அரசியல்

Friday, June 9, 2017

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்க்கமாக, திடமாக, தெளிவாக முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!


- மஞ்சை வசந்தன்
அரசியலில் தொலைநோக்கும், நுட்பமும், எதிரிகளின் சூழ்ச்சி வியூகத்தை அறியும் ஆற்றலும் இல்லா சிலர், அருகிருந்து கூறும் ஆலோசனைகளைப் புறந்தள்ளி,  நலம் விரும்பும் பலர் கூறுவதையும் பரிசீலித்து, சரியானதை சலித்தெடுக்க வேண்டியதில் கவனமும், நிதானமும், கூர்மையும் தற்போது தங்களுக்குக் கட்டாயத் தேவை ஆகும்.
தி.மு.க.வின் நலன், தங்களின் வளர்ச்சி, அதன்வழி தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ற நோக்கில் சிந்திக்கக் கூடியவர்கள், கருத்துக் கூறக்கூடியவர்களை சரியாக அடையாளங் கண்டு தேர்வு செய்து அவர்கள் கூறுபவற்றை உள்வாங்கி, ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது கட்டாயக் கடமை ஆகும்.
குமுதம் போன்ற தி.மு.க.வின் ஜென்ம விரோத ஊடகங்களும், தமிழருவி மணியன், வை.கோ. போன்ற வஞ்சம் தீர்க்கும் வார்த்தை வித்தகர்களும், தந்தி டி.வி. பாண்டே போன்றவர்களும் குழிபறிக்கின்ற சூழலில், நல்ல கொள்கையாளர்களை, உங்களை விரும்பக்கூடியவர்களை உதாசீனப்படுத்துவது, ஒதுக்குவது, உங்களுக்கே பாதிப்பை அதிகம் உண்டாக்கும் என்பதை நீங்கள் ஆழமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1967 தேர்தலில், முற்றிலும் முரண்பட்ட இனப் பகைவரான இராகோபாலாச்சாரியாரின் ஆதரவைக் கூட அண்ணாவும், கலைஞரும் மிகச் சாதுர்யமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்ற வியூகத்தை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது; மறுக்கக் கூடாது.
அரசியலில் பழைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் ஒருவருடனும் கூட்டு சேர முடியாது.
கலைஞரை அண்ணனாகவும், உங்களை தன் பிள்ளைகளிலும் மேலான பாசத்தோடு நேசிக்கும் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள்கூட தி.மு.க.- பி.ஜே.பி.யோடு சேர்ந்தபோது கடுமையாக விமர்சனம் செய்தார்; எதிர்த்தார். அதேபோல் தி.மு.க.வும் கடுமையாக எதிர்த்துப் பேசியது. பழைய விடுதலை - முரசொலியை எடுத்து வைத்து இன்றைக்குப் பார்த்தால் அரசியலில் உறவு நிற்குமா? நீடிக்குமா?
அரசியல் உறவு, சூழலால், நிலைப்பாட்டால் அவ்வப்போது மாறும்; மாறவும் வேண்டும். அரசியலில் நிரந்த உறவும் இல்லை; பகையும் இல்லை. கொள்கை ஒன்றே இணைப்புச் சங்கிலி. கொள்கை எதிரிகளே நிரந்தர எதிரிகள். ஒத்தக் கொள்கையுடையோர் எதிர்ப்பு தற்காலிகமானது. மாறக் கூடியது! மாறவேண்டியதும் ஆகும்.
அப்படியிருக்க தி.மு.க.வுடன் இயற்கையான கொள்கை பிடிப்பும் பாசமும் கொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த தேர்தலில் மேற்கொண்ட நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, காழ்ப்புடன் கருத்துக்களைப் பதிவு செய்யும், தொல்காப்பியன் போன்றவர்கள்  எதிரிகளுக்குத்தான் இடம், தடம் அமைக்கிறார்கள் என்பதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். (குமுதம் - ‘ரிப்போர்ட்டர்’ செய்தி அடிப்படையில் இது எழுதப்படுகிறது.)
பா.ஜ.க. ஒரு பக்கம் சூழ்ச்சி வியூகம் வகுக்க, இரஜினி மறுபுறம் தி.மு.க.வை முதன்மை எதிரியாக குறிவைத்து களம் இறங்கத் தயாராகும் நிலையில், தங்கள் மீது பற்றுடைய திருமாவளவன், அவர்களைப் போன்ற தலைவர்களை ஒதுக்குவது மிகப் பெரும் பின்னடைவை தி.மு.க.விற்கு பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை மறக்கக் கூடாது.
திருமாவளவன் அவர்கள் பங்குபெற்ற மக்கள் நலக் கூட்டணிதான் தி.மு.க. தோல்விக்குக் காரணம் என்று காண முடிந்த தொல்காப்பியன் போன்றோர், வை.கோ.வையும் அத்தேர்தலில் நம்முடன் வளைத்துப் போட்டிருந்தால், வெற்றி எளிமையாக ஆகி இருக்கும் என்பதை ஏன் எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்கள். வை.கோ. வலிய வந்து ஆதரவு தந்தாரே! ஏன் அவரை வெட்டிவிட வேண்டும்?
வெட்டிவிட்ட வேகத்தால் விளைந்ததே மக்கள் நலக் கூட்டணி என்பதை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, தொல்காப்பியர்கள் பேசுவது முதிர்ச்சியின் அடையாளம் அல்லவே!
இப்போது வை.கோ.வை சேர்க்கச் சொல்லவில்லை. அவர் வெறுப்பின் உச்சத்தில், பழிவாங்கும் வெறியில் நிற்பவர்; அப்படியிருக்க அவருடன் சேர்ந்தவர்களை முடிந்த அளவு மீண்டும் தி.மு.க. பக்கம் ஈர்ப்பதுதானே இன்றைய நிலையில் சாதுர்யமான அரசியல் வியூகமாக இருக்க முடியும்?
எனவே, மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கை முடிவுகளில் தி.மு.க.வினர் ஆளாளுக்கு கருத்துக் கூறும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது முதல் கடமையாகும்.
பா.ஜ.க., இரஜினிகாந் என்ற எதிர்ப்புகள் தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கக் கூடியவை அல்ல. அவை ஊடகங்கள் ஊதிக் காட்டக்கூடிய ஒரு சார்பு கருத்துத் திணிப்புகள்.
இன்றைய நிலையில் - விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் - கீழ்க்கண்டவற்றை தி.மு.க., ஸ்டாலின் அவர்கள் செய்தால் தி.மு.க.வின் வெற்றி நிச்சயம்!
1.            எந்த அளவுக்கு கூட்டணியில் கட்சிகளை சேர்க்க முடியுமோ அந்த அளவுக்குச் சேர்த்தல்.
2.            மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளை ஒவ்வொரு தொகுதியிலும் உடனே மேற்கொண்டு, தொடர்ந்து செய்தல்.
3.            கோயில் குளங்கள் மட்டுமின்றி அனைத்து நீராதாரங்களையும் தி.மு.க. தொண்டர்களைக் கொண்டு தூர்வார்தல்.
4.            மதுக்கடைகள் அறவே மூடப்படும் என்ற அசைக்க முடியாத உறுதியான வாக்குறுதியை இப்போதே அளித்தல். இது பெண்கள் மற்றும் கட்சிச் சார்பில்லாதவர்களின் வாக்குகளை பெருமளவு பெற்றுத் தரும். மதுக்கடைகளை மூடும் ஆட்சியைத்தான் அடுத்த மக்கள் தேர்வு செய்வர்.
5.            விவசாயிகள் நலன் சார்ந்த செயல்பாடுகளை, போராட்டங்களை அதிகக் கவனம் செலுத்தி செய்தல். அவர்களுடன் இணைந்து செயல்படுதல்.
6.            நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மாட்டுக் கறித் தடைச் சட்டம் போன்ற மதவாத மத்திய அரசின் திட்டங்களை, ஒன்றியம்தோறும் பொதுக்கூட்டம் போட்டு கண்டித்துப் பேசுதல். மாநில உரிமை பறிபோவதை விளக்குதல்.
7.            ஜனாதிபதி தேர்தலில் மதவாத வேட்பாளரைத் தோற்கடிக்க நாடு தழுவிய மகா கூட்டணி அமைக்கக் கடுமையாக உழைத்தல். சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் விரும்பும் சிறந்த வேட்பாளரைத் தேர்வு செய்து நிறுத்துதல். மக்கள் வெறுக்கும் எவருக்கும் இடம் தராது ஒதுக்குதல்.
8.            ஏழைகளுக்கு மட்டுமே இலவசம் என்ற கொள்கையில் உறுதியாய் நின்று, வீண் செலவுகளை குறைத்து ஆக்கபூர்வமான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தல்.
9.            மக்களை நேரடியாக நீங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இப்போதே தொடங்கி தொடர்ந்து செய்தல். மக்கள் குறையறியவும், மனம் அறியவும், மக்களை ஈர்க்கவும் அது பயன்படும்.
10.          தி.மு.க. மீது வீண் பழியாகச் சுமத்தப்படும், மதுக்கடைத் திறப்பு, ஈழத் தமிழர்கள் படுகொலை, கச்சத் தீவு தாரை வார்ப்பு, காவிரி நீர்ப் பிரச்சினை போன்றவ்ற்றின் உண்மைகளைச் சுருக்கமாக விளக்கி கையடங்கு வெளியீடுகளை மக்களுக்கு இலவசமாக வழங்குதல். மோசடிப் பிரச்சாரத்தை முறியடிக்க அது பயன்படும்.
11.          ஊழல் இல்லா, சுரண்டல் இல்லா நல்லாட்சி தருவதற்கான உண்மையான உத்தரவாதத்தை மக்களுக்கு உறுதியாய் அளித்தல். அந்நிலையில் உறுதியாய் நிற்றல், அதற்கான செயல் திட்டங்கள் வகுத்தல்.
12.          மாநில உரிமை, தமிழ்மொழி, தமிழர் நலன், கிராமப்புரக்  கல்வி இவற்றில் முழு முனைப்புடன் தி.மு.க.வினரை ஈடுபடச் செய்தல்.
இவைபோன்ற செயல்களை தேர்வு செய்து செய்தால், பி.ஜே.பி, இரஜினி எதிர்ப்பை எல்லாம் முறியடித்து, தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும். அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யின் அடிமையாகிவிட்ட இன்றைய தமிழகச் சூழலில், மக்களுக்கு நம்பிக்கையான ஒரே பெரிய கட்சி தி.மு.க. மட்டுமே. அந்நம்பிக்கைக்கு உரிய வகையில் தி.மு.க. நடந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகும். அது உங்களால் முடியும்! அதற்கான வளர்ப்பும், துடிப்பும், ஆற்றலும் உங்களுக்கு உண்டு. செய்வீர்கள்! செய்ய வேண்டும்! 

இவை தி.மு.க.வின் நலத்திற்கு மட்டுமல்ல! தமிழகத்தின் எதிர்கால நலத்திற்கும் ஆகும்!

No comments:

Post a Comment