- மஞ்சை வசந்தன்
தொலைக்காட்சி விவாதம். பி.ஜே.பி நாராயணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரவிக்குமார் பங்கேற்று வாதிட்டனர்.
அப்போது சமூகநீதி சார்ந்து பேச்சு வந்தது. சமூகநீதி என்றாலே பெரியாரும், திராவிடர் கழகமுமே முதன்மை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றார் இரவிக்குமார்.
அதைப் பொறுக்கமுடியாத நாராயணன், திராவிடர் கழகத்திற்கும், பெரியாருக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? “மண்டல் குழு தமிழகம் வந்தபோது சந்திக்காதவர் திராவிடர் கழக வீரமணி’’ என்று பித்தலாட்டமான ஒரு பொய்யைச் சொன்னார்?
பச்சைப் பொய் சொல்லுதல், பித்தலாட்டமாய் பேசுதல், உண்மைகளைத் திரித்தல் என்பது பி.ஜே.பி பரிவாரங்கள் இயல்பு, வாடிக்கை, யுக்தி!
நெறியாளராய் அமர்ந்தவர் அதைப் பற்றி பெரிதாய் அதிர்ச்சியடையவில்லை! அவருக்கோ, நாராயணனுக்கோ உண்மை தெரியவில்லை என்ற கொள்வதா? சொல்வதா? அல்லது தெரிந்தும் பித்தலாட்டமா? என்பதே விவாதத்திற்கு, ஆய்வுக்கு உரியது!
தெரியாததை வலுவாகக் கூறி வாதிடுவது அயோக்கியத்தனமாகுமே!
மண்டல் குழு சாதனைகள் அனைத்தும் திராவிடர் கழகமும் அதன் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் சாதித்தவை!
சமூகநீதியின் உற்றுக் கண்ணையே மாற்றி ஏமாற்ற முயல்வது முதல்தர மோசடியல்லவா?
எனவே, பி.ஜே.பி சார்ந்த குழுக்களும், அதன் ஊதுகுழல்போல சுயநலத்திற்காய் ஊடக தர்மத்தைப் புறந்தள்ளி செயற்படும் ஊடகங்களும், உண்மை அறியா மக்களுக்கும் தெளிவாய்த் தெரிய மண்டல் சார்ந்த உண்மைகளை இங்கு சுருக்கமாக இந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
மண்டல் குழுவின் தமிழக வருகை
பிற்படுத்தப்பட்டோரின் சமூக நிலையினை அறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்திலேயே கூட வைத்து விவாதிக்கப்படாத நிலையில், இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு ஜனதா அரசால் அமைக்கப்பட்டது. பீகார் மேனாள் முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிந்தோஷ் பிரசாத் மண்டல் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மகாராஷ்டிர மாநில மேனாள் தலைமை நீதிபதி போலே, ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
30.06.1979 அன்று சென்னை வந்த இக்குழுவினரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து கழகத்தின் சார்பிலான கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.
அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தென்னக இரயில்வே பிற்படுத்தப்பட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் இக்குழுவிற்கு வரவேற்பு மற்றும் கோரிக்கை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வந்த அக் கமிஷன் உறுப்பினர் சுப்பிரமணியம் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ரமணிபாய், வலம்புரிஜான் ஆகியோர் உடன் வந்தனர்.
இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தலைவரான பி.பி.மண்டல், அதன் உறுப்பினர்களான ஜஸ்டிஸ் போலே, சுப்ரமணியம், ஜனதா பொதுச் செயலாளர்-களான வலம்புரி ஜான், இரமணிபாய் ஆகியோர் உரையாற்றினர்.
இதில் பேசிய மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமணியம் அவர்கள் தமது உரையில், “பிற்படுத்தப்பட்டோரின் தந்தையான பெரியார் நூற்றாண்டு விழாவில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதனை மனிதனாக வாழவைக்க தனது காலம் முழுவதும் புரட்சி செய்தவர் பெரியார். அந்த காலம் வந்துவிட்டது. கிராமம் கிராமமாக சென்று பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று சேர்க்க வேண்டும். நண்பர் வீரமணி இதை செய்வார், நாங்கள் என்றென்றும் உங்களுடன் இருப்போம்’’ என்றார்.
பின்னர் பேசிய மண்டல் குழு உறுப்பினரும், மராட்டிய மாநில மேனாள் தலைமை நீதிபதியுமான போலே அவர்கள் தமது உரையில், “வடநாட்டில் பெரியார் தோன்றாத காரணத்தால்தான் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் மிக மோசமான நிலையில் உள்ளார்கள். இங்கே தந்தை பெரியாரின் உழைப்பால் ஓரளவு வளர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
பார்ப்பனியம் இன்னும் உயிரோடு உதைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் தரப்போகும் அறிக்கையை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அதிகார வர்க்கத்தில் இன்னும் அவர்கள் ஆதிக்கம் ஒழியவில்லை. நாம் ஏமாந்தால் பார்ப்பனியம் நம்மை அழித்துடும்’’ என்று கூறினார்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும்போது, “பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதைக் கண்டு பெருமிதப்படுகிறோம். நீங்கள் மூன்று பேரும் மூன்று முத்துக்களாக எங்களுக்கு கிடைத்திருக்கிறீர்கள்.
