் புலிகளின் செயல்திட்டத்தைச் செயல்படுத்தியதிலும், பெண்களுக்கான தனிப் படையணியை உருவாக்கியதிலும் இந்த இருவரின் பங்கும் முக்கியமானது. செஞ்சோலை சிறுவர் பள்ளியை நிர்வகிப்பதில் மதிவதனி பெரும் பங்காற்றினார்.

உலகம் எங்கும் நடந்த உரிமைக்கான போராட்டங்களில் இப்படியான பெண்களின் பங்கு பதிவுபெறாத வரலாறாகவே இருக்கிறது. 

மதிவதனியையும் அடேலையும் தனி மனுஷியாகப் பார்க்கவில்லை. களத்தில் போராடும் பெண்களின் பிரதிநிதியாகவே பார்க்கிறேன். கணவனோடு இலங்கைக் காடுகளில் அலைந்து திரிந்த சீதை காவியத் தலைவியானார். அதே ஈழத்து மண்ணில் அதே காடுகளுக்குள் அதைவிடவும் அதிக காலம் வாழ்ந்து, அந்த மண்ணிலேயே பிள்ளைகளைப் பெற்று அதே மண்ணுக்காக அவர்களை வாரிக்கொடுத்த மதிவதனி, நம் பாட்டுடைத் தலைவி இல்லையா?
போராட்டங்கள்தான் பாலின வேறுபாடுகளைக் களைகிற முதல் இடமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். 

ஆண்களைவிடவும் போராட்டக் களங்களில் பெண்கள் அதிக ஈடுபாட்டோடு செயல்படுவதையும், உணர்வு பூர்வமாக முழங்குவதை எதிர்த்து நிற்பதையும் கண்டு சிலிர்த்திருக்கிறேன். இதைத்தான் மெரினா போராளிகள் நமக்கு உணர்த்தினர். 

காவல் துறையினர் மாணவர்களை அடித்து, விரட்டி, கடலோரம் கொண்டுபோய் நிறுத்தியபோது, காப்பாற்ற வந்த மீனவர்களில் சரி பாதிக்குமேல் பெண்கள்தான்’’ என்று ஆனந்தவிகடனில் எழுதியுள்ளார் கவிதாபாரதி. 

தமிழன் மதமயக்கத்திலிருந்து விடுபட்டு, தமிழர் பெருமைகளைப் போற்றவும், பாதுகாக்கவும் வேண்டும். தமிழர் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்.

1 comment:

  1. /////ஆரியம் போற்றட்டும் சீதையை - தமிழன் போற்ற வேண்டும் மதிவதனியை!//////////////

    ராமாயணத்தை கூறும் அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பர் ஆகியோர்கள் எல்லோரும் முட்டாள்கள் !

    அப்போ, ராமர் & சீதையை பற்றி பாடிய பண்டைய தமிழ் புலவர்கள் எல்லாம் யார் ?

    அவர்களைவிட தற்கால திராவிட தமிழ் அறிஜர்கள் அறிவாளிகளா ?



    ReplyDelete