அரசியல்

Monday, August 17, 2015

திருமணத்தில் பட்டுப்புடவை கட்டுவது அறிவியலா?

திருமணத்தில் பட்டுப்புடவை கட்டுவது அறிவியலா?

அறிவற்ற மூடச் செயல்களுக்கு அறிவியல் விளக்கங்களா?

- மஞ்சை வசந்தன்


பட்டுபுடவை நலம் தருமா?

தமிழர்கள் திருமணத்தில் பட்டுப்புடவை ஏன் கட்டுகிறார்கள் தெரியுமா? என்று கேட்டு, முட்டாள்தனமான, உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்களை முகநூலில் தந்துள்ளார். இவர்களுக்கெல்லாம் ஒரே நோக்கம், அறிவியல் வளர்ந்து மூடநம்பிக்கைகள், வீண் படாடோபங்கள் அழிந்துவிடக் கூடாது. எப்படியாவது முட்டுக் கொடுத்துத் தாங்க வேண்டும். மக்கள் முட்டாளாய் இருந்தால்தான் ஏய்க்கலாம். எனவே, மூடநம்பிக்கைகளுக்கு பொய்யான அறிவியல் காரணங்களைப் பரப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர்.

இந்த மேதாவி பட்டுப்புடவையை தமிழர்கள் திருமணத்தில் ஏன் கட்டுகிறார்கள்? என்று ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பித்தலாட்டமான சில விளக்கங்களைத் தந்துள்ளார்.

முதலில் திருமணத்தின்போது பட்டுப்புடவைக் கட்டுவது தமிழர் மரபல்ல. தமிழர்கள் கூரைச்சேலைதான் கட்டுவார்கள். எவ்வளவு பெரிய செல்வந்தர்களானாலும் திருமணத்தின்போது பருத்தி நூலாலான சிறு கட்டம் போட்ட கூரைச் சேலைதான் அணிவர். பட்டுப் புடவை கட்டுவது, கோட்டு, சூட் போடுவது எல்லாம் கால மாற்றத்திற்கு ஏற்ப பின்னால் வந்தது.

பட்டுப்புடவை ஏன் கட்டப்படுகிறது என்பதற்கு அறிவியல் காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்தாராம். எங்கு கண்டுபிடித்தார் என்ற ஆதாரத்தை நாணயமாகச் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லவில்லை. இதுவே இவரது மோசடியை வெளிப்படுத்துகின்றது.

பட்டுப்புடவை கெட்டக் கதிர்களை விலக்கி, நல்ல கதிர்களை தக்கவைத்துக் கொள்ளும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரம் உள்ளது? நேர்மையாய் பதில் சொல்ல வேண்டும்!

பட்டுப்புடவை துவைக்காமலே பலமுறைக் கட்டப்படுவது. அதைச் சூரிய ஒளியிலும் காயவைக்க முடியாது. எனவே, நோய்க் கிருமிகள்தான் சேரும். தோல்நோய்தான் வரும். உண்மை இப்படியிருக்க பொய்யான ஒரு மோசடிப் பிரச்சாரம் செய்கிறார் இந்த ஆள். இவுங்க சங்கராச்சாரியே பட்டுப்புடவை கட்டுவது பாவம் என்கிறார். ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சி கொல்லப்படுகிறது என்கிறார்.

அடுத்து, தங்கம் உடலில் பட்டால் இரத்த ஓட்டம் சீர்படுமாம். விரலில் மோதிரம் போட்டுக் கொள்வது விஞ்ஞான காரணமாம். இப்படி இவர் சொல்வதை எந்த அறிவியல் ஆய்வு நிரூபத்துள்ளது. நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்.

காலம்காலமாய் மக்களை மடையராக்கி ஏய்த்துப் பிழைத்தக் கூட்டம்.

எனவே, அருமைத் தமிழர்களே, இந்த மோசடிப் பேர்வழிகளின் வலையில் வீழாது அறிவோடு சிந்தித்து, அறிவுக்கு உகந்ததை ஏற்றுக் கொள்ளுங்கள்.

திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அதை எளிமையாய் பதிவு செய்து கொண்டாலே போதும். மாறாக, இலட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து கடனாளியாகி வாழ்நாள் முழுக்க அல்லல்படுவது அறிவுக்கழகா?

எனவே, திருமணங்களில் நகையும், பட்டும் கட்டாயம் இல்லை. அன்பும், பாசமுமே அடிப்படை. செல்வக் குடும்பத்தினர் தங்கள் மதிப்பைக் காட்ட செய்கின்ற போலி வேடங்கள் இவை என்பதை அறிய வேண்டும்.

_____

3 comments:

  1. அருமை அண்ணா

    ReplyDelete
  2. அருமை அண்ணா

    ReplyDelete
  3. பட்டு புடவை சம்மந்தமாக நீங்கள் சொல்வது ஏற்க கூடிய உண்மை.
    ஆனால் உலோகங்கள் அவ்வாறு அல்ல.

    ReplyDelete