அரசியல்

Monday, March 27, 2017

உத்தரப் பிரதேசத் தேர்தல் உணர்த்துவதும் எச்சரிப்பதும்


 
- மஞ்சை வசந்தன்


உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவை உலகமே எதிர் நோக்கியது.  ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யும் தங்களது அடுத்தகட்டச் செயல் திட்டங்களை அத்தேர்தலே தீர்மானிக்கும் என்பதால், அதில் ஆறுமாதத்திற்கு முன்பிருந்தே அதிகக் கவனமும் அக்கறையும் காட்டியதோடு, அதற்கான அனைத்து வேலைகளையும் பெரும் பொருட்செலவில் திட்டமிட்டுச் செயல்படுத்தினர். மத்தியில் அவர்கள் ஆட்சியில் இருப்பதால் அவற்றை மிகஎளிதாகச் செய்து முடித்தனர்.

செல்லாத நோட்டுகளால் 4 மாதங்கள் மக்கள் சொல்லொண்ணாத் துயரமும், இன்னலும் இழப்பும் அடைந்தனர்.  மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக எதிர்த்தனர்.  கருப்புப் பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்ற அப்பட்டமான பொய்யைச் சொல்லி, மக்கள் மனதை மாற்றினர்.  பணமற்ற பரிவர்த்தனை என்று இளைஞர்களை ஈர்த்தனர்.  ஓரளவு பணப்புழக்கம் வந்து, இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் பணத்தட்டுப் பாட்டால் பட்டப்பாட்டை மறந்தனர். மக்களின் மறதிதானே அரசியல் வாதிகளின் பலம். அது பி.ஜே.பிக்கு கிடைத்தது.

*பி.ஷே.பி. வெற்றிக்கான காரணங்கள்:*

*முலாயம் சிங் குடும்பச் சண்டை:*

முலாயம் சிங் மீதும் அவரது மகன் அகிலேஷ் மீதும் நம்பிக்கை வைத்துதான்  மக்கள்  சென்ற சட்டமன்றத் தேர்தலில் அவர்களை வெற்றிபெறச் செய்தனர்.  கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்து அவர்களை ஈர்க்க அகிலேஷ் தவறியது மிக முக்கியமான காரணம். தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினரை தம் பக்கம் ஈர்க்கும் செயல்திட்டங்களில் அகிலேஷ் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

ஆட்சிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில் முலாயம் சிங், அகிலேஷ் (அப்பா, பிள்ளை) இடையேயான மோதல், கட்சிப்பிளவு மக்களை வெறுப்புக் கொள்ளச் செய்ததோடு, மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையிழக்கவும் காரணமாயின.

மதம் சாரா கட்சிகளின் பகையும் போட்டியும்

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி, மதவாதம் போன்றவற்றை தீவிரமாய் எதிர்க்கக்கூடிய, சமூகநீதியில் அக்கறையுள்ள, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய கட்சிகளின் தலைவர்கள், தங்களுக்குள் தன்முனைப்பும், செறுக்கும் கொண்டு பிளவுப்பட்டு, மோதல் போக்கில் தேர்தலில் இறங்கியதால் வாக்குகள் சிதறிப்போயின.

*பீகாரில் நிதிஷ்குமார் செய்ததைப் பின்பற்றாமை:*

மதவாத பி.ஜே.பி கட்சியைத் தோற்கடிக்க அவர்களின் சதித்திட்டங்களை, சனாதன ஆதிக்கத்தை முறியடிக்க பீகாரில் நிதிஷ்குமார் அவர்கள், லல்லு பிராசாத் யாதவோடு அணி அமைத்து, பி.ஜே.பிக்கு எதிரான வாக்குகள் சிதறிப் போகாமல் ஒருங்கிணைத்தது போல் உ.பி.யில் முலாயம் சிங்கும் அகிலேஷ் யாதவ்வும் செய்யத் தவறியது மிகப் பெரிய பின்னடைவை உருவாக்கியது.
சாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டு சேர்ந்து குறைந்த பட்சச் செயல் திட்டங்களை வகுத்துத் தேர்தலைச் சந்தித்திருப்பார்களேயானால் பி.ஜே.பி யை எளிதாகத் தோற்கடித்திருக்க முடியும்.

இதைக் கீழ்க்கண்ட பட்டியல் உறுதியாகக் காட்டுவதைக் காணலாம்: நடந்து முடிந்த உ.பி. சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்
மேற்கண்ட பட்டியல்படி, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய மூன்று கட்சிகள் ஒன்றுசேர்ந்து தேர்தலில் நின்றிருந்தால் எல்லா இடங்களையும் இக்கூட்டணி வென்று பி.ஜே.பி. படுதோல்வி அடைந்திருக்கும்.  இன்னும்  சொல்லப் போனால் ஒரு இடத்தில் கூட பி.ஜே.பி வெற்றி பெற முடியாத நிலை வந்திருக்கும்.

