இலவசம் வேண்டாம்!
மதுக்கடைகளை மூடு!
எங்கும் ஒலிக்கட்டும் இம்முழக்கம்!
- மஞ்சை வசந்தன்
நான்கு
வயது சிறுவனுக்கு தாய்மாமன் சாராயம் ஊற்றிக் கொடுக்கிறான். அக்குழந்தை அதை
வாங்கிக் குடித்துவிட்டு ஊறுகாயைத் தொட்டு நக்குகிறது!
இந்த
அவலத்திற்குப் பிறகு மதுக்கடைகளை ஓர் அரசு திறந்து வைத்துக்கொண்டு, அந்த
வருமானத்தை அச்சாகக் கொண்டு அரசு நடத்தி வருவதைவிட மக்கள் விரோதச் செயல் -
மானங்கெட்ட செயல் வேறு என்ன இருக்க முடியும்?
ஊருக்கு
நான்கு பேர் ஒளிந்து ஒடுங்கிக் குடித்தது மாறி, உழைத்துக் களைத்தவன்
குடித்தது போய், வயது வந்தவர்கள் குடித்ததற்கு மாறாய், பள்ளி மாணவர்களும்
குடிக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வந்து மறைவதற்குள் பச்சிளம்
குழந்தை குடிக்கிற நிலையும் வந்துவிட்டது! பெண்களும் குடிக்கத்
தொடங்கிவிட்டார்கள்!
இப்படி,
சமுதாயத்தைச் சாக்கடையாக்கி, அழித்து நாசமாக்கி, ஒழித்து
ஒன்றுமில்லாமலாக்க ஓர் அரசு எதற்கு? அதுவும் மக்கள் நல அரசு ஏன்? மானம்,
வெட்கம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் ஆட்சி நடக்கலாமா? மக்களின்
எதிர்கால வாழ்வுக்கு, வாரிசுக்கு, வளர்ச்சிக்கு என்ன உத்தரவாதம்?
கண்ணியமாய் மானத்தோடு வாழ நினைக்கின்றவர்கள் வாழ்வதற்கு என்ன பாதுகாப்பு?
பெண்கள்
நடமாட முடியாத அவலநிலை! வீட்டில்கூட இளம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
கூலிக்குக் கொலை செய்தல், வன்புணர்ச்சி, அடிதடி, வன்முறை, மோசடி,
தாக்குதல், திருட்டு, வழிப்பறி என்று எத்தனை கொடுமைகள் உண்டோ அத்தனையும்
அன்றாடம், அனைத்து இடங்களிலும் நடக்கிறது.
நல்லவர்கள்
நாட்டில் வாழவே முடியாது என்ற சூழல் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
பெற்ற மகளை குடிகார அப்பன் பலாத்காரமாய் உறவு கொள்வதும், சகோதரியை சகோதரன்
சாராயப் போதையில் வலுக்கட்டாயமாய்ப் புணர்வதும், மாமனார் மருமகளை
அச்சுறுத்தி இச்சையைத் தீர்ப்பதும் என்று என்னென்ன அயோக்கியச் செயல்களும்,
அவலங்களும், கேவலங்களும் உண்டோ அத்தனையும் அன்றாட நிகழ்வுகளாக அதிகரித்து
வருகின்றன.
அனைத்திந்திய
பெண்கள் அமைப்பு கோவையில் ஜூலை 2ஆம் தேதி, குடியால் பாதிக்கப்பட்ட
குடும்பங்களின் கோரிக்கை மாநாடு ஒன்றை நடத்தியது. அங்கு கோவை மாவட்டத்தைச்
சேர்ந்த, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர், தங்களுக்குக் குடியால் நேர்ந்த
கொடுமைகளை வெந்த மனத்திலிருந்து வெளிப்படுத்தினர்.
நெஞ்சு பதைக்கும் அந்த உள்ளக் குமுறல்களைப் பாருங்கள்.
