தமிழரின் தொன்மை மரபுகளை
மீட்டெடுக்கும் இயக்கமே திராவிடர் கழகம்!
உண்மையான தமிழின இயக்கம் அதுவே!
தமிழரின் தொன்மை மரபுகள் 1. இல்லறத்திற்குப் பின் தொண்டறம், 2. ஜாதியின்மை,
3. பெண்ணின் பெருமை, 4. விருப்ப மணம், 5.மூடநம்பிக்கையின்மை, 6. மானம், 7. கல்வி, 8.உலகளாவிய பார்வை இவற்றை மீட்டெடுக்க பாடுபடுவதே திராவிடர் கழகத்தின் நோக்கு. இதை உணராது அரைவேக்காடுகளின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள் இவற்றை ஊன்றிப் படித்து, உண்மையை உணர வேண்டுகிறோம்!
இல்லறத்திற்குப் பின் தொண்டறம்:
இல்லறத்திற்குப் பின் துறவறம் செல்வது தமிழர் மரபன்று. இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பதே தமிழரின் தொன்மரபு. அதை மீண்டும் மீட்டெடுக்க பாடுபட்டவர், பரப்புரை செய்தவரே தந்தை பெரியார். அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் திராவிடர் கழகம்.
இல்லறத்திற்குப் பின் தொண்டறம் என்பது தமிழர் மரபா? என்ற வியப்பு, அய்யம் சிலருக்கு எழும். இதோ அதற்கான ஆதாரம்.
“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களோடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
(தொல்காப்பியம் - கற்-51)
இல்லற வாழ்வில் ஈடுபட்டு வாழ்பவர்கள், இல்வாழ்வின் துய்ப்பு போதும் என்ற நிலையில், அறிவும், அனுபவமும் பெற்ற பெரியவர்கள், பிள்ளைகளிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, பொதுமக்களுக்குத் தொண்டாற்ற வீட்டைவிட்டு வெளிவந்தனர்.
அப்படி அவர்கள் வெளியேறும்போது, மக்கள் பற்றைத் தவிர, பொருள், சுகப்பற்று ஏதும் இன்றி வெளியேறினர். அவ்வாறு வெளியேறும்பொழுது, வெய்யிலுக்குக் குடை, செருப்பு, நீர்ச்சொம்பு, ஊன்றுகோல், படுத்துறங்க பாய், அறநூல்கள் இவற்றை மட்டுமே உடன் எடுத்துச் சென்றனர்.
இதைத் தொல்காப்பியம்,
“நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய”
- (தொல்.மர-70)
இப்படி இல்லறம் விட்டுத் தொண்டறம் செய்ய வெளியில் வந்து தொண்டாற்றியவர்களே அந்தணர் எனப்பட்டனர். அந்தணர் என்பது தொண்டறத் தமிழர்களுக்குரிய சொல். ஆரிய பார்ப்பனர்களைக் குறிப்பதாய்க் கொள்வது தப்பு.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”
என்பதன் மூலம் இதைத் தெளியலாம். ஆக, அந்தணர் என்போர் மக்கட் தொண்டாற்றிய, அறவோரான தமிழர்கள் என்பதுத் தெளிவு!
இப்படிப்பட்ட தொண்டற வாழ்வை மீட்டு, நடப்புக்குக் கொண்டுவரவே பெரியார் பாடுபட்டார். தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினர். தனக்கென எதுவும் எடுத்துக்கொள்ளாது, எல்லா பொருளையும் மக்கள் தொண்டுக்குச் செலவிட்டு ஊர்ஊராய் அலைந்து தொண்டு செய்தார்.
உண்மையான தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியுடையவர்கள், பண்டைய தமிழர் முறையைப் பின்பற்றி, இல்லற வாழ்விற்குப் பின் தொண்டற வாழ்வை மேற்கொள்ள வேண்டும். அதுவே பழந்தமிழரின் பண்பட்ட மனிதநேய வாழ்வை மீட்டெடுக்கும் உரிய வழியாகும்! அதை செய்கின்ற தமிழர் அமைப்பே திராவிடர் கழகம். அதைத்தான் பெரியாரும், அவரது தொண்டர்களும் செய்து வருகின்றனர்.
