அரசியல்

Thursday, June 15, 2017

திராவிடம் வேண்டாம் என்கிறாரா திருமாவளவன்?


- மஞ்சை வசந்தன்

“திராவிடத்தால் எழுந்தோம்!’’ என்று மேடைக்கு மேடை முழங்கியவர் திருமாவளவன்.

10 நாள்களுக்கு முன்புகூட, “தி.மு.க.வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கத் தயார்’’ என்றார். தி.மு.கழகத்திற்குள் தொல்காப்பியன் போன்றோர் திருமாவளவனுக்கு எதிராய் கருத்துப் பதிவுகள் செய்தபோது, என்னைப் போன்றோர் அதை வன்மையாகக் கண்டித்து திருமாவளவன் தி.மு.க.வோடு இணக்கமான நெருக்கத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் தமிழகத்தின் நலன் கருதி.

ஆனால், இரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாய் ஊகங்கள் வலுப்பெற்றதும், “தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது உண்மை’’ என்றும்; “கலைஞர், ஜெயலலிதா இடங்களை இரஜினிகாந்த் நிரப்புவார்” என்றும், திருமாவளவன் கருத்துக் கூறியிருப்பது அவருக்குள்ள சிந்தனைத் தெளிவை சந்தேகப்படச் செய்கிறது.

திருமாவளவனா பேசுவது? என்றே அவரது நலம் விரும்பக் கூடியவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்கள். காரணம், மேற்கண்ட இரண்டு கருத்துக்களும் தப்பானவை; உண்மைக்கு மாறானவை, உள்நோக்கம் உடையவை! தமிழர் நலனுக்கு எதிரானவை.

தி.மு.க. தலைவர் கலைஞர் செயல்பாட்டில் தொய்வும் பின் முடக்கமும் ஏற்பட்ட நிலையில், ஸ்டாலின் திறமையாகவும், கடினமாகவும் உழைத்து தி.மு.க.வை வலுவான எதிர்கட்சியாக்கினார். ஜெயலலிதாவின் அதிகாரமும், ஜாதி செல்வாக்கும், பணபலமும்தான் அ.தி.மு.க. வெற்றிக்கு - அதுவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்குக் காரணங்களாகும்.

உண்மை இப்படியிருக்க, ஜெயலலிதாவின் வெற்றி அவரது ஆளுமைத் திறத்தாலும் மக்கள் செல்வாக்காலும் பெற்றதாகவும்; மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் செல்வாக்கைப் பெற முடியவில்லை என்றும் கூறுவது, அப்பட்டமான தப்பு; அசல் தப்பு. திருமாவளவன் திசைமாறுகிறார். அதுவும் தப்பான திசை நாடுகிறார்; எதையோ நம்பி இருப்பதையும் இழக்கிறார் என்பதையே இது வெளிப்யபடுத்துகிறது.

ஜெயலலிதாவிற்குப் பின் அ.இ.அ.தி.மு.க.வில் வெற்றிடம் என்றால்கூட அதை ஓரளவிற்கு ஏற்கலாம். காரணம், அங்கு கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்லும் தலைமை இல்லை. அதுகூட பி.ஜே.பி.யின் சதியாலும், ஓ.பன்னீர்செல்வத்தின் துரோகத்தாலும் ஏற்பட்டது.

ஆனால், தி.மு.க.வில் ஏது வெற்றிடம்? சற்றேறக்குறைய 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் உள்ள, ஆளுமையும், திறமையும் உள்ள ஸ்டாலின் அங்கு கட்சியைக் கட்டுப்கோப்புடன் நடத்துகிறார். கலைஞர் காலத்தில் இருந்த பிளவுகூட தற்போது இல்லை. உண்மை இப்படி இருக்க, தி.மு.க.வில் ஏது வெற்றிடம்? எந்த வகையில் ஸ்டாலின் தகுதியற்றவர்? மக்கள் செல்வாக்கு அவருக்கு இல்லை என்பது அப்பட்டமான பொய் அல்லவா? ஸ்டாலின் செல்வாக்கு 2014 தேர்தலைவிட மிகவும் கூடியுள்ளது என்பதே உண்மை. ஆனால், ஆதிக்க சக்திகள் அதை மறைக்கின்றன. அதற்கு திருமாவளவனும் துணை போவதுதான் வேதனையளிக்கிறது.