ஆக, மதம்சாரா, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சிகளிடையே ஒற்றுமையின்மையால்தான் பி.ஜே.பி பெரும் வெற்றி பெற்றதேயல்லாமல் பி.ஜே.பி.யின் செல்வாக்கு வளர்ந்ததால் அல்ல. ஊடகங்கள் ஊதிப்பெருக்கி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி.யே பெரும்பான்மை பெறும் என்பது உண்மைக்கு மாறான, மிகையான கற்பனை.

உத்தரபிரதேசத்தில் ஒவ்வொரு பகுதிவாரியாகப் பெற்ற வாக்குகளைக் கணக்கிட்டால், பி.ஜே.பி பெற்ற வாக்குகளை விட பி.ஜே.பிக்கு எதிரான கட்சிகள் 10 முதல் 15 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளன.  இது மிகப் பெரிய வித்தியாசம் என்பதோடு, நாடாளுமன்றத் தேர்தலைவிட பி.ஜே.பி. தன் செல்வாக்கை இழந்துள்ளது என்பதும் புலப்படுகிறது.

*பி.ஜே.பி.யின் செல்வாக்கு 4% குறைவு*

புள்ளிவிவரக் கணக்கீடுகளின்படி பி.ஜே.பி. நாடாளுமன்றத்தில் பெற்றதைவிட சட்டமன்றத் தேர்தலில் 4% வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளது இந்த உண்மையை உறுதி செய்கிறது.

*பி.ஜே.பி.யின் சூழ்ச்சிகள்:*

*முதல்வரை அறிவிக்காது மோடியை முன்னிறுத்தியமை*

மதவெறி கொண்ட யோகி ஆதித்யா தான் முதல்வர் என்று முன்கூட்டியே அறிவித்து பி.ஜே.பி தேர்தலில் நின்றிருந்தால், மக்கள் வெறுத்து ஒதுக்கியிருப்பர்.  அதைத் தவிர்ப்பதற்காக, முதல்வர் யார் என்று அறிவிக்காமல் மோடியென்ற முகமூடியைக் காட்டி, “வளர்ச்சியென்ற கவர்ச்சியை’’ உருவாக்கி மக்களை ஏமாற்றி வெற்றியைப் பெற்றனர்.

*ஆறுமாதங்களுக்கு முன்பிருந்தே மோசடிப் பிரச்சாரங்கள்:*

மக்களின் மனதை மாற்ற மூளைச்சாயம் ஏற்ற செய்ய இரண்டாண்டுகளாகவே முயன்ற பி.ஜே.பி கட்சியினர், கடந்த ஆறுமாதங்களாக மக்கள் மனத்தை மாற்றம் செய்வதிலே முழுக்கவனத்தையும் செலுத்தினர். இதற்கு இணையத் தளங்களை மிகவும் பயன்படுத்தினர்.

தொடக்கத்தில் ஒரு சிறிய அறையில் அமர்ந்து, பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் என்று பலவகையில் தங்கள் கருத்துகளைப் பரப்பியவர்கள், பின்னர் லக்னோவில் ஒரு பெரிய கட்டடத்தையே முழுமையாகப் பயன்படுத்தித் தங்கள் பொய்ப் பிரச்சாரங்களை, மோசடிப் பிரச்சாரங்களைச் செய்தனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகளை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி ஆட்கள் தொடர்ந்து செய்து ஊக்கப்படுத்தினர்.

*பகுதிகளாகப் பிரித்து பரப்புரை:*

உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களை 92 கட்சி மாவட்டங்களாகப் பிரித்து, பின் சட்டமன்றத் தொகுதிகளாகவும், ஒன்றியப் பகுதிகளாகவும், அதன் பின் வாக்குச் சாவடிப் பகுதிகளாகவும் பிரித்து, மக்களிடம் பிரச்சாரம் மூலம் மூளைச்சாயம் ஏற்றினர்.

*ஆயிரக்கணக்கான பணியாளர்கள்:*

கிராமம் அளவில் பணியாற்ற 1,28,000 பேர் (ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் பேர்) இதற்காகப் பணியமர்த்தப்பட்டனர். இவர்களை தொடர்பு கொள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தகவல் தொடர்புப் பணியாளர்களை அமர்த்தினர்.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 5000 பணியாளர்களையும், 20 தொழில் நுட்ப வல்லுநர்களையும், வடிவமைப்பாளர்களையும், கேலிச்சித்திரம் வரையக் கூடியவர்களையும் பணியமர்த்தினர்.

