அரசியல்

Sunday, November 15, 2015

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா? தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?

தீ மிதிப்பது கடவுள் சக்தியாலா?
தீ மிதிக்கும்போது சுடாமல் இருப்பது ஏன்?
ஆணிச் செருப்பு குத்தாதது ஏன்?
இதோ அதற்கான காரணங்கள்!
கீழே கிடக்கும் ஒரு சிறு நெருப்பை மிதித்தால்கூட சுரீர் என்று சுடுகிறது. அப்படி இருக்க இறைவன் அருள் இல்லாமல் எப்படி தீ மிதிக்க முடியும்? எனவே தீ மிதிப்பது இறைவன் அருளால்தான் என்று பலர் நினைக்கிறார்கள். நம்புகிறார்கள். ஆனால், இந்த நம்பிக்கை முற்றிலும் தவறு.
கோயிலில் தீ மிதிக்கின்றவர்களை அழைத்து ஒரே ஒரு நெருப்புத் துண்டை சாம்பல் நீக்காமல் தரையில் போட்டு மிதிக்கச் சொன்னால் எப்படிப்பட்ட பக்தனாய் இருந்தாலும் சுட்டுவிடும்.
பின் ஏன் தீக்குழியில் இறங்கி நடக்கும்போது சுடுவதில்லை?
தீக்குழியில் தீ சுடாமல் இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. 1. நெருப்பு அதிக அளவில் சமமாகப் பரப்பப்பட்டிருக்க வேண்டும். 2. நெருப்பில் நீறுபூத்த சாம்பல் இருக்கக்கூடாது. 3. கால் ஒரே இடத்தில் நிற்காமல் விரைந்து மாறி மாறி எடுத்து வைக்கப்பட வேண்டும் (விரைந்து நடக்க வேண்டும்). இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு மட்டுமே தீ மிதிக்க முடியும்.
சாம்பல் நீக்கப்படாத நெருப்பில் யாரும் தீ மிதிக்க முடியாது. சுடுசாம்பல் பிசின்போல காலில் ஒட்டி வெந்துவிடும். அதனால்தான் முறத்தால் அல்லது வேப்பிலையால் விசிறி சாம்பலை நீக்குவார்கள்.
மேடு பள்ளமான நெருப்பில் தீ மிதிக்க முடியாது. அதனால்தான் அடித்து நொறுக்கிச் சமப்படுத்துகிறார்கள்.
ஒரே இடத்தில் நின்று தீ மிதிக்க முடியாது. அதனால்தான் விரைந்து ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
உள்ளங்கையில் ஒரு நெருப்புத் துண்டைப் போட்டு இரண்டு உள்ளங்கைக்கும் அதை விரைந்த மாற்றிக் கொண்டேயிருந்தால் சுடாது. ஆனால், ஒரே உள்ளங்கையில் சற்று நேரம் நெருப்பை வைத்திருந்தால் சுட்டுவிடும்.
அடுப்பில் சிதறி விழும் தணல் நெருப்பைப் பெண்கள் விரலால் சட்டென்று எடுத்து மீண்டும் அடுப்பில் போடுவார்கள். ஆனால், சாம்பல் பூத்த நெருப்பை தொடமாட்டார்கள். தொட்டால் சுடுவத மட்டுமல்ல; கொப்பளித்து விடும். சுடுசாம்பல் பசை போல் ஒட்டிக் கொள்வதே அதற்குக் காரணம்.
ஆக, இக்காரணங்களால் தீ மிதிக்கும் போது சுடுவதில்லையே தவிர மற்றபடி இறைவன் அருளால் அல்ல. ஒரே இடத்தில் நின்று எந்த பக்தனாலும் தீ மிதிக்க முடியாது.
பின் எப்படி அக்கினிச் சட்டி கையில் ஏந்துகிறார்கள்? அது ஏன் சுடுவதில்லை?
அக்கினிச் சட்டி ஏந்தும் எந்தவொரு பக்தனும் வெறுங்கையில் நெருப்பை ஏந்த முடியாது. சட்டியின் அடியில் தடவப்படுகின்ற சாறு மற்றும் வேப்பிலைதான் சுடாமல் இருக்கக் காரணம்.
இறைவன் அருள் என்று எவனாவது கூறினால் அவன் கையில் ஒரு கரண்டி தணல் நெருப்பை அள்ளி வையுங்கள். அப்போது புரியும் சுடுகிறதா என்று!
ஆணிச் செருப்பு காலில் குத்தாததற்குக் காரணம் ஆணிகள் அதிக அளவிலும் கூர்முனை சமமாக இருப்பதும்தான். ஒரே ஒரு ஆணியின் கூர்முனை நீட்டிக்கொண்டிருந்தால் காலில் ஏறிவிடும். கூர்முனை சமமாக இருப்பதால்தான் குத்துவதில்லை. எந்த பக்தனாவது நிற்க முடியுமா? ஒரே ஒரு ஆணி நீட்டிக்கொண்டு நிற்கும்போது உடலின் எடை முழுவதும் அதன்மேல் வர ஆணி ஏறிவிடும். அதிக ஆணிகள் சமமாக இருந்தால் எந்த ஒரு ஆணியும் காலில் ஏறாது. காரணம் எடை பரவலாக்கப்படுகிறது.
ஆக, இவையெல்லாம் கடவுள் சக்தியால் அல்ல. அறிவியல் காரணங்களால்தான். பக்தியினால் அல்ல; புத்தியினால்தான்.

No comments:

Post a Comment