அரசியல்

Thursday, October 1, 2015

ஈழ விடுதலையை இறைவன் தருவாரா?.

ஈழ விடுதலையை இறைவன் தருவாரா?......

 விடுதலை போராட்ட வரலாற்றை எழுதுபவர் அதை நீர்த்து போகச் செய்யுமாறு முடிக்கலாமா?

 எழுத்தாளர் கா.அய்யநாதனுக்கு கேள்வி?


 .........ஈழம் அமையும்..........

 இலங்கைத் தமிழர் மண். அங்கு வந்தேறியவர்கள் சிங்களர்கள் என்ற வரலாற்று உண்மையை மாற்றி,

 இலங்கைத் தீவு பவுத்த மதத்தைப் பின்பற்றக்கூடிய, சிங்கள மொழி பேசும் மக்களுக்கு உரியது; இத்தீவில் வாழும் மற்ற இனங்கள் எதுவாயினும் அவர்கள் இம்மண்ணுக்கு வாழ வந்தவர்கள்; அவர்கள் யாரும் இலங்கைத் தீவைச் சொந்தம் கொண்டாட முடியாது என்கின்றனர் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.

 இதனால், மண்ணின் உரிமையாளரான தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்களானார்கள். அவர்கள் மொழியும் அப்படியே ஆனது.

 இதன் விளைவாய், தனி நாடு அமைந்தால் மட்டுமே தமிழர்கள் மானத்துடனும், உரிமையுடனும் அமைதியாய் வாழ முடியும் என்ற உறுதியான முடிவிற்கு வந்து அதற்காகப் போரிட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தலைமையில் அப்போர் நடத்தப்பட்டது.

 தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து 2008இல் உச்சக் கட்டத்திற்குச் சென்று, கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

 போரினால் பின்னோக்கி இடம்பெயர்ந்த லட்சக்கணக்கான தமிழர்கள் முல்லைத்தீவில் குவிந்தனர். பாதுகாப்பு வளையம் என்று தமிழர்களை ஏமாற்றிய சிங்கள அரசு தமிழர்களை ஒரே இடத்திற்குக் கொண்டு வந்தது.
நம்பி வந்து குவிந்த தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக குண்டுகளை வீசிக் கொன்றது. போரை நிறுத்தச் சென்ற இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இராணுவ நடவடிக்கை மூலம் சிக்கல் தீரும் என்று இலங்கை இராணுவத்திற்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டு வந்துவிட்டார். அதன் பின் போர் தீவிரமானது. பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த மக்களும் கொத்துக் குண்டுகள் வீசிக் கொல்லப்பட்டனர். தமிழினம் அழித்தொழிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட ஒரு இன அழிப்பு நிகழ்ந்தும் மேற்கத்திய வல்லரசுகள் வாய் திறவாமல், கண்டிக்காமல் இருந்தது ஏன்? இந்தியா இப்போரை ஆதரித்தது ஏன்? அது நியாயமா? இந்த முடிவு எடுக்கப்படுமுன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதா?

 இந்தியா உட்பட எல்லா நாடுகளும் புவி சார் நலன் அயலுறவு சிக்கல் என்ற அடிப்படையிலே இலங்கைப் பிரச்சினையை அணுகி, அதை மேலும் சிக்கலாக்கி, ஒட்டுமொத்தப் பாதிப்பையும் தமிழர் மீதுத் தள்ளி வரும் நிலையில்,

 இலங்கையரசின் குற்ற நடவடிக்கைகளை உலகுக்குக் காட்டி, வாழ்வித்து வாழப் போகின்றனவா? வீழ்வித்து வீழப் போகின்றனவா? உலக நாடுகள்? என்ற கேள்வியை வைக்கும் இந்நூலாசிரியர், இறைவன் தண்டிப்பான் அதன் மூலம் சிங்களர்க்குத் தண்டனை கிடைக்கும் என்று தனது கடவுள் நம்பிக்கையை வலியத் திணித்து, தீர்வை திசைமாற்றி நீர்த்துப் போகச் செய்துவிட்டார்.

 இத்தனை லட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வராத கடவுள், வந்துதவுவான் என்பது நொந்த உள்ளத்தில் செந்தழல் சொருகுவதாய் உள்ளது.
ஈழம் அமையும் என்ற இந்நூலின் தலைப்பைப் பார்த்து ஆவலுடன் படித்து முடித்தால், ஈழம் மலர்வது இறைவன் கையில் என்று முடித்து நீர்த்துப் போகச் செய்துவிட்டார்.

 - மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
https://www.facebook.com/manjaivasanthan

No comments:

Post a Comment