ஜாதியின்மை:
தொன்மைத் தமிழரிடையே ஜாதியில்லை. அரசர், வணிகர், வேளாளர் என்ற கடமைப் பகுப்புகளே இருந்தன.
அரசர்: தமிழர்களைத் தலைமையேற்று காத்தவர்களே அரசர்கள். அரசர்கள் என்பவர்கள் காவலர்கள். அரசு என்றால் காவல் என்று பொருள். நாட்டை - மக்களைக் காப்பவர் அரசர்.
வணிகர்: விளைபொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசென்று விற்பவர்கள்.
வேளாளர்: உழவுத் தொழில் செய்தவர்கள் வேளாளர். இவர்கள் உழுது பயிரிட்டு பொருட்களை விளைவித்தனர்.
இப்பிரிவுகள் ஜாதிப் பிரிவுகளா என்றால், இல்லை. காரணம், இம்மூன்று பிரிவினரும் ஒருவருக்கொருவர் மணஉறவு கொண்டனர். ஜாதிப் பிரிவாக இருந்தால் மணவுறவு இருக்காது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
மன்னன் இருஞ்சேட்சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் (வேளாளர்) மகள். அவனுடைய மகன் கரிகாலன் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேளின் மகள்.
உழவர் மகளை அரசனும், அரசன் மகளை உழவரும், வணிகர் பிள்ளைகளை உழவர் பிள்ளைகளும், அரசு குடும்பத்தவரும் மணந்து வாழ்ந்தமையால் இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல.
ஆக, தமிழரின் தொன்மை மரபு ஜாதியின்மையே. அதை மீண்டும் கொண்டுவருவதே தமிழரின் பண்பாட்டு மீட்பாகும். அதைத்தான் திராவிடர் கழகம் செய்கிறது. ஜாதி தமிழர் மரபல்ல என்பதால், ஜாதியைப் பிடித்துக் கொண்டுள்ள எவரும் தமிழர் என்று சொல்லும் தகுதியற்றவர் ஆவர்.
பெண்ணின் பெருமை:
தமிழரின் தொன்மை மரபு தாய்வழிச் சமுதாயமும், தாய்த் தலைமையுமே! பெண்கள் நிலையாக வாழ்வர், மணந்துகொள்ளும் ஆணே அங்கு சென்ற வாழ்வார்.
ஆணாதிக்க ஆரிய கலாச்சாரம் பரவிய பின்னர்தான் பெண் அடிமையானாள். பழைய தொன்மை மரபுப்படி பெண்ணுக்கு பெருமையும் உரிமையும், உயர்நிலையும் வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் கொள்கை. அதற்காகவே திராவிடர் கழகம் போராடுகிறது.
ஆக, திராவிடர் கழகத்தின் பெண்ணுரிமைப் போர் என்பது தமிழர் மரபை மீட்டெடுக்கும் முயற்சியே ஆகும். பெண்ணை அடிமயாக்கும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவர் ஆவர். தமிழரின் அடையாளம் பெண்ணைச் சமமாக மதித்து நடத்துவதேயாகும்.
விருப்ப மணம்:
தமிழர் வாழ்வில் வயது வந்த ஆணும், பெண்ணும் தனிமையில் காதல் வளர்த்து, உளம் ஒத்த நிலையில் இல்வாழ்வில் இணைந்து ஈடுபடுவதே மரபு.
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" - குறுந்தொகை - 40
என்ற பாடல் இதை நன்க உணர்த்துவதைக் காணலாம்.
பெற்றோர் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைப்பது, பொருத்தமற்றவர்க்கு உறவுக் காரணமாய் மணம் செய்து வைப்பது போன்ற இழிநிலைகள் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பால் வந்த அவலங்கள் - அழிவுகள்.
எனவே, அதை ஒழித்து மீண்டும் உளம் ஒத்த விருப்ப மணத்தை உருவாக்குதே தமிழர் இயக்கமான திராவிடர் கழகத்தின் இலக்கு, முயற்சி எல்லாம். எனவே, விரும்பி மணப்பதை தடைசெய்யும் எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியிழந்தவர்கள் ஆவர். பிள்ளைகளின் விருப்பப்படியான மணவாழ்வே தமிழரின் தொன்மைப் பண்பாடாகும். உளம் ஒத்த இணையரை ஒன்றுசேர்த்து வாழவைப்பதே தமிழர் மரபு, தமிழர்க்கு அழகு! அதை மீண்டும் கொண்டுவர முயல்வதே திராவிடர் கழகம்.
மூடநம்பிக்கையின்மை:
தொன்மைத் தமிழரிடையே கடவுள், மதம், சடங்கு போன்ற எந்த மூடநம்பிக்கையும் இல்லை. எல்லாம் இடையில் வந்தவை. ஆரிய பார்ப்பனர்களால் திட்டமிட்டு தமிழர் மூளையில் ஏற்றப்பட்டவை.
நிலத்தலைவரை மதித்தல், சிறந்த பெண்டிரை மதித்தல், வீரரை மதித்தல், குலப் பெரியோரை மதித்தல், பயனுள்ளவற்றை மதித்தல், நன்றி செலுத்துதல் போன்றவையே தொன்மை தமிழரிடம் இருந்தவை. அம்மன், வீரன், வேலன், பொங்கல் கொண்டாட்டங்கள் அப்படிப்பட்டவையே.
மரியாதையும் நன்றியும் செலுத்தும் இம்முறையை வழிபாடாக மாற்றி, சடங்குகளைப் புகுத்தி, தமிழர்கள் மதித்தவற்றை கடவுளாகக் கற்பித்து, மூடநம்பிக்கைகளை வளர்த்தவர்கள் ஆரிய பார்ப்பனர்கள்.
எனவே, மூடநம்பிக்கையுடையவர் எவரும் தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியற்றவர்கள் என்பதே உண்மை வரலாறு உணர்த்தும் உண்மையாகும்! ஆகவே, மூடநம்பிக்கைகளை அகற்றி, அறிவுள்ள இனமாக தமிழினத்தை மாற்றி, நன்றி பாராட்டும் பண்பை உருவாக்கும் இயக்கமே திராவிடர் கழகம்.
மானம்:
தமிழர் மானத்தை உயிரைவிட மேலாக எண்ணினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அப்படிப்பட்ட தமிழர்கள்தான், ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாய் மானம் இழந்து, மதியிழந்து அடிமையாய், இழிமக்களாய் ஆகினர். அவர்களை, மீண்டும் மானமும் அறிவும் உள்ளவர்களாக மாற்ற, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட தன்மான (சுயமரியாதை) இயக்கமே திராவிடர் கழகம். அதுவே, இவ்வியக்கத்தின் தலையாய இலக்கு. ஆகவேதான் அது சுயமரியாதை இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
எனவே, மான உணர்வற்ற எவரும் தமிழர் என்று சொல்லிக்கொள்ள சற்றும் தகுதியுடையவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தன்மான உணர்வு உடையவர்களாய் கிளர்ந்தெழ வேண்டும். நம் மானத்திற்கு எதிராய் உள்ள ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும்; வெற்றி கொள்ளவேண்டும்.
கல்வி:
கல்வி மனிதனுக்குக் கட்டாயம் என்று வாழ்ந்தவர்கள் தொன்மைத் தமிழர்கள். ஆண்-பெண் என்று இருபாலரும் கல்வியில் சிறந்து விளங்கினர். ஆரியர் கலப்பிற்குப் பின், அவர்கள் ஆதிக்கத்தின் விளைவாய், சாஸ்திர, சட்டங்களின்படி தமிழர் கல்வி கற்கக் கூடாது என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டது. அதை ஒழித்து, மீண்டும் கல்வி எல்லோர்க்கும் உரியது என்ற தமிழரின் உயர் மரபை உருவாக்கவே திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டது. அதற்காகவே அது அயராது பாடுபட்டு வருகிறது.
கல்வியும், அறிவும் தமிழரின் அடையாளம். எனவே, கற்று அறிவார்ந்த வாழ்க்கை வாழ்பவரே தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதிக்கு உரியவர்கள்! எனவே, தமிழர் அனைவரும் கட்டாயம் கற்றுத் தெளிய வேண்டும்; உயர வேண்டும்.
உலகளாவிய பார்வை:
தமிழர் குறுகிய வட்டத்திற்குள் என்றுமே தங்களைக் குறுக்கிக் கொள்ளாதவர்கள். உலகை ஒரு ஊராக எண்ணியவர்கள். உலக மக்களை உறவினர்களாக ஏற்றவர்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்!”
என்ற தமிழரின் ஒப்பற்ற சிந்தனையே இதற்கு எடுத்துக்காட்டு!
எனவே, சாதி, மத வட்டத்திற்குள் சுருங்காது, சமத்துவம், கல்வி, மானம், விடுதலை, விருப்பப்படியான உயர்நெறி வாழ்வு, மனிதநேய மலர்ச்சி இவையே தமிழரின் தொன்மை மரபு என்பதால், அவற்றை மீண்டும் மீட்டெடுக்க முயலும், பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமே தமிழரின் உண்மையான இயக்கம் என்பதை தமிழர்கள் உணர்ந்து, அதை ஏற்று, இணைந்து, அதன்வழி போராடி, தமிழரின் தொன்மை மரபுகளை மீட்டு, மீண்டும் மானமும், அறிவும் கல்வியும் உடைய, சமத்துவ, மனிதநேய, தன்மானச் சமுதாயமாய் தமிழ்ச் சமுதாயம் உருவாக்கப் பாடுபட வேண்டும். அது தமிழர் ஒவ்வொருவரின் தலையாய கடமை!
திராவிடர் கழகத்தில் சேர்வோம்! தமிழர் தொன்மைகளை மீட்போம்! தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்!
திருக்குறளில் வள்ளுவர் பிராமணர்களை அந்தணர் என கூறுகினார் ..
ReplyDeleteஒரு அரசன் நல்லாட்சியை கூறும் அதிகாரம் -செங்கோன்மை
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
“அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்”
இதற்க்கு ஆதாரம் சிலப்பதிகாரத்தில் அற நூல் எது? தர்ம சாஸ்திர நூல் எது என சொல்கிறது !
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
“வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை”
மோசமான ஆட்சியினால் வரும் கேடு கொடுங்கோன்மை
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
“நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்”
இப்படி அந்தணர் என்பது பிராமணர்கள் என பண்டைய எல்லா தமிழ் அறிஜர்களும் ஒப்புக்கொண்டது தானே ?
ஆனால், தற்கால திராவிட தமிழர்கள் மட்டும் அறிவாளிகள் போல் ஏற்க மறுப்பதால் அது உண்மையாகிவிடாது !
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
ReplyDeleteபிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (-134 ஒழுக்கமுடைமை)
“பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்”
ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில் வேதம் பிராமணர்களை தான் குறிக்கிறது.
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை இன்னா நாற்பது 21
வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)
இதில் "அந்தணர் என்போர் அறவோர்" எனும் குறளை தமிழ் மெய்யியல் பகைவர்கள் திரித்து வள்ளுவர் கூறியதை விட்டு கூறாததை சொன்னதாய் கேவலமாய் பயன்படுத்துவர்
நீத்தார் பெருமை - அதிகாரத்தில்; அந்தணர் என்பதை துறவி எனும் பொருளில் வள்ளுவர் ஆண்டுள்ளதை, அந்தணர் குல மரபை ஏற்க வில்லை என தமிழர் மரபை மீறி பொருள் கூறுவர்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தால் தான் பிறப்பு கடலைக் கடக்க இயலும் என உள்ளதை - எந்த தமிழ் அறிஞரும் சுட்டுவதே இல்லை; கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எனும் சொல் அந்தணர் கடவுளைக் குறிக்கும்,
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
..............அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் - பரிபாடல் 5ல் -இவை முறையே பிரம்மாவையும், சிவ பெருமானையும் குறிக்கும்
திருவள்ளுவர் தமிழர் மெய்யியல் மரபில் அந்தணர் என்பதை கடவுள் என கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமை துறவியர் அதிகாரத்திலும் என பயன்படுத்தி உள்ளதை சரியாய் சொல்ல வேண்டும்
திருவள்ளுவர் வேததை பார்ப்பான் ஓத்து, அறுதொழிலார் நூல் எனச் சொன்னது போலவே மறை எனவும் பயன் படுத்தி உள்ளார்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28-நீத்தார் பெருமை)
தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன.
வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும். வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. தொல்காப்பியம்-செய் 480
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம், திருமுருகாற்றுப்படை2.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல் பொருள். கற்:5/29