தான் காலூன்ற, பி.ஜே.பி. தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற கோயபல்ஸ் பொய்யைச் சொல்லி, ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் காட்டுவது போல, தோழர் திருமாவளவன் இரஜினிகாந்த்திற்காக ஒரு வெற்றிடத்தை தமிழக அரசியலில் காட்ட முற்படுகிறாரா? திருமாவும் திராவிடம் வேண்டாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாரா?

திருமாவளவனுக்கு இது அழகுமல்ல, அடையாளமும் அல்ல. வழுக்குவது மனித இயல்பு. உடன் உண்மை உணர்ந்து தன்னைச் சரியான தடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். தற்போது திருமாவளவன் அதைச் செய்தாக வேண்டும்.

இரஜினியைப் பிடித்து கறையேற நினைப்பதும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதும் ஒன்றே!

ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டும் மாயத் தோற்றமே இரஜினியின் மக்கள் செல்வாக்கு என்பது. உண்மையில் அவருக்கு 5% வாக்குக்கு மேல் கிடைக்காது.
அதுவும் சீமான், பாரதிராஜா போன்றோரின் “தமிழன்தான் ஆளவேண்டும்” என்ற கண்டனக் குரலுக்குப் பின், இரஜினியின் பழைய செல்வாக்குக்கூட குறைந்துவிட்டது.

அரசியலில் தொலைநோக்கும், துல்லியநோக்கும் இல்லையென்றால், வீழ்ச்சியை தடுக்க முடியாது. அப்படி வீழ்ந்து எழமுடியாமல் போனவர்கள் பலர். அப்பட்டியலில் திருமா சேர்வது அவருக்கும் நல்லதல்ல; அவரை நம்பி நிற்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் நல்லதல்ல. திருமாவிற்கு உரிய இடம் தி.மு.க. மட்டுமே! அந்த உறவே தமிழர்க்கு நலம் பயக்கும்! திருமாவளவன் தீர்க்கமாக சிந்தித்து, திடமாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவுகளும்; சந்தர்ப்ப வாதமும், சமுதாய பாதுகாவலர்களாக செயல்படுவோர்க்கு விலக்கப்பட வேண்டியவை! திருமா தெளிவு பெற வேண்டும். திடமாக திராவிடத்தின் பக்கம் (தி.மு.க. பக்கம்) நிற்க வேண்டும்.

கொள்கையே என்னவென்று தெரியாத நடிகர் பின் திருமாவா?

தமிழர்க்குத் தலைமை தாங்கும் தகுதியுடைய, ஆற்றலுடைய திருமா என்ற உண்மையான இடத்தை அவர் இழக்க விரும்புவது அவருக்கு மட்டுமல்ல, தமிழர்க்கும் கேடானது! இதை உணர்ந்து நடக்க வேண்டியது திருமாவின் கட்டாயக் கடமை!


Friday, June 9, 2017

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்க்கமாக, திடமாக, தெளிவாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!


