அரசியல்

Saturday, January 23, 2016

திமுகவை அழிக்கத் துடிப்பவர்கள் யார்? திருமாவளவன் போன்றோருக்கு தீர்க்கமான நோக்கு வேண்டும்!



- மஞ்சை வசந்தன்

“திராவிடக் கட்சியில்லா ஆட்சி” என்ற ஒரு கானல் நீர் மயக்கத்தில் களம் இறங்கியுள்ளவர்கள் இருவகை.
 
1) உண்மையிலே திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் குறைகண்டு, வெறுப்புற்று மக்கள் நலன் கருதி மாற்றுத்தேடுகின்றவர்கள்.

2) இவர்களைப் பயன்படுத்தி திராவிட இயக்க ஆட்சியை அகற்றிவிட்டு வலுவான அமைப்பு இல்லா நிலையில் தங்கள் ஆதிக்க அரசியலை எளிதில் கொண்டு வந்துவிடலாம் எனறு ஆவல் கொண்டு அலைகின்ற ஆரிய பார்ப்பனர்கள், அவர்கள் அடிவருடிகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. பரிவாரங்கள், மத மயக்கத்தில் வெறிகொண்டு அலைகிறவர்கள்.

திராவிட கட்சிகள் என்று சொல்லும்போதும், எதிர்க்கும்போதும் இவர்கள் குறிப்பாக குறிவைப்பது திமுகவைத் தான். அதிமுகவை ஒப்புக்கு எதிர்ப்பதாய் காட்டுகின்றனர்.

திராவிட இயக்கம் என்பது நூற்றாண்டு உழைப்பின், தியாகத்தின், பிரச்சாரத்தின், திட்டமிடலின், செயலாக்கத்தின் விளைவு. அப்படியொரு கட்டமைப்பை, மக்களோடு கலந்த உணர்வை, பிணைப்பை பின்பற்றலை, பேணுதலை ஒரு சில காரணங்களுக்காக ஒழித்துக்கட்டிவிட்டு வேறொன்றைக் கட்டமைப்பது என்பது கற்பனைச் சித்தாந்தம்.

டில்லியில் வரவில்லையா திடீர்மாற்றம், அஸ்ஸாமில் வரவில்லையா அதிரடிமாற்றம் எனறு வாதிடலாம். டில்லியில் சூழல் வேறு, அஸ்ஸாமில் எழுந்த உணர்ச்சி வேறு. ஆழகமாகச் சிந்தித்து ஆய்வு செய்தால் விளங்கும். அதை எண்ணி இங்கு முயல்வது அரைவேக்காட்டுத்தனம் அடிப்படையை அறியா நிலை.

ஓர் இயக்கம் என்பது தேர்தலுக்காக அமைக்கப்படுவதில்லை, தலைமுறைக்காக அமைக்கப்படுவது. குறைகள் இருந்தால் களையப்பட வேண்டும், குற்றம் புரிந்தோர் நீக்கப்பட வேண்டும்.

மாறாக ஓர் எழுத்தை சேர்த்துக் கொண்டு பிரிந்து செல்வதும், இருந்த இயக்கத்தை அழிக்க நினைப்பதும் தன்முனைப்பு அல்லது அதிகார அரிப்பு என்பதைத் தவிர ஆழமான காரணம் வேறு இருக்க முடியாது.

திமுக வை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தது வரலாற்றுப் பிழை. திராவிட இயக்கம் நீர்த்துப்போனதற்கு அதுவே முதன்மைக் காரணம்.

கட்சியில் கணக்குக் கேட்டு கட்சியின் கணக்குகளைச் சரி செய்ய வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். இலக்கு என்றால் என்ன செய்திருக்க வேண்டும்?

