அரசியல்

Thursday, January 4, 2018

கூத்தாடிகளைக் கும்பிட்டு வணங்கும் கூறுகெட்ட தமிழா! நீ வணங்கத்தக்கத் தமிழன் யார் தெரியுமா?



கோடிக்கணக்கில் வரி ஏய்த்து கொள்ளையடிக்கும்  
கூத்தாடிகளைக் கும்பிட்டு வணங்கும் கூறுகெட்ட தமிழா!  
நீ வணங்கத்தக்கத் தமிழன் யார் தெரியுமா?  
இதோ உதாரணத்திற்கு ஒருவரைக் காட்டுகிறேன்’  மனிதநேய மருத்துவர் மாரியப்பன்’

                                                             டாக்டர் பா.மாரியப்பன் 
                            டாக்டர் சுதாமதி
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறைத தலைவராகப் பணியாற்றிவரும் டாக்டர் பா.மாரியப்பன்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.

தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி (Beating Heart Surgery) எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். ஆண்டுக்கு சுமார் 150 ஏழை நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை இவரால் கிடைத்திருக்கிறது. இதில் 97 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார்.
இதுபற்றி அவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் மருத்துவம் படித்தேன். மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2001 முதல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தேன். உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் என உயர்ந்து தற்போது துறைத் தலைவராக பணியாற்றுகிறேன்.
நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.
மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன்.
தமிழர் என்பவர் தன்மானம், சூடு, சொரணை, வீரம், அஞ்சாமை, நேர்மை, நாணயம், பகுத்தறிவு, மனிதநேயம், பண்பாடு, கட்டுப்பாடு, ஒழுக்கம், சமதர்மம், தொண்டு, விருந்தோம்பல், காதல், நட்டு, நம்பிக்கை இவற்றின் உருவமாக இருப்பவர்.
ஆனால், இன்று எல்லாம் இழந்து யார் யாரையோ "தெய்வம்" என்கிறான். கட் அவுட் வைக்கிறான், பாலாபிஷேகம் செய்கிறான்! சொரணைகெட்ட தமிழன்!
"தெய்வமே!" என்று வணங்குகிறாயே யார் யாருக்குத் தெய்வம்?
எப்படி தெய்வம்? அந்தத் தெய்வம் மக்களுக்குச் செய்தது என்ன கூறுவாயா?
நீ தலைவனாக ஏற்க ஊருக்கு உழைக்கும் உண்மையான தமிழன் ஒருவன்கூடவா உனக்குக் கிடைக்கவில்லை?
குடிக்கவும், புகைப்பிடிக்கவும் கோடிக்கணக்கான இளைஞர்களைப் பழக்கியதைத் தவிர உன் தலைவன் செய்தது என்ன கூறுவாயா?

- Manjai Vasanthan
=====

No comments:

Post a Comment