- சிகரம்
“விடாக்கண்டன்”,
“கொடாக்கண்டன்” என்று கிரமங்களில் கதை சொல்வர். மேலும், கஞ்சன், ஊதாரி,
ஆத்திரக்காரன், பேராசைக்கரன், கல்நெஞ்சன் என்று பல்வேறு ஆட்களைப்பற்றி கதை
சொல்வதும் வழக்கம்.
இப்படிப்பட்ட
கதைகள் சொல்லப்படுவதன் நோக்கம் அப்படி வாழக்கூடாது என்பதற்காகத்தான்.
அதேபோல், உத்தமன், கொடைவள்ளல், தியாகி, தொண்டன், தூயவன் என்று சிலரைப்
பற்றிய கதைகள் சொல்வதும் வழக்கம். அதன் நோக்கம், அப்படி வாழ வேண்டும்
என்பதற்காக.
பொதுவாக
இப்படிப்பட்ட கதைகளை வயதில் மூத்தவர்கள், சிறு பிள்ளைகளுக்கே சொல்வர்.
காரணம், பிஞ்சுகளின் நெஞ்சில் பதிக்கப்படும் கருத்துகள் அவர்கள்
பெரியவர்களானாலும் நின்று நினைவூட்டி வழிநடத்தும் என்பதால்தான்.
பிஞ்சுப்
பருவத்தில் எப்படி வாழவேண்டும்; எப்படி வாழக் கூடாது; எதைச் செய்ய
வேண்டும்; எதை விலக்க வேண்டும்; எது நல்லது, எது கெட்டது என்பதில் ஒரு
புரிதலும், தெளிவும் வேண்டும். அதனால்தான், பள்ளிகளில் நீதிபோதனை
வகுப்புகளை வைத்தனர்.
பிள்ளைகள் பிறப்பால் நல்லவர்கள்:
எல்லா
பிள்ளைகளும் பிறக்கும்போது நல்லவர்களாகவே பிறக்கின்றனர். அதனால்தான்
பிள்ளையுள்ளம் வெள்ளையுள்ளம் என்பர். அவர்கள் கெட்டவர்களாக, நல்லவர்களாக,
கொடியவர்களாக ஆவதெல்லாம் சுற்றியுள்ளவர்களாலும், சுற்றியுள்ளவைகளாலுமே
ஆகும்.
எனவே,
பிள்ளைப் பருவத்திலே பல நல்ல பண்புகளை, கொள்கைகளை, செயல்களை உருவாக்கிக்
கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பண்புகளில் ஒன்றுதான் விட்டுக் கொடுத்து
வாழ்தல் என்பது.
விட்டுக் கொடுத்தல்:
விட்டுக் கொடுப்பது என்பது நமக்கு உரியவற்றை பிறருக்கு விட்டுக் கொடுத்துவிடுவது என்பது அல்ல. அப்படி விட்டுக் கொடுக்கவும் கூடாது.
நமக்கென்று
உள்ள கொள்கைகளை, நாம் விரும்பக் கூடியவற்றை, நாம் பின்பற்றுபவற்றை,
விட்டுக் கொடுப்பது என்பது இதற்குப் பொருள் அல்ல. பிடிவாதமாக நின்று
முறித்துக் கொள்ளாமல், பிறருடன் நல்ல உறவைத் தொடர சில நேரங்களில்
விட்டுக்கொடுப்பது என்பதே அதன் பொருள்.
பிஞ்சுப் பருவம் முதற்கொண்டு பெரியவர்கள் ஆகி வாழ்தல் வரையில் இப்பண்பு மிகவும் கட்டாயம்.
பிடிவாதம்
கூடாது: மாணவர் பருவத்து நட்பாக இருந்தாலும், வாலிபப் பருவத்துக் காதலாக
இருந்தாலும், குடும்ப வாழ்வில் கணவன் மனைவி உறவாக இருந்தாலும் அது நிலைத்து
நிற்க வேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல்
கட்டாயமாகும்.
சிலர்
பிடிவாதமாக, தான் பிடித்த பிடியைச் சற்றும் தளர்த்தாமல் இருப்பர். இருவரும்
அதே பிடிவாதத்துடன் இருந்தால் அங்கு முறிவு கட்டாயம் நிகழும்.
விட்டுக்கொடுப்பது என்பது என்ன?
ஒருவர்
கோபப்பட்டு கடுமையாக திட்டினால், இன்னொருவரும் பதிலுக்குக் கடுமையாகத்
திட்டுவாரேயானால் அங்கு மேலும் மேலும் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட,
இருவரும் சூடேறி கொதிப்படைவர்.
மாறாக
ஒருவர் கடுமையாகத் திட்டும்போது, மற்றவர் சிரித்துக்கொண்டே அமைதியாகப்
பேசினால் எதிரி கோபம் குறையும். அவர் தன் தவற்றை உணர்வார். இங்கு
அமைதிகாத்தவர், தான் பயன்படுத்த வேண்டிய கடும் வார்த்தையை விட்டுக்
கொடுத்தார். இதனால், அவருக்கு இழப்பு ஒன்றும் இல்லை. அவருக்குப் பெருமைதான்
சேரும்.
அதேபோல்,
ஒருவர் ஆத்திரப்பட்டு அடிக்கும்போது, நாமும் பதிலுக்குப் பதில் அடித்தால்,
அடி, உதை, குத்து, வெட்டு என்று அது கூடிக்கொண்டே செல்லும். மாறாக, ஒரு
அடியைப் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தால் அடித்தவரே வெட்கப்படுவார்.
விட்டுக் கொடுத்தவர் மதிப்பு அங்கு உயரும்.
பதிலுக்குப் பதில் பேசி, பதிலுக்குப் பதில் அடித்து பெறும் பயன் ஒன்றும் இல்லை. ஆனால், விட்டுக் கொடுக்கும்போது பெருமை உயரும்.
நடந்து
செல்லும்போது, ஒருவர் வந்து மோதினால், “பரவாயில்லை, பார்த்துப் போங்க”
என்று சொன்னால், அவர் புன்முறுவலோடு தன் தவற்றை உணர்ந்து செய்வார். அதைச்
செய்யாது, அவரிடம் முறைத்துப் பேசினால் அங்கு மோதல் உருவாகும், நாமும்
சிறுமை அடைவோம்.
அதனால்தான்
விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பர். இதைத்தான் அக்காலத்தில்,
“ஒருவர் பொறை இருவர் நட்பு” என்றனர். அதாவது நட்பு கொண்ட இருவரில் ஒருவர்
பொறுத்துப் போனால் அது அந்த நட்பு வளர, நிலைக்க, நீடிக்க வழிசெய்யும்
என்பதே அதன் பொருள்.
காற்றில்
வளையாது நிற்கும் மரம் முறியும். எனவே, நிலைத்து வாழவும், உறவு
நீடிக்கவும், சிக்கல், இழப்பு தவிர்க்கவும் விட்டுக் கொடுத்தல் கட்டாயம்.
No comments:
Post a Comment