தன் கோரிக்கையில் நியாயம் இருந்தால், அதை கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அதை விளக்கி தன் பக்கம் உறுப்பினர்களை பெருமளவு ஈர்த்து தீர்வுகாண வேண்டும். அதை விட்டுவிட்டு, கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியவற்றை பொதுமக்கள் மத்தியில், பொதுக்கூட்டத்தில் பேசுவது உள்நோக்கம், சுயநல நோக்கம், தன்முனைப்பு இல்லாமல் வேறு என்ன? எம்.ஜி.ஆரின் கோரிக்கை சரியென்றால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவைப் பெற்று குற்றவாளியை விலக்கிக் கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதுதானே சனநாயகம் அதை விட்டுவிட்டு, வேறு கட்சி தொடங்கும் திட்டத்தை முன் கூட்டியே வகுத்துக் கொண்டு அதற்கேற்ப குற்றம் சுமத்திச் செயல்படுவது சனநாயக முறைப்படி சரியாகுமா?

அடுத்து மதிமுகவை வை.கோ. உருவாக்கியது. வை.கோவின் கோரிக்கை சரியென்றால் அதை செயற்குழு பொதுக்குழுவில் விளக்கி, உறுப்பினர்களின் ஆதரவை பெற்றே குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், வெளியேற்ற வேண்டும், கட்சியைத் தூய்மைப்படுத்த வேண்டும். பெரும்பான்மையை பெறமுடிய வில்லையென்றால் சனநாயகமுறைப்படி அது அவருக்குத் தோல்விதானே! அதை ஒத்துக்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உழைப்பது தானே சரியான நெறி? பி.ஜே.பி ஒரு மதவாதக் கட்சி என்பது உளச்சான்று உடைய ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆர்.எஸ்.எஸ். அதன் பின்னின்று ஆரிய சனதன ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடிக்கிறது என்பது எல்லோருக்கும் புரியும். இந்தியச் சூழலுக்கு ஏற்பில்லா பாசிசக் கட்சி பிஜேபி ஆனால் சனநாயக முறைப்படி தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும் அந்த ஆட்சியை நாம் எற்றுத்தானே ஆகவேண்டும்.

அடுத்து மக்களைச் சந்தித்து அவர்கள் ஆதரவோடு ஆதிக்கம் மேலோங்காமல், பாசிசம் பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்த வாய்பில் மக்கள் ஆதரவோடு நாம் விரும்பும் ஆட்சியை அமைக்க முயல வேண்டும். அதுதானே மக்களாட்சி மாண்பு.

இந்த அணுகுமுறை சனநாயக முறைப்படி இயங்கும் கட்சிகளுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியிருக்க தனிக்கட்சி தனிக்கொடி என்பது தன்முனைப்பு, தன்னல வேட்கை, அதிகார ஆவல் அன்றி வேறு நோக்கம் எப்படியிருக்க முடியும்?

தன்னினும் முன்னிலையில் இருந்த நாவலர், பேராசிரியர் ஆகியோரிருக்க எம்.ஜி.ஆரின் உதவியோடு தான் சனநாயக முறைப்படிதான் கலைஞர் தலைமைக்கு வந்தார். அப்படித்தான் எம்.ஜி.ஆர் வந்திருக்க வேண்டும். வை.கோ வந்திருக்க வேண்டும். இப்போது ஸ்டாலினை முந்த நினைப்பவர்களும் அப்படித்தான் சனநாயக முறைப்படி பொதுக்குழு முடிவின்படி முந்த வேண்டும்.

ஆக, திமுக கழகத்தின் தலைவராக கலைஞரை அந்த அமைப்பு ஏற்கிறது. அதனால் அவர் தலைவராக இருக்கிறார். ஸ்டாலினை பொருளாளராக அந்த அமைப்பு ஏற்கிறது அவர் பொருளாளராக இருக்கிறார்.

அடுத்து ஊழல். திமுகவை ஒழித்துக்கட்ட எதிரிகள் ஏந்தும் ஆயுதம் இது. ஊழல் என்பதற்கு என்ன இலக்கணம்? ஊழல் இல்லா அரசியல் இயக்கம் உண்டோ? ஒரு தேர்தலுக்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஒவ்வொரு கட்சியும் செலவிடுகிறதே அவையெல்லாம் உழைத்து வந்த பணமா? ஒவ்வொரு முதலாளிகளும், கம்பெனிகளும் அளித்த பெருந்தொகை, முறை கேடாக பல வகையில் பெற்றது. இதில் எந்தக் கட்சி விலக்கு?

அரசியலுக்கு இரஜினி வரவேண்டும், விஜய் வரவேண்டும் ஊழல் ஒழியும் என்கின்றன பல ஊடகங்கள்.

இன்றைக்கு வந்த சிவகார்த்திகேயன் 9 கோடி ரூபாய் ஒரு படத்திற்கு வாங்குவதாய் சொல்கிறார்கள். அப்படியென்றால் ரஜினி இதுவரை எவ்வளவு கோடி வாங்கியிருப்பார், விஜய் எவ்வளவு கோடி வாங்கியிருப்பார். அவ்வளவு ரூபாயும் கணக்கில் காட்டப்பட்டு, அவ்வளவு தொகைக்கு வருமான வரி செலுத்துகிறார்களா?

கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பவர்கள் தானே இவர்கள். இதைவிடவா பெரிய ஊழலை அரசியல்வாதிகள் செய்துவிட்டார்கள்? இவர்களைத் தெய்வமாக அல்லவா இன்றைய ஊடகங்கள் காட்டுகின்றன?

இது என்ன இரட்டை அளவுகோல்? முரசொலிமாறன் குடும்பம் சம்பாதித்து விட்டது. அது கலைஞர் செய்த ஊழல் என்று பெருக்கிக் காட்டப்படுகிறது.

அம்பானியும் அதானியும் சில ஆண்டுகளில் ஆயிரமாயிரம் கோடி சம்பாதித்து பணக்காரர்களாய் ஆகும் போது, முதன் முதலில் தொலைக்காட்சி தொடங்கிய நிறுவனம் சம்பாதிக்காதா? கேசட் கடை வைத்திருந்த ராஜ் டி.வி. நிறுவனம் இன்றைக்கு இத்தனை ஆயிரம் கோடி சம்பாதிக்கவில்லையா?

இவை இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சுரண்டல் சீர் கேட்டின் விளைவுகள். அதைக் கொண்டுபோய் திமுக மீது சுமத்தி திமுகவை அழிக்க நினைப்பது எப்படிச் சரியாகும்?

2ஜி ஊழல்! ஊதிஊதிக் காட்டி மக்கள் மனதில் ஒரு வெறுப்பை விதைத்து விட்டார்கள்.

இராஜீவ்காந்தி கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம் என்று தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் பச்சைப் பொய்யைப் பரப்பி ஒரு தேர்தலில் திமுகவை வீழ்த்தினர்.

இலங்கை விடுதலைப்புலிகளுக்கு கலைஞர் ஆதரவு அளித்தார் என்று சொல்லி இருமுறை திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.

உறுதி செய்யப்படாத 2ஜி ஊழலை சொல்லி ஒரு தேர்தலில் தோற்கடித்தார்கள். அதையே அய்ந்தாண்டு கழித்துச் சொல்லி அடுத்தத் தேர்தலில் தோற்கடிக்கப் பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அவ்வழக்கைக் காத்திருந்து கொண்டு வருகிறார்கள்.

ஜெயலலிதா செய்தால் ஊழல் இல்லை. கலைஞர் செய்தால் ஊழல். இது கம்யூனிஸ்டுகள், தினமணி, தினமலர், தினத்தந்தி, குமுதம் பத்திரிகைகளின் கருத்து. இப்படிப்பட்ட யோக்கியர்கள்தான் இன்று, நீதிநேர்மை, வாய்மை, தூய்மைக்காக முழங்குகிறார்கள். இதைச் சொல்லும் போது கம்யூனிஸ்டுகளுக்கு வலிக்கும். எத்தனை வழக்குகளில் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவோடு நீங்கள் கெஞ்சிக் கூத்தாடி கூட்டு சேர்ந்தீர்கள்! அப்போது ஊழல் தெரியவில்லையா? இப்போதுதான் தெரிகிறதா?
இன்றைக்கு நம்முன்னே நிற்பவை இரண்டு. ஒன்று மதவாதம், பாசிசம் ஏந்தி நிற்கும் பி.ஜே.பி.யின் ஆபத்து. இரண்டு எங்கும் பரவி நிற்கும் ஊழல் கேடு.

இதில் எது முதலில் ஒழிக்கப்பட வேண்டும்? மதவாதம் ஆபத்தல்லவா? மதவாதத்தை முதலில் ஒழித்துவிட்டு ஊழல் கேட்டை அடுத்து ஒழிக்க முயல்வதே சரியான அணுகுமுறை.

ஊழல் காரணம் கூறி திமுகவை வீழ்த்திவிட்டால், அதிமுக எளிதில் ஆட்சிக்கு வரும். அதிமுக என்பது பிஜேபியின் வேறுவடிவம். இதை பிஜேபி காரர்களே சொல்கிறார்கள். இது நல்லதா?

திமுக ஒழிக்கப்பட்ட இடத்தில் மதிமுக வரவாய்புண்டா? கம்யூனிஸ்ட் வர வாய்ப்புண்டா? விடுதலைப் சிறுத்தைகள் வரமுடியுமா?

முயன்று பார்க்க இத்தேர்தல் சரியான தருணமல்ல. ஒரு மாபெரும் இயக்கத்திற்கு மாற்று ஏற்பாட்டை ஆறுமாதத்தில் உருவாக்கிட முடியாது.

அதிரடி மாற்றம் தமிழகத்தில் நிகழாது. எழுத்தாளர் ஞானி, கம்யூனிஸ்ட் மகேந்திரன் போன்ற நேர்மையான தூய்மையானவர்களைத் தேர்தலில் மக்கள் ஏற்றார்களா? இல்லையே?

நூற்றுக்கணக்கான வாக்குகள் தானே அவர்களால் வாங்க முடிந்தது. இதுதான் இங்குள்ள அரசியல்.

எனவே, சீமான் ஒருபக்கம், அன்புமணி மறுபக்கம், மக்கள் நலக்கூட்டணி இன்னொருப்பக்கம் என்று வாக்குகளைச் சிதைப்பது, பிரிப்பது பிஜேபின் பிம்பமான அதிமுக ஆட்சி மீண்டும் அமையவே வழிவகுக்கும்.

அதற்கு, திராவிடக் கொள்கைப் பற்றுடைய, மக்கள் நலக்கூட்டணியோடு ஒத்துப் போகும் இலக்குடையதிமுக கழகத்திற்கு இந்த தேர்தலில் ஒருவாய்ப்பளித்து ஆட்சியில் அமரச் செய்வது தமிழகத்திற்கும், மதவாத ஆபத்தை தவிர்ப்பதற்கும் பயன்படும்.

தி.மு.க. சரியான கட்சி என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படவில்லை. அதன் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தெரிந்தே சொல்கிறோம். வேறு வழியில்லை. ஒரு பக்கம் சாக்கடை இன்னொரு பக்கம் சேறு. சாக்கடையில்  இறங்குவதைவிட சேற்றில் இறங்குவோம் என்பதே இதன் மூலம் சொல்வது.

இது தற்காலிக தீர்வுதான். அடுத்த 5 ஆண்டுகளில் முறைப்படி மாற்று ஆட்சிக்கு வழி செய்ய வாய்ப்பு உள்ளது.

2021 தேர்தலைச் சந்திக்க புதிய முயற்சிகளை நன்கு திட்டமிட்டு ஒற்றுமையாய இருந்து செயல்படுத்துங்கள். அதுதான் நடைமுறைக்கு உகந்ததாய் இருக்கும். 2015 தேர்தலை சோதனை களமாக புதிய முயற்சிக்கான தடமாக ஆக்காதீர்கள். அது அதிமுக ஆட்சி அமைக்கவே உதவும்.

திமுகவை ஆதரித்து இக்கருத்துக்களை நாங்கள் சொல்லவில்லை. தமிழர்களின் நலன் கருதி தொலைநோக்கோடு இவற்றை கூறுகிறோம். சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment