சற்றேறக்குறைய ஒரு மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை. 30 நாள்கள் மூடப்பட்டாலும் வாரம் இரு நாள் வழக்கமான விடுமுறை. மற்ற விடுமுறைகள் 10 நாள். எனவே, உண்மையான பாதிப்பு 20 நாள்கள்.
இனிவரும் நான்கு மாதங்களில் 16 சனிக்கிழமைகளை வேலை நாளாக்கினால் 4 நாள்கள் மட்டுமே குறையும். அதுவொன்றும் பெரிய இழப்பு அல்ல.
அரையாண்டுத் தேர்வை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி 12ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அரையாண்டு விடுமுறை பொங்கல் விடுமுறையோடு இணைந்து வந்து மாணவர்களுக்கு ஓய்வும், புத்துணர்வும் கிடைக்கும்.
தேர்வுகளை ரத்து செய்ய வேண்டாம். அரையாண்டுத் தேர்வுக்குரிய பாடப் பகுதிகளை குறைக்கலாம்.
விடுபட்ட பாடப்பகுதிகளை ஒரு மாதத் தேர்வாக நடத்திக் கொள்ளலாம்.
விடுபட்ட பாடப்பகுதிகளை ஒரு மாதத் தேர்வாக நடத்திக் கொள்ளலாம்.
தேர்வு இல்லை, எல்லோரும் தேர்ச்சி என்பவை சரியான அணுகுமுறையல்ல.
சென்னை மூழ்கியதால் இந்தப் பிரச்சினை பெரிதாகத் தெரிகிறது. இதுபோன்ற பாதிப்பு அடிக்கடி கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
ககன்சிங்பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது ஒரு மாத அளவிற்கு மழை வெள்ளப் பாதிப்பு நிகழ்ந்தபோது. நான் சேத்தியாதோப்பு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர். எனது பள்ளியில் மக்கள் தங்கியிருந்தார்கள். அப்போது மேற்கண்ட யோசனையை அவரிடம் கூறினேன். நாகை மாவட்ட ஆட்சியருடன் கலந்து அவர் மேற்கண்ட வகையில் தேர்வு அறிவித்து, பொங்கல்சேர அரையாண்டு விடுப்பு அறிவித்தார். அதுபோல் இரண்டு மூன்று ஆண்டுகள் பாதிக்கப்பட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை. எல்லோரும் தேர்ச்சி என்று சொல்லவில்லை.
மாணவர்களுக்கு உரிய வசதிகளை அரசு செய்து கொடுத்தால்போதும். கல்வியாளர்கள் முடிவில் அரசியல்வாதிகள் தலையிட வேண்டாம்.
எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளை வேண்டுமானால் இந்த மாதம் முடியும்வரை மூடலாம். பிஞ்சு குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்.
அரசும் கல்வியாளர்களும் இவற்றைச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.
No comments:
Post a Comment