கோவை
நகரைச் சேர்ந்த பெண், என்ர வூட்டுக்காரர், பையன் ரெண்டு பேருமே தினமும்
மூக்கு முட்ட குடிப்பாங்க. வூட்டுக்காரராச்சும் போதையில வந்து சோத்த
கொட்டிட்டு, என்னையும் நாலு சாத்து சாத்திட்டு அக்கடான்னு படுத்துடுவாரு.
ஆனா, என்ர பையன் ரொம்ப கேவலமான ஜென்மங்க. இத சொல்றதுக்கே கூச்சமா
இருக்குது... தண்ணிய போட்டுட்டு வந்து என் மகளை (குடிகார பையனின் அக்கா)
தப்பான நினைப்போட ரொம்பவே டார்ச்சர் பண்ணுவானுங்க. நான் அடிச்சுப்
பார்த்தும் போலீஸ் வரைக்கும் விஷயம் போயும் அவன் திருந்தலை. ஒரு கட்டத்துல
இவனோட டார்ச்சர் தாங்க முடியாம அவ, தன்னை விட சின்னப்பையனை கல்யாணம்
பண்ணிட்டு வூட்டை விட்டுப் போயிட்டா என்றபோது அரங்கம் அதிர்ச்சியில்
உறைந்தது.
கிணத்துக்கடவு
வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஊருக்கு நடுவுல டாஸ்மாக் கடையை
வெச்சிருக்காங்க. ராப்பகலா குடிகாரனுங்க பண்ற அழும்பு தாங்க முடியலைங்க.
தண்ணீர் பிடிக்கப்போற பொம்பளைங்களை அசிங்கம், அசிங்கமா பேசி
வம்பிழுக்கிறாங்க. காரைக் கொண்டு வந்து நிப்பாட்டி, ஸ்கூல், காலேஜ் போற
பொண்ணுங்களை கிண்டல் பண்ணுறாங்க. எங்க ஏரியா பொம்பளைங்களுக்கு தினமும்
போராட்டமாதான் இருக்குதுங்ணா வாழ்க்கை என்றார்.
பொள்ளாச்சியைச்
சேர்ந்த இளம்பெண், எங்க வூட்டுக்காரருக்கு குடிக்குறது மட்டும்தானுங்க
பொழப்பு. வருமானத்துக்காக தேங்காய் நார் கம்பெனியில நான் வேலைக்கு
போறேனுங்க. சம்பாதிச்சுட்டு வர்ற காசை அடிச்சு, மிதிச்சு பிடுங்கி
குடிக்கிறதுக்கு கொண்டு போயிடுறார். இந்தாளு டார்ச்சர் தாங்கமுடியாம
வேலைக்கு போனா அங்கே ஓனரும் தறிகெட்டு குடிச்சுட்டு வந்து கையைப்
பிடிக்குறான். பெத்த புள்ளைங்க மூஞ்சிக்காக இன்னும் உசுரோட உலவுறேன்....
என்று வெடித்தபோது ஒலிபெருக்கிகூட உறுமியது.
கோவை
நகரில் கூட்டுக் குடும்பத்தில் வாழும் ஒரு பெண்ணின் வீட்டில் மாமனார்,
கணவர், கணவரின் தம்பி, நாத்தனாரின் கணவன் உட்பட ஆறு ஆண்களுமே மொடாக்
குடிகாரர்கள். கண்ணு மங்க குடிச்சுபோட்டு வந்து தினமும் எங்க குடும்பத்துல
அட்லீஸ்ட் ஒரு ஆளாச்சும் டிச்சுல (சாக்கடை) வுழுந்து கெடப்பாங்க.
பொம்பளைங்க போய்தான் தூக்கி கூட்டிட்டு வருவோமுங்க. புருஷனைக்கூட தோள்ல கை
போட்டுக் கூட்டியாந்துடலாமுங்க, மாமனாரையும் கொழுந்தனையும் எப்படிங்க?
என்று முடிக்க முடியாமல் அப்பெண் முகம் கவிந்து கொண்டார். அவர் முகத்தைப்
பார்க்கும் திடம் பார்வையாளர்களுக்கும் இல்லை. வெட்கித் தலை குனிந்தார்கள்.
