சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை
மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது
அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.
பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர
இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம்
இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின்
அடியிலுள்ள திசு (புளோயம்)
பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து
கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைதான் பால்வடிகிறது என்கின்றனர்.
மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.
இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை யென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை யென்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.
எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத்தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழகாகும்.
- மஞ்சை வசந்தன் Manjai Vasanthan
No comments:
Post a Comment