- மஞ்சை வசந்தன்
அரசியலில் தொலைநோக்கும், நுட்பமும், எதிரிகளின் சூழ்ச்சி வியூகத்தை அறியும் ஆற்றலும் இல்லா சிலர், அருகிருந்து கூறும் ஆலோசனைகளைப் புறந்தள்ளி,  நலம் விரும்பும் பலர் கூறுவதையும் பரிசீலித்து, சரியானதை சலித்தெடுக்க வேண்டியதில் கவனமும், நிதானமும், கூர்மையும் தற்போது தங்களுக்குக் கட்டாயத் தேவை ஆகும்.
தி.மு.க.வின் நலன், தங்களின் வளர்ச்சி, அதன்வழி தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ற நோக்கில் சிந்திக்கக் கூடியவர்கள், கருத்துக் கூறக்கூடியவர்களை சரியாக அடையாளங் கண்டு தேர்வு செய்து அவர்கள் கூறுபவற்றை உள்வாங்கி, ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது கட்டாயக் கடமை ஆகும்.
குமுதம் போன்ற தி.மு.க.வின் ஜென்ம விரோத ஊடகங்களும், தமிழருவி மணியன், வை.கோ. போன்ற வஞ்சம் தீர்க்கும் வார்த்தை வித்தகர்களும், தந்தி டி.வி. பாண்டே போன்றவர்களும் குழிபறிக்கின்ற சூழலில், நல்ல கொள்கையாளர்களை, உங்களை விரும்பக்கூடியவர்களை உதாசீனப்படுத்துவது, ஒதுக்குவது, உங்களுக்கே பாதிப்பை அதிகம் உண்டாக்கும் என்பதை நீங்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1967 தேர்தலில், முற்றிலும் முரண்பட்ட இனப் பகைவரான இராகோபாலாச்சாரியாரின் ஆதரவைக் கூட அண்ணாவும், கலைஞரும் மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்ற வியூகத்தை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது; மறுக்கக் கூடாது.
அரசியலில் பழைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் ஒருவருடனும் கூட்டு சேர முடியாது.
கலைஞரை அண்ணனாகவும், உங்களை தன் பிள்ளைகளிலும் மேலான பாசத்தோடு நேசிக்கும் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள்கூட தி.மு.க.- பி.ஜே.பி.யோடு சேர்ந்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்; எதிர்த்தார். அதேபோல் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்துப் பேசியது. பழைய விடுதலை - முரசொலியை எடுத்து வைத்து இன்றைக்குப் பார்த்தால் அரசியலில் உறவு நிற்குமா? நீடிக்குமா?
அரசியல் உறவு, சூழலால், நிலைப்பாட்டால் அவ்வப்போது மாறும்; மாறவும் வேண்டும். அரசியலில் நிரந்த உறவும் இல்லை; பகையும் இல்லை. கொள்கை ஒன்றே இணைப்புச் சங்கிலி. கொள்கை எதிரிகளே நிரந்தர எதிரிகள். ஒத்தக் கொள்கையுடையோர் எதிர்ப்பு தற்காலிகமானது. மாறக் கூடியது! மாறவேண்டியதும் ஆகும்.
அப்படியிருக்க தி.மு.க.வுடன் இயற்கையான கொள்கை பிடிப்பும் பாசமும் கொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த தேர்தலில் மேற்கொண்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, காழ்ப்புடன் கருத்துக்களைப் பதிவு செய்யும், தொல்காப்பியன் போன்றவர்கள்  எதிரிகளுக்குத்தான் இடம், தடம் அமைக்கிறார்கள் என்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (குமுதம் - ‘ரிப்போர்ட்டர்’ செய்தி அடிப்படையில் இது எழுதப்படுகிறது.)
பா.ஜ.க. ஒரு பக்கம் சூழ்ச்சி வியூகம் வகுக்க, இரஜினி மறுபுறம் தி.மு.க.வை முதன்மை எதிரியாக குறிவைத்து களம் இறங்கத் தயாராகும் நிலையில், தங்கள் மீது பற்றுடைய திருமாவளவன், அவர்களைப் போன்ற தலைவர்களை ஒதுக்குவது மிகப் பெரும் பின்னடைவை தி.மு.க.விற்கு பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை மறக்கக் கூடாது.
திருமாவளவன் அவர்கள் பங்குபெற்ற மக்கள் நலக் கூட்டணிதான் தி.மு.க. தோல்விக்குக் காரணம் என்று காண முடிந்த தொல்காப்பியன் போன்றோர், வை.கோ.வையும் அத்தேர்தலில் நம்முடன் வளைத்துப் போட்டிருந்தால், வெற்றி எளிமையாக ஆகி இருக்கும் என்பதை ஏன் எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்கள். வை.கோ. வலிய வந்து ஆதரவு தந்தாரே! ஏன் அவரை வெட்டிவிட வேண்டும்?
வெட்டிவிட்ட வேகத்தால் விளைந்ததே மக்கள் நலக் கூட்டணி என்பதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, தொல்காப்பியர்கள் பேசுவது முதிர்ச்சியின் அடையாளம் அல்லவே!
இப்போது வை.கோ.வை சேர்க்கச் சொல்லவில்லை. அவர் வெறுப்பின் உச்சத்தில், பழிவாங்கும் வெறியில் நிற்பவர்; அப்படியிருக்க அவருடன் சேர்ந்தவர்களை முடிந்த அளவு மீண்டும் தி.மு.க. பக்கம் ஈர்ப்பதுதானே இன்றைய நிலையில் சாதுர்யமான அரசியல் வியூகமாக இருக்க முடியும்?
எனவே, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கை முடிவுகளில் தி.மு.க.வினர் ஆளாளுக்கு கருத்துக் கூறும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது முதல் கடமையாகும்.
பா.ஜ.க., இரஜினிகாந் என்ற எதிர்ப்புகள் தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கக் கூடியவை அல்ல. அவை ஊடகங்கள் ஊதிக் காட்டக்கூடிய ஒரு சார்பு கருத்துத் திணிப்புகள்.
இன்றைய நிலையில் - விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் - கீழ்க்கண்டவற்றை தி.மு.க., ஸ்டாலின் அவர்கள் செய்தால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்!
1.            எந்த அளவுக்கு கூட்டணியில் கட்சிகளை சேர்க்க முடியுமோ அந்த அளவுக்குச் சேர்த்தல்.
2.            மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளை ஒவ்வொரு தொகுதியிலும் உடனே மேற்கொண்டு, தொடர்ந்து செய்தல்.
3.            கோயில் குளங்கள் மட்டுமின்றி அனைத்து நீராதாரங்களையும் தி.மு.க. தொண்டர்களைக் கொண்டு தூர்வார்தல்.
4.            மதுக்கடைகள் அறவே மூடப்படும் என்ற அசைக்க முடியாத உறுதியான வாக்குறுதியை இப்போதே அளித்தல். இது பெண்கள் மற்றும் கட்சிச் சார்பில்லாதவர்களின் வாக்குகளை பெருமளவு பெற்றுத் தரும். மதுக்கடைகளை மூடும் ஆட்சியைத்தான் அடுத்த மக்கள் தேர்வு செய்வர்.
5.            விவசாயிகள் நலன் சார்ந்த செயல்பாடுகளை, போராட்டங்களை அதிகக் கவனம் செலுத்தி செய்தல். அவர்களுடன் இணைந்து செயல்படுதல்.
6.            நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மாட்டுக் கறித் தடைச் சட்டம் போன்ற மதவாத மத்திய அரசின் திட்டங்களை, ஒன்றியம்தோறும் பொதுக்கூட்டம் போட்டு கண்டித்துப் பேசுதல். மாநில உரிமை பறிபோவதை விளக்குதல்.
7.            ஜனாதிபதி தேர்தலில் மதவாத வேட்பாளரைத் தோற்கடிக்க நாடு தழுவிய மகா கூட்டணி அமைக்கக் கடுமையாக உழைத்தல். சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் விரும்பும் சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்து நிறுத்துதல். மக்கள் வெறுக்கும் எவருக்கும் இடம் தராது ஒதுக்குதல்.
8.            ஏழைகளுக்கு மட்டுமே இலவசம் என்ற கொள்கையில் உறுதியாய் நின்று, வீண் செலவுகளை குறைத்து ஆக்கபூர்வமான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தல்.
9.            மக்களை நேரடியாக நீங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இப்போதே தொடங்கி தொடர்ந்து செய்தல். மக்கள் குறையறியவும், மனம் அறியவும், மக்களை ஈர்க்கவும் அது பயன்படும்.
10.          தி.மு.க. மீது வீண் பழியாகச் சுமத்தப்படும், மதுக்கடைத் திறப்பு, ஈழத் தமிழர்கள் படுகொலை, கச்சத் தீவு தாரை வார்ப்பு, காவிரி நீர்ப் பிரச்சினை போன்றவ்ற்றின் உண்மைகளைச் சுருக்கமாக விளக்கி கையடங்கு வெளியீடுகளை மக்களுக்கு இலவசமாக வழங்குதல். மோசடிப் பிரச்சாரத்தை முறியடிக்க அது பயன்படும்.
11.          ஊழல் இல்லா, சுரண்டல் இல்லா நல்லாட்சி தருவதற்கான உண்மையான உத்தரவாதத்தை மக்களுக்கு உறுதியாய் அளித்தல். அந்நிலையில் உறுதியாய் நிற்றல், அதற்கான செயல் திட்டங்கள் வகுத்தல்.
12.          மாநில உரிமை, தமிழ்மொழி, தமிழர் நலன், கிராமப்புரக்  கல்வி இவற்றில் முழு முனைப்புடன் தி.மு.க.வினரை ஈடுபடச் செய்தல்.
இவைபோன்ற செயல்களை தேர்வு செய்து செய்தால், பி.ஜே.பி, இரஜினி எதிர்ப்பை எல்லாம் முறியடித்து, தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யின் அடிமையாகிவிட்ட இன்றைய தமிழகச் சூழலில், மக்களுக்கு நம்பிக்கையான ஒரே பெரிய கட்சி தி.மு.க. மட்டுமே. அந்நம்பிக்கைக்கு உரிய வகையில் தி.மு.க. நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும். அது உங்களால் முடியும்! அதற்கான வளர்ப்பும், துடிப்பும், ஆற்றலும் உங்களுக்கு உண்டு. செய்வீர்கள்! செய்ய வேண்டும்! 

இவை தி.மு.க.வின் நலத்திற்கு மட்டுமல்ல! தமிழகத்தின் எதிர்கால நலத்திற்கும் ஆகும்!

Sunday, June 4, 2017

இளைஞர்களே! பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!

- மஞ்சை வசந்தன் பார்ப்பனர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மதத்தை, கடவுளை, ஜாதிப் பிரிவை, சடங்குகளை தூக்கிப் பிடிப்பர், காத்திடத் துடிப்பர். காரணம், அவர்கள் உயர்வு, ஆதிக்கம், பிழைப்பு அனைத்தும் அவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
ஆரிய பார்ப்பனர் ஆதிக்கத்தைக் காப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட அமைப்புகளே ஆர்.எஸ்.எஸ். முதல் பி.ஜே.பி. வரையிலான மதவாத அமைப்புகள்.
சாஸ்திரங்களை, மனு முதலான ஸ்மிருதிகளை ஆட்சியாளர்களின் துணையுடன் அமுல்படுத்தி, அனைத்திலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி, மற்றவர்களை அடிமைப்படுத்தினர், இழிவுபடுத்தினர், மற்றவர்களின் உரிமைகளைப் பறித்தனர்.
19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோதிராவ்பூலே, ஷாகு மகராஜ், நீதிக்கட்சியினர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் ஆரிய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் உரிமைக்குரல் எழுப்பி, அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, ஆரிய பார்ப்பனர் அல்லாதாருக்கு உரிய பங்கை, கல்வி, உத்தியோகங்களில் பெறப் போராடினர். அதன் விளைவாய் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பெற்று, மற்ற மக்களும் கல்வி உத்தியோக வாய்ப்பு களையப் பெற்றனர்; உயர்ந்தனர்.
இதைக் கண்டு கொதித்த ஆரிய பார்ப்பனக் கூட்டம் இடஒதுக்கீட்டிற்கு எதிராய் எத்தனையோ முறை போராடித் தோற்றனர். இடஒதுக்கீட்டால் கல்வித் தரம், நிர்வாகத் திறன், தகுதி, திறமை எல்லாம் கெட்டுவிட்டதாய் கூக்குரலிட்டனர்.
ஆனால், இடஒதுக்கீட்டின் பயனாய் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்பு பெற்று, தங்கள் தகுதியை, திறமையை வெளிப்படுத்தியதோடு, ஆரிய பார்ப்பனர்களின் தகுதியின்மையையும் வெளிப்படச் செய்தனர்.
பள்ளித் தேர்வு, கல்லூரித் தேர்வு, உயர் கல்வி, நிர்வாகத் தேர்வு, அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளிலும் பார்ப்பனர் அல்லாதாரே முன்னிலையில் வந்து சாதித்தனர், சாதிக்கின்றனர்.
இப்போதுதான் முதல் தலைமுறையினர் கல்வி, வேலைவாய்ப்புகளை பெறத் தொடங்கியுள்ள நிலையில், இன்னுமா இடஒதுக்கீடு, எத்தனை காலத்திற்கு இடஒதுக்கீடு என்று ஆரிய பார்ப்பனர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
இதைப் பார்த்த பார்ப்பனர் அல்லாதார் சிலரும், இடஒதுக்கீடு ஏன்? இனி தேவை இல்லையே என்கின்றனர். நகரத்தில், படித்த பெற்றோருக்குப் பிறந்த சில அரைவேக்காடுகளின் பிதற்றல் இது.
இடஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உரிமை! அவர்கள் மீள்வதற்கான கருவி! சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான வழிமுறை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இடஒதுக்கீட்டு செயல்பாட்டில் கருத்துக் கூறுவது சிறுபிள்ளைத்தனம்! பார்ப்பனர் அல்லாதாருக்கு இடஒதுக்கீடு எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதை, பார்ப்பனர்கள்தான் அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதனால்தான், அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அறுபது ஆண்டுகளுக்கு மேலாய் இடஒதுக்கீட்டை செயல்படுத்தியும் ஆரிய பார்ப்பன ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை பார்ப்பனர் அல்லாதார் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனர்களே வெளியிட்டுள்ள, பார்ப்பனர்கள் பல துறைகளிலும் செலுத்தும் ஆதிக்கத்தை இதோ பாருங்கள் இளைஞர்களே!
இப்போது சொல்லுங்கள்! மக்கள் தொகையில் 4% வீதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் 60% மேலான வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்றால், இடஒதுக்கீடு இல்லாமலிருந்தால் எல்லா இடங்களையும் அவர்களே கைப்பற்றிக் கொள்வர் என்பதுதான் உண்மை!
நீதித்துறையிலே 50% மேல் பார்ப்பனர்களே நீதிபதிகளாக இருந்தால் நாட்டில் எப்படி நீதி கிடைக்கும்? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? அரசுத் துறையிலே இவ்வளவு ஆதிக்கம் என்றால் தனியார் துறையில் சொல்லவே தேவையில்லை. தனியார் துறை என்றாலே பூணூல் மயம்தான் என்கின்ற அளவிற்கு அவர்கள் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
எனவேதான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்! உடனே அது நடைமுறைக்கு வரவேண்டும் என்று போராடுகிறார்.
பார்ப்பனர்களின் இந்த ஆதிக்கத்தைப் பார்த்தாவது பார்ப்பனரல்லாத இளைஞர்கள் விழிப்பு பெற வேண்டும்.
அரசுத் துறையில் இடஒதுக்கீட்டை முறையாக அமுல்படுத்தி, குறிப்பாக நீதித்துறையிலும், உயர் பதவிகளிலும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து, தனியார் துறையில் பணிப் பாதுகாப்பு, ஓய்வு ஊதியம், இடஒதுக்கீடு என்று எல்லா உரிமைகளையும் பெறவேண்டும். இல்லையேல், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும்! அவர்களின் தலைமுறை அடிமட்டத்திற்குச் செல்லும்.
மீண்டும் வர்ணாசிரம கொடுமை வரும்! ஒடுக்கப்பட்ட மக்கள் மீண்டும் சூத்திர நிலையையும், அப்பன் தொழிலையே செய்து மடிய வேண்டிய அவலமும் வரும்!
எதை எதையோ இணையத்தில் பகிரும் இளைய சமுதாயம், தங்கள் எதிர்காலம் குறித்த இதுபோன்ற செய்திகளைப் பகிர்ந்து, தங்கள் உரிமைக்காக ஒன்று சேர்ந்து போராடி, கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெறவேண்டும்! அதுவே அவர்களின் எதிர்கால தலைமுறையை வாழ்விக்க உதவும்! ஆரிய ஆதிக்கத்தை அகற்றும்!