பாதிக்கப்பட்டோரை
அமைதிப்படுத்திய மனநல ஆலோசகரான டாக்டர் இந்துமதி, உங்க உணர்வுகளைப்
புரிஞ்சுக்க முடியுது. எங்ககிட்ட பேஷன்டுகளைக் கூட்டிட்டு வர்ற சில
பெண்ணுங்களோட கதை இதைவிட அதிர்ச்சியாகவெல்லாம் இருக்கும். இன்னைக்கு 25
வயசுல இருந்து 40 வயசுக்குள் இருக்கிற ஆண்களில் கால்வாசிப் பேருக்கும் மேலே
மதுவால்தான் இறக்கிறாங்க. ஜாலியா ஆரம்பிச்ச குடிப்பழக்கத்துக்கு தங்களை
அறியாமலே அடிமை ஆகிடுறாங்க. அந்த நேரம் வந்தாலே கைகால் உதறுது. மனசு
பதறுதுன்னாலே அவர் குடிக்கு அடிமையாகிட்டதா அர்த்தம். அவங்க, குடிக்கான
சிகிச்சை எடுக்கிறதை அவமானமா நினைக்கிறதுதான் அவலம். அழுதோ, ஆர்ப்பாட்டம்
செய்தோ அவங்களை எங்ககிட்டே கூட்டிட்டு வாங்க. நாங்க மீட்டெடுக்கிறோம் என்று
நம்பிக்கையூட்டிப் பேசினார்.
இறுதியில்
பேசிய உ.வாசுகி, குடி அப்படிங்கிறது ஒரு சமூக நோய். குடியால பாதிக்கப்படுற
பெண்களோட கதையை கேட்டு கேட்டு மனசு மரத்துப்போச்சு. குடிக்கிறதை தட்டி
கேட்கிற தன் மனைவியின் வாயை அடைக்க 99% ஆண்கள் பயன்படுத்தும் ஒரே ஆயுதம்
நடத்தை மீது சந்தேகப்படும் செயல்தான். நீ யார்கூட சுத்துற? அப்படிங்கிற
ரேஞ்சுல ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டா போதும். இந்த பொம்பளைங்க ஒரு ஓரமா
உட்கார்ந்து அழ ஆரம்பிச்சுடுவாங்க. தற்போது குடிப்பழக்கமுடையவர்களின்
குறைந்தபட்ச வயது 13 என்று வரும் புள்ளிவிவரம் பதற வைக்குது!
மது
இல்லாத தமிழகம்தான் தமிழக பெண்களின் கனவு. அந்த இலக்கை அடைய அடுத்தடுத்த
நிலைகளாய் முன்னேறுவதுதான் சாத்தியம். எனவே, அரசாங்கம் முதல் கட்டமாக பகல்
நேரங்களில் மதுபானக் கடைகளை மூட வேண்டும். 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு
மது விற்கக் கூடாது. வாரத்தில் ஓரிரு நாட்களாவது மது விற்பனையை நிறுத்த
வேண்டும். ஒரு பகுதியில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினர், அங்கே
டாஸ்மாக் வேண்டாம் என்று சொன்னால் அக்கடையை உடனே அகற்ற வேண்டும்.
இதையெல்லாம் அமல் செய்தாலே கூடிய விரைவில் மது இல்லாத தமிழகம்
சாத்தியம்தான் என்றார்.
குடி
எந்த அளவிற்கு இன்றைய இளைஞர்களை நாசப்படுத்தியுள்ளது என்பதற்கு இதோ ஓர்
எடுத்துக்காட்டு. திருமணமான வாலிப ஆண் குடியால் உடலுறவு ஆற்றல் இழந்து
நித்தம் நித்தம் அவமானத்தால் சுருண்டுகிடக்கிறான். அவனது மனைவியின்
குமுறலைப் பாருங்கள்.
முதலிரவு
அன்னைக்கி ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்தார். என் மீது கை வெச்சார்.
முத்தம் கொடுத்துக் கட்டிப்பிடிச்சார். அப்புறம் படுத்துத் தூங்கிட்டார்.