நீங்கள் தரப்போகும் அறிக்கை -_ குமுறிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிற்படுத்தப்-பட்ட சமுதாய மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்யப் போகிறது என்ற உறுதியான நம்பிக்கை எங்களுக்கு உண்டு. துணிந்து செல்லுங்கள்! உங்களுக்குப் பின்னாலே கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அணிவகுத்து நிற்கிறது _ என்றும் நிற்கும்.
நீங்கள் தரப்போகும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிக்கையை இந்த முறையும் அரசின் அலமாறியில் தூங்கிக் கொண்டிருக்க நாங்கள் விடமாட்டோம்! விடமாட்டோம்!’’ என்று கூறினார்.
பின்னர் உரையாற்றிய பி.பி.மண்டல் அவர்கள், “நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன்.
நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அமையப் போவது உறுதி. ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள்தான் என்பதை மறந்து விடாதீர்கள்! அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையை செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும்.
அதை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.
பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள்.
இது பெரியாரின் மண் இந்த மண்ணில் நான் ஏராளமாக தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன். வடநாட்டிலே பிற்படுத்தப்பட்டோருக்கு டாக்டர் லோகியா உழைத்தார். பிற்படுத்தப்-பட்டவர்களை, “சூத்திரர்கள்’’ என்றுதான் அவர் அழைப்பார். சூத்திரர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார். தலைமுறை தலைமுறையாக இந்த சமுதாயம் சுரண்டப்பட்டு, அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் உழைத்தார். அண்ணா பாடுபட்டார். ஆனாலும், பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருந்து வருகிறது.
மார்க்சிஸ்ட்டு கட்சிக்காரர்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் சரி, இந்திய கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலத்திலும் சரி, இராஜஸ்தான் போன்ற ஜனசங்கத்தினர் ஆளும் மாநிலத்திலும் சரி பிற்படுத்தப்-பட்டோர் பற்றி சிந்திப்பதே இல்லை. அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகவே அவர்கள் கருதுவதில்லை.
எங்கள் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் அவர்கள் 62% பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இடஒதுக்கீடு செய்தார். அதைக்கூட உயர்ஜாதிக்காரர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இந்த நாட்டில் அதிகார வர்க்கம் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்.களாகவும் அய்.பி.எஸ்.களாகவும் இருக்கும் உயர்ஜாதி வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த சலுகையும் கிடைத்துவிடாது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதுகாப்பு இல்லாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்களையெல்லாம் பார்த்துக் கேட்டுக் கொள்வதெல்லாம் உங்களுக்குள்ளே ஜாதி வேற்றுமையில் பிளவுபட்டு நிற்காதீர்கள்.
இமயம் முதல் குமரிவரை எல்லா பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒன்றாக ஓரணியில் நிற்க வேண்டும்.
காகாகலேல்கர் கமிஷன் அறிக்கையை செயல்படுத்தாமல் கிடப்பிலேயே போட்டு-விட்டார்கள். அதேபோல் நாங்கள் கொடுக்க இருக்கும் அறிக்கையையும் செயல்படுத்துவர் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. உயர்ஜாதி அதிகார வர்க்கம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
எனவே, இதற்கு ஆதரவாக மக்கள் சக்தியை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த அறிக்கையை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது’’ என்று உரையாற்றினார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகைகள் என்றவுடன் உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்து விடுகின்றனர் என்ற பி.பி.மண்டல் அவர்கள் பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து ஏடு விஷமத்தனமாக செய்தி வெளியிட்டிருந்தது. அதையும் மறுநாள் விடுதலை ஏடு தலையங்கம் மூலம் கண்டித்தது.
உண்மைகள் இவ்வாறு இருக்க, வெந்ததைத் தின்றுவிட்டு வந்ததை உளறுவதுபோல் உளறுவது கண்டிக்கத்தக்கதாகும். ஊடக நெறியாளர்கள், சமூகநீதி வரலாறுகளை, இயக்க வரலாறுகளை நன்றாக கற்றறிய வேண்டும. பேசப்படும் தலைப்பு சார்ந்தவற்றை நன்கு தெரிந்து, புரிந்து நிகழ்வில் நியாயம் நிலைக்க துணை நிற்க வேண்டும். இல்லையேல், ஊடகங்களின் சொந்த நோக்கத்திற்காக உண்மைகளை மறைத்து திரித்து வெளிப்படுத்துவது, வெளிச்சம் போடுவது குற்றச் செயல்பாடு மட்டுமல்ல, மக்களுக்கு எதிரான செயல்பாடும் ஆகும்!
பெரியார் மண்ணில் திரிபுகளும், தில்லுமுல்லு பிரச்சாரங்களும் எடுபடாது. மோசடிகளை முழுவதுமாய் திராவிடர் கழகம் தகர்க்கும் என்பதை நினைவில் கொண்டு இனஎதிரிகள் பேசவேண்டும்!
No comments:
Post a Comment