*வாக்காளர் விவரம் சேகரிப்பு:*

மேற்கண்ட பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வாக்காளரின் பெயர், தொலைபேசி எண், முகவரி சேகரிக்கப்பட்டன.

இம்முயற்சிகளின் மூலம் 1 கோடியே 30 லட்சம் பேர் தொலைபேசி இணையதள வழி வாடிக்கையாளர்களாக்கப்பட்டனர்.

...*வாட்ஸ் ஆப் வளர்ச்சி*....

5000 வாட்ஸ் ஆப் குழுக்கள் கொண்டு தொடங்கப்பட்ட இப்பிரச்சாரப் பணி ஆறுமாத காலத்திற்குள் 9000 குழுக்களாக வளர்ச்சியடைந்தது.  ஒவ்வொரு குழுவிலும் 150 தொலைபேசிப் பயனாளர்கள் இணைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு நாளும் இவர்களால் பரப்பப்படும் பொய்செய்திகளை, ஏமாற்றுச் செய்திகளை, மத வெறியூட்டும் கருத்துக்களை 13 லட்சத்து 50 ஆயிரம் பேர் படித்தனர்.

பொய்ச் செய்திகள்:

¨           இந்துப் பெண்களை இஸ்லாமியர்கள் கடத்திச் சென்று கற்பழித்தனர்.
¨           இந்து சாமியார்கள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தாக்குதல். சாமியார்கள் காயம்.
¨           அகிலேஷ்யாதவ் இஸ்லாமியர்களை அரவணைத்து இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
¨           இந்துக்கள் எண்ணிக்கை குறைய இஸ்லாமியர் மக்கள் தொகை கூடிவருகிறது!
¨           இந்துக்கள் நாட்டில் இஸ்லாமியர்களுக்குத் தனிச்சலுகையா?
¨           இந்துக்கோயில்களைத் தகர்க்க இஸ்லாமியர்கள் சதி!
என்பன போன்ற பொய்யான வதந்திகளை ஒவ்வொரு நாளும் பரப்பினர்.

ஷே.பி.எஸ் ரத்தோர்:

இவர் தகவல் தொடர்பு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, இவர் கூறும் செய்திகளை, இரவு, பகல் எல்லா நேரமும் மக்களைச் சென்றடையும்படி பரப்பினர்.  இளைஞர்கள் உட்பட பலரும் இவர்கள் பரப்பும் செய்திகளையே தொடர்ந்து பார்க்கும்படியாக, பொய்யான கருத்துக்களை, மக்கள் தங்களை ஏற்கும்படியாகத் தொடர்ந்து பரப்பிக் கொண்டேயிருந்தனர்.

---*சாதிக் குழுக்களைத் தன் வயப்படுத்தினர்*---

தாழ்த்தப்பட்டவர்களின் குழு மோதலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர்.  தமிழகத்தில்கூட தற்போது புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமியை வளைத்து வருகின்றனர்.  பிற்படுத்தப்பட்டவர்களில் ஒருசிலரை யாதவர்களுக்கு எதிராய்த் தூண்டிவிட்டனர். யாதவர் எதிர்ப்புணர்ச்சியில் அவர்கள் பி.ஜே.பியை ஆதரிக்கும்படிச் செய்தனர்.

-----*உ.பி. தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன?*----

¨           பி.ஜே.பி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 4% வாக்குகளைக் குறைவாகவே சட்டமன்றத் தேர்தலில் பெற்றுள்ளது.

¨           எதிர்கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதாலே தோற்றன.

¨           எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டி யிட்டிருந்தால் 403 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பர்.  பி.ஜே.பி. 403 தொகுதிகளிலும் உறுதியாய்த் தோற்றுப் போயிருக்கும்.

¨           பி.ஜே.பி. செல்வாக்கு வளரவில்லை. மாறாக பி.ஜே.பி.க்கு எதிரான வாக்காளர்களே அதிகம். எதிர்கட்சிகளின் ஒற்றுமை யின்மையும், அகிலேஷ் யாதவின் சாதனையில்லா ஆட்சியுமே பி.ஜே.பி.யின் வெற்றிக்குக் காரணங்கள்.

....*எதிர்க் கட்சிகள் செய்யத் தவறியவை*...

¨           சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி மூன்றும் ஒன்று சேர்ந்து வலுவான கூட்டணி அமைந்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறின.
¨           முதல்வர் பதவி சமாஜ்வாடிக்கு, துணை முதல்வர் பதவிகள் காங்கிரசுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் என்று ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். அவ்விதம் செய்யவில்லை.

¨           இம்மூன்று கட்சிகளும் சேர்ந்த கூட்டு மந்திரி சபை அமைத்திருக்கவேண்டும். அதற்கு ஒன்று சேரவில்லை.

இவற்றைச் செய்து தேர்தலில் நின்றிருந்தால் 403 தொகுதிகளையும் எதிர்க்கட்சிகள் கைப்பற்றி யாருக்கும்; பி.ஜே.பி எல்லாத் தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.  எதிர்க்கட்சிகள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நின்று கேவலமாய் தோற்றதற்கு மாறாய், துணைமுதல்வர், மந்திரி சபையில் இடம், அதிகப்படியான சட்ட மன்ற உறுப்பினர்கள் என்ற பெரும் பயனைப் பெற்றிருக்கலாம். அதுமட்டுமல்ல மதவாத பி.ஜே.பி கட்சியை அறவே வீழ்த்தியிருக்கலாம்.

---*உத்திரபிரதேசத் தேர்தல் எச்சரிப்பது என்ன?*---

மதவாத சக்திகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை இல்லையேல்  அனைவர்க்கும் தாழ்வு! என்பதையே இத்தேர்தல் எச்சரிக்கிறது. உத்திர பிரதேசத்தில்  பி.ஜே.பி வெற்றி என்பது அந்த மாநிலத்திற்கான விளைவுகளை மட்டும் ஏற்படுத்துவது அல்ல. அது ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாதக விளைவுகளை, ஆதிக்கத் திணிப்புகளை அத்து மீறல்களை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

அடுத்துவரும் குடியரசுத் தேர்தலில் மதவாத சக்திகளின் கையாளை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்வர்; பி.ஜே.பி யின் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கைக் கூடும்; அதன்மூலம் அவர்கள் நினைக்கின்ற சட்டங்களை இயற்றி தங்களின் மதவாதக் கொள்கைகளை, செயல் திட்டங்களை நிறைவேற்றுவர்.

அதன்வழி கடந்த 70 ஆண்டுகளாக மீட்டெடுத்த உரிமைகள், சமத்துவம், வளர்ச்சி, எழுச்சி எல்லாம் ஒடுக்கப்படும்.  ஆரிய பார்ப்பன ஆதிக்கமும் , சமஸ்கிருத ஆதிக்கமும் மேலோங்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், கிராமப்புற மாணவர்கள் ஒதுக்கப்படுவர். வேலைவாய்ப்பு, சமூகநீதி பறிபோகும்.

---*இனி உடனே செய்ய வேண்டியவை*----

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுள்ள கட்சிகள் ஒன்று  சேர்ந்து, வலுவான கூட்டணியை பி.ஜே.பி.க்கு  எதிராய் அமைக்க வேண்டும். தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை இளைஞர் களிடம் அந்தந்த மாநில மொழிகளில் பரப்பிட வேண்டும்,. ஊர்தோறும் படிப்பகங்களை உருவாக்க வேண்டும். இந்தியாவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ் மதவாத சக்திக்கு எதிராய் அமைப்பு ரீதியாய், இயக்க ரீதியாய், கொள்கை ரீதியாய் இயங்குவதோடு, இந்தியாவிற்கே வழிகாட்டியாய் இருக்கக் கூடிய திராவிடர்  கழகத்தின் வழிகாட்டுதல்களை தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் ஏற்று, அந்த வழிகாட்டுதலின் படி செயல் திட்டங்கள், போராட்டங்கள் என்று உடனே முன்னெடுப்பது ஒன்றே மதவாத சக்திகள் வீழவும் மற்றவர்கள் வாழவும் வழிவகுக்கும் எனவே, முதற்கட்டமாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட, பிறபடுத்தப்பட்டோர் தலைவர்கள் உடனடியாக ஒன்று கூடி, கலந்து ஆலோசித்து, தீர்மானங்கள் வடிவமைத்து, அவற்றை நிறைவேற்ற மாபெரும் மாநாட்டை டில்லியில் கூட்டி ஓர், எழுச்சியை உருவாக்க வேண்டும். வலுவான அணி உருவாக்கப்பட வேண்டும். 

கம்யூனிஸ்ட்கள் பார்வையாளராய் நின்று பரிகசிக்கப்படும் நிலையைத் தவிர்த்து, காங்கிரசுடன் கூட்டுசேர்ந்து, மதவாத சக்திகளை முறியடிக்க முந்தி நின்று முயற்சிக்க வேண்டும். 

தவறினால், அவர்கள் அரசியல் செய்வதில் அர்த்தமே இல்லை! ஒரு முற்போக்கு இயக்கம் கேலிக்குரியதாகும். 
எச்சரிக்கை!

No comments:

Post a Comment