மறுநாள் என்னைத் தொடவே இல்லை. இன்னொரு நாள் பக்கத்துல வந்தவுடனே
படுத்துவிட்டார். இந்த ஒரு மாசத்துல நான்கைந்து தடவை என்னைக்
கட்டிப்பிடிச்சாரே தவிர, வேறு எதுவுமே நடக்கலை என்று அந்தப் பெண் சொன்னார்.
அதை வைத்து, அந்தப் பையன் ஒரு (இம்பொட்டென்ட்) இணைந்தியங்க இயலான் ஆக
இருக்கலாம் என்று சோதிக்க, அதுதான் உண்மை என்பது உறுதியானது.
பையனின்
பெற்றோரை விசாரித்தபோது பள்ளிக்கூட வயதிலேயே அந்தப் பையன் குடிக்க
ஆரம்பித்துவிட்டான் என்று சொன்னார்கள். சிறு வயதிலேயே குடிப்பழக்கத்தை
ஆரம்பித்ததன் காரணமாக, அவனுடைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிட்டது.
அதனால், ஆண்மைத்தன்மையை இழந்துவிட்டான். அதாவது, பெண்ணுடன் உறவுகொள்ள ஆசை
இருக்கும். ஆனால், அவனுடைய ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடையாது. மனதளவில்
ஆசை இருந்தாலும் அவனால் உடலுறவு கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலைக்கு
இந்தப் பையன் வந்துவிட்டான். அதனால், பையனின் பெற்றோரையும் வரச் சொல்லி,
முறையான சிகிச்சை அளித்தால் அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம்
என்று பல ஆலோசனைகள் சொல்லப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அதில் அவர்கள்
ஆர்வம் காட்டவில்லை. இப்போது அவனிடம் இருந்து அவன் மனைவிக்கு சட்டப்படி
விவாகரத்து வாங்கிவிட்டனர்.
தமிழ்நாட்டில்
இன்றைக்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி கோடியை
எட்டிவிட்டது. குடிப்பவர்களில் பலர் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும்
படிக்கும் மாணவர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். சிலர், 12-13
வயதில்கூட குடிக்கிறார்கள். இதுதான் மிகப்பெரிய ஆபத்து. மனிதர்களின் மூளை
வளர்ச்சி 18 வயதில்தான் முழுமை அடையும். மூளை வளர்ச்சி முழுமை அடைவதற்கு
முன்பே குடிக்க ஆரம்பித்து, பல வருடங்கள் தொடர்ந்தால் நிச்சயம் அவர்களுக்கு
மலட்டுத்தன்மை ஏற்பட்டுவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். திருமண
வயது வரும்போது, தாம்பத்திய உறவுக்கான தகுதியை இழந்துவிடுகிறார்கள்.
குடிநோயாளிகள்,
பலவிதமான பாலியல் பாதிப்புகளுக்கு (Sexual dysfunction) ஆளாகிறார்கள்.
அவர்களுக்கு பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைந்துவிடும். சிலருக்கு உடலுறவு
மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும். ஆண் குறி விரைப்புத்தன்மை குறைந்துவிடும்.
சிலருக்கு முற்றிலுமாக விரைப்புத்தன்மையே இருக்காது. உடலுறவின்போது,
முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. உடலுறவு ஆரம்பிக்கும்போதே
துவண்டுவிடும். அதனால், இருவருக்குமே விரக்தியும் ஏமாற்றமும் ஏற்படும்
என்கிறார் மருத்துவர் நாராயண ரெட்டி.
கணவன் ஆண்மையிழந்ததால் மாமனார் மன்மத லீலைத் தொடங்கினார்.
தமிழ்நாடு
காவல் துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர், அந்த போலீஸ் அதிகாரி.
அவரது மகனுக்கு 25 வயது. அவனுக்குத் தீவிரமாகப் பெண் தேடினார்கள். அவன்
குடிப்பழக்கம் உள்ளவன் என்பதால், அவனுக்குப் பெண் தர யாரும் முன்வரவில்லை.
ஓர் ஏழைக் குடும்பத்துப் பெண்ணை கட்டி வைத்தார்கள். 8ஆம் வகுப்பு
படித்தவள். ஆனாலும், நல்ல அழகு. 10வது மாதத்தில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. அந்தக் குழந்தையின் உண்மையான தகப்பன் கணவன் அல்ல, அந்த போலீஸ்
அதிகாரி (மாமனார்) என்பதுதான் அதிர்ச்சி.
அவன்
பள்ளியில் படிக்கும்போதே குடிக்க ஆரம்பித்தான். அதனால், மிக மோசமான
அளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தான். ஆண்மைத்தன்மை பாதிக்கப்பட்டது
(Impotency). ஏழைப் பெண்ணை ஏமாற்றி அவனுக்குக் கட்டிவைத்தனர். அந்தப்
பெண்ணை அவன் தொட்டுக்கூட பார்க்கவில்லை. மாமனாராகிய அந்த போலீஸ் அதிகாரி,
என் மகனால் இயங்க முடியாது. உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி
அந்தப் பெண்ணை மிரட்டி தகாத உறவு வைத்துக்கொண்டார். இதற்கு மாமியாரும்
உடந்தை, வெளியே சொல்லிடாதம்மா... என்று கெஞ்சியவாறு அப்பெண்ணை
அடக்கியுள்ளனர். இப்போது, அந்தப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள்.
எவ்வளவு ஆபாசம், அவலம், அசிங்கம் பாருங்கள். இவையெல்லாம் மதுக்கடை தந்த விளைவுகள் அல்லவா? விபரீதங்கள் அல்லவா?
இப்படி
குடும்பத்தைக் குலைத்து, பண்பாட்டை அழித்து, ஒழுக்கத்தை உருக்குலையச்
செய்து, சமுதாயத்தைச் சாக்கடையாக்கி, பள்ளி மாணவர்களை 10 வயதிலே குடிக்கச்
செய்து, அவர்களை எதிர்கால இல்வாழ்வுக்கு இயலாதவர்களாக்கி, இருளடையச் செய்து
மதுவால் வருவாய் பெற்று, இலவசங்கள் வாங்குகிறோம் என்றால், அப்படியொரு
இலவசத்தை எவர் கேட்டார்? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி என்ன பயன்?
சிந்திக்க வேண்டாமா?
வாக்கு
வாங்க, இலவசம் வழங்க, வருவாய் ஈட்ட, மக்களை சீரழித்து மதுக்கடைகளை இந்த
ஆட்சித் தொடருமேல் இதுவே இந்த ஆட்சிக்கு இறுதிகட்டும் என்பது உறுதி!
படிப்படியாக
அல்ல பரிசுச் சீட்டைத் தடை செய்ததுபோல ஒரேயடியாக மூடவேண்டும். பக்க
விளைவு, ஓர விளைவுகளைப் பேசி பம்மாத்து வேலைகள் செய்யாது, உறுதியான
முடிவுடன் மூட வேண்டும். அதேநேரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்காமல்
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சாராய பேர்வழிகளை குண்டர்
சட்டத்தில் தள்ள வேண்டும்; தண்டிக்க வேண்டும்.
எங்களுக்கு
இலவசம் வேண்டாம்; மதுக்கடைகளை உடனே மூடு என்று மக்கள் எழுச்சி வீறு கொண்டு
எழும். அரசு மூடவில்லை என்றால், அவர்களே மூடுவர் என்பது உறுதி என்பதற்கான
கோபம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பது அப்பட்டமான உண்மை!
சாராயம்
விற்கும் ஆட்சி எதிர்காலத்தில் இருக்காது. இதை ஆட்சியாளர்களும் அடுத்து
ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். மதுக்கடைகளை
ஒட்டுமொத்தமாக உடனே மூடவேண்டும்.
மனம் வைத்தால் மதுவை கட்டாயம் ஒழிக்க முடியும். எதிர்காலத் தலைமுறையை சீரழிவிலிருந்து மீட்க முடியும்.
இல்லையேல் காலிகள் கை ஓங்க எவருக்கும் வாழ்க்கை உத்திரவாதம் கிடைக்காது!
எச்சரிக்கை!
No comments